கவிக்கோ காதலித்தாரா? யாரைக் காதலித்தார்? எப்போது காதலித்தார்? எங்கே வைத்துக் காதலித்தார்?
கவிக்கோயின் காதலி பெயர் என்ன? கவிக்கோவின் காதலி எந்த ஊர்? எந்த நாடு? கவிக்கோவின் காதலி அழகியா? பேரழகியா?
இப்படியான அத்தனை கேள்விகளுக்கும் நான் ஒளிவு மறைவே இல்லாமல் உண்மையான பதிலை இங்கே உடைத்துச் சொல்லப் போகிறேன். ஆம், கவிக்கோவின் காதலை நான் இங்கே அம்பலப்படுத்தப் போகிறேன்.
கவிக்கோ உருகி உருகிக் காதலித்துத் தன் காதலிக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் ஒன்றுவிடாமல் சொல்லப் போகிறேன்.
மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல என்றான் ஒரு பித்தன். ஆனால் கவிக்கோவின் காதலோ மனிதர் உணர்ந்துகொள்ள முடியாத காதல் அல்ல, மனிதர்கள் அவசியம் உணர்ந்துகொள்ள வேண்டிய அற்புதக் காதல்.
கவிக்கோவின் காதல் பரந்து விரிந்தது அந்த வானத்தைப் போல. கவிக்கோவின் காதல் வானத்திற்கும் பூமிக்குமாய் கூடுவிட்டுக் கூடுபாயும் மாய மர்மங்கள் ஏகமாய் நிறைந்தது.
கவிக்கோ காதலித்தது ஒரே ஒரு காதலி என்றா நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. கவிக்கோவிற்கு ஆயிரம் ஆயிரமாய்க் காதலிகள் உண்டு. அவர்களுள் ஒரு காதலியின் பெயர் கஸல்.
ஆம் அவர் கஸலைக் காதலித்தார்.
கஸல் மீதுகொண்ட கவிக்கோவின் தாறுமாறான காதல் மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற கவிதை நூலை கஸலின் தலைப் பிரசவமாய் ஆக்கிக்கொண்டது. அதன்பின் ரகசியப்பூ என்னும் அடுத்த மகவும் பிறந்தது.
கஸலா? கஸல் என்றால் என்ன?
நாம் எங்கும் தேடிப்போகவேண்டிய அவசியமே இல்லை. கவிக்கோ நல்ல கவிஞர் மட்டுமல்ல மிகநல்ல ஆசானும் கூட. அவர் பாடம் சொல்லித் தராத தளமே இல்லை. அவரே கஸல் என்றால் என்ன என்று தன் முன்னுரையில் தந்துவிடுகிறார்.
அரபியில் அரும்பிப் பாரசீகத்தில் போதாகி உருதுவில் மணம் வீசும் அழகான இலக்கிய வடிவம். அதன் சுதந்திரமும் மென்மையும் நளினமும் நவீனத்துவமும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கஸல் மீதான தன் காதலையும் தன் முன்னுரையிலேயே பதிவு செய்துவிடுகிறார்.
ஆம், உருது மொழியையும் அரபு மொழியையும் தமிழின் கிளை மொழிகளோ என ஐயங்கொள்ளச் செய்த தமிழின் பெருமை கவிக்கோ.
உலகக் கவி வடிவங்களையெல்லாம் தமிழ்க் கடலில் கப்பல்களாகவும் ஓடங்களாகவும் அலங்கரித்து மிதக்கவிட்ட தமிழின் நம்பிக்கை கவிக்கோ.
பலரும் அவர்போல் முயன்றிருக்கிறார்கள். ஆனால், நடுக் கடல் தொடும் முன்பே அவர்களின் கப்பல்களும் ஓடங்களும் பரிதாபமாய்க் கவிழ்ந்துவிடுகின்றன.
பின்நவீனம் என்ற பெயரில் சில மொழிபெயர்ப்புக் கவிதைகளைக் கண்டு கவிதைகள் செத்துச் செத்து விழுவதை நான் கண்டு நொந்திருக்கிறேன், நூல் நூலாய்ப் பிரிந்திருக்கிறேன்.
கவிக்கோவின் முயற்சிகளோ அத்தனையும் உயிர் பெறுகின்றன. மூலத்தையும் வென்று முதன்மை ஆனவையாய் நிற்கின்றன.
கஸல் என்றால் காதலியுடன் பேசுதல் என்று பொருள்.
கஸல் என்ற பெயர் தமிழுக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால், காதலியுடன் பேசுதல் புதிதா? ஆதாமும் ஏவாளும் அதைத்தானே செய்திருப்பார்கள்? தமிழ்ன் சங்க இலக்கிய அகப்பாடல்கள் அதைத்தானே செய்தன.
என்றால், உலகெல்லாம் நீக்கமற நிறைந்திருப்பது கஸல். இந்த உலகை உய்விப்பது கஸல்.
கஸல் என்ற தன் காதலியுடன் கவிக்கோ மூச்சுமுட்ட மூச்சுமுட்ட பேசத்தொடங்கிய போது அவர் தன் அறுபது வயதைக் கடந்தவராக இருந்தார். அறுபதாம் கல்யாண மாப்பிள்ளையின் காதல் வெளிப்பாடுகள்தாம் இந்த மின்மினிகளால் ஒரு கடிதம்.
இந்த வயதில் காதல் கவிதைகளா என்று கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள் சிலர். இந்த வயதில்தான் காதல் கவிதைகள் மாமிச அழுக்கில்லாமல் தூய்மையாய் உதிக்கின்றன என்று தூக்கி அடித்தார் கவிக்கோ.
இனி ”மின்மினிகளால் ஒரு கடிதம்” என்ற கவிக்கோவின் காதல் கடிதங்களை ஒவ்வொன்றாய்ச் சுவைக்கலாம் வாருங்கள்.
காதல் சாளரம்
திறந்தேன்
கடவுள் தெரிந்தார்
நூலின் தொடக்கத்திலேயே ஒரு பெரும் பாய்ச்சல். உச்சக் கட்டத்திற்காக வைத்திருக்கும் முத்தாய்ப்புக் காட்சியை எடுத்த எடுப்பிலேயே ஓட்டிக் காட்டிவிடும் கவிவீரம் கவிக்கோவிற்கே சொந்தம்.
இப்போது சொல்லுங்கள், கவிக்கோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறாரா
அல்லது கடவுளைக் காதலிக்கிறாரா? அல்லது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல இரண்டையும் காதலிக்கிறாரா? அல்லது அந்த இரண்டையும் உள்ளடக்கிய இந்தப் பிரபஞ்சம் மொத்தத்தையும் காதலிக்கிறாரா?
தொடர்ந்து வரும் கவிதைகளையும் பாருங்கள். ஆழ்ந்த சிந்தனை வயப்பட்டு ”என்ன காதல்டா இது” என்று சொக்கிப்ப்போய் விடுவீர்கள்.
இறைவா….
நம் சங்கமத்திற்காகத்தான்
பெண்ணிடம்
ஒத்திகை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அடடா, இம்மை வாழ்வையும் மறுமை வாழ்வையும் எத்தனை அழகாகச் சொல்லிச் செல்கிறது இந்தக் கவிதை?
இம்மை வாழ்வை சிறப்புற வாழாவிட்டால் மறுமை வாழ்வு ஒத்திகை பார்க்கப்படாத நாடகமாய் ஆகிப்போகும் என்று கவிக்கோ அழுத்தம் திருத்தமாய் எச்சரிக்கிறார் அல்லவா?
வினோதமான பிச்சைதான்
உன்னிடத்திலேயே
உன்னை யாசிக்கிறேன்
அப்பப்பா, எத்தனை ஆழமாய் காதலில் உருகுகிறார் கவிக்கோ? அவர் உருகி நிற்பது காதலியிடமா அல்லது கடவுளிடமா என்று உங்களால் திட்டவட்டமாய்ச் சொல்லிவிட முடியுமா?
ஒவ்வொரு மூச்சும்
உன்னைச் சந்திக்கப்
புறப்படுகிறது
ஏமாற்றத்தோடு
திரும்புகிறது
மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் வெகுதூரம் இல்லை. மூச்சுவிடும் தூரம்தான் என்று எத்தனை அழகாகச் சொல்கிறார்? இதை எந்த வகைக் காதல் என்று இனம் பிரிப்பீர்கள்?
கவிக்கோவே தன் முன்னுரையில் இந்த ஆய்வுக் கேள்விக்கான விடையையும் எப்படி ஒரு முந்திரிப் பருப்பைப்போல உடைத்தெடுத்து வைத்துவிடுகிறார் என்று பாருங்கள்.
இந்தக் காதல் வெறும் பெண் காதல் அல்ல, அனைத்தையும் பெண்ணாய்க் கண்டு கட்டித் தழுவிக்கொள்ளும் காதல். இந்தக் காதலில் இறைவனும் காதலியாகிவிடுகிறான். உண்மையில் காதல் என்பது இறைவனைச் சுவைப்பதுதான். இந்தக் கவிதைகளில் ஆன்மிகக் காதல் அடி நீரோட்டமாக ஓடுகிறது. சில இடங்களில் ஊற்றாகப் பீறிடுகிறது.
அடுத்தொரு கவிதையைப் பாருங்கள்.
திரை விலக்கிப் பார்த்தால்
உன் மர்மம்
அதிகமாகிறது
அடடா இக் கவிதைதான் எத்தனை சுவாரசியம்? எத்தனை ஆழம்? உன்னைப் புரிந்துகொள்ளவே முடியவில்லையே என்று காலங்காலமாக நாம் பெண்ணைப் பார்த்தும் இறைவனைப் பார்த்தும்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
உன்னைவிட்டுப்
பிரிந்து செல்லும் பாதையும்
உன்னையே அடைகிறது
இந்தக் கவிதை இன்னும் ஒரு படி மேல். இது ஆத்திகத்தையும் நாத்திகத்தையும் அழகாக முடிச்சுப் போடுகிறது.
நான் ஆத்திகன் ஆனேன் அவன் அகப்படவில்லை. நான் நாத்திகன் ஆனேன்
அவன் பயப்படவில்லை என்று பாடினார் கண்ணதாசன். ஆனால், கவிக்கோவோ ஒருபடி மேலே சென்று நாத்திகத்தையும் ஆத்திகத்துக்குள் பிடித்து அடைத்துவிடுகிறார்.
இது ஆன்மிகத்தின் உயர்வான கருத்து கம்பீரமாய் எழுந்தி நிற்கும் அபாரமான வெளிப்பாடல்லவா?
நீ
மொழியறியாத
வார்த்தை
வழியறியாத
பயணம்
இதைவிட காதலை எப்படி உயர்வாய் வர்ணிப்பது? அந்தக் கடவுளையும் வேறு எப்படித்தான் அடையாளம் காட்டுவது?
ஒவ்வொரு கவிதையையுமே ஒரு சிலேடைக் கவிதையாகவே அமைத்திருக்கிறார் கவிக்கோ. காதலியையும் கடவுளையும் மாற்றி மாற்றி வர்ணிக்கும் முகமாக
இன்னும் எத்தனை எத்தனை கவிதைகள்? இதோ அவற்றுள் இன்னும் ஒன்று.
நான் வெறும்
ஓட்டை மூங்கில்
காற்றும் நீ
வாயும் நீ
விரலும் நீ
இதோ இன்னொன்று….
அகராதியில் இருக்கும்
எல்லா அர்த்தங்களுக்குமான
ஒரே சொல் நீ
இப்போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இதென்ன கவிக்கோவின் பக்தி நூலா…? அல்லது காதல் நூலா? என்று பட்டிமன்றமே போடத் தோன்றுகிறதல்லவா?
இது காதல் நூல்தான் ஆனால் கடவுளையும் சேர்த்து காணும் யாவுமே காதலிதான் என்று அமர்க்களமாய்ச் சொல்லிவிடுகிறார் கவிக்கோ. அதைவிடச் சிறந்ததோர் ஆன்மிகம் இருக்க முடியுமா?
இந்த வயதில் காதலா என்று கேட்டவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?
வயது ஏற ஏற இந்தக் கவிதைகளின் ஆழம் புலப்படத் தொடங்கும். இன்று வாசித்ததையே சில நாட்கள் கழித்து வாசித்தால் இன்னும் பல புதிய கதவுகளை
இக்கவிதைகள் திறந்துவிடும்.
உன் பாதையும்
என் பாதையும்
வெவ்வேறாக இருக்கலாம்
ஆனால் அவை
ஒரே கையின்
ரேகைகள்
அடடா, ஆன்மிக நோக்கம் கவிக்கோவின் ஆறாம் விரல்வழியே எத்தனை அழகாகத் தன்னைக் கவிதையாக்கிக் கொண்டு காட்சியளிக்கிறது?
கடவுளைத் தரிசிக்க உன் பாதை வேறாகவும் என் பாதை வேறாகவும் இருக்கலாம். ஆனால் அவை அத்தனையும் ஒரே கையின் ரேகைகளைப் போன்றவை. அவை ஒரே இடத்தையே சென்றடையும் பாதைகள்.
இதோ காதலியை ஆன்மிகமாகக் காணும் இன்னொரு கவிதை.
விளக்குகள் மாறலாம்
வெளிச்சம் அதேதான்
காதலர்கள் மாறலாம்
காதல் அதேதான்
இதோ இன்னும் ஒன்று.
எனக்கு நான்
என்ன உறவு?
இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் உங்களிடம் கேட்கத் தொடங்குங்கள். அது எங்கே போய் நிற்கிறது அல்லது நிற்காமல் நீண்டு சென்றுகொண்டே இருக்கிறது என்று கண்டு அதிசயித்துக்கொள்ளுங்கள்.
கவிதையில் பன்முகத்தன்மையை பதியனிட்டு வைப்பதில் கவிக்கோ உச்சம் தொடுபவர்.
எல்லாப் பூக்களிலும்
உன் வாசம்
இதை யாரிடம் சொல்லலாம்? காதலியிடம் சொல்லலாம். பெற்ற குழந்தையிடம் சொல்லலாம். பேரப் பிள்ளையிடம் சொல்லலாம். நாம் நேசிக்கும் நாயிடமும் பூனையிடமும்கூடச் சொல்லலாம். இறுதியாகக் கடவுளிடமும் சொல்லலாம்.
காதலுக்காகத்
துண்டிக்கப்பட்டுத் துடிக்கும்
ஒரு மண் புழுவின்
இரு துண்டுகள் நாம்
சிவபெருமான் பார்வதிக்குத் தன்னில் பாதியைத் தந்ததை அர்த்தநாரி என்பார்கள். அர்த்தம் என்றால் பாதி, நாரி என்றால் பெண்.
உண்மையில் ஆணும் பெண்ணும் ஈருயில் அல்ல ஓர் உயிர் என்று கொள்ளவேண்டும். ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ தன் துணை இல்லாமல் குறை உயிராய் மட்டும்தானே வாழமுடியும்?
அரசு
முப்பத்து மூன்று சதவிகிதம்
சிவபெருமான்
ஐம்பது சதவிகிதம்
நான் உனக்கு ஒதுக்கியதோ
நூறு சதவிகிதம்
காதலிக்குத்தான் ஐம்பது சதவிகிதம். காதலுக்கு அல்லது கடவுளுக்கு நூறு சதவிகிதம் என்பது எத்தனை உண்மை? எத்தனை அருமை?
மரணம்
உன்னைவிட நல்லது
வாக்களித்தும்
நீ வரவில்லை
வாக்களிக்காதிருந்தும்
அது வந்துவிட்டது
காதலின் பிரிவை காத்திருக்கும் தவிப்பை இதைவிடவும் தத்துவார்த்தமாகச் சொல்லிவிட முடியுமா?
காதலின் நஞ்சைக் குடித்தே
சாகாமல் இருப்பவன் நான்
மரணமே என்னை
என்ன செய்யமுடியும்
உன்னால்
ஆகா எத்தனை அழகு? பாலைத் திணையை இத்தனை அற்புதமாய்ப் பாடவும் முடியுமா? எண்ணங்கள் அப்படியே விரிந்து விரிந்து பறந்து செல்கின்றனவா இல்லையா?
நான் இறந்த பிறகு
என் சவத்தின் மீது
கண்ணீர் சிந்தாதே
நான் உயிர் பெற்று
எழுந்து விடுவேன்
இதைவிடவும் அதீதமாய் அற்புதமாய் தான் காதலில் உருகி நிற்கும் கதையைக் காதலிக்குச் சொல்லிவிடவும் முடியுமா?
நீ
என் ஓட்டைக் கூரை வழியே
ஒழுகுகிறாய்
உன்னைப் பிடிக்க
நான் சொற்களை வைக்கிறேன்
எத்தனை அபாரமான கவிநயம்? இந்தக் கவிதையில் எண்ணம் விழுந்து எழுந்திருக்க முடியாமல் வெகு தூரம் நீந்திக்கொண்டே இருக்கிறது. ஏதேதோ சிந்தனைகள் ஏதேதோ கற்பனைகள் ஏதேதோ மௌனங்கள் நம்மை ஆட்கொள்கின்றன.
அடுத்த்தாக இதோ, மூழ்கி எழவே முடியாமல் அழுத்தி வைத்திருக்கும் இன்னொரு கவிநயம்.
கூடு கட்டத்
தன் உதிர்ந்த சிறகுகளையே
பொறுக்கும் பறவையைப் போல்
நான் உன் நினைவுகளைப்
பொறுக்குகிறேன்
திரையிசைக் கவிஞர்களுக்கெல்லாம் பாடல் வரிகளைப் பிச்சையாய்ச் சுரந்தன கவிக்கோவின் கவி முலைகள். அம்மி கொத்தாத கவிக்கோவின் கவிதைகளைக் கொத்திக்கொண்டுபோய்
திரை அம்மியில் அரைத்து திருட்டு மஞ்சள் பூசிக்கொண்டவர்களை
மந்தகாசத்தோடு மட்டுமே பார்த்தார் கவிஞானி கவிக்கோ.
இதோ சான்றுகளாய்ச் சில கவிதைகள் மட்டும் இங்கே. இவற்றை ஏதோ ஒரு திரைப்பாடலில் எப்போதோ கேட்ட நினைவு வந்தால், அது பிழையான நினைவல்ல சரியான நினைவுதான்.
காதல் என்பது
கண்ணாடியும் கல்லும்
ஆடும் ஆட்டம்
நீ புத்தகம்
அதில் நான்
அச்சுப் பிழை
என் இதயக் கண்ணாடியை
உடைத்தாய்
நன்றி
அதன் ஒவ்வொரு துண்டிலும்
நீ தெரிகிறாய்
நீ காற்று
நான் சுடர்
என்னை
எரிப்பதும் நீதான்
அணைப்பதும் நீதான்
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்து விட்டது
இப்போது
என் முகவரி
தேடி அலைகிறேன்
இரட்டைக் கதவுகளே நாம்
காதல்தான்
தாழ்ப்பாள்
கவிக்கோவிற்கு முரண்களின் மீது தீராத காதல் உண்டு.
என் இதயத்தை
உடைத்துவிட்டாயே
இனி எங்கே வசிப்பாய்?
என்று கேட்கிறார் ஒரு கவிதையில். எத்தனை சுவாரசியமானதொரு முரண் கேள்வி இது? மேலும் கேளுங்கள் சில முரண்களை.
நீ
சொல்லமுடியாத
சொல்
சொல்ல முடியாததைச்
சொல்லும் சொல்
நீ பேசுகிறாய்
உன் சொற்கள்
அர்த்தமாகவில்லை
நீ அர்த்தமாகிறாய்
என் வலை
மீனுக்காக அல்ல
நீருக்காக
எத்தனை அழகான முரண்கள். எத்தனை அழகான நயம். யாரிடம் பேசுகிறார் இவர் என்று தெளிவில்லாமல் நம்மைத் திண்டாட வைக்கும் எத்தனை எத்தனை பன்முகத் தன்மை.
அடுத்து வரும் ஒரு கவிதையைப் பாருங்கள்.
காதல் தோற்பதில்லை
காதலர்கள்தாம்
தோற்றுவிடுகிறார்கள்
உண்மைதானே? பக்தி எப்போதும் தோற்பதில்லை பக்தர்கள்தாம் தோற்றுவிடுகிறார்கள். அதனால்தான் வீதிகளெங்கும் வன்முறை தலைவிரித்தாடுகிறது.
நான் உன்னைக்
கண் திறந்து
பார்த்ததை விடக்
கண் மூடிப் பார்த்தது
அதிகம்
காதலியையும் கடவுளையும் கண்மூடிப் பார்ப்பவர்களால் நிறைந்ததுதான் இந்த பூமி. இதை நேர்மறையாகவும் எடுத்துக்கொள்ளலாம். எதிர்மறையாகவும்
எடுத்துக்கொள்ளலாம். மீத எண்ணங்களை நான் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
இப்படியான உண்மைகளை நயமும் நவீனமும் கூட்டிக் குழைத்துக் கட்டும் கவிதைக் காதலர் கவிக்கோ.
பிடிபடாத ரகசியங்களையும் பிடித்து அவிழ்த்து வாழ்க்கையை நிர்வாணப்படுத்தும் ஞானக் காதலர் கவிக்கோ.
புதிது புதிதென்று புதியன தேடித்திரியும் பொன்வண்டுக் காதலர் கவிக்கோ.
முற்போக்கு எண்ணங்களையும் ஆன்மிகத் தேடல்களையும் ஒரே கரையில் ஓயாத அலைகளாய் வீசும் அறக் காதலர் கவிக்கோ.
கவிக்கோ தத்துவங்களின் காதலர். கவிக்கோவின் கவிதைகள் எல்லாமே தத்துவக் கவிதைகள்தாம் என்று அடித்துச் சொல்லலாம்.
உன்னை
வரைய முடியாது
பூவை வரையலாம்
வாசனையை
எப்படி வரைவது
இதைத்தான் நான் கவிக்கோவிற்கான என் பிறந்தநாள் வாழ்த்துக் கவிதையாக முகநூலில் இட்டேன். அவருக்காக ஆயிரம் கவிதைகள் எழுதமுடியும் ஆனால் அவர் எழுதிய ஒரு கவிதையையே அவருக்காக இட்டேன் அதன் பொருத்தத்தை எண்ணி மகிழ்ந்தேன். ஏனெனில் வாழ்க்கையின் அத்தனை நிலைகளிலும் அகராதியாய்ப் புரட்டிப் பார்க்க அவரின் ஒரு கவிதையேனும் துணை நிற்கும்.
ஒவ்வொரு இதயத் துடிப்பும்
நீ என் கதவைத்
தட்டும் ஒலியாய்த்
தெரிகிறது
காதலில் மூழ்கி எழுந்திருக்காமல், இறை நேசத்தில் ஊறித் திளைத்திருக்காமல், கவிதைகளில் ஊடுறுவிப் பாயாமல், இப்படியான கவிதைகளை கவிக்கோ எழுதி இருக்க முடியுமா?
இறுதியாக ஒரே ஒரு கவிதையை இட்டு இக் கட்டுரையை நான் நிறைவு செய்கிறேன்
என் உயிரைக்
காதலில் ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே
இனி என்ன செய்வாய்?
இந்த உலகம் சுபிட்சமாய் வாழ எல்லோருக்கும் காதல் வேண்டும். காதல் வாழ்க்கையே வன்முறை அற்ற வாழ்க்கையை இந்த உலகிற்குத் தரும்.
காதலில் மூழ்கிக் கிடக்கும்போது மரணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த நொடியே இப்படியே செத்துப்போக தயார் என்றுதான் காதலில் மூழ்கிய நிலையில் காதலர்கள் அன்றுமுதல் இன்றுவரை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.
மின்மினிகளால் ஒரு கடிதம் என்ற கஸல் கவிதை நூலை வாசித்துச் சுவைத்தவர்கள், இனியும் நல்ல நல்ல கவிதைகளை எல்லாம் நான் விமரிசிக்காமல் விட்டுவிட்டேனே என்று உச்சுக்கொட்டக்கூடும்.
ஆனால் உண்மை யாதெனில், நூலிலுள்ள அத்தனை கவிதைகளுமே
நல்ல கவிதைகள்தாம். அதற்காக அத்தனைக் கவிதைகளையும் நான் இங்கே விருந்தாக்கிப் பரிமாறினால் வாழை இலை மூழ்கிப் போய்விடாதா? இந்தக் கட்டுரைதான் திணறி நிற்காதா?
கண்ணுக்குள் கருத்தரங்கம் - கவிக்கோ
கனவுக்குள் கவியரங்கம்
கவிதைக்குள் சொல்லரங்கம் - கவிக்கோ
கண்டதெல்லாம் தமிழரங்கம்
புதுமைகளின் புதுமை - கவிக்கோ
புதையல்களின் புதையல்
பரந்தவெளி நிறைத்து - கவிக்கோ
பிறந்தநாள் வாழ்த்து
அன்புடன் புகாரி
2020 நவம்பர் 13 கவிக்கோவின் பிறந்தநாள் கருத்தரங்கில் ஆற்றிய சொற்பொழிவைக் கட்டுரையாய் வடித்தது
No comments:
Post a Comment