கவிக்கோ நினைவு நதி

யார் நீ 


 

என் விழிகள்

இமைப்பரண் ஏற

வியந்து பார்க்கிறேன் உன்னை

 

கனடாவில்

ஓர் ஏரி இன்னோர் ஏரியில் விழுகிறது

அந்த பிரமாண்டத்தை

நயாகரா என்று சொல்கிறோம்

 

இப்பூவுலகில்

ஒரு மாபெருங்கடல்

இன்னொரு மாபெருங்கடலில் விழுந்தால்

அது எப்படி இருக்கும்?

 

அப்படியானதொரு

பிரமாண்டங்களின்

பிரமாண்டம்தான்

நீ

 

அளவிலும் அதீதமாய்

தொடர்ச்சியிலும் தீரா நீராய்

நிலைத்துக் கொட்டிய கருத்துப் பேரருவியே

 

O

 

வானம் உடைக்கும்

உளியோடு வந்தாய்

இந்த வையம் பிளக்கும்

வாளோடு நின்றாய்

 

ஒற்றைக் கவிஞனா நீ

இல்லை இல்லை

ஓர் ஆயிரம் கவிஞர்களால் ஆன

கவிப்பட்டாளம் நீ

 

உன் செல்கள்

தமிழ்ச் சொற்களால் ஆனவை

உன் திசுக்கள்

தமிழ்க் கவிதைகளாய் வளர்ந்தவை

 

சிலப்பதிகாரம்

உன் இரண்டே வரிகளில்

திருக்குறளோ

உன் ஒற்றை வரியில்

 

ஒற்றைச் சொல்லில்கூட

ஒரு கவிதையைப் பொத்திவைக்கும்

சூட்சுமம் தெரிந்தவனே

 

அந்த வான ரகசியங்களையும்

இந்த வாழ்க்கை ரகசியங்களையும்

சிக்கலில்லாமல் அவிழ்க்கும்

மாய மந்திரச் சொற்களின் சுரங்கமே

 

உன் விழிவழியே

இந்தப் பிரபஞ்சம் மொத்தமும்

ஒரு சின்னஞ்சிறு காணொளி

 

O

 

உலகக் கவி வடிவங்களையெல்லாம்

தமிழ்க் கடலில்

கப்பல்களாகவும் ஓடங்களாகவும்

அலங்கரித்து மிதக்கவிட்ட

தமிழின் நம்பிக்கையே

 

உருதும் மொழியையும்

அரபு மொழியையும்

தமிழின் கிளை மொழிகளோ என

ஐயங்கொள்ளச் செய்த

தமிழின் கௌரவமே

 

நாளைய

தமிழ்க் கவிதைக் கோட்டைகளையும்

நேற்றே கட்டிமுடித்த

தமிழ்க் கவிதைக் கருவூலமே

 

திரையிசைக் கவிஞர்களுக்கெல்லாம்

பாடல்வரிகளை பிச்சையாய்ச் சுரந்தன

உன் கவிமுலைகள்

 

அம்மி கொத்தாத

உன் கவிதைகளைக்

கொத்திக்கொண்டுபோய்

திரை அம்மியில் அரைத்து

திருட்டு மஞ்சள் பூசிக்கொண்டவர்களை

மந்தகாசத்தோடு மட்டுமே பார்த்த

கம்பீரத் தமிழன் நீ

 

திரைக்குள் நுழைந்து

தொலைந்து போனோர் மத்தியில்

கவிஞனாகவே வாழ்ந்தாய்

தமிழை மடியிலிட்டு

நாளும் பொழுதும் அமுதூட்டினாய்

 

O

 

விழுந்தாலும்

விதைபோல் விழுபவர் வெகுசிலர்

அந்த வெகு சிலரிலும்

விழும்முன்பே விதைத்துக்கொண்டு

உன் புது விருட்சங்களைப் பார்த்து

புன்னகைத்தவன் நீ

உன் விழுதுகளில் நீயே அமர்ந்து

ஊஞ்சலும் ஆடியவன் நீ

 

சொல்லாத சொல்லுக்கு

விலையேதும் இல்லையாம்

சொன்னார்கள் - ஆனால்

நீ சொன்ன சொற்களோ

சொல்லாத சொல்லுக்கும்

விலைபேசிச் சிரிக்கின்றன

 

O

 

நீ

தமிழ்க் கவிதைகளின் வேதமா?

வேதம் தரவந்த தமிழ்த் தூதுவனா?

தூதுவனையே அனுப்பிவைத்த

தமிழ் ஏகனா?

 

நீ கூறியதைக் கூறாமை

எப்படித்தான் இயலும்?

தமிழ் இலக்கியம் உன்னைக் கொண்டு

தன்னை நிறைத்துக் கொள்ளும்

 

O

 

தமிழ்க் கவிதைகளின்

ஆதி அந்தம் நிறைத்து நிற்கும்

ஏக அதிசயமே

 

உன் நினைவேந்தலுக்கு

ஒருநாள் போதுவதில்லை

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும்

உன் நினைவுகளை ஏந்தி ஏந்தி

சொர்க்கம் நிரப்பிக்கொள்கின்றன

எங்களின் நெஞ்சக் கூடுகள்

 

இறைவன் உன்னை

தன் மடியில் ஏந்திக்கொள்ளட்டும்

 

ஆகஸ்ட் 14, 2020 கவிக்கோ நினைவுக் கவியரங்கத்தில் வாசித்த கவிதை

No comments: