ஒற்றுமை

 கவியரங்கம் என்றார்கள்


எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு வந்தேன்

 

காற்று தறிகெட்டு

தாறுமாறாய் வீசிக்கொண்டிருந்தது

நீர் ஆவியாகிக்

கானல் நீராய் அலைந்துகொண்டிருந்தது

நிலம் பாளம் பாளமாய்ப்

பிளந்து கிடந்தது

நெருப்பு திக்குகளெங்கும்

திடும் திடும் என பற்றி எரிந்துகொண்டிருந்தது

வானம் ரத்தக்கோடுகள் ரேகைகளாய்ப் பாய

கிழிக்கப்பட்டுக் கிடந்தது

 

அலறிச் சென்ற

அவசர ஊர்தி ஒன்றின்

பின்னால் ஓடினேன்

 

மருத்துவமனை!

அவசர சிகிச்சைப் பிரிவு!

 

படுக்கையில்

அடையாளம் தெரியாமல்

ஓர் உருவம்

 

குளுகோஸ்

ஏறிக்கொண்டிருந்தது

ஆக்சிஜன்

பொருத்தப் பட்டிருந்தது

இதயத்துடிப்பு

கண்காணிப்பில் இருந்தது

 

யார் நீ…?

என்று கேட்டேன்

 

நான் தான் ஒற்றுமை என்றது

 

என்னாயிற்று…?

ஏன் இப்படி கிடக்கிறாய்…?

என்றேன்?

 

வெறுப்பு என்னை

வெட்டிப் போட்டுவிட்டது

அகந்தை என்னை

அறுத்துப் போட்டுவிட்டது

சுயநலம் என்னைச்

சூரையாடிவிட்டது

வன்முறை என்னை

வழித்துப் போட்டுவிட்டது

என்றது

 

உதவிக்கு

யாருமே வரவில்லையா…?

என்று கேட்டேன்

 

சகோதரத்துவமே என்னைக் காப்பாற்று

சமத்துவமே என்னைக் காப்பாற்று

அறமே என்னைக் காப்பாற்று

அன்பே என்னைக் காப்பாற்று

ஞானமே என்னைக் காப்பாற்று 

என்று கதறினேன்

என்றது

 

ஒன்றுகூடவா உன்னைக்

காக்க வரவில்லை…?

என்று கேட்டேன்

 

சிதைந்த தசைகளைக் கூட்டி

மிகுந்த சிரமப்பட்டு

வரட்சியாய்

ஒரு புன்னகையை உதிர்ந்தது

 

புன்னகைக்காதே

பதில் சொல் என்றேன்

கோபத்தோடு

 

எனக்கும் முன்பே

என்னைவிடவும் படு மோசமாய்

கிழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு

தகர்க்கப்பட்டு நொறுக்கப்பட்டு

அசரசப் பிரிவுகளில்

உயிருக்குப்

போராடிக்கொண்டிருக்கின்றன சில

சவக்கிடங்கில்

அடுக்கப்பட்டுவிட்டன பல….

என்றது

 

என்றால்….

மனிதர்களே இல்லாத

மயான பூமியா இது…?

என்றேன் கலவரத்தோடு

 

அது சரி…. நீ யார்…?

உன்னால் என்னைக் காக்க முடியுமா…?

என்று கேட்டது

 

அடுத்தநொடி

அங்கிருந்து அகன்று ஓடிவந்துவிட்டேன்

 

கவியரங்கம் என்றார்கள்

எனக்கென்ன தலைப்பென்றேன்

ஒற்றுமை என்றார்கள்

இல்லாத ஒன்றை

எனக்கு ஏன் தலைப்பாய்த் தந்தீர்கள்

என்று கேட்கவே நான் இங்கு ஓடி வந்தேன்

 

O

 

மனிதனே

குறும்படம் பார்த்தது போதும்

இப்போது என்னைப் பார்

 

ஒற்றுமை

குற்றுயிராய்க் கிடக்கும்போது

பூவுலகம் அழிந்து முடிவதைக் கண்டாயா…?

 

குச்சிகள்

ஒருங்கிணையாவிட்டால்

விளக்குமாறுகூட கிடைக்காது  

 

ஒற்றுமைதான்

ஒரு வீட்டிற்கான திறவுகோள்

இந்த உலகத்திற்கான வெளிச்ச அழைப்புகள்

 

O

 

ஒட்டுவதும் ஒட்டுவதும் ஒட்டினால்தான்

ஒற்றுமை என்பது இல்லை

ஒட்டாததும் ஒட்டாததும் ஒட்டினால்தான்

அது ஒற்றுமை

 

விளக்கெண்ணையைத் தடவிக்கொண்டு

வீதியில் புரண்டாலும்

ஒட்டுகிற மண்தான் ஒட்டும் என்றவன்

அறிவுகெட்டவன்சுயநல அயோக்கியன்

பேரன்பைத் தடவிக்கொண்டு

பெருவீதியில் நடந்தாலே போதும்

ஒட்டாமண் என்று ஒருமண்ணும் இல்லை

இம்மண்ணில்

 

O

 

இதை நம் அன்னைத்தமிழ்

நமக்குச் சொல்லித் தருகிறது

 

கயல் ஒரு சொல்

விழி ஒரு சொல்

இரண்டு சொற்களும் இணைந்தால்

அது கயல்விழி என்ற

ஒற்றைச் சொல்

 

இப்படி ஒட்டத்தயங்காமல்

ஒட்டும் சொற்கள் தமிழில் ஏராளம்

 

ஆனால்

இதைப் பாருங்கள்

பட்டு ஒரு சொல்

கன்னம் ஒரு சொல்

இந்த இரண்டு சொற்களும் ஒன்றையொன்று

ஒட்ட வழியில்லை என்று

ஒதுங்க நினைக்கும்

வம்புச் சொற்கள்

 

விட்டுவிடுமா தமிழ்…?

மிரளும் உங்களையும்

ஒற்றுமையாய் ஒட்டிவைக்க

வழியுண்டு சொற்களே என்று

குட்டுவைக்கிறது அவற்றின் தலையில்

 

இரு சொற்களுக்கிடையில்

ஒற்று என்று ஒரு க் இட்டு

பட்டுக்கன்னம் என்ற ஒற்றைச் சொல்லை

உருவாக்கித் தந்துவிடுகிறது

தமிழ்

 

அதுதான் தமிழின் ஒற்று

ஒட்டாச் சொற்களின் ஒற்றுமைக்குத்

தமிழ் தரும் ஒற்று

 

தமிழ்மொழி ஓர் ஒற்றுமைக் கூடம்

உயர்வான பாடம்

 

O

 

ஒற்றுமை என்பது

உயர்த்திப் பிடிக்க வேண்டிய தீபம்

அந்த வெளிச்சத்தில்தான்

வாழ்க்கை வன்முறையற்றதாய்ப் புலரும்

 

வீழ்ந்து கிடக்கும் தேவதைகளுள்

ஒற்றுமை என்னும்

கதாநாயக தேவதை மட்டும்

எழுந்துவிட்டால் போதும்

கோர்ஸ் பாடும்

அத்தனை தேவதைகளும்

அப்பொழுதே எழுந்து நின்று

ஆனந்த நடனம் ஆடும்

 

O

 

நதி ஆறு ஓடை வாய்க்கால்

அருவி ஏரி குளம் குட்டை என்று

தனித்தனியே சலசலத்தாலும்

கடலெனும் பெருஞ்சக்தி

நீரின் ஒற்றுமைக்குச் சாட்சி அல்லவா?

 

ஆம்….

தனித்துவம் இழப்பதல்ல

ஒற்றுமை

வன்முறை மறுப்பதே

ஒற்றுமை

 

கூர்வாள் கொண்டு

வெட்டி வெட்டிப் பிளந்தாலும்

விலகிவிடாமல் ஒட்டிக்கொள்ளும்

நீர்

 

பிரபஞ்சக் கோள்கள்

ஒத்து இயங்காமல்

ஒரு நொடி மாறினால்

என்னாகும்…?

நம் பூமித் தூசும்

பொசுங்கியே போகும்

 

உன் உடலைப்பார்

அதைவிடவா நெருக்கமாய்

ஓர் அத்தாட்சி வேண்டும் உனக்கு?

உள்ளே உள்ளவை

ஒத்து இயங்காவிட்டால்

நீ செத்துத் தொலைவாய்

 

O

 

வேதங்களின் தாய் ஒற்றுமை

ஒற்றுமைக்கான

தேடல் இல்லாவிட்டால்

உலக வேதங்கள்

எதுவுமே பிறந்திருக்காது

 

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்றானே சங்கத் தமிழன்

அந்த ஒற்றை வரி மட்டுமே

ஒற்றுமைக்கான

முழுமொத்த வேத நூல்

 

O

 

ஒற்றுமையின் உயரத்தை

நீ

ஒரே ஒரு முறையேனும்

தரிசித்துவிடவேண்டும் 

 

கீழே நின்றால்

அதன் உயரம் உனக்குத் தெரியாது

 

சாதிகளை விட்டு

மேலே ஏறி வா

மதங்களைக் கடந்து

மேலே ஏறி வா

நிறங்களை விலக்கி

மேலே ஏறி வா

இனங்களைத் துறந்து

மேலே ஏறி வா

 

இன்னும் இன்னும்

பிரிவினைகள் அனைத்தையும்

தாண்டித்தாண்டி

மேலே மேலே ஏறி வா

 

இதோ நீ

இறைவனிடம் வந்துவிட்டாய்

 

எந்த இறைவன் என்று கேட்டு

மீண்டும்

அதள பாதாளத்துக்குள்

வீழ்ந்துவிடாதே

 

ஆளுக்கு ஒன்றாய் இருக்க

இறைவன்

அல்வா துண்டு அல்ல

 

பிறப்பும் இறப்புமில்லாத

இறைவனிடம் வா

 

எல்லா உயிர்க்குமான

அந்த ஏக இறைவனிடம் வா

 

வந்துவிட்டாய் என்றால்

உனக்கு ஞானம் வந்துவிட்டது

என்று அர்த்தம்

 

இப்போது பார்

ஒற்றுமை என்பதே

இறைவன்தான்

 

O

 

வார்த்தை உயிர்கள் தனித்திருந்தால்

வாழும் கவிதை பிறப்பதில்லை

விண்ணும் விழியும் முத்தமிட்டால்

விரியும் ஞானம் குறைவதில்லை

மண்ணைப் பிரித்தால் துயராகும்

மனிதம் பிரிந்தால் அழிவாகும்

இணைவது ஒன்றே வரமாகும்

இணைக்கும் யாவும் இறையாகும்

 

நன்றி வணக்கம்

 

O

 

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கம் வீழ்ந்த தேவதைகள் என்ற பொதுத்தலைப்பின் கீழ் ஒற்றுமை என்னும் கிளைத் தலைப்பிற்காக வாசித்த கவிதை

No comments: