பாலு சார்

 


 

செவிகளை மட்டும்

திறந்துகொண்டு

செவ்வாய்க் கோளுக்கும்

சென்றுவிடலாமே

பாலு சார்

 

உங்கள்

குரலேற்றிச் செல்லாத

பொன்வானம் ஏது

பாலு சார்

 

O

 

பாட்டை மட்டும்தானே

பாடவேண்டும்

பாலு சார்

 

பாட்டுக்குள் எப்படி

பயாஸ்கோப்பையே

காட்டினீர்கள்

பாலு சார்

O

 

முரட்டுச் சொற்களையும்

நாவடியில் வழுக்கிச் செல்லும்

அல்வாச் சொற்களாக்கிய

பாலு சார்

 

மெல்லிசைக்குப் 

புதுப்பொருள் தந்து

வல்லினச் சொற்களையும்

மெல்லினமாக்கியதெப்படி

பாலு சார்

 

O

 

ஏதேனும் ஒரு பாடலை

எடுத்துப் போடலாம் என்று

தேடினேன் பாலு சார்

 

எல்லாப் பாடல்களுமே

என்னை விட்டுவிட முடியுமா

என்று கேட்கின்றன

பாலு சார்

 

O

 

காற்றுக்கு

வைர வைடூரிய

ஆபரணங்கள் அணிவித்த

பாலு சார்

 

பாதி வழியில்

உதிர்ந்து உடைந்த

முத்துமணி ஆனதேன்

பாலு சார்

 

O

 

இறந்தபின் உயிர்கள்

எங்கே போகுமோ

போகட்டும் பாலு சார்

 

ஆனால்

உங்கள் உயிர் மட்டும்

எங்களோடுதான்

சந்தனக் காற்றாக

பாலு சார்

 

அன்புடன் புகாரி

 

2020 செப்டம்பர் 25 பாலுவின் நினைவாக என்ற கருத்தரங்கத்தில் வாசித்த கவிதை

No comments: