சவுதிக் கனலிலே…

 
நான் சவுதி அரேபியாவில் பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்.

அங்கு சென்ற ஓரிரு வருடங்களில் இந்தப் பாடலை எழுதினேன். ஆரம்ப நாட்களில் என் மன நிலையின் ஒரு பதிவுதான் இந்தப் பாடல்.

என் தந்தை என் ஏழு வயதிலேயே என்னிடம் ஒரு வார்த்தையும் சொல்லிக்கொள்ளாமல் விடை பெற்றுவிட்டார்.

என் தாயை நினைக்கும்போது தகப்பன் இல்லாத என் நிலை ஒன்றுமே இல்லை என்று நினைப்பேன்.

முப்பது வயதுக்குள் ஆறு பிள்ளைகளைப் பெற்றெடுத்துக் கொண்டு தன் கணவனைக் காலனிடம் வாரிக்கொடுத்துவிட்ட பாலை மணலலை என் தாய்.

என் தாயின் வெள்ளைச் சேலையை மாற்றி வண்ணச் சேலை கட்டச் சொல்லி தினமும் அழுவேன். செய்வதறியாது என் தாய் என்னை அள்ளி அணைத்துக்கொண்டு என்னோடு சேர்ந்து அழுவார்.

நான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று என் அம்மா என்னைப் பெற்றெடுக்கவில்லை.

நான் கல்லூரி முடிக்கும்வரைகூட வெளிநாடு செல்வேன் என்று கனவிலும் நினைத்ததும் இல்லை.

ஒரு கோடீஸ்வரருக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்தும் பிச்சைக்காரர்களைப்போல நடுத்தெருவில் விடப்பட்டோம்

காரணம் ஆதரவற்ற என் தாய் கணவனை இழந்த இரண்டாம் தாரம். முதல்தாரக் குடும்பத்தால் வஞ்சிக்கப்பட்டவர்.

ஊரில், நீதிமன்றங்களுக்குச் செல்லும் நம்பிக்கையே இல்லாத நாட்கள் அவை. ஊர்ப்பஞ்சாயத்தே துணை.

ஆனால் ஊர்ப் பஞ்சாயத்தின் தலைமையே முத்த தாரத்தின் வழிவந்த என் அண்ணன் தான்.

என் தாயின் துயர நிலை கண்டு என் கண்கள் கழன்று விழுந்தன. நானே வீட்டின் மூத்த ஆண் மகன்.

வேலையில்லா திண்டாட்டம் பற்றி, பற்றி எரியும் கவிதைகள் எழுதிக்கொண்டு வீட்டில் சாம்பலானது போதும் என்று அவசரமாய் முடிவெடுத்தேன். அதனால் பாலைவனம் புறப்படேன்.

அப்படியே ரத்த நாளங்களைப் பிய்த்துக்கொண்டு பயணமான அந்த நாளை என்னால் மறக்கமுடியாது.

அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்குப் பெரும் தொகை வேண்டும் என்றார்கள். நான் சவுதி அரேபியாவுக்குச் சென்றிருக்காவிட்டால் அதை என்னால் கொடுத்திருக்கவே முடியாது. 

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சொன்னார் இது இரண்டாவது உம்மல் பரிதா என்று. அதுதான் என் தாயின் பெயர்.

அப்போது சவுதியில் இருந்தபடியே பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்என்ற பாடலின் மெட்டுக்கு இப்படி ஒரு பாடலை எழுதினேன்.

இந்தப் பாடல் வெறும் பாடல் அல்ல. என் கண்ணீரை வார்த்தைகளாய் உகுத்த திரவ மொழியாக்கம்.

நான் எத்தனை அழுதேன்? அன்றைய என் கண்ணீர்க் கடல் எத்தனை ஆழமானது என்பதைச் சொல்லும் சில துளிகள்தான் இந்தப் பாடல்.

 

சவுதிக் கனலிலே

எத்தனைக் காலம்
வாழ்க்கை என்னும்

பூ வாடும்

பூக்க மறந்து

சருகாய்ச் சிதைய
யார் விட்ட சாபம்

அரங்கேற்றம் - இங்கு
யார் விட்ட சாபம்

அரங்கேற்றம்

பூங்கவிக் குயிலொன்று

தானே முன்வந்து
பணம் தரும் கரங்களில்

விழி பெருக்கும்

பூமெத்தை மடிகளில்

பெட்ரோல் வளங்களில்
புரள்கின்ற அரபிக்கு

விலையாகும் - என்றும்
புரள்கின்ற அரபிக்கு

விலையாகும்

தாய்மலர் இதயத்தில்

தீயொன்று விழுந்தது
துணைநின்று காத்திட

வழியேது

உருக்கிய இரத்தம்

பணமாய்ப் பூத்தது
தாய் உயிர் காத்தே

சிரிக்கின்றது - இன்று
தாய் உயிர் காத்தே

சிரிக்கின்றது

No comments: