*அழுகையும் சிரிப்பும் தூரமில்லை*

இந்த வாழ்க்கை வினோதமானது. ஆனந்தத்தில் ஆடும்போது காலம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. ஆனந்தம் வடிந்து, கொடுந்துக்கம் பற்றிப் புறட்டிப் போடும்போது, ஆழமான தத்துவ வரிகள் நெஞ்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அவை பெரும்பாலும் விரக்தி வரிகளாகவும் நம்பிக்கையைச் சிதைக்கும் முட வரிகளாகவும் இருப்பதால், அவற்றை நான் பொதுவெளிகளில் பகிர்வதில்லை. ஆனால் இந்தக் கவிதையின் முதல் நான்கு வரிகள் என் வாழ்வின் ஒரு மிக முக்கிய காலகட்டத்தை அழுத்தமான என் நினைவில் கொண்டுவந்து நிறுத்துவதால், அவசியம்தான் என்று எண்ணிப் பகிர்கிறேன். மடியும் வரைக்கும் துயரம் என்பதெல்லாம் சுத்தப் பொய். அந்த நேரக் காயத்தின் வேதனைச் சொற்கள் அவை. அதன் பின் நான் ஏராளமான இன்பங்களைத் தாராளமாகச் சுகித்துதுவிட்டேன் சுகித்துக்கொண்டும் இருக்கிறேன் என்பதே நான் இங்கே வாழ்க்கையின்மீது முன்வைக்கும் மேலான நம்பிக்கை. சத்தியம், வாழ்க்கை இனிமையானது, அதில் வந்துபோகும்ம் துயரங்கள் அந்த இனிமையை நமக்கு எடுத்துச் சொல்லும் தத்துவப் பாடப் புத்தகங்கள்.

என்னை மீறும் எண்ணங்களே
என் இதயம் எங்கும் காயங்களே
மண்ணில் வாழ்க்கை மாயங்களே
மடியும் வரைக்கும் துயரங்களே

0

நீளும் விரல்களில் ஏக்கங்கள்
நெருப்பைத் தொட்டே அழுகைகள்
வாழும் வாழ்வில் தேடல்கள்
வரண்டு போனால் சடலங்கள்

0

கண்ணில் அலையும் நினைவுகள்
கலைந்து சிதையும் கனவுகள்
மின்னல் போன்ற உறவுகள்
உயிர் மிதித்துப் போகும் பறவைகள்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

நம்பிக்கை எழுந்து நாலடி நடந்தால்
ஏமாற்றம் எகிறி எட்டடி தாண்டும்
கண்கள் பழுத்து கண்ணீர் உடைந்து
கனவுச் சித்திரச் சாயம் போகும்

0

அழுபவன் சிரிப்பான் ஒருபொழுது
சிரித்தவன் அழுவான் மறுபொழுது
அழுகையும் சிரிப்பும் தூரமில்லை
அறிந்தவர் வாழ்வில் துயரமில்லை

அன்புடன் புகாரி

No comments: