காதலி என்பவள்
ஆயிரம் ரூபாய் நோட்டு மாதிரி

ஒருநாள்
ஒன்றுமில்லாமல்
போய்விடுவாள்

ஆசைப்படும் பெண்
ரோசா வண்ண
இரண்டாயிரம் மாதிரி

பயன்படுத்தவே
முடியாது

மனைவி என்பவள்
நூறு ரூபாய் நோட்டு மாதிரி

பார்க்க
அலட்சியமாய்த் தெரியும்

ஆனால்
எப்பவும் எல்லாத்துக்கும்
அவள்தான் உத்திரவாதம்

குடும்பச்சித்திரம்
காணத்தவறாதீர்கள்


திரைக்கதை வசனம்
பாடல்கள் இயக்கம்
மோடி நவம்பர் 2016




எத்தனை போராடினாலும்
இத்தனை உயரம்
எட்டவும் முடியுமோ

அவமானங்களை
நிரந்தரமாய்த்
திருப்பிக் கொடுத்த
நெஞ்சுரமும் வைராக்கியமும்
உச்சத்திலும் உச்சம்

பாறையிலும்
முளைக்கலாம்
பயிர்
நெருப்பில்
முளைக்க முடியுமா

ஜெ
ஜெயலலிதா
ஒரு வரலாறு

அது
கறுப்பும் வெள்ளையும்
கலந்தோடிய கூவகங்கை

அஞ்சலிகள்
டிசம்பர் 5, 2016
கொஞ்சம் தமிழைப் பற்றி பேசலாமா? தமிழின் தொன்மையும் இளமையும் பற்றி நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி?

நான் தமிழறிஞன் அல்லன், ஆனால் தமிழின் மீது தீராத காதலுடையோன்.

நான் அணைகட்டிய நதியல்ல, இயல்பாய்ப் புறப்பட்டப் பெருமழையாறு.

2016 ஜூன் மாத முதல் வாரத்தில் கனடாவில் உலகத் தொல்காப்பிய விழா இரு தினங்கள் சிறப்பாக நடந்தது. அதில் தொல்காப்பியம் பற்றி கவிதை வாசிக்க என்னையும் அழைத்திருந்தார்கள்.

எனக்குக் கவிதை எழுதுவது என்பது பொன்வானம் முன்னறிவிப்பின்றிப் பொழிவதைப் போல இயல்பானது சில நேரம். மகப்பேறில் முதல் மகவினை ஈனுவதைப் போல வலியும் அச்சமும் மிகுந்தது சில நேரம்.

என் நெஞ்சில் நீண்டு வளர்ந்து நிறைந்திருக்கும் அழுத்தமான எண்ணங்களையும் உணர்வுகளையும் எனக்குச் சட்டெனக் கொட்டுவது எளிது. ஆகவே சில நிமிடங்களில் சில கவிதைகள் கொட்டிவிடக்கூடும்.

ஆனால், தொல்காப்பியம் பற்றி நான் அப்படி எழுதிவிடமுடியாது.

நிறைய வாசித்தேன், தொல்காப்பியனை முன்பைவிட அதிகமாக நேசித்தேன். நான் நேசித்தப் பெருமைகலையெல்லாம் என் நடையில் அந்த மேடையில் வாசித்தேன்.

அக்கவிதை உங்கள் கேள்விக்கான பதிலை ஓரளவு தரும். தமிழின் தொன்மையும் இளமையும் கண்டு நான் எப்படிச் சிலிர்த்தேனோ, அதை அப்படியே உங்களுக்குக் காட்டும் என்றும் நம்புகின்றேன்.

இந்தோ அந்தக் கவிதையின் சில பகுதிகள், முழுக்கவிதையையும் வாசிக்க கீழுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்:

தமிழ்காப்புத் தொல்காப்பியம்

தொல்காப்பியா
நீ புதுமைக் காரனடா

இலக்கணம்தானே எழுத வந்தாய்
ஆனால் அதையும் நீ ஏன்
இலக்கியம் சொட்டச் சொட்ட எழுதினாய்

*
அள்ளித்தரும் இலக்கியம்
தாய்க்கு நிகர்
சொல்லித்தரும் இலக்கணம்
தந்தைக்கு நிகர்

ஞானத் தந்தையே
தொல்காப்பியா
நீ தாயுமானவன்தான்
தொல்காப்பியா

*
தமிழோடு தமிழாக
தழுவிக் கிடக்கும்போது
உன் தொன்மைக்கு
ஏதடா முதுமை
உன் சொல்லுக்கோ
தீராத மகிமை

தொன்மையையே இளமையாக்கி
நீ நிற்கும் முரண்
அடடா அதுதான் எத்தனைச் சவரன்

*
அட்டையைத் தொட்டாலே
விரால்மீனாய்த் துள்ளும்
உயிர்நூல் படைத்தவனே

அதோ வருகிறான் பார்
நக்கீரன்
உன் நூலுக்குப் பெயரிட்டதில்
பொருட் பிழை என்கிறான்

என்றென்றும்
இளமையே கொண்ட காப்பியம்
எப்படித் தொல்காப்பியமாகும்
என்று தகிக்கிறான்
கேள்

*
ஓர் இலக்கண நூலே
இத்தனைத் தொன்மையெனில்
தமிழனின் இலக்கியம்தான்
எத்தனை எத்தனைத் தொன்மையானது

கண் தோன்றிச்
செவி தோன்று முன்னரே
முன் தோன்றி வளர்ந்த
மூத்த மொழியோ

*
பசுமரத்தாணியைப்
பழுதின்றி அறைந்தாய்
இலக்கியப் பயிர்களுக்கு
வரப்புகள் வகுத்தாய்
வடமொழி நூல்களுக்கும்
தடம்போட்டுத் தந்தாய்
சுற்றுப்புறச் சூழல் பேசும்
சித்தாந்தம் கொண்டாய்

கம்பனை வள்ளுவனை
இளங்கோவை பாரதியை
உயிர்த்தமிழ் அமுதூட்டிய
இன்னும்பல
இலக்கியக் கொடை வள்ளல்களை
உன் பட்டறையில் வைத்துப்
பட்டைதீட்டிவிட்டாய்

*
ஓரறிவதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனமே

இது
தொல்காப்பியத்தின்
ஒரு சிறு துளித்தேன்

அன்றெழுதிய இத்தேனில்
ஒரு சொல்லேனும்
இன்று வாழும் நமக்கு
அந்நியமாய் நிற்கிறதா
அவையோரே

என்றால்
தொல்காப்பியன்
எங்கே நிற்கிறான்

கடைநிலைத் தமிழனோடும்
கைகுலுக்கும் தாகத்தோடு
நெருக்கமாய் நிற்கிறானல்லவா

இதுதான் தமிழின் தொடர்ச்சி
செம்மொழித் தேர்வில்
இதுவுமொரு சுந்தரத் தகுதி

https://anbudanbuhari.blogspot.ca/2016/06/blog-post_6.html

அன்புடன் புகாரி
கருத்துக்கள் கருக் கொண்டாலும் கவிதை எழுத நினைத்தும் முதல் கவிதையை வடிக்க தயங்குவோருக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

கவிதை முதலில் அந்தரங்கமானது. அதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது. ஆகவே முதல் கவிதை எழுத தயங்குவோன் என்று நான் யாரையுமே சொல்ல மாட்டேன். ஆனால் எழுதித தன் கவிதையை வெளியில் காட்டத் தயங்குபவன் என்று வேண்டுமானல் சொல்லலாம்.

ஏன் எழுதியதைக் காட்டத் தயங்குகிறான் அந்த இளம் கவிஞன். காட்டமாக நிற்கிறார்களே சில விமரிசகர்கள், அவர்கள் காரணமாக இருக்கலாம்.

எழுத எழுத வலுப்பெறுவதே எழுத்து. இதிலிருந்து கவிஞன் விலக்கல்ல. குப்பைகளைக் காலம் முடிவு செய்யும்.

எழுதுவோரின் விரல்களை ஒடிப்பது தமிழை ஒடிப்பது. படைப்பு நதி எந்த அணைகளாலும் தடைபடக்கூடாது.

வளர்ந்த கவிஞன் கடுமையான விமரிசனங்களை எளிதாகக் கையாண்டுவிடுவான். பாவம் இளையவன் மருண்டு மயங்கி விலகக்கூடும். அது தமிழுக்குப் பெரு நட்டம்.

கவிஞன் தன் கவிதை அலசி ஆராயப்படுவதைப் பெரிதும் விரும்புவான். தன்னை வளர்த்துக்கொள்ளும் ஏணியாய் அதைப் போற்றுவான். மாறாக கவிதை மலிந்துவிட்டது நீயும் எழுதவந்துவிட்டாயா என்று காயப்படுத்தினால் பாவம் இளையவன் மனம் சிதைந்துபோவான்.

இது கவிதை இல்லை என்று ஒதுக்கப்பட்ட கவிதைகள் பரிசுக் கவிதைகளாக ஆகி இருக்கின்றன. இது கவிதை என்று உயர்த்தப்பட்ட கவிதைகள் காலத்தால் கூவத்தில் கவிழ்ந்திருக்கின்றன.

பாரதி எழுதிய செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற கவிதை போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றது. ஆனால் முதல் பறிசு பெற்ற கவிதை எதுவென்று யாருக்கும் தெரியவில்லை.

ரசனைகளின் அடிப்படையில் கவிதைகள் பலருக்கும் மாற்று முகங்கள் காட்டக் கூடும். இக்கவிதை என்னைக் கவரவில்லை என்று சொல்வதில் பொருள் இருக்கிறது. அது ஒருவனின் தனிப்பட்ட ரசனை. அக்கவிதை எவரையும் கவரக்கூடாது என்பதில் வன்முறையே இருக்கிறது.

நான் கவிதையல்ல என்று சொன்னதை எவரும் கவிதை என்று ஏற்கக்கூடாது வாழ்த்தக்கூடாது பாராட்டிவிடக் கூடாது என்று வம்படிப்பதில் நகைப்புதான் இருக்கிறது.

கவிதை கால ஓட்டத்தில் தன் வடிவையும் அழகையும் பலவாராய் மாற்றிக் கொண்டு ஓடுகிறது. அனைத்தையும் ரசிப்போரும் இருக்கிறார்கள், சிலவற்றை மட்டுமே ரசிப்போரும் இருக்கிறார்கள்.

சிலரின் விருப்பு பலரின் வெறுப்பு, சிலரின் வெறுப்பு பலரின் விருப்பு என்பதை உணர்வதே நடுநிலை.

கவிதை உயிர்த்துடிப்புகளோடு இருக்க வேண்டும் என்பதே கவிதைக்கான பொது அடையாளம். ஆனால் உயிர்த்துடிப்புகளை அடையாளம் காண்பதில் ஆளுக்கொரு வழி வைத்திருப்பார்கள் அந்த வழியை அவர்களே அறிவார்கள். அவர்களுக்கு அதை அடுத்தவருக்கு வரையறுத்து மிகச்சரியாகக் கூறவும் தெரியாது.

பலரும் பலவாராய் இதுகாறும் கவிதையை வரையறுத்திருந்தாலும் அவற்றோடு மட்டுமே அந்த வரையறைகள் நின்றுபோவதில்லை என்பதை அவர்களே அறிவார்கள். அதோடு கால ஓட்டத்தில் கவிதை நியதிகளும் மாறி மாறி வந்திருக்கின்றன.

மனிதர்கள், விலங்குகளைப் போல கவிதைகளும் ஓர் உயிரினம்தான். சில ஊனமுற்றவையாய்ப் பிறந்தாலும் பெற்றெடுத்த அந்தத் தாயை மலடியாக்கிவிடாமல் நாளை நல்ல கன்றுகளைப் பெற்றெடுக்கும் சிறந்த தாயாய் உருவாக்கித் தருவது நடுநிலை விமரிசனங்களால் மட்டுமே இயலும். சிறந்த தாயாய் மாறிக்கொள்வது கூர்ந்த பார்வையாலும் நிறைந்த வாசிப்பாலும் கவிஞனுக்கு இயலும்.

அன்புடன் புகாரி
நேசிப்பு ஒன்றையே
வேர்களாகக் கொண்டு
உருவான
பசுமைத் தாவர உலகம்
ஒன்று உண்டு

அதன் பெயர்
இஸ்லாம்

வெறுப்புக் காய்கள்
அத்தாவரங்களில்
காய்க்காது

திணிக்கப்படும் வெறுப்புகளும்
அன்புக் கனிகளாகப்
பழுத்து
அந்நிய மடிகளில்
சகோதரமாய்
விழும்

-அன்புடன் புகாரி
இறைவன்
நாயகத்தின் வழியாக
தன் புகழை உலகறிய
நிலைநாட்டிக்கொண்டான்

அறவழிப் பாதையே
மறுக்கமுடியாத இறுதிப்பாதை
மாற்றமில்லாத உறுதிப்பாதை
என்று அறுதியிட்டுச் சொன்னான்

தீயன வென்றெடுக்கும்
வல்லமை வழிகளை
வரைபடமாக்கித் தந்தான்

உலக அமைதிக்கு
உத்திரவாதம் தந்தான்

நம்பிகை இழைகளைச்
சிறகுகளாய் வளர்த்தெடுத்து
வலிமைகூட்டி வானம் கடந்தும்
நிம்மதியில் பறக்கச் செய்தான்

அளவில்லா அன்பு தந்தான்
அரும்பெரும் அமைதி தந்தான்
ஒப்பிலாப் பண்பு தந்தான்
ஒன்றுபடும் பணிவு தந்தான்

கரையில்லா ஆற்றல் தந்தான்
குறைமனத் தேற்றல் தந்தான்
வைரமாய் யாக்கை தந்தான்
வளம்நிறை வாழ்க்கை தந்தான்

எல்லாப் புகழும்
இறைவனுக்கே என்று
நன்றிப் பெருக்கெடுத்தக்
குழை நெஞ்சம்
கூறும் சொற்களின்
எழுத்துக்களாகவும்
அவனே இருக்கின்றான்

-அன்புடன் புகாரி
கவிதையில் கருத்து எண்ணத்தில் கருக்கொண்டாலும் ஓசை நயம் அமைவது எப்படி? சில நுணுக்கங்களைப் பகிர்வீர்களா?

விற்பனர்க்கும் அற்புதமே
       முற்றுமுதற் கற்பகமே
சிற்றருவிச் சொற்பதமே
       சுற்றுலக முற்றுகையே
வெற்றிநிறை கற்றறிவே
       நெற்றிவளர் பொற்றழலே
உற்றதுணை பெற்றுயர
      பற்றுகிறேன் நற்றமிழே

நான் எழுதிய பல தமிழ்த்தாய் வாழ்த்துக்களுள் இக்கவிதையும் ஒன்று.

உலகக் கவிதைகளை எல்லாம் ஓர் அலசலுக்கு உட்படுத்தினால், சந்தம் என்ற செழுமையில் தமிழ்க் கவிதைகள் நிச்சயம் தலையாயதாய் நிற்கும். வேறு எம்மொழியிலும் இசைகூட்டி எழுதுவதில்லை என்று பொருளல்ல. எல்லோரும் பூக்களைக் கோக்கிறார்கள் என்றால் தமிழ் பூந்தோட்டங்களையே கோக்கும் அளவுக்கு யாப்பிலக்கணச் செழுமைகளைக் கொண்டது.

எதுகை, மோனை, அசை, சீர், தளை, அடி, தொடை, அணிகள் என்று போய்க்கொண்டே இருக்கும், செம்மையாக வகுக்கப்பட்டு இசையை அழகாக வளமாகக் கவிதைகளுக்குள் கொண்டுவந்து சேர்க்கும்.

கவிதை எழுத வருகிறேன் என்று ஆர்வமாக வந்தவர்கள், இந்த யாப்பிலக்கணத்தின் கடுமையான விதிகளைக் கேட்டு, முயன்று தலைதெறிக்க ஓடி இருக்கிறார்கள். ஏனெனில் அதுவல்ல தமிழ்க் கவிதைகளை அணுகும் முறை.

இலக்கியம்தான் முதலில் வந்தது அதன் பின்னரே இலக்கணம் வந்தது.

முந்தாநாள் படைக்கப்பட்ட இசை கூட்டிய கவிதைகளுக்கு இலக்கணம் வகுத்து அப்படியான கவிதைகளை இப்படி எழுதவேண்டும் என்றான் நேற்றைய தமிழன்.

ஆனால் அந்த சந்தம் எப்படிக் கைகூடும். அது இசைமீதான நம் ரசனையைப் பொருத்தது. இசைகூட்டிய கவிதைகளை ரசிக்க ரசிக்க அந்த இசை நம் நெஞ்சில் வந்து தங்கிவிடும். பின் அந்த இசையை உள்வாங்கிக்கொண்டு நாம் கவிதை எழுதத் தொடங்கினால் அது தானே இயல்பாய் வந்துவிடும்.

சித்திரமாம் கைப்பழக்கம் செந்தமிழாம் நாப்பழக்கம் என்பது போல, பழக்கமும் கைகொடுக்கும்.

கவிதையை எழுதி முடித்ததும் பின் அதை எடுத்து வைத்துக்கொண்டு யாப்பிலக்கணத்தைச் சரிபார்த்தால் போதும். அநேகமாக யாப்பிலக்கணம் அதில் சரியாகவே அமைந்திருக்கும் என்பது ஓர் ஆச்சரியம்.

ஆனால் நான் அப்படி யாப்பிலக்கணத்தைச் சரிபார்ப்பதில்லை. என் நெஞ்சில் உள்ள இசைக்கு இயைந்ததாய் இருந்தால் மட்டும் போதும் அப்படியே விட்டுவிடுவேன். ஆகவேதான் என்னிடம் நான் எழுதிய ஒரு கவிதையைக் காட்டி இது வெண்பாவா என்றவருக்கு இல்லை இது என்பா நண்பா என்றேன்.

பழைய பா வகைகளைத் தாண்டி என்னால் புதிய பா வகைகளைப் படைக்க முடிவது என் இந்த இயல்பால்தான். அதைப் புலவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் காத்திருப்பதில்லை. என் கவிதையை நான் எழுதிச் சென்றுகொண்டே இருக்கிறேன்.

ஊரலசி உறவலசி
      உண்மையான நட்பலசி
பாரலசிப் பார்த்துவொரு
      பசுங்கிளியக் கண்டெடுத்து
வேரலசி விழுதலசி
      வெளியெங்கும் கேட்டலசி
ஆறேழு உறவோடு
      அணிவகுப்பார் பெண்பார்க்க

நான் யாப்பிலக்கணத்தைச் சரிபார்க்காத ஓர் இசைக்கவிதையின் முதல் நான்கு அடிகள்தாம் இவை.
*  * * *

வசந்தத்தில்
மடியில் விழும்
மலர்களைவிட

பாலையில்
நாவில் விழும்
மழைத்துளிகளால்

வடிவமைக்கப் படுவதே
வாழ்க்கை
எந்த மார்க்கமும்
அந்த மார்க்கத்தினரால்
சரியாகப்
புரிந்துகொள்ளப் படாததாகவே
இருக்கிறது

எந்த மார்க்கமும்
அடுத்த மார்க்கத்தினரால்
சரியாகப்
புரிந்துகொள்ள விரும்பாத
எண்ணங்களைத் தருவதாகவே
இருக்கிறது

எந்த மார்க்கமும்
பகுத்தறிவாளர்களென்று
சொல்லிக்கொள்பவர்களால்
பிழையான
பொருள் கூறப்படுவதாகவே
இருக்கிறது

இவை
மூன்றுக்குமே
முக்கிய காரணம்
மனிதர்களின்
அறியாமைகளும்
வக்கிரங்களும்தானே
அன்றி
மார்க்கங்கள் அல்ல
கவிதையில் காதல் பற்றி!

மனிதனை இயக்கும் மகா சக்தி காதல்.

மனிதனை மட்டுமா இந்தப் பிரபஞ்சத்தையே இயக்கும் மகா சக்தி காதல். எல்லா வயதிலும் எல்லா பருவத்திலும் காதல் நம்மோடு இயற்கையாய் வாழ்கிறது. நம்மோடு வாழும் ஒன்றை நாம் பதிவு செய்வதைவிட மேன்மையானது ஒன்று உண்டா?

அநேகமாக உலகின் அத்தனைக் கவிஞர்களும் ஆரம்பத்தில் காதல் என்ற மகா சக்தியால் உந்தப்பட்டு கவிஞர்களாய் ஆனவர்களாய்த்தான் இருக்க முடியும் என்று தைரியமாகவே சொல்லிவிடலாம்.

”நல்லா கவிதை எழுதறீங்க. கற்பனை வளம் எழுத்து நடை எல்லாமே அமோகமா இருக்கு. ஆனால், இந்தக் காதல் கவிதைகள் எழுதறத விட்டுட்டு எப்போ நல்ல கவிதைகள் எழுதப் போறீங்க?”

அநேகமாய் ஒவ்வொரு கவிஞனும் இந்த வரிகளால் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் வலைவீசிப் பிடிக்கப்பட்டிருப்பான்.

உங்கள் கவிதை நன்றாக இல்லை என்று சொல்ல ஒவ்வொருவருக்கும் விமரிசன உரிமை உண்டு, ஆனால் காதல் கவிதை எழுதாதே என்று சொல்ல எவருக்குமே உரிமை இல்லை.

பலருக்கும் ரோஜா தோட்டங்களைப் பிடிப்பதில்லையோ சுண்டைக்காய் பயிரிடுங்கள் என்று சட்டென்று சொல்லிவிடுகிறார்களே என்று சில நேரம் கவிஞனுக்குத் தோன்றும். ஆனால் உண்மை அப்படியே வேறுமாதிரியாய் இருக்கும். ஆம், ரோஜாத் தோட்டங்களில் புகுந்து வெளிவராமல் உருண்டு புரள்பவர்களின் முதன்மையானவர்கள் அப்படியான விமரிசகர்களாகத்தான் இருபார்கள்.

ஆனால் காதலோடு நின்றிவிடாமல் மற்ற தளங்களிலும் கவிதைகள் எழுதுங்கள் என்பதே அவர்களின் உண்மையான விமரிசனம் என்பதை கவிஞன் புரிந்துகொண்டுதான் இருக்கிறான். காதல் கவிதையால் அகரக்கவிதை எழுதிய கவிஞன் காதலோடு மட்டுமே நின்றுவிடுவதில்லை. பாரதியைப் போல எல்லாத் தளங்களிலும் நிச்சயம் சஞ்சரிக்கவே செய்வான். அப்படி சஞ்சரிக்கச் செய்யாமல் கவிதைச்சக்தி அவனை விடவே விடாது.

கவிஞன் ஒரு வினோதமான தாவரம். இந்தத் தாவரத்தில் ரோஜாக்களும் மல்லிகைகளும் பூக்கும். ஆப்பிள்களும் முந்திரிகளும் பழுக்கும். நெல்மணியும் கோதுமையும் விளையும். வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் என்று எதுவேண்டுமோ காய்க்கும். சில சமயம் கோழி முட்டை ஆட்டுக்கால் சூப்கூட கிடைக்கலாம்.

வெண்டைக்காய் மட்டுமே காய்த்தால்தான் நல்ல தாவரம் என்று கவிதைத் தாவரங்களிடம் எவரும் சட்டம் போடக்கூடாது. அவற்றை அவற்றின் இயல்பிலேயே விட்டால்தான், காய்ப்பவையும் பூப்பவையும் சிலிர்ப்புகள் உதிர்ப்பனவாய் அமையும்.

தாவரத்தை ஊசிகளால் குத்திக் காயப்படுத்தினாலோ ரம்பங்களால் அறுத்து கோடுகள் கிழித்தாலோ, விளைவு நன்றாக இருக்காது. சீக்கிரமே பட்டுப்போய் கீழே விழுந்துவிடவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனாலும் உண்மையான தாவரங்கள் இந்தக் கல்லெறிகளுக்கெல்லாம் கட்டுப்படாமல், தன் விருப்பம்போல் வாரிவழங்கி புசிப்போரைக் குவித்து நிலைத்துவிடும்.

கவிஞன் அப்படிப்பட்ட ஒரு தாவரம்!

நான் கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத அமர்ந்ததில்லை. என் கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று என்னை இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன.

அப்படி எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.

ஆகவே காமத்துப்பால் எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால் இயற்றுவதும் என் கையில் இல்லை. எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது.

தமிழ் மொழியில் மட்டுமல்ல உலக மொழிகளிலும் புறக்கவிதைகளைவிட அகக்கவிதைகளே ஏராளம் ஏராளம்!

அன்புடன் புகாரி

கவிதையில் பொய்யும் மெய்யும் பற்றி சற்று விளக்குவீர்களா?

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாரதி கூறுவது அறிவியல் கண்ணோட்டத்தில் அழகான பொய்யாகத்தான் தோன்றும்.  ஆனால் அது உண்மையில் பொய்தானா என்று நாம் சற்றே சிந்திக்க வேண்டும்.

வானம் என்பது கூரையும் அல்ல அது இடிந்துபோகக் கூடியதும் அல்ல. ஆனால் எந்த எல்லைவரை ஒருவனுக்கு அச்சமில்லை என்று சொல்ல கவிஞனுக்கு ஓர் உவமை தேவைப்படுகிறது. அங்கேதான் அவன் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது.

உச்சிமீது வானம் இடிந்து விழுந்தாலும் என்று வாசகனை கவிஞன் பெற்ற உணர்வின் உயரத்திற்கு உயர்த்திப் பார்க்கிறான். அடடா என்று வியந்து புரிந்துகொள்ளவும் வைத்துவிடுகிறான்.

அச்சமில்லை என்பது ஒரு மெய். அந்த மெய்யை அழுத்தமாகக் கூற கவிநயமிக்க ஒரு கற்பனை தேவை. அந்தக் கவிநயமிக்க கற்பனையே உச்சிமீது வானிடிந்து வீழ்ந்தாலும் என்பது. அந்தக் கவிநயமிக்கக் கற்பனை இல்லாவிட்டால் ரசிப்பதற்கும் சிலிர்ப்பதற்கும் கவிஞன் கண்ட அதே உச்சம் சென்று உணர்வதற்கும் ஏதாவது இருக்கிறதா?

இப்படியான கற்பனை நயங்களைச் சொல்வதால் கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்வது இலக்கியச் சுவையே ஏதென்றறியாத அறியாமைதானேயன்றி வேறில்லை.

இப்படிக் கற்பனை நயங்களைச் சொல்வது கவிஞன் மட்டுமா என்றும் பார்க்க வேண்டும்?

நிலாவைப் பிடித்து விளையாடத் தருகிறேன் ஒரு வாய் சோறு வாங்கிக்கொள் என்று தாய் நமக்குப் பாலூட்டும்போதே சொல்கிறாள். எனவே, தாய்மைக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

உனக்காக என் உயிரையும் தருவேன் என்கிறான் நட்பில் சிலிர்த்த ஒரு நண்பன். எனவே, நட்புக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

வானத்து நட்சத்திரங்களை எல்லாம் பிடித்துவந்து தோரணம் கட்டவா என்கிறான் ஒரு காதலன். எனவே, காதலுக்குப் பொய்யழகு என்று சொல்வதா?

இப்படியே போனால், வாழ்க்கைக்குப் பொய்யழகு என்று புரிந்துகொள்ள அதிக நேரம் பிடிக்காது.

எந்தக் கவிதையும் உண்மை என்ற அழுத்தமான தளத்தில்தான் காலூன்றி நிற்க முடியும். வெறும் கற்பனை மட்டுமே கவிதை ஆகிவிடாது. அப்படியானவை நிலைக்கவும் செய்யாது. அவற்றைப் போலிக்கவிதைகள் என்று நாம் விலக்கிவிடலாம். ஓர் உண்மையை அழுத்தமாகச் சொல்வதற்குக் கறபனை வளம் கூட்டி சொல்நயம் கவிநயம்கூட்டிச் சொல்வது காலத்தால் அழியாததாக நிலைத்து நிற்கும். மக்கள் மனதில் அழுத்தமான மாற்றங்களையும் விதைக்கும்.

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்

இந்த வரிகளை வாசிக்கும்போதே சட்டெனத் தெரிவது உண்மையா பொய்யா என்பது எவருக்கும் எளிதா இல்லையா?

இப்படியே நம் அன்றாட வாழ்வில் எத்தனையோ கவிநயமிக்க வரிகளை நாம் சொல்லிக்கொண்டே வாழ்க்கையை ரசித்து வாழ்கிறோம்.

தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது

நீரெல்லாம் கங்கை நிலமெல்லாம் காசி

என்று தொடங்கி எத்தனையோ நயமான வரிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னொன்றையும் என்னால் சுவாரசியம் கருதிச் சொல்ல முடியும். பொய்யிலே பிறந்து பொய்யில வளர்ந்த புலவர் பெருமானே என்று கண்ணதாசன் பாடினார். என்றால் புலவர்கள் கவிஞர்கள் எல்லாம் பொய் மூட்டைகளா?

காயமே இது பொய்யடா
வெறும் காற்றடைத்தப் பையடா
என்றான் ஒரு சித்தன்.

உலகே மாயம்
வாழ்வே மாயம்
என்றான் ஒரு திரையிசைக்கவிஞன்.

இதன்படி பார்த்தால் காயம் (உடல்) என்ற பொய்யிலே பிறந்து, உலகம் (மாயம்) என்ற பொய்யிலே வளர்ந்து என்று பொருளாகிறது. ஆகவே, புலவர் பெருமான் மட்டுமல்ல உலகின் ஒவ்வோர் உயிரும் உடல் என்ற பொய்யிலே பிறந்து உலகம் என்ற பொய்யிலே வளர்ந்தவைதானே?

அன்புடன் புகாரி

உங்களுக்குக் கவிதையில் நாட்டம் எப்படி எப்போது உருவானது?

அந்த ரகசியம்தான் எனக்கு இன்னமும் தெரியாத மந்திரம். என்னையே நானறியாத (இன்றும் தெரியாது என்பது வேறு விசயம்) சிறுவயதில் என்னை ஆட்கொண்ட ரசனை அது.

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் ஒரத்தநாட்டில்...

நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை, நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் அழைக்கப்படும்.

ஏழெட்டு வயதிலேயே என் செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன்.

பள்ளியில் கற்றறிந்த மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பெற்றெடுப்பதே எனக்குக் கவிதைகளாகின.

என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.

கவிஞர்கள் பிறக்கிறார்களா? அல்லது உருவாகிறார்களா?

தேனீக்கள் பிறக்கின்றன. ஆனால் பிறக்கும்போது அவை வெறும் ஈக்களாக மட்டுமே இருக்கின்றன.

தேனின் சுவையறிந்து, தேன் தேடும் தாகம் வளர்த்து, அதைத் தேடிச் சென்று லாவகமாய் எடுத்து வந்து கூடு சேர்க்கும் திறமையை அவை வளர்த்துக்கொள்கின்றன.

கனடாவில் எனக்கு ஒரு கவிஞரைத் தெரியும். கனடா வந்த நாள் முதல் நான் அவரை அறிவேன். தன் நாற்பது வயதுவரையிலும்கூட அவர் கவிதைகள் எதுவும் எழுதியதே கிடையாது. ஆனால் அதன் பின் அவர் பல நல்ல கவிதைகளைப் படைத்தார், விருதுகளும் பெற்றார், ஒரு கவிஞராகவே புகழோடு மரணித்தார்.

ஆகவே ஒவ்வொருவரும் கவிஞராகவே பிறக்கிறார்கள். ஆனால் கவிஞராய்த் தன்னை வளர்த்துக்கொள்ளாதவரை அவர் கவிஞராய் ஆவதே இல்லை.

கவிதை எழுதுவது என்பது ஒரு வகை மனது. அந்த மனது சிலருக்குச் சிறுவயதிலேயே வாய்த்துவிடுகிறது. சிலருக்கோ சில அனுபவங்களும் தனிமையும் தாகமும் அமையும்போது வாய்க்கிறது. சிலர் அந்த மனதைக் காலமெல்லாம் கட்டிக் காத்துத் தக்க வைத்துக்கொள்கிறார்கள். சிலரோ வாலிபம் முடியும்போதே அதைப் பறிகொடுத்தும்விடுகிறார்கள்.

வெறும் சில்லரை உணர்வுகளைத் தாண்டிய நிலையில் ஆழமாய் அழுத்தமாய் உயிரில் பதிந்த ஒரு மனது என்றென்றும் கவிதை மனதாகவே இருக்கும்.

அன்புடன் புகாரி
இது 2017

எல்லைக் கோடுகளால்
உடைந்து உடைந்து
உலகம்
சாக்கடையில் விழுந்த
தின்பண்டமாகக் கிடக்கிறது

அன்றெலாம்
மாவீரனென்று அழைக்கப்பட்டவனை
இன்றெலாம்
நான் மனதாரப் புகழ்கிறேன்

அவன்
சிறுசிறு எல்லைக் கோடுகளைச்
சிலந்திக் கூடுகளாய்ச் சிதைத்தான்
இருண்ட வாசல்களை உடைத்தெறிந்தான்
உலகம் ஒற்றைக் கூடுதான் என்று
வீரமுழக்கம் செய்தான்

இந்நாள்
வல்லரசுத் தலைகளோ
சீழ்பிடித்தவை

உலகப் போர் உலகப் போர் என்று
ஒவ்வொரு போரிலும்
பூமியெனும் ஒற்றைப் பந்தைக்
கிழித்துக் கிழித்துக்
கழுத்தில் தொங்கவிட்டுக்
கூத்தாடுகின்றன

சுயநலம் பெருகிப் பெருகி
சொந்தமண் சொந்தமக்கள்
சொந்த இனம் சொந்த நிறம் என்று
நெஞ்சம் சுருங்கச் சுருங்க
நரகப் பாடல்கள் பாடுகின்றன

எந்த மண்ணைக் கொண்டுவந்து
இந்த மண்ணில் இட்டான்
மனிதன்?

இந்த மண் வாய்விழும்போதும்
விழுங்கப் போவது
மண்ணா மனிதனா?

இந்தப் பிரபஞ்சத்தில்
பால்வீதியே ஒரு புழுதிச் சுழல்

அந்தப் புழுதிச் சுழலில்
உற்று உற்றுப் பார்த்தாலும்
இந்த பூமி
தெரியப் போவதே இல்லை

அந்தத் தூசுக்குள்
இத்தனைப் பெரும் நாசங்களா?

இந்த உலகம்
எல்லா இனங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா மதங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா நிறங்களுக்குமானது

இந்த உலகம்
எல்லா உயிர்களுக்குமானது

இந்த உலகம்
ஒரு புழுவுக்கும்
சிறு பழுதுமில்லாதது

- அன்புடன் புகாரி









கவிதை என்றால் என்ன என்று வியப்போர் பலர். அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

வியக்கத்தான் வேண்டும். ஏனெனில்

கவிதை
உணர்வுகளை
மொழியாய் மொழி பெயர்க்கும்
ஓர் அழியாக் கலை

மொழியின் உயிர்
உயிரின் மொழி

உயிர்த் துடிப்புகளை
அப்படி அப்படியே காலன் தின்னாததாய்ச்
சேமித்து வைக்கும் உயிர்ப் பெட்டகம்

நாளைகளில் நம்பிக்கை இல்லாக்
கோழைகளாக்கும் இந்த நூற்றாண்டுகளின்
பிரம்மாண்டங்களில்
நால்திசை நாடுகளும்
இடுப்பில் அணுகுண்டுகளைத்
தூக்கி வைத்துக்கொண்டு நிலாச் சோறு ஊட்ட

உலகம்
ஒரு நொடியில் பொடியாகும் அபாயம்
நம் நிழலைக் கிள்ளியெறிந்துவிட்டு
அந்த இடத்தை அபகரித்த
பெருமிதத்தில் மந்தகாசிக்க

விழிகளில் நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப் பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும் அன்புக் கரம்

ஆகவே வியக்கத்தான் வேண்டும்.

ஆனால் வியக்கிறேன் என்று விலகி நின்றிடுதல் கூடாது. வியப்பது ரசிப்பதின் உச்சம். ரசனை உயர உயர அந்த ரசனையாகவே மாறிப்போவதே இலக்கியத்தின் மேன்மை. அப்படி ரசனையாகவே மாறிப்போனால், தமிழ்க் கவிதைகள் சிறு விரல் நுனிகளில் நம் எண்ண ஆழத்தில் இடையறாது துடிக்கும் உட்கிளியின் அமுதை, உணர்வுகெடாமல் சுரந்து கசிந்த வண்ணம் இருக்கும். அதைக் காட்டாறாய் மாற்றிக்கொள்ள தமிழோடும் தமிழ்க் கவிதைகளோடும் கடும் தாகத்தோடும் மோகத்தோடும் காதல்கொள்ளுதல் வேண்டும். கவிஞனாய் வளர்ந்து நிமிர வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும் கவிஞனாய் ஆகவேண்டும் என்பதே என் தமிழாசை. தமிழன் என்று சொன்னாலே அவன் கவிஞன்தான் என்று அறியப்படவேண்டும்.

இவ்வேளையில் நான் ஒன்றைக் கூறவேண்டியதை அவசியமாகக் கருதுகிறேன்.

கணினிப் பணியாற்றும் நான் கவிதைகளும் எழுதுகிறேன் அல்லது கவிதைகளை ரசிக்கிறேன்.

ஒரு வணிக நிறுவனத்தை உருவாக்கி பொருளீட்டும் வணிகரும்கூட கவிதைமனம் கொண்டிருக்க வேண்டும்.

நம் உடலில் வயிறும் இதயமும் இருப்பதுபோல தொழிலும் இலக்கியதாகமும் அவசியமானவை.

உலகில் எல்லோருமே தொழில் செய்பவர்களாக மட்டுமே இருந்துவிட்டால், வாழ்க்கை வரண்டுபோய் பொய்கள் நிறைந்ததாய் கருணையற்றதாய் ஆகிவிடும்.

அதே போல, எல்லோருமே கவிதை எழுதுபவர்களாய் மட்டுமே இருந்துவிட்டால், பசி பட்டினி வறுமையில் உலகமே அழிந்துபோகும்.

அன்புடன் புகாரி

நோன்புக் கஞ்சி அது மாண்புக் கஞ்சி

பிச்சைக்காரரின்
நெளிந்த பாத்திரத்தில் ஊற்றப்படுவதே
பணக்காரரின்
வெள்ளிப் பாத்திரத்தையும் நிறைக்கும்
அமுதமாகிறது

அது எது?


உடல்நலமில்லா முதியவரின்
நடுங்கும் கரங்களின்முன்
வைக்கப்படுவதே
ஆரோக்கியமான இளைஞனின்
துடிப்பான விரல்கள்
தாவியெடுக்கும்
அருசுவையாகிறது

அது எது?


உண்டு முடித்ததும்
மீந்துப் போனதென்று
பின்னிரவில் நீரூற்றப்படும் பழையதே
புனிதப் பசியின் உச்சத்துக்கு
புத்தம் புதிதாகச் சமைக்கப்படுகிறது

அது எது?


பிரியாணிகளும்
கோழி வறுவல்களும்
வகைவகையாய்ப்
பறிமாறப்பட்டிருக்கும்போதே
அனைத்தையும் மறுதலித்து
ஆவலோடு அள்ளிக்குடிக்கும்
கிடைத்தற்கரிய அற்புதமாகிறது

அது எது?


ஓய்வெடுத்துத் தளர்ந்து
மயங்கிக் கிடக்கும்
நாக்கின் நரம்புகளுக்குப்
புத்துணர்ச்சி மந்திரம்
அதுவன்றி வேறொன்றில்லை

அது எது?


எரியடுப்பு வயிற்றை
ஈரமாய் அணைத்து
இதமாய் வருடும் பாசம்மிக்கது
இன்னொன்றில்லை

அது எது?


ஏழை வீட்டில்
செலவே இல்லாமல்
செய்யப்படும் அந்த ஒன்றே
கோடி கொட்டிச் சமைத்தாலும்
கிட்டாத
செல்வச் செழிப்புமிக்க
இன்சுவையாகிறது

அது எது?


தரைதொட்டுத் தரைதொட்டு
நிமிரும் நெற்றிகளின்
செல்கள் ஒவ்வொன்றுக்கும்
அது
சொல்லவொண்ணாத
ஊட்டச்சத்தை அள்ளித்தரும்
சூட்சுமமாகிறது

அது எது?


அதை அருந்தும்
முன்பு கேட்கும் துவாக்கள்
உனக்கானவை
பின்பு கேட்கும் துவாக்களோ
உலகுக்கானவை

அது எது?


அதுவும்
ரமதானின்
ஒரு
கருணைக் கொடைதான்

அதுதான்
நோன்புக் கஞ்சி
நெஞ்சுநிறை
மாண்புக் கஞ்சி


முளைவிடும் விதையின்
புத்தம்புது வேரினைப்போல
பாலையில் திரியும்
உடல்வற்றிய பூனையைப்போல
கரையில் எறியப்பட்ட
சின்னஞ்சிறு மீனினைப்போல
உச்சிச் சூரியன் முகம்துடைத்த
வரண்ட காற்றினைப்போல

தண்ணீரைத் தேடும்
தாக நாக்குகள்
மௌனமாய் அடங்கித்
துயிலவும் செய்கின்றன
இறைவனின் பெயரை
இதய உதடுகளில்
ஈரமாய் நனைத்துக்கொண்டு

பின்
திறப்புநேர அழைப்பில்
புலன்களெல்லாம் ஒன்றுகூடி
நாவடியில் நெருப்பாய் நின்று
நீராடி நிறைகின்றன
நோன்பு நாட்களில்

அணிந்துரை - கலாம் - உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது

கலாம்!

இந்தப் பெயரை நான் அன்று உச்சரித்ததைப்போலவே இன்றும் உச்சரித்துப் பார்க்கிறேன். நெடுங்காலம் கட்டப்பட்டுக் கிடந்த என் ஞாபக முடிச்சுகள் சட்டென்று தளர்ந்து அவிழ்ந்து கொள்கின்றன. அதிலிருந்து சிதறித் தெறித்து ஓடுபவை முத்துக்களா பவளங்களா மாணிக்கங்களா என்று வகை பிரிக்கத் தெரியாமல் மனதில் ஏறும் சுகத்தை தடுக்கவும் முடியாமல் அப்படியே விட்டுவைக்கிறேன். அது நில்லாமல் மேலே மேலே ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அந்த சுகத்தின் கால்களில் என் இதயத்தின் சந்துகள் புல்லரித்துச் சிவக்கின்றன.

கலாம் ஒரு கவிஞனாம். அதுவும் மரபு பிறழாமல் வளையாத சொற்களையும் வளைத்துப் பிடித்து தமிழையும் கவிதைகளையும் நிமிர்த்திப் பிடிக்கும் விரல்களைக் கொண்டவனாம்!

அன்று.... பம்பாயின் மழை ஈர வீதிகளில் வளைகுடாக் கனவுகளோடு திரைப்பட நடிகனைப்போல அழகாக நின்ற கலாமை எனக்குத் தெரியும். அதுதான் எனக்கும் அவனுக்குமான முதல் சந்திப்பு..

பின்.... சவுதி அரேபியாவின் பாலைவன மணல் கரைகளில் மீண்டும் சந்தித்த மகிழ்ச்சியை விழிகள் விரிந்து மணக்கும் வாசனையோடு கொண்டாடிய
கலாமை எனக்குத் தெரியும்.

அன்புதான் அவன் பெயருக்கான மொழிபெயர்ப்பாய் இருக்க வேண்டும். இது என் ஞாபகப் பேழைகளில் தங்கத் தூசுகளாய் ஒட்டிக்கிடக்கும் நினைவுகளில் இருந்துதான் என்றாலும் அது பிழையாகிப் போகாது என்றே உறுதியாய் நம்புகின்றேன்.

கண்களை அவ்வப்போது சுறுக்கியும் விரித்தும் பேசும் அவனது அந்த நாள் பேச்சுகள் அப்படியே விட்டு விட்டுப் பொழியும் வசந்தகால மழையைப் போல என் விழிகளின் குழிகளில் விழுகின்றன.

இனி இன்று.....

ஒரு நண்பன் வந்து என்னிடம் வாழ்த்துரையோ அணிந்துரையோ கேட்டால் நான் என்ன செய்யவேண்டும்? அவன் ஆக்கங்களை வாசித்து அதனால் எழும் என் மனத் தாக்கங்களைப் பேச வேண்டும். ஆனால் நான் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறேன்?

என்ன செய்வது? எத்தனை காலங்கள் ஓடிவிட்டன? இன்று நீ வளைகுடாவின் அலைப் பரப்பில், நானோ கனடாவின் பனிக்கரைகளில். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் உன்னையும் உன் நினைவுகளையும் அசைபோடாமல் இந்த மனம் எப்படித்தான் உன் கவிதைகளை மேயும்.

நண்பா இனி உன் நண்பனிடம் உன் கவிதைகளுக்கான வாழ்த்துரையைக் கேட்காதே! உன் கண்காணா நட்பின் கதகதப்புக் குகைகளுக்குள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் புகுந்து புகுந்து அவன் வெளிவருவதற்கே வெகு நேரம் ஆகிவிடுகிறது.

இன்று உன் முகம் தாடிக்குள் மூடிக்கிடக்கலாம் அல்லது ஞானத்தால் நெற்றி சுறுக்கித் தேடிக்கிடக்கலாம். ஆனால் என்னிடம் இருக்கும் உன் முகம் எதுவென்று தெரியுமா உனக்கு?

ஆமாம் அதே முகம் தான். என் நினைவுகளிலிருந்து விழுந்துவிடாத அந்த முகத்தையே என் கண்முன் நிறுத்தி நான் இன்று இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அதனால்தான் மரியாதை இல்லாமல் அவன் இவன் என்றே இன்றும் எழுதுகிறேன். ஒரு கவிஞனாய் இளமைக்குள் ஏறி நின்று என்னை மன்னித்துவிடு.

உன் கவிதைகள்.....

கடலும் மறந்துபோச்சு - உப்பளத்
திடலும் மறந்து போச்சு
உடலும் பெருத்துப் போச்சு
உடலுக்கு நடைப்பயிற்சி என்னாச்சு

இதை நீ என்னிடம் கேட்கிறாயா அல்லது உன்னிடமே கேட்கிறாயா என்று தெரியவில்லை ஆனால் அழகாகக் கேட்டிருக்கிறாய் கலாம்!

சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்?

ஆகா நண்பா அருமையான கேள்வி. உன் கவிதைகளுள் பல கேள்விகளாகவே இருக்கின்றன. அந்தக் கேள்விகள் யாவும் தோல்விகளுக்குள் துளையிட்டு வெற்றிக் கொடிகளை ஊன்றுகின்றன. வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன்.

ஏக்கம் என்பது
தலைவன் தலைவிக்காகக் காத்திருப்பது
கவிஞன் தலைப்புக்காகக் காத்திருப்பது

என்ற உன் கவிதையை வாசிக்கும்போதே சட்டென்று சிரித்துவிட்டேன். கவிதையை எழுதிவிட்டு தலைப்பைத் தேடும் படலம் தலைவி தலைவனைத் தேடும் படலத்தைவிட பெரியதுதான். ஏனெனில் கவிதை என்பது இதயத்திலிருந்து தானே பொங்கிப் பெறுகி வருகிறது. தலைப்போ தலையிலிருந்து கசங்கிக் கசங்கி வருகிறது. அதனால்தான் இன்றெல்லாம் கவிஞர்கள் தலைப்பை விட்டுவிட்டார்கள் இந்தக்காலப் பெண்களைப்போல.

வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவை திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு

அடடா... வளைகுடா வாழ்வு தரும் பிரிவுகளால் எரியும் மூச்சுகள் அந்தச் சூரியனையும்விட பெருநெருப்புப் பந்துகள்தாம். வளைகுடாக் கடலில் உப்பு அதிகம். இவர்களின் பிரிவு தரும் கண்ணீரே காரணமாய் இருக்கலாம். நண்பா எழுது. நிறைய எழுது. வளைகுடாவில் விளைந்து பெருகும் துயரம் எழுது. உன் எழுதுகோல் வளைகுடாக் கண்ணீரின் வேரறுக்கும் வாளாகலாம்.

இப்படியாய் உன் நூல் முழுவதும் நான் நல்முத்துக்களைக் கண்டெடுக்கிறேன். நட்போடு உன்னை வாழ்த்திப் பாராட்டி மகிழ்கிறேன். எழுது எழுது. எண்ணங்களை இழுத்துப் பிடித்து உள்ளங்களை இணைத்துப் பிடித்து உணர்வுகளை உயர்த்திப் பிடித்து எழுது எழுது.

அன்புடன் புகாரி
நோன்புநாள் 2012