வெள்ளை என்பது 
அழகல்ல 
நிறம்

ஆங்கிலம் என்பது 
அறிவல்ல 
மொழி

கறுப்பு என்பது
நிறமல்ல
பேரண்டம்

தமிழ் என்பது 
மொழியல்ல 
பண்பாடு


சொர்க்கம் தனியாகவும்
நரகம் தனியாகவும்
இருந்தால்
அது
மேலோகம்

சொர்க்கமும் நரகமும்
சேர்ந்தே இருந்தால்
அது
பூலோகம்

அன்புடன் புகாரி
நம் இந்திய தேசத்திற்கு
ஆங்கிலமே
பொது மொழியெனப்
போதும் போதும்

நடுவண் அரசு
இந்திக்காரனோடு
இந்தியில் உரையாடட்டும்
தமிழனோடு
தமிழில் உரையாடட்டும்
தெலுங்கனோடு
தெலுங்கில்  உரையாடட்டம்

இப்படியே
அத்தனைத்
தாய்மொழியினரோடும்
அவரவர் தாய்மொழியில்
உரையாடட்டும்

தாய் மொழி அறியாதான்
ஆங்கிலத்தில் உரையாடட்டும்

ஆங்கிலமும்
தாய்மொழிகளும்தானே
இந்த தேசத்தின் கல்விமொழிகள்

அதுவன்றி
இந்தியும் ஆட்சிமொழி என்று
சில குரங்குக் கூட்டங்கள்
திணவெடுக்கும்போதுதான்
இந்த தேசத்தின்
பொன்னான தாய்மொழிகள்
நசுக்கப்படுகின்றன
ரத்த ஆறுகள் ஓடுகின்றன

இந்தியை
நாடாளுமன்றத்திலிருந்து
முற்று முழுதாக
ஒழித்துக் கட்ட வேண்டும்

தாய்நாட்டில்
தாய் மொழிகள்தான்
தாய்கள்

எந்தத் தாயும்
கண்ணீர் சிந்துதல் கூடாது

உன்
வீடாளும் மொழியே
நாடாளும் மொழியென்று
வீம்படித்தால்
வெற்றுச் சாம்பலாவாய்
எச்சரிக்கை

அன்புடன் புகாரி
20171217

நீங்கள் பிழையாகக் கருதி இருக்கிறீர்கள்.
அரசியல் பிரிவுகள் எல்லாம் சாதி இல்லை.
திமுக, அண்ணா திமுக, விடுதலைச் சிறுத்தை, பஜக எல்லாம் சாதியா?
இஸ்லாத்தில் சாதிகளே கிடையாது!
அன்புடன் புகாரி
ஓர்
ஓட்டின் விலை
ஐந்து ரூபாயில் தொடங்கி
இன்று 
பத்தாயிரம் ரூபாய் ஆயிற்று

நாளை?

மாதா மாதம்
ஐயாயிரம் என்றாகலாம்

அல்லது
இவ்வண்ணமே  பழகிய மக்கள்
வருமானமின்றி வாடும்போது

ஒரு மந்திரியைப்
போட்டுத் தள்ளிவிட்டு
இடைத் தேர்தல் நடக்க
ஆவன செய்யலாம்

எதுவும் நடக்கும்
இனி எப்படியும் ஆகும்

ஊழல் என்பது
பன்முகக் கத்தி

அன்புடன் புகாரி
20171216
இரண்டே
சாதிகள்தாம் உண்டு

அறம்-தர்மம்-ஹலால்
வழிநடக்கும் மேலானோர்
ஒரு சாதி

அறமற்ற-அதர்ம-ஹராம்
வழிநடக்கும் கீழானோர்
மற்றொரு சாதி

இதை
நான் சொல்லவில்லை

சாதி
இரண்டொழிய வேறில்லை
சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்
மேதனியில்
இட்டார் பெரியோர்
இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

என்று
நல்வழி நூலில்
பழந்தமிழச்சி
ஔவை சொல்கிறாள்




20171214
ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
திரிந்து பறந்துவா பாப்பா,
வண்ணப் பறவைகளைக் கண்டு - நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா.

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
கூட்டி விளையாடு பாப்பா,
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா.

பாலைப் பொழிந்துதரும் பாப்பா, - அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா;
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா.

வண்டி இழுக்கும்நல்ல குதிரை - நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, - இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா.

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

பொய் சொல்லக் கூடாது பாப்பா - என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா,
தெய்வம் நமக்குத்துணை பாப்பா - ஒரு
தீங்குவர மாட்டாது பாப்பா.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா,
அன்பு மிகுந்ததெய்வ முண்டு - துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா, - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா,
தேம்பி யழுங்குழந்தை நொண்டி, - நீ
திடங்கொண்டு போராடு பாப்பா.

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா,
அமிழ்தில் இனியதடி பாப்பா, - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா.

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே, - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா;
செல்வம் நிறைந்த ஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா.

வடக்கில் இமயமலை பாப்பா - தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா,
கிடக்கும் பெரியகடல் கண்டாய் - இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா.

வேத முடையதிந்த நாடு, - நல்ல
வீரர் பிறந்த திந்த நாடு,
சேதமில் லாதஹிந்து ஸ்தானம் - இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும்; - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடைய நெஞ்சு வேணும்; - இது
வாழும் முறைமையடி பாப்பா.

மகாகவி பாரதி
சாதிகள்
இல்லையடி பாப்பா
குலத் தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல்
பாவம்

என்றான்
பாரதி

அவன்
கடவுள் நம்பிக்கை
இல்லாதவனும்
அல்லன்

இந்து மதத்தை
எதிர்த்தவனும்
அல்லன்

அன்புடன் புகாரி
மச்சான்,
நம் பிள்ளைகளைக் காப்பதற்கான ஒரே வழி, வீட்டில்
குடும்ப அன்பும், 
இஸ்லாம் தரும் அறமும்,
தமிழ் தரும் பண்பாடும்தான்.
அந்த அரணுக்குள் நுழைவது எளிதல்ல.
நாங்கள் இங்கே கனடாவில் ஊரில் வாழ்வதைவிட பாதுகாப்பாக நன்றாகவே வாழ்கிறோம்.
அன்புடன் புகாரி
Quote என்ற சொல்லைத் தமிழில் அழகாகச் சொல்வதெப்படி?
பஞ்ச் என்கிறார்கள் சிலர்
நச் என்கிறார்கள் சிலர்
குறிப்பு என்கிறார்கள் சிலர்
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்
சொன்னவை:
கூற்று
கூற்றுகள்
கூறுகை
கேட்டிகை
மேற்கோள்
கோள்
நறுக்கு
நறுக்குத் தெறித்த மாதிரி என்று பாட்டிகூட சொல்வார்கள்.
கூற்று, நறுக்கு இரண்டும் என் மனப்பக்கம் நெருங்குகின்றன
கூற்று என்பதை கூறுகை எனும்போது கொடேசன் என்பதோடு பொருந்துவதாய்ப் படுகிறது
Quotes - கூற்றுகள்
Best Quotes - நறுக்குகள்
Quotation - கேட்டிகை, கூறுகை
அன்புடன் புகாரி
>>>ஓரினச்சேர்க்கை என்பது ஒருவகை உளவியல்ரீதியான, உடல்ரீதியான பிரச்சனை.<<<
நானும் அதைப் பிரச்சினை என்றுதான் சொல்கிறேன்.
உடல் ரீதியான என்பதைக் காட்டிலும் உளவியல் ரீதியான என்பது மிகவும் சரி.
நாம்தான் நம் மருத்துவ அறிவியலால் அவர்களைக் காக்கவேண்டும்.
>>>அது தானாகவே தோன்றுமொரு ஹார்மோன் மாற்றம். இதையும் அப்படியே விட்டுவிட வேண்டும்.<<<
சில மாதங்களுக்குமுன் பிறந்த குழந்தை ஒன்றை சமையல் செய்து தட்டில் ஏந்திக்கொண்டு வந்து கூட்டாக நின்று வெட்டித் தின்னக் காத்திருப்பதாக வீடியோக்கள் வந்தன கண்டீர்களா?
தானாகவே தோன்றும் பசி என்று அப்படியே விட்டுவிட வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?
அன்புடன் புகாரி
பாஸ்கர், கனடா
இது எனது சபரிமலை சென்ற நினைவுகளை திருப்பித. தந்தது. எருமேலி சென்றவுடன், வாவர் பள்ளிவாசலில் வாவரை வணங்கி அங்கிருந்த சாஸ்தா ஆலயத்திற்கு ஆடிக்கொண்டே செல்வது இன்றும் இருக்கும் நடைமுறை. என் நினைவுகள் சரியாக இருந்தால் அந்த பள்ளிவாசலில் திருநீறு கூடத்தருவார்கள். சிறுவயதில் சென்றது. வாவர் பற்றிப் பாடும் ஒரு ஐயப்பன் பாடல் கூட உள்ளது.
பாஸ்கர்,
நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஓர் உண்மையை நான் இங்கே சொல்லியாக வேண்டும். அப்போதுதான் புரிதல் வலுப்படும்.
வாவர் என்பது ஒரு பெரியவரின் பெயர். சூஃபி முஸ்லிம்கள் இவரை அவுலியா என்று அழைப்பார்கள். இவர் போல நாகூர் முத்துப்பேட்டை ஹாஜிஅலி என்று ஏராளமான இடங்களில் இதுபோன்ற பெரியவர்களின் அவுலியாக்களின் சமாதிகள் உண்டு.
பள்ளிவாசல் என்பதும் தர்கா என்பதும் ஒன்றல்ல.
பள்ளிவாசல் என்றால் அதனுள் ஒன்றுமே இருக்காது. ஒரு சுத்தமான இடம். இறைவனைத் தொழுவதற்காக. இங்கும் அங்குமாக சில குர்-ஆன் பிரதிகள் மட்டுமே இருக்கும். வேறொன்றையும் காணமுடியாது. ஆகவேதான் சுத்தமான எந்த இடமும் பள்ளிவாசல் ஆகிவிடும். பயணம் செல்லும்போது பாலைவனம் பள்ளிவாசலைப் போல ஆகிவிடும். வீட்டில் ஓர் சுத்தமான அறை பள்ளிவாசலைப்போல ஆகிவிடும். பள்ளிவாசல் என்பதே எல்லோரும் சகோதரத்துடன் இணைந்து வந்து தொழுவதற்காகத்தான். மற்றபடி இருக்கும் இடத்திலிருந்தே தொழுது கொள்ளலாம்.
தர்கா என்றால் அதனுள் ஒரு சமாதி இருக்கும். அதனைச் சுற்றி சில நேரம் சிலர் அமர்ந்திருப்பார்கள். அந்த சமாதியில் அடங்கி இருக்கும் பெரியவருக்கு சொர்க்க பதவிகளை, நிறைவான மறுமை வாழ்வைத் தந்தருள் இறைவா என்று சமாதியைத் தரிசிக்க வரும் முஸ்லிம்கள் வேண்டிக் கொள்வார்கள்.
இது இறந்துபோன எல்லோருக்குமே செய்யக் கூடிய ஒன்றுதான் என்றாலும், சமூக சேவைகள் செய்து உயர் காரியங்கள் செய்து உயிர் நீத்த பெரியவர்களுக்கு தர்கா கட்டி இப்படி இறைவனிடம் வேண்டிக்கொள்வது ஒரு வழக்கம்.
அங்கே அடங்கி இருப்பவருக்கு நமக்கு அருளும் சக்தி கிடையாது. இறைவனுக்கே அந்த சக்தி உண்டு.
அன்புடன் புகாரி
20171211

என் வாட்சப் குழுமத்தில் ஒரு சுவாரசியமாக உரையாடல். அதில் இன்று இப்போழுது இட்ட ஒரு மறுமொழி உங்கள் பார்வைக்கு:
அன்பினிய நண்பருக்கு (பெயரை நீக்குகிறேன்),
1. அறிவுடைய இந்துக்களுள் சிலர் மோடியை ஆதரிக்கிறார்களே
2. மோடியின் or RSSன் அறமற்ற செயலை சில அறிவுடைய இந்துக்களும் ஆதரிக்கிறார்களே
இதில் 1 பிழை 2 பிழையில்லை என்கிறீர்கள். இரண்டுக்குமான வேறுபாட்டை மிக நுணுக்கமாகக் கொண்டுவருகிறீர்கள்.
அதாவது
அ. மோடியின் அறமற்ற செயலை ஆதரிப்பது பிழை
ஆ. அறிவுடைய இந்துக்களுள் சிலர் மோடியை ஆதரிப்பது பிழையில்லை
அதாவது இதில் நுணுக்கமாக நீங்கள் கொண்டுவரும் கருத்து என்னவென்றால்,
a.மோடி என்பவர் அறமற்ற செயலைச் செய்கிறார்.
b.அப்படிச் செய்யும் செயலைத்தான் நாம் ஆதரிக்கக் கூடாது
c.ஆனால் மோடியை ஆதரிக்க வேண்டும்.
இனி கீழே உள்ள உரையாடலைப் பாருங்கள்:
================================
நண்பர் 2:
Dont think this will happen anytime soon. We are still evolving to become humane
Same thing happened on a mass scale when Modi was CM of Gujarat
அன்புடன் புகாரி
அறிவுடைய இந்துக்களுள் சிலர் மோடியை ஆதரிக்கிறார்களே? என்ன காரணமாக இருக்கும்?
================================
எதற்கு வந்த பதில் எது என்று புரிகிறதா? மோடி செய்த அறமற்ற செயலைத்தான் சுட்டிக்காட்டி இந்தக் கருத்து வெளியாகி இருக்கிறது. ஆகவே உங்கள் கண்ணோட்டப்படி கூட அது சரியாகவே கையாளப்பட்டுள்ளது.
அடுத்தது....
மோடி மதவெறிக்குத் துணை நிற்கிறார், ஆகவே அவர் அறவழியில் செல்லவில்லை. மதவெறிக்குத் துணை நிற்கும் மோடியை ஆதரிக்கும் சில இந்துக்கள் அறமற்ற செயலை ஆதரிப்பதால் அறம் விட்டு விலகுகிறார்கள். இதை உரக்கச் சொல்வது உண்மையான அறம். பயந்து ஒதுங்குவது அறத்திற்குச் செய்யும் கேடு.
இப்படி நான் சொல்கிறேன். சரியாகத்தானே சொல்கிறேன்?
மதவெறிக்குத் துணை நிற்பவரை எப்படி அறக்காவலர் என்று கருதமுடியும்? அவர் ஒரு தேசத்தின் பிரதமர். உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் அவரை விமரிசனம் செய்யும் உரிமை உண்டு அல்லவா?
நாளையோடு அவர் மதவெறி அமைப்புகளுக்கு ஆதரவு தருவதை நிறுத்திவிட்டு, நாட்டில் நடக்கும் மதவெறியாட்டங்களையும், மொழிவெறியாட்டங்களையும், இனவெறியாட்டங்களையும் ஒடுக்கட்டும். நான் அவரை எப்படிப் பாராட்டிப் புகழ்ந்து இவர்தான் எங்கள் பிரதமர் என்று உரக்கச் சொல்கிறேன் என்று பாருங்கள்
>>>ஒரு மனிதனையோ, ஒருவருக்கும் தீங்கிழைக்காத அவன் நம்பிக்கைகளையோ, மற்றொருவர் சொல்லாலோ, எழுத்தாலோ, செயலாலோ காயப் படுத்தி சூறையாட நினைப்பது அறமில்லையென்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. <<<<
இது என் அழுத்தமான கருத்தும்கூட. ஆகவேதான் இங்கே யாரும் தனிமனிதக் கீறல் செய்துவிடமுடியாது. தீங்கிழைக்காத நம்பிக்கையைக் குதறி எடுத்துவிடமுடியாது.
அன்புடன் புகாரி
அருமையான கவிதையை அப்பொழுதே எழுதியுள்ளீர் கவிஞரே! உங்களைத் தூண்டி கவியுலகுக்குள் ஈர்த்த உங்கள் தமிழ் ஐயாவைப் (பேராசிரியர் திரு மன்சூர் அலி) போற்றுதல் எம் கடனுமாம். வாழ்க அவர்கள்! ''சிறுவனுக்கு''ச் சிறந்த கவிதைகளை பெருந்துணையாம் கருத்துகளைப்பற்றி இயற்ற ஊக்கிய பெருமை ஐயாவுக்கே. - முனைவர் செல்வா

*

இவ்வேளையில் என் பள்ளித் தமிழாசிரியர், என்னை எப்போதும் வகுப்பில் கவிஞரே என்று அழைக்கும் திரு கிருட்டிணன் அவர்களைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் நான் குற்றவாளியாகிவிடுவேன்.

என் கவிதைகளை வகுப்பில் கறும்பலகையில் எழுதி அதை மேம்படுத்துவார், பாராட்டுவார், அசை பிரித்துக் காட்டுவார், அணிகளைக் குறிப்பிட்டு மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்.

மனதில் பதியும் வண்ணம் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை சொல்லித் தந்த என் பள்ளி ஆசிரியர்.

இப்போது நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு கொஞ்சம் அசை, கொஞ்சம் எதுகை கொஞ்சம் மோனையோடு புதுக்கவிதைகள் எழுதுகின்றேன் இசைக்கவிதைகளும் எழுதுகின்றேன்

அன்புடன் புகாரி
20171212
காமராஜரைத் தோற்கடித்தது திராவிடர் கழகம் அல்ல.
காமராஜர் தோற்பதை அண்ணாவே விரும்பவில்லை.
ஆனால் காமராஜர் தன் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.
காரணம் தெரியுமா?
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் யார் சுனாமியாய் நின்றார்களோ அவர்களைத்தான் தமிழர்கள் நேசித்தார்கள், வெல்லச் செய்தார்கள்.
தமிழர் தமிழ் தமிழ்மண் இந்த உணர்வு பூர்வமான தங்கச் சங்கிலி மிக மிக உறுதியானது. அதை அழிக்க இதுவரையிலான அத்தனை மத்திய அரசின் முயற்சிகள் எல்லாம் படு தோல்வி.
இப்போது மிக அதிக அளவில் கொடூரம் தமிழனுக்கும் தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் நடக்கிறது.
மீண்டும் வெல்வது தமிழும் தமிழனுமாகவே இருப்பான் என்பதில் அசைக்க முடியாத நம்பிகையோடு நான் இருக்கிறேன்.
மற்றபடி அறமற்ற செயலில் தமிழன் ஈடுபட்டால், நான் நிச்சயம் கண்டிக்கவே செய்வேன்.
இதுவரையிலான திராவிட தலைவர்களை நான் விரும்பியதில்லை.
ஆனால் தமிழ்மண் காக்கும் தமிழ் காக்கும் திராவிட கட்சிகளை நான் வரவேற்கிறேன் ஆதரிக்கிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன்
அன்புடன் புகாரி
குடும்பம் என்பதை உணர முதலில் அன்பு வேண்டும்
உழைப்பு இல்லாதவர்கள் குடும்ப அரசியல் செய்து பிழைப்பார்கள்
அதைத் தடுக்க அறிவும் தலைமையும் அவசியம்
அமெரிக்க கனடியர்களின் பண்பாடு சிறப்பானது. மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அவர்கள் கலாச்சாரத்தில்யே இல்லாத மத ஒழுங்குகளிலேயே இல்லாத சில விடயங்கள் மேற்குலக பெரு நகர வீதிகளில் உண்டு.
1. மருந்து - இது அவர்கள் கலாச்சாரம் அல்ல. அவர்களையும் கொன்றழிக்கும் கலாச்சாரம். பெரிய நடிகர்கள் எல்லாம் இதில் சிக்கி செத்ததையும் சாவதையும் அறிவீர்கள்
2. ஆண்+ ஆண், பெண்+ பெண் திருமணங்கள் மற்றும் உறவுகள் - அவர்களின் அற வாழ்வில் இது இல்லை. சமூகத்தை அழிக்கும் கொடுநோய்
3. திருமணமற்ற ஒற்றையர் வாழ்க்கை - இது அவர்களுள் பெரும்பாலானவர்கள் இருக்கும் கிருத்துவ மதத்தில் இல்லை. திருமணமற்றவர்கள் சேவை செய்வோர். அவர்கள் புனிதர்களாய் இருப்பர்.
இவை போன்றவை தவிர்த்த மற்ற பழக்கங்கள், வழக்கங்கள், உழைப்பின் மீதான் நம்பிக்கைகள், நன்றி சொல்லும் பாங்கு, உரையாடும்போது செவி திறக்கும் நேர்த்தி, தினமும் இன்முகம் காட்டும் பண்பு, ஊழலலற்ற ஆட்சியமைப்பதில் ஒவ்வொருவருக்குமான பற்று என்று பல விடயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அத்தனையும் அருமையிலும் அருமை.
அன்புடன் புகாரி
அறிவை விட
அறமே உயர்ந்தது

எத்தனை
முட்டாளாய் இருந்தாலும்
பரவாயில்லை

அறவழி பூண்டோரே
மனிதர்கள்

மற்றோர்
விலங்கினும்
கீழானோர்

அன்புடன் புகாரி
சுதந்திர இந்தியாவின்
சரித்திர அடையாளங்கள்
இரண்டு

ஒன்று
மகாத்மாவின் நெஞ்சில்
தோட்டாக்களின்
துளைப்பு

இரண்டு
பாபர் மசூதியின் தலையில்
கடப்பாறைகளின்
துளைப்பு

தோட்டாக்களுக்கும்
கடப்பாறைகளுக்கும்
கற்பூர ஆரத்தி எடுக்கும்
அரசுதான்
சுதந்திரம் போற்றும்
நல்லரசாம்

அன்புடன் புகாரி
20171206




 மேலும் நிச்சயமாக
 நாம் மனிதனைப் படைத்தோம்,
 அவன் மனம்
 அவனிடம் என்ன பேசுகிறது
 என்பதையும் நாம் அறிவோம்;

 அன்றியும், 
 பிடரி நரம்பை விட
 நாம் அவனுக்கு
 சமீபமாகவே இருக்கின்றோம்.

 குர்-ஆன் 50:16.

ஒருவனின் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதை எனக்குத் தெரியும் என்கிறான் இறைவன்.

அதாவது ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களின் இதயம் பேசுவதை இறைவன் ஒருவனாக மட்டுமே இருந்துகொண்டு கேட்பான் என்கிறான்.

எப்படி?

உருவம் இருந்தாலா அல்லது அருவமான உயர் சக்தியாய் இருந்தாலா?

இதில் எது சாத்தியமாகக் கூடும்?

இறைவன் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறான். ஒருவருக்கு மேல் ஒருவர் அறிவில் உயர்ந்தவர்களாய் வந்துகொண்டே இருப்பார்கள் என்று உறுதி செய்கிறான்.

ஆனால் சிந்திக்கவே சிந்திக்காதே என்று சில மதவாதிகள் மனிதனிடம் சொல்கிறார்கள்.

இறைவனின் தேவையும் சில மதவாதிகளின் தேவையும் அல்லது அறிவின்மையும் இதில் தெளிவாகவே புரிகிறதல்லவா?

அடுத்தது...

பிடரி நரம்பைவிட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கின்றோம் என்று ஏறத்தாழ ஏழரை பில்லியன் மக்களையும் பார்த்து இறைவன் சொல்கிறான்.

சரிதானே?

உருவம் இருந்து ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இருப்பவனால் இது இயலுமா அல்லது அருவமாய் உயர் சக்தி கொண்டு எங்கும் வியாபித்திருக்கும் ஒருவனால் இது இயலுமா?

உங்கள் சிந்தனையின் எல்லைதான் உங்களின் பதில்

ஆகவே நீங்கள் தரப்போகும் பதில் எனக்கு உங்கள் சிந்தனையின் எல்லையை மட்டுமே காட்டித் தரும். வேறு எந்த மாற்றமும் நமக்குள் ஆகப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது.

நன்றி நண்பர்களே

அன்புடன் புகாரி