ஓதுவீர்
படைத்த உம்
இறைவனின் பெயரால்
குருதிக்
குழைவிலிருந்து
மனிதனைப் படைத்தான்
ஓதுவீர்
உம் இறைவன்
மிகுந்த தாராளமானவன்
அவனே
எழுத்தாணி கொண்டு
கற்பித்தான்
மனிதனுக்கு
அவன் அறியாதவற்றைக்
கற்றுத் தந்தான்
ஃ
இவைதாம்
விண்ணிலிருந்து
மண்ணில் வந்திறங்கிய
முதல் ஐந்து வசனங்கள்
திருக் குர்ஆன் எனும்
அழியா அறமலர்க் குவியல்
பூத்துக் குலுங்கும் பூந்தோட்டத்தில்
ஆதிமுதலாய்ப் பூத்த
அற்புதப் பூக்கள்
அண்ணல் நபிபெருமானின்
அருந்தவ நாக்கு
அமுது சுரக்க அமுது சுரக்க
முதன் முதலில் உச்சரித்த
மூலவனின் சொற்கள்
ஹீரா குகைக் கல்லின்
கதகதப்பில்
கருவாய்த் தரித்த
திருமறை வேதங்கள்
ஃ
அண்ணல்
நபிபெருமானாருக்கு
அப்போது வயது
நாற்பது
மக்கா நகரின் பக்கத்தில்
ஜபலுன்நூர்
ஒளிமலை உச்சியில்
ஹீரா என்றொரு குகை
தனிமைக்கு
அதுதான் கூடு
தூய
தவத்திற்கு
அதுதான் தோது
ஏறத்தாழ
ஈரைந்தாண்டுகள்
ஆறா நெஞ்சின்
தீராத் தவத்திற்கும்
திண்ணிய நோன்பிற்கும்
தளமாகிப்
புண்ணியம் பெற்றது
அந்த ஹீரா குகைக் கல்
ஃ
மது மாது ஒழுக்கக்கேடு
கோத்திரப்பகை ஆத்திரக்கொலை
செத்தவை உண்ணல் கற்களே கடவுள்
பெண் மகவெனில்
உயிருடன் புதைப்பு
ஆணவத் திமிரினில்
அடிமையர் வதைப்பு
இன்னும் பலவாறாய்த்
தறிகெட்டுக் கிடந்த
தம் மக்கள்
மறுமலர்ச்சி வேண்டி
தவமோ தவமிருந்தார்
அண்ணல் நபி
நெஞ்சக்கூட்டில்
விளக்காய் எரிந்தார்
நித்தம் மூச்சில்
ஏங்கித் தவித்தார்
இறைவா இறைவா
அருள்வாய் இறைவா
அழுதார் அழுதார்
பிறர்க்காய் அழுதார்
ஃ
ஓ...
என்னவோர் ஆச்சரியம்
இருள் சூழ்ந்த குகையினுள்ளே
அருள் பாயும் ஒளிவெள்ளம்
இடிமுழக்கம் போன்றங்கே
எதிரொலியின் அதிர்வலைகள்
வெளிச்சத்திற்கே
வெளிச்சம் பாய்ச்சும்
அங்கோர் மனித உருவம்
முத்துச் சிறகுகளும்
பவளப் பாதங்களும்
ஒளி உமிழ்க் கரங்களும்
ரத்தினக் கண்ணொளியுமான
விண்ணக வடிவம்
எப்படித் தன்னை
இப்படிச் சுருங்கி
மனிதஉருக் கொண்டது
என்றே
வியக்க வைத்தது
தவித்துக்கிடந்த நாயகத்தின்
தவத்திரு விழிகள்
இமைக்கும் பணி மறந்து
உற்று ஊடுருவி
நிலைகுத்தி நிற்கின்றன
ஆம்
வானவர் ஜிப்ரில்
வந்து நிற்கிறார்
வாஞ்சையுடன் நபிகளை
”ஓதுவீர்” என்கிறார்
பொன்னாடை ஒன்று
பூவிதழ்போல் ஆட
அதில் தங்கச் சொற்கள்
தகதகப்பதுபோல் தெரிகிறது
அச்சம் பயம் நடுக்கம்
அத்தனையும் அகம் புகுந்தாட்ட
அண்ணல் நபிகளோ
”ஓதுதல் அறியேனே”
என்கிறார்
வானவர் ஜிப்ரிலோ
விடுவதாய் இல்லை
அண்ணல் நபிகளை
அள்ளி எடுத்து
தோளோடு தோள் சேர்த்து
அன்போடு அணைத்து
சற்றே உரத்த குரலில் மீண்டும்
“ஓதுவீர்” என்கிறார்
ஆயினும்கூட
உண்மையின் ஒளிச்சுடர்
அண்ணல் நபிபெருமானார்
வியர்வைக்குள் மூழ்கி
நாவசைப்பில் வழுக்கி
“நான் ஓதுதல் அறியேனே”
என்கிறார் தயக்கத்தோடு
மூன்றாம் முறையும்
முதலிரண்டைப் போலவே
மொட்டவிழ்க்க முடியாது போகவே
உடல்விட்டு உயிரும்
பிரிந்தே போய்விடுமோ என்று
ஐயம் கொள்ளும் அளவிற்கு
அண்ணலாரை
இறுகக் கட்டித் தழுவியபின்
முழுவதையும் ஓதிக் காட்டிவிட்டு
மறைந்துபோகிறார்
தூதுவந்த வானவர் ஜிப்ரில்
ஃ
ஓதுவீர்
படைத்த உம்
இறைவனின் பெயரால்
குருதிக்
குழைவிலிருந்து
மனிதனைப் படைத்தான்
ஓதுவீர்
உம் இறைவன்
மிகுந்த தாராளமானவன்
அவனே
எழுத்தாணி கொண்டு
கற்பித்தான்
மனிதனுக்கு
அவன் அறியாதவற்றைக்
கற்றுத் தந்தான்
ஃ
எத்தனை எத்தனைப்
புண்ணியம் செய்தீர்
ஹீரா குகைக் கற்களே
நீங்கள் பார்த்திருக்கத்தானே
அண்ணல் நபிபெருமானார்
உங்கள் மீதமர்ந்து
கடுந்தவம் புரிந்தார்கள்?
உங்கள் முன்தானே
ஈரைந்தாண்டுகள்
கரடுமுரடு பாதையேறி
உணவேந்தி வந்து நின்றார்
பரிசுத்தமானவர் என்றே
பெருஞ் சிறப்புப் பெற்ற
சீமாட்டி கதீஜா பிராட்டியார்
ஃ
ஓ….
ஹீரா குகைக் கற்களே….
வந்தமர வேண்டும்
எங்கள் நாயகம்
உங்கள் மடிமீதென்று
எத்தனைக் காலம்தான்
தவமிருந்தீர்களோ?
என்றால்
உங்கள் தவமும்
வென்றது
இறையருள் வேண்டிய
அண்ணலாரின்
மாபெருந் தவமும்
வென்றது
அதுமட்டுமா?
உங்களோடு நிற்கும்போதுதானே
இறைத்தூதர் என்ற
பெரும்பதவியை
இறைவன் அருள்கிறான்
வந்த இறை வசனங்களை
அண்ணல் நபி
முதலில் சொன்னது
கதீஜா பிராட்டியாரிடம்தான்
என்றாலும்
அதற்கும்முன் கேட்டு நின்றது
நீங்களுமல்லவா?
மனித குலத்துக்கான
முதல் பாடமே
உங்கள் முன்னிலையில்தானே
எடுக்கப்பட்டிருக்கிறது?
இஸ்லாத்தின் தோற்றமே
உங்கள்முன் அல்லவா
நிகழ்ந்திருக்கிறது?
இறைவன்
வானவர் ஜிப்ரிலை
வானத் தூதராய்த் தேர்ந்தெடுத்தான்
நபிபெருமானாரை
இறைத்தூதராய்த் தேர்ந்தெடுத்தான்
கூடவே
ஹீரா குகைக் கற்களே
உங்கள் மடிகளைத்தானே
சந்திப்புத் தளமாக
அவன் தேர்ந்தெடுத்தான்
ஃ
ஹீரா குகைக் கற்களே
அண்ணல் நபி தவத்திற்கு
பூக்களாய்
மாறி நின்றீர்களோ?
அல்லது
பூப்படுக்கையாய்
ஆகிக் கிடந்தீர்களோ?
இப்படிப்
புண்ணியம் பலகோடி
தேடிக் குவித்துக் கொண்டீர்களே
ஃ
ஹீரா குகைக் கற்களே
என்றும்
தீராப் புகழ்க் கற்களே
உங்களின் மேன்மைகளை
எண்ணி எண்ணி நான்
வியக்கிறேன்
என் விழி விரித்துத்
திகைக்கிறேன்
ஃ
ஆம்
மதினாவில் சுமந்த கல்
பள்ளிவாசல் கட்டத்தான்
தேகம் தந்தது - ஆனால்
இஸ்லாத்தையே கட்டியமைக்க
தங்களையே தந்த கல்
உங்கள் கல் அல்லவா?
ஹஜருல் அஸ்வத் கறுப்புக் கல்
புனிதர் முத்தமிட்டதால்
புகழ் பெற்றது – ஆனால்
உங்கள் மடிநின்று
புனிதருக்கு வானவர்
இறைச்சொல் ஊட்டியதால்
உச்சப் புகழ் பெற்றது
உங்கள் கல் அல்லவா?
தௌர் குகைக் கல்லுக்கோ
தோழரோடு நபியைக் காக்க
சிலந்தியின் வலைப்பின்னல்
தேவைப்பட்டது - ஆனால்
இந்த உலகையே காக்கின்ற
திருமறையின்
ஆதிச்சொற்கள் வந்திறங்க
உங்கள் கல்மடியே
போதுமென்றானதல்லவா?
தாயிஃபில் எறியப்பட்ட கல்
இஸ்லாத்தை மறுக்கவும்
நபிகளைத் துறத்தவும்
எறியப்பட்ட கல் - ஆனால்
இஸ்லாத்தை ஏற்றவும்
நபித் தவங்களை
இறை வரங்களாய் மாற்றவும்
தளம் தந்த கல்
உங்கள் கல் அல்லவா?
அகழி தோண்டும் பணியில்
நபியோடு தோழர்களும்
வயிற்றில் சுமந்த கல்
பசி எரிப்பைத்
தணித்த கல்தான் – ஆனால்
பசியே இல்லாதொழிய
ஈகை வளர்க்கும் திருமறை
வந்திறங்கத் தேர்வான கல்
உங்கள் கல் அல்லவா?
ஃ
ஹீரா குகைக் கற்களே
என்றும்
தீராப் புகழ்க் கற்களே
உங்களின் மேன்மைகளை
எண்ணி எண்ணி நான்
வியக்கிறேன்
என் விழி விரித்துத்
திகைக்கிறேன்
ஃ
அடடா
இந்தக் கல்லில்தானே
நிலங்கொள்ளா விழுதுகளும்
வானம் கொள்ளா கிளைகளுமாய்
வளர்ந்து விரிந்து பரவும்
இஸ்லாம் என்னும்
உலகமகா விருட்சம்
வேர் விட்டது?
இந்தக் கல்லில்தானே
யுகத்தையே புரட்டிப்போட்ட
ஞான நெருப்பு
சிறு சிறு கங்குகளாய்க்
கிடந்து
ஆகப் பெரும் தீக்கடலாய்ப்
பற்றி எரிந்தது?
இந்தக் கல்லில்தானே
தவமோ தவமென்று
தவமிருந்த தவங்களெல்லாம்
வரமோ வரமென்று
வரம்பெற்ற வரங்களாய்
பூத்துக் குலுங்கிப்
பொன்னாரங்களாகின?
இந்தக் கல்லில்தானே
வானவர் ஜிப்ரிலின்
பாதம்பட்டு
கல்லெல்லாம் சுடரேறி
நட்சத்திரப் பூக்களாய்ப்
பூத்தன
இந்தக் கல்லில்தானே
வானவரின்
பவளவாய் உச்சரித்த
வைரமணி வசனங்கள்
பட்டுத் தெறித்தன?
இந்தக் கல்லில்தானே
கடைக்கோடி மனிதனையும்
விட்டுவிடாமல் தொட்டு
கண்ணீர் துடைத்து
இன்னல் அகற்றி
சுகந்தம் பரப்பி
சுபிட்சம் ஏற்றும்
பொற்கரங்கள்
வடிவமைக்கப்பட்டன?
இந்தக் கல்லில்தானே
நோன்பு எனும்
மாண்பு வளர்த்து
ஈகையெனும்
விழிக்கடல் பெருக்கி
பசியெனும்
கொடு நெருப்பைத்
தணித்து அணைத்து
முடிக்கும்
கருணைப் புரட்சி
உரசி வெடித்தது?
இந்தக் கல்லில்தானே
கல்லில் கிடந்த கடவுள் பொய்கள்
சில்லு சில்லாய்
உடைத்தெறியப்பட்டு
ஏக இறைவன்
அவன் ஒருவனே என்ற
பேருண்மை
அழுத்தம் திருத்தமாய்ப்
புதுப்பிக்கப்பட்டது?
இந்தக் கல்லில்தானே
சிக்கிமுக்கிக் கல்லின்
நெருப்பாற்றல் பதுங்கிக் கிடந்து
அன்புமொழி அறிவுவிழி அறவழி
சகோதரத்துவம் சமத்துவம்
தொழுகை நோன்பு ஈகை என்ற
ஆகச் சிறந்த அத்தனை
வாழ்க்கைநெறிப் பொறிகளையும்
பற்றிக் கொள்ளச் செய்தது?
ஃ
இந்தக் கல்லில்தானே
திருமறையே தான்கொண்ட
அற்புதமெனக் காட்டிச் சிலிர்த்த
அற்புதங்களின் அற்புதர்….
கல்லடிபட்டுத்
தேகம் சிதைந்தும்
சொல்லடிபட்டு
நெஞ்சு புதைந்தும்
சிதைந்து புதையா
நம்பிக்கையின் வேந்தர்
தன் சமாதியைத் தவிர
வேறெந்த அடையாளத்தையும்
விட்டுவைக்காமல் தகர்த்தெறிந்தவர்
இன்னும் இவைபோல்
ஆயிரம் ஆயிரம்
சொல்லி நின்றாலும்
தீர்ந்தே போகாப்
பெருஞ் சிறப்புகளை
ஓயாக் கடலலைகளாய்ப் பெற்ற
அண்ணல் நபிகளாரின்
தவமும் நோன்பும்
வெற்றி பெற்றன?
ஃ
ஆம்
வைரக் கல்லும்
வைடூரியக் கல்லும்
வெற்றுக் கற்களே
ஹீரா கல் ஒன்றே
இஸ்லாமியப் பேரொளி வீசி
நாயகத் தூதுவம் பாடும்
ராஜயோக சரித்திரக் கல்
ஃ
கல்லெல்லாம் சொல்லும்
சல்லல்லாஹ்
எண்ணங்களால் இறைவனைத்
தெளிந்து அறிந்தோரின்
உள்ளமெலாம் நபிநேசத்தால்
மூழ்கித் திளைத்தோரின்
உட்செவிக்குள் எதிரொலியாய்
ஒலிக்கக் கேட்கும்
கல்லெல்லாம் சொல்லும்
சல்லல்லாஹ்
சல்லல்லாஹ் என்றால்
இறையருளும் அமைதியும்
நபிமீது நிறைக என்றே பொருள்
அகிலத்தின்
கல்லெல்லாம் சொல்லலாம்
சல்லல்லாஹ் - ஆனால்
அத்தனைக் கல்லுக்கும் முன்னதாக
ஹீராவின்
கல்லெல்லாம்தானே
சொல்லின
சல்லல்லாஹ் சல்லல்லாஹ்
ஃ
எல்லோருக்கும்
அவரவர்
பிறந்தநாளில் மட்டுமே
வாழ்த்துக்கள் கூறப்படும்
ஆனால்…
அண்ணல் நபிகளுக்கோ
இறைவனின்
அருளும் அமைதியும்
நபிமீது நிறைக நிறைக
என்று
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு நொடியும்
மில்லியன் பில்லியன்களாய்
நல்வாழ்த்துக்கள்
உயிரின மூச்சுக்களாய்
வந்து வந்து
உலகக் காற்றையெல்லாம்
நிறைத்த வண்ணமாய்த்தானே
இருக்கின்றன!
அன்புடன் புகாரி
2020 நவம்பர் 15 உலகத் தமிழ் முஸ்லிம் மீடியாவும் இஸ்லாமிய இலக்கியக் கழகமும் இணைந்து வழங்கிய ”கல்லெல்லாம் சொல்லும் சல்லல்லாஹ்” என்ற மிலாது நபி கவியரங்கத்தில் ”ஹீரா குகைக் கல்” என்ற தலைப்பில் வாசித்த கவிதை.
No comments:
Post a Comment