கவிஞரே எனக்குள் ஓர் ஆதங்கம், நீங்கள் இவ்வளவு தமிழை மூளையில் வைத்துக் கொண்டு கன்டாவில் இருப்பதால் தமிழ் வருந்துகின்றதோ?

*
கனடாவில் இருப்பதால்தான் நான் வணிக மற்ற தமிழ் செய்கிறேன்.
பலனல்லவா அது தமிழுக்கும் எனக்கும்.

என் இன்னலெல்லாம் நேரம் போதவில்லையே என்பது மட்டுமே
கணினி ஆலோசகனாகப் பணியாற்றும் எனக்கு நேரம் வெகு தூரம்

அன்புடன் புகாரி
20171125
ஆமாம்
உங்களுக்கென்ன

ஆர் எஸ் எஸ் தான் இந்துக்கள்
ஐ எஸ் ஐ எஸ் தான் முஸ்லிம்கள்
என்று சொல்லி
குளிர்நோவு கண்ட
பூனையைப்போல் பினாத்துவீர்கள்

ஒருங்கிணைந்து
இவர்களை
உண்டு இல்லை என்று
ஆக்க
முன்வரமாட்டீர்கள்

மையப் புள்ளிவிட்டு
ஒளிந்தோடுவதே
ஒப்பிலாப் பணி உங்களுக்கு

கேட்டால்
பகுத்தறிவு என்பீர்கள்

உண்மையான பகுத்தறிவு
ஓரமாய் நின்று
தேம்பித் தேம்பி அழும்
பாவம்

அன்புடன் புகாரி
20161028
பட்டாசுக்கு
நெருப்பு வைக்கும்
பிஞ்சு

பிஞ்சுக்கு
நெருப்பு வைக்கும்
பட்டாசு

அன்புடன் புகாரி
20161028
எந்தப் பண்டிகை
வந்தாலும்
கொண்டாடப்
போவதென்னவோ
வணிகர்கள்தாம்

அன்புடன் புகாரி
20161028
மரம்விட்டுப் பிரிந்த பின்னும்
இந்த இலைகளுக்குத்தான்
எத்தனை மகிழ்ச்சி

நிலம்விழுந்து நடனமாடும்
பல்லாயிரம் வானவில்களாய்
எத்தனைக் கவர்ச்சி

அடடா இது
கனடிய இலையுதிர் காலம்

அன்புடன் புகாரி
20161028
தெற்கு
தேய்க்கப்படுகிறது
ஆனாலும்
தெற்கே வாழ்கிறது

மடக்க நினைக்கும்
வடக்கிற்கு
முடக்குவாதம்தான்
ஆயுள் முழுக்கவும்

அன்புடன் புகாரி
20161028
பாதுகாப்புக்காகத்தான்
வேறு வழியில்லாமல்தான்
என நினைத்துச்
செய்யப்படும்
குற்றம்கூட
ஒருபோதும் உனக்குப்
பாதுகாப்பாய்
அமைந்துவிடாது

இன்னொரு
பெரிய
குற்றத்திற்கான
வேராகவே
அது
வளர்ந்துவரும்

அன்புடன் புகாரி
20161028
*கண்ணீர் அஞ்சலி*

1984 அக்டோபர் 31ன் கொடுங்காலைப் பொழுதில் பீந்த்சிங் சத்வந்த்சிங் என்ற இரு மத வெறியர்களால் அன்னை இந்திரா சுடப்பட்ட செய்தி கேட்டு அதிர்ந்து கலங்கியபோது வெளிவந்த கண்ணீர்க்  கவிதை இது - 19841031

அன்றைய என் அறிவின் பார்வையில், எழுதப்பட்ட கவிதைதான் இது. தீபம் இதழில் வெளிவந்தது. ஆனால் அதன்பின் இதை என் எந்தக் கவிதை நூலிலும் பயன்படுத்திக்கொள்ளவில்லை. ஒரு கவிதையாய்க் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த ஆண்டு இதை வெளியிட வேண்டும் என்று தோன்றியது -20171124

*

இவ்வையகத்தின்
வைர நிலாவே

தேசக்கவி பாரதியின்
பொற்கனாவே

உலக சமாதானத்திற்காக
ஓயாது உழைத்த
புனிதப் புறாவே

இது நிசந்தானா?

இம்மாபெரும்
ஜனநாயகத் தோட்டத்தில்
காவல்காரர்களாலேயே
உன் ரோஜா உயிர்
கிள்ளியெறியப்பட்டதாமே
நிசந்தானா?

உனக்கோர்
உயிருள்ள இரங்கற்பா
வடிக்கலாமென்றால்
என்
பேனாவிலிருந்து
கண்ணீரல்லவா
பெடுக்கெடுத்து
எழுத்துக்களை மூழ்கடிக்கிறது

இந்திய மண்ணைத்
துண்டுபோடத் துடிக்கும்
துரோகிகள் உன்னைத்
துப்பாக்கிக் குண்டுகளால்
துளைத்துவிட்டார்களா

இந்தத் தேசத்தந்தைக்கு அன்று
தாய்க்கு இன்று
என்று
இவர்கள் செலுத்தும்
நன்றிக் கடனும் மரியாதையும்
இதுதானா

ஈடு செய்ய முடியாத
இழப்பு என்று
ஒரு
பேச்சுக்குச் சொல்வார்கள்
பலருக்கு

நிசத்தில்
உன்னை
அள்ளிக் கொடுத்துவிட்டுத்
தேம்பி நிற்கும்
இந்த தேசத்தின்
இழப்பல்லவா
ஈடு செய்யவே முடியாத
பேரிழப்பு

அன்புடன் புகாரி
19841031



பகுத்தறிவாளர்கள்
என்று சொல்லிக்கொண்டு
படுத்தி எடுப்பவர்களே

உங்களுக்குள்
கடவுள் பக்தியை
வலிய நுழைப்பதா
என்
பணி என்று
நினைத்தீர்கள்

உங்களின்
சொல் வன்முறையைக்
கிள்ளியெறிவது
மட்டுமே
என் தாகமும்
விவேகமும்

மானுடத்தை வாழவைக்கும்
அடித்தளப்
பகுத்தறிவு பெறுங்கள்
முதலில்

பிறகு
பகுத்தறிவாளர்கள் என்று
உங்களை
*அன்போடு* சொல்லிக் கொள்ளலாம்

மறந்துவிடாதீர்கள்
அன்போடு
சொல்லிக்கொள்வது
அடிப்படை அறிவு
அஃதிலாமல்
பகுத்தறிவு பெற
வழியே இல்லை

அன்புடன் புகாரி 
20171123
>>>சஞ்சய் லீலா பன்சாலி அல்லது தீபிகா படுகோனேவின் தலையைத் துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அகில பாரதிய சத்திரிய யுவ மகாசபை எனும் அமைப்பின் தலைவர் தாக்கூர் அபிஷேக் சோம் அறிவித்துள்ளார்.<<<

தீவிரவாதிகள் தைரியமாக மேடைபோட்டுப் பேசும் காலத்தில் நாம் வாழ்கிறோம்

தீவிரவாதிகள் எல்லோரும் ஹிரோக்களாக வர்ணிக்கப்படுகிறார்கள்

தீவிரவாதிகளிடம்தான் எல்லா நியாயமும் தர்மமும் இருப்பதாக நம்ப வைக்கப்படுகிறது

தீவிரவாதிகளின் இருப்பினால்தான் அரசியல் சுகப்பயணம் செய்கிறது

தீவிரவாதிகள்தாம் அறம் என்பதற்கான சரியான விளக்கம் சொல்லக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் நாடு சுவாரசியம் குன்றியதாய் ஆகிப் போகும்

தீவிரவாதிகள் இல்லாவிட்டால் அரசின் ஓட்டு வங்கிகள் நிரம்பாமல் போய்விடும்

தீவிரவாதிகள் சுதந்திரத்தின் பொருளைச் சரியாக விளக்குகிறார்கள்

தீவிரவாதிகள் மட்டும்தான் நாட்டில் சுதந்திரம் பெற்ற குடிமக்கள்

அன்புடன் புகாரி
20171122


உனக்கு ஒருநாள்
நான் ஒரு
கவிதை எழுதுவேன்...
அது
உன்னைப்போலவே
வெகு அழகானதாக
இருக்கும்
ஆனால்
நீயே கவிதையாக
இருப்பதால்தான்
அதை
எப்படி எழுதுவதென்று
யோசிக்கிறேன்
அன்புடன் புகாரி
20171122
*முகநூலும் நானும்*

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

ஆனந்த நிமிடங்களை
முகநூல் அள்ளித் தருகிறது
ஆனால் நான்
யாதொரு கேளிக்கைக்காகவும்
முகநூலில் இல்லை

புது நட்புப் பூக்கள்
தினம் தினம்
மொட்டுடைத்துப் பூக்கின்றன
ஆனால் நான்
அப்படியானதொரு குறிக்கோளில்
முகநூலில் இல்லை

உறவுகள் வந்து
உற்சாகமாய் லைக் போடுகின்றன
ஆனால் நான் அதற்காகவும்
முகநூலில் இல்லை

நண்பர்கள் 
உறவுகள்
நன்கறிந்தவர்
சற்றே அறிமுகமானவர்
மறந்தே போனவர்
யாரென்றே தெரியாதவர்
என்று இன்று
5000 நண்பர்கள் இருக்கிறார்கள்
அதற்குமேலும் வருகிறார்
முகநூல்தான் 5000+ ஐ
ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர
நான் ஏற்கிறேன்

ஏனெனில்
என் இதயம் அப்படியே
விரிந்து பரந்தது
இந்தப் பிரபஞ்சத்திற்கும்
பெரியதாக

இந்த 5000+ ஐ அடையும்
லட்சியத்திலும் 
நான்
முகநூலில் இல்லை

பிறகு
ஏன் இருக்கிறேன்
நான் முகநூலில்?

என் கவிதைகள்
தென்றலாய் உலவ
ஒரு மன்றம் வேண்டும்
புயலாய் வீச
ஒரு கரை வேண்டும்

என் தென்றலின் தீண்டலை
என் புயலின் சீற்றத்தை
என் கருத்தின் புதுமையை
என் கவிநயத்தின் அழகை
ரசிக்கும் நண்பர்கள்
ரசித்ததைச் சிலாகித்து
*மறவாமல்
மறுமொழி இடவேண்டும் *

என் கவிதைகளின்
ஆணிவேர்வரைத்
துளைத்துச் சென்று
கண்ட சுகங்களையும்
கடும் விமரிசனங்களையும்
இணையான விருப்பத்தில்
இன்றே 
இப்பொழுதே
அள்ளித் தரவேண்டும்

நாலு லைக் வந்தாலும்
போதும்
அட 
அதுவும் இல்லாவிட்டாலும்
போதும் போதும்

ஆனால்
ஒவ்வொரு லைக்கும்
உண்மையின் கர்ப்பத்தில்
பிறந்ததாய்
இருக்க வேண்டும்

லைக்கைவிடப் பன்மடங்கு
நான் லைக் பண்ணுவது
வந்து விழும் உங்கள்
மறுமொழிகளைத்தான் 
என்பதை
என் முகநூல் நட்புகள்
அன்போடு
அறிந்து வைத்திருக்க வேண்டும்

முகநூலிலும்
நாம்
நல்ல முகங்களை
உருவாக்கலாம்

அன்புடன் புகாரி
20171122
காதல் என்பதே
சாதி மதம் இனம் நிறம் மொழி கடந்து
சின்னச் சிறகுகள் விரித்து
மனிதப் பெருவானில்
எழுந்து பறக்கத்தானே

லவ் ஜிகாத் என்று
நேரெதிர்ப் பெயர் சூட்டி
முற்போக்குப் பிஞ்சுப் புறாக்களை
அடித்துச் சூப்பு வைக்கும்
காட்டுமிராண்டிக் கூத்தென்பது
வெட்கத் தலைகுனிவின்
உச்சமல்லவா

எங்கோ
பல்லாயிரம் ஆண்டுகள்
பின்னோக்கிச் செல்கிறோமா

அதன் காரணம்
சாக்கடைச் சாதிமத பேதமா

அகிலா
ஹதியாவானாலோ
ஹதியா
ஜெனிலாவானாலோ
ஜெனிலா
அகிலாவானாலோ

உனக்கென்ன
கேடு

எங்கே
வன்முறைக்கு
விருந்தாகாமல்
வயதுவந்தோர்
முடிவெடுக்கிறாரோ
அங்கேதான்
சுதந்திரம்
தன் வேர்களில்
உயிர்நீர் அருந்துகிறது

சட்டமும்
கடமையைச் செய்வதில்லை
நீதியும்
நியாயத்தை நிறுவுவதில்லை

வெறிக்குப் பலியாகி
வீதியில் அம்மணமாய்
மனிதவாழ்வு
இங்கே

அன்புடன் புகாரி
20171121












*கவிதை பற்றி ஓர் உரையாரல்:*

கேள்வி: நன்றாய் வரவேண்டிய உங்கள் கவிதை இப்படி இழுவையாய் ஆகிவிட்டதாய் உணர்கிறேன். ரசிகர்களுக்கு ஏற்ப எழுதுபவர்கள்தானே பெருங்கவிகளாய் இருக்க முடியும்?

ரசிகனுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எழுதுபவனே நல்ல கவிஞன் என்பதை நானும் ஏற்கவில்லை பாரதியும் ஏற்கவில்லை. நான் சினிமா எடுக்கவில்லை கவிதை எழுதுகிறேன்.

கேள்வி: ரசிகனின் கருத்தில் நியாயம் இருந்தாலுமா?

நியாயங்கள் காலத்தின் கையில். அதோடு எந்த ரசிகனை நினைத்துக் கவிதை எழுதவேண்டும்? அத்தனை ரசிகர்களும் ஒரே மாதிரி ரசிப்பார்களா? ஒரு ரசிகர் தனக்குப் பிடித்ததைத் தேடிப்பிடுத்து ரசிக்கிறார். ஒரு விமரிசகர் தனக்குப் பிடிக்காததைத் தேடிப்பிடித்து விமரிசிக்கிறார். நான் எனக்குப் பிடித்தக் கவிதைகளை எழுதிச் செல்கிறேன். ரசிகரும் விமரிசகரும் அவரவர் விருப்பத்தைச் செய்வதில் எனக்கு யாதொரு மறுப்பும் இல்லை விருப்பமே உண்டு.

அன்புடன் புகாரி
20171120
*நூஹு என்றொரு நண்பர்*

டொரோண்டோவில் நூஹு என்று ஒரு நண்பர். கீழக்கரையைச் சேர்ந்தவர். உணர்வுகளின் கோட்டைக்குள் உற்சாகமாய்க் குடியிருப்பவர்.

அருமையான புதிய வீடு ஒன்றை ஏஜாக்ஸ் என்ற ஊரில் வாங்கிக் குடிபெயர்ந்து விருந்து வைத்தார்.

அவருக்குக் கானா பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம். அதை மனதில் கொண்டு ஒரு நான்கு வரிகள் எழுதிப் பாடினேன். அதுவும் அவருக்குப் பிடித்து எங்களிடம் பாடிக்காட்டிய ’வகைவகையா சீப்பு சோப்பு கண்ணாடி’ என்ற மெட்டுக்குள் எழுதிப் பாடினேன். இதோ அது உங்களுக்காக

பளபளப்பா
தொப்பி ஜிப்பா கண்ணாடி
நூஹு....
பச்சப்புள்ள
பாசத்துக்கு முன்னாடி

பேட்டுமிட்டன்
ஆட்டத்துல கில்லாடி
அந்த.....
ஜல்லிக்கட்டு காளையெல்லாம்
பின்னாடி

நூஹூ நூஹூ நூஹுடா
நூஹூ வெல்லப் பாகுடா

அன்புடன் புகாரி
20171119
மாமனுக்கு அஞ்சலி

உறவினர் ஒருவர் இறந்திருப்பார். அம்மா என்னை அந்த மரணவீட்டிற்குச் சென்றுவா என்று கட்டளை இட்டிருப்பார். நானும் சென்றிருப்பேன். மருந்துக்குக்கூட அந்தச் சாவினால் எனக்கு ஒரு துளி கண்ணீர் வராது.

ஆனால்... நான் தொடர்ந்து அழுதேன் ஒரு மரணத்திற்கு. இறந்தவர் எனக்குச் சொந்தம் இல்லை. என் உறவினர் எவருக்கும் அவர் தூரத்து உறவும் இல்லை.

என்னை எடுத்து முத்தமிடும் என் வீட்டு வேலைக்காரர். என்னால் ‘மாமா’ என்று பாசமுடன் அழைக்கப்பட்ட அவர் ஒரு தெய்வப் பிறவி என்றே எனக்குத் தோன்றும். அத்தனை அன்புடன் வேறு எவரும் என்னிடம் இருந்ததாய் என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க இயலாது.

அவர் ஒரு நாள் விபத்தில் இறந்துவிட்டார். பார்க்க இயலாத நெடுந்தூரம். இறந்த செய்தியே ஒரு வாரம் கழித்துத்தான் என்னை வந்து சேர்ந்தது. என் கண்ணீர் ஒரு நயாகராவாய் அவருக்கு என்றென்றும்...

*

அஞ்சலி...

ஓவெனக் கதறினால் தீருமோ - என்
       ஒப்பாரியுனையிங்கு மீட்குமோ
ஆவியும் இல்லையே போக்கிட - என்
       ஆவியே நீதானே மாமனே

தூவிய முட்களில் துவள்கிறேன் - மனந்
       தேறிடும் வழியற்றுத் தீய்கிறேன்
சாவெனும் அரக்கனவனெங்கே - என்
       சினத்தினில் எரியட்டும் இன்றே

அன்புடன் புகாரி
19870000

கீழே உள்ள இரண்டு கவிதைகளும் ஒன்றுதான். இறைவன் என்றாலும் அல்லாஹ் என்றாலும் பொருளில் யாதொரு மாற்றமும் இல்லை. 

அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்) = God (ஆங்கிலம்)

இசைமுரசு நாகூர் ஹனிபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலை மாற்று மதத்தவர் பலரும் அனுபவித்துப் பாடுவார்கள். அப்படியானதோர் அற்புதப் பாடல் அது. மனித உயிர்கள் நெஞ்சுருக நேசிக்கும் இறைவனின் குணாதிசயங்களை அருமையாகப் பாடிச் செல்லும் அந்தப் பாடல்.   

இறைவன் இறைவன் என்றே எல்லா இடங்களிலும் வரும் அந்தப் பாடலில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் ’அல்லா’ என்ற அரபிச் சொல்லைப் பயன்படுத்திவரும்.

அல்லல் படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்

இதை ஒரு மேடையில் ’ஆண்டவனின் பேரருளை நம்பி நில்லுங்கள்’ என்று மாற்றிப்பாடினார்கள். பிழையே இல்லை. ஆனாலும் தமிழர்களாகிய நாம் எத்தனையோ வடமொழிச் சொற்களையும் அரபுமொழிச் சொற்களையும் ஆங்கிலச் சொற்களையும் தமிழுக்குள் அழகாகக் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம். அதுபோலவே அல்லா என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். ஏனெனில் அல்லா என்றால் இறைவன் என்றுதான் பொருள். God என்றுதான் பொருள். 

நான் அறிந்து சில மாற்றுமத எழுத்தாளர்கள் இன்சால்லா என்ற சொல்லை வெகு சாதாரணமாக அன்றாடம் பயன்படுத்துகிறார்கள். 

நான் மதநல்லிணக்கம் பாடுபவன். இதுபோல் எழுதி இணக்கம்தேட விழைபவன்.

*
அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்

*
இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

அன்புடன் புகாரி
20171120
எத்தனையோ மாணவர்களைத் தமிழால் ஊட்டிய உங்களுக்கு என்னை நினைவிருக்கிறதா தெரியவில்லை. ஆனால் நான் என்றும் உங்களை மறப்பதே இல்லை.
என் கவிவேர் இதழ்களில் பாலூட்டியத் தாயை நான் எப்படி மறப்பது?
என் நட்பில்தான் நீங்கள் இருந்திருக்கிறீர்கள். ஆனால் நான் தான் அடையாளம் தெரியாதவனால் இருந்திருக்கிறேன். வருந்துகிறேன்.
இப்போதும் உங்கள் பாராட்டைக் கேட்டு அதே வயதுக்கு மீள்கிறேன்.
அடுத்தமுறை ஊர் வரும்போது அவசியம் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் கொள்கிறேன்
அன்புடன் புகாரி
கவிஞரய்க்
கவிஞராய்க்
காண்பதய்ப்
பொய்யென
பிழய்யெனக் 
கொள்கய்
முறய்யோ?
(பின் குறிப்பு: இப்படித்தான் எழுத வேண்டும் என்று நான் எழுதுவதாய் யாரும் அன்புடன் எண்ணிவிடவேண்டாம். ஓர் ஆய்வின் நீட்சியாய்த்தான் இப்படி. சிரிப்பு வந்தால் சிரியுங்கள். சிந்திப்பு வந்தால் சிந்தியுங்கள். தொல்காப்பியனை மறவாதிருங்கள்)
அன்புடன் புகாரி
ஆசான் என்ற சொல் ஒருமையில் முடிவதுபோல் இருக்கிறதல்லவா? அந்த ’ன்’ என்ற ஈறால்.
இறைவன், ஆண்டவன் என்பன எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ஆசானும் என்று தமிழ் சொல்லித் தருகிறதா?
அன்புடன் புகாரி