தனிமையின் வெளிச்சத்தில்

*
உனக்கும் உனக்கும் கிடைத்த
ஒப்பற்ற நேரம்
தனிமை

*
உன்னோடு உன்னைச் சேர்த்துப் பார்க்கவும்
உன்னிடமிருந்து உன்னைப் பிரித்துப் பார்க்கவும்
அற்புத நிமிடங்களைத் தரும் ஞானவொளி
தனிமை

*
தனிமையின் வெளிச்சத்தில்
கடந்துபோன வாழ்க்கையை
அன்று தெரியா நிஜங்களோடும்
இன்று தெரியும் நிதரிசனங்களோடும
ஆழ ஊன்றி அலசிப் பார்க்கலாம்

*
தனிமையின் தனிமையில்
உன்னோடு அந்தரங்கமாய்ப் பேசும்
அந்தக் குரல்களைக் கேள்

உன் வாழ்க்கைப் பாதை
தெள்ளத் தெளிவாகத் தெரிவதை
உயிர் விருப்போடு காணலாம்

*
தனிமையின் தனிமையில்
உன்னை உனக்குள் நிறுத்தி
பேரறிவுச் சுடராய் எரியலாம்

*
தனிமையின் தனிமையில்
அமைதியின் ஆழத்தில்
சிந்தனை சிதறா நிலையில்
உன் நெற்றியொளி உயர்த்தி
அணையா தீபமாய் உன்னை
ஞானச் சிமிழில் ஏற்றிக்கொள்ளலாம்

*
அனுபவமற்றவர்களுக்கு
தனிமை என்பது கொடுமை
ஆழ்ந்த ஞானிகளுக்கோ
தனிமைதான் வரம்

*
தனிமைதான்
அறிவெனும் விருட்சத்தின்
வேர்களில் ஊற்றப்படும் அமுத நீர்

*
உண்மையில்
உனக்கே உனக்கென அருளப்படும்
தனிமையில்
நீ தனிமையாய் இருப்பதில்லை

*
எந்தத் தனிமையிலும்
உன்னோடு இந்தப் பிரபஞ்சமாம்
ஐம்பூதங்களும்
அகலாது இருக்கின்றன

*
தனிமையில்
உன்னைப் பிட்டுப்பிட்டு வைக்கும்
உன் ஐம்புலன்களும்
உன்னோடுதான் இருக்கின்றன

*
தனிமையில் உன்னோடு
உன் எண்ணங்கள் முழுவதுமாய்த்
தன் திறந்த விழிகளோடு இருக்கின்றன

*
தனிமையில் உன்னோடு
உன் அளவற்ற கற்பனைகள்
அய்யங்களேதுமின்றி
அழகழகாய்ச் சரணைகோத்துப்
பொங்கி வழிகின்றன

*
தனிமையில் உன்னோடு
உனக்கே உனக்கான
உன் அந்தரங்கக் காதல்
அளப்பரிய சுகத்தோடு
பேரனுபவமாய் இருக்கிறது

*
தனிமையில் உன்னோடு
உன் உச்ச சக்தி மொத்தமும்
சற்றும் குறையாமல்
சன்னமாய் இருக்கிறது

*
தனிமைதான்
உன் பூரண சக்தியை
ஓர் உற்சாகப் புயலைப்போல
சற்றும் பிறளா வீரியத்தோடு
வெளிக்கொண்டுவரும்
தங்கச்சாவி

*
தனிமையில்
நீ எங்கே தனியே இருக்கிறாய்
தனிமையில் உன்னோடு
நீ இருக்கிறாயே மறந்துவிட்டாயா?

*
ஒரு விந்து
தனித்து நீந்தியபோதுதான்
நீ கருவானாய்

*
உன் உடல் மட்டும்
தனித்து விடப்படும்போதுதான்
நீ உன் கண்கொண்டு காணவியலா
மகத்துவப் பிணமானாய்

*
எனவே இளம்பிறையே
தனிமை எப்போதும்
தனிமையில் இருப்பதில்லையடா

*
தனிமையில்தான்
தனிமை தன்
நெருக்கமான உறவுகளோடு
நெருங்கி இருக்கிறது

*
உன் உள்மனம்
நீயே அறிந்திராத உன் அந்தரங்கம்
உன் ஆழ்ந்த அறிவு
உன் ஞான ஒளிச்சுடர்
உன் சரியான விருப்பு
உன் தெளிவான வெறுப்பு என்று
தனிமையின் நெருக்கமான உறவுகள்
நீண்டு கொண்டே செல்லும்

அவை அத்தனையும்
உன் நிஜங்களின் சத்திய முகங்கள்

ஆகவே
நீ உண்மையாய் இருக்கும்
உன் பொழுதுகளே
உன் தனிமை

*
ஓர் உயிர்
இன்னொரு உயிரை
தனக்குள் தனதாய்ப் பொத்திவைக்கும்
தனிமைதான் தாய்மை

*
இரண்டு உயிர்கள்
ஒன்றுக்குள் ஒன்றை உருக்கி 
உயிர்வாழ் பெருஞ் சுகமாய்க் காணும்
தனிமைதான் காதல்

*
ஓர் உயிர்
அளவிலா அன்பும் நிகரிலா அருளும் தரும்
நம்பிக்கையின் முன்
முழுவதும் பணிந்து கசிந்து காணும்
தனிமைதான் பக்தி

*
உன்னை உயர்த்துவதற்கான
அத்தனைப் படிக்கட்டுகளும்
உன் தனிமையில்தான்
உன் விழித்திரைகளில்
பிரமாண்டக் காட்சிகளாய் விரியும்

*
உன் உறவுகளை நீயறிய
உன் காதலை நீயறிய
உன் வாழ்வை நீயறிய
உன் சக்தியை நீயறிய

அட...
இப்படி நீளும் பட்டியலை
நிறுத்திச் சொல்வதானால்
உன்னையே நீயறிய
தனிமைதான் தனிமைதான்
உனக்கே உனக்குக் கிடைத்த
வரம் வரம் வரம்

*
தனிமையில்
எண்ணங்களெல்லாம்
தவங்களாகும்

*
தனிமையில்
அமைதிமடி தவழ்வது
வரங்களாகும்

*
தனிமையில்
இனிமை காண்பதோ
சாபவிமோசனங்களாகும்

*
தனிமையை
வெறுமையாய்க் காணாது
உற்ற உறவெனக் கண்டால்
என்றென்றும் உனக்குள்
கரையா நிம்மதி நிறையும் உறுதி

அடிப்படைவாதிகள்

தானே இயங்கும்
கூர்முனை ஆயுதங்கள்

மூளையைத்
தலைக்கு வெளியே
தண்டமாய் வைத்திருக்கும்
முட்டாள்கள்

மிருகங்களை நெஞ்சக் காடுகளில்
சுதந்திரமாய் அலையவிட்டு
வைத்திருப்பார்கள்

மனிதத்தை
திறந்த வெளிகளில்
இரக்கமின்றி
கொன்று குவிப்பார்கள்

எத்தனை எத்தனையோ
மெல்லிய இதயங்களை
நசுக்கி நசுக்கிச் சட்ணி செய்து
அறிவு ஆவியில் வேகாத
மடைமை இட்டிகளுக்குத்
தொட்டுக்கொண்டு
தின்று முடிப்பார்கள்

அடுத்தவர் வாழ்க்கைக்குள்ளும்
தனிமனித சுதந்திரத்துக்குள்ளும்
வெறிபிடித்தக்
காண்டாமிருகங்களாய்
அலைவார்கள்

முட்டி முட்டி இவர்கள்
எட்டித் தள்ளிய முட்டையோடுகள்
மிகப்பல குஞ்சுகளின் சமாதிகள்

வரட்டுப் பிடிவாதங்களின்
முரட்டுக் கோட்டைகள்

இதயங்களைக் காண
இவர்களுக்கு
விழிகள் கிடையாது

இயற்கையைக் கேட்க
இவர்களுக்குச்
செவிகள் கிடையாது

சுடச் சுட மனித ரத்தத்தை
உறிஞ்சமட்டும்
இவர்களின் நாக்கு நீளும்

கலந்துரையாடல்களின்
கழுத்தை நெறித்துக் கொல்லும்
கொலைகாரர்கள்

மனதை மதிக்கும் மரியாதைக்கும்
இவர்களுக்கும்
சொர்க்க நரக தூரம்

உண்மையைக் கொலைசெய்து
செருப்புக்கடியில் இட்டவர்கள்

தங்களிடமே உண்மை இருக்கிறது
என்று மார்தட்டுவார்கள்

தவறு அவர்களுடையதில்லை
தரவில்லையே இறைவன்
அவர்களுக்கும் மூளையை
பாவம்
அவர்கள் என்ன செய்வார்கள்?

பாவப்பட்ட இந்த
மனோ வியாதிக்காரர்களிடம்
இரக்கப்படவும் முடியாது

இரக்கப்பட்டால்
அந்த நொடியே அவர்களால்
மனிதர்கள் இறக்கப்படுவார்கள்

காலத்துக்கேற்ப
கனியத் தெரியாத இதயமும்
தேவைக்கேற்ப
மலரத் தெரியாத உதடுகளும்
நரகத்துக்கே போம் என்ற
உண்மையைச் சொல்லி 
இக்கவிதையை முடிக்கிறேன்

தோற்றுத்தான் போகிறோம்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்...

எங்கோ தூரத்திலல்ல
பக்கத்தில்தான்

விலகியவர்களாக அல்ல
நெருக்கமானவர்களாகத்தான்

காய்ச்சொல் ஈபவர்கள்களாக அல்ல
கனிமொழி குழைபவர்களாகத்தான்

வெறுப்பாடிக்கொண்டல்ல
உறவாடிக்கொண்டுதான்

நம் தோள் பற்றித்தான்
அணைத்தழைத்துச் செல்பவர்களாகத்தான்

அன்போடுதான்
அருகிலேயேதான்

நம்மோடுதான் இருக்கிறார்கள்
நமக்கான நம் எதிரிகள்

தோற்றுத்தான் போகிறோம்
வழியற்று நாம்

காரணம்....

ஏக்கங்களால் அபகரிக்கப்பட்டு
தவித்துத் தவித்து
நடுங்கும் விரல்களோடு
நண்பர்களைத் தேடும்போது
எதிரிகள்தான் நண்பர்களாகிறார்கள்

நண்பர்களெல்லாம்
பயந்து பதுங்கி இருட்டுக் குழிகளில்
அடையாளங்களற்று
உடைந்து கிடக்கிறார்கள்

தோற்றுத் தோற்றுப் போன
தொடர் களைப்பில்

தடிச்ச ஒதட்டுக்காரி தாராள மனசுக்காரி


தடிச்ச ஒதட்டுக்காரி
     தாராள மனசுக்காரி
படிச்ச புத்திசாலி
     பழக்கத்துல கெட்டிக்காரி

முடிஞ்ச மனமுடிச்ச
     முடிஞ்சதுன்னு சொல்லிப்புட்டா
வடிஞ்ச கண்ணுக்குள்ள
     வாய்க்கால வெட்டிப்புட்டா

இடிஞ்சித் தூளானேன்
     இடியாப்ப நூலானேன்
ஒடிஞ்ச மனசோட
     ஒப்பாரி பாடுகிறேன்

விடிஞ்ச பொழுதோடும்
     விடியாமத் தவிக்கிறேன்
மடிஞ்ச உசிரோட
     மயாணத்துல நடக்கிறேன்

படிஞ்ச கூந்தலிலே
     முடிஞ்சி வெச்சிருந்தாள்
நொடிஞ்சு போனவனை
     நிமித்திப் பாத்திருந்தாள்

கடிஞ்சு ஒருசொல்லைக்
     கனவுலயும் சொன்னதில்லை
ஒடஞ்சி ஒருநாளும்
     ஓரநகம் கீறவில்லை

அடைஞ்ச சுகமெல்லாம்
     ஆட்டிவச்சுப் பாக்குதடீ
ஒடஞ்ச கண்ணாடியா
     ஒம்மொகத்தைக் காட்டுதடீ

செடிக்குப் பூவாட்டம்
     சித்தாளு நடையாட்டம்
கடையும் மோருக்குள்ள
     கூத்தாடும் நுரையாட்டம்

மடிக்குள் பூவாட்டம்
     மத்திமீன் கொழம்பாட்டம்
நடுவான நெஞ்சுக்குள்ள
     நாளெல்லாம் வாழ்ந்தவளே

பிடிச்சது பிடிச்சதுதான்
     பிடிக்காமப் போவாது
கடிச்சது கடிச்சதுதான்
     காதல்கனி மாறாது

துடிக்குது மனமயிலு
     தூங்காத பூங்குயிலு
வடிக்குது விழியருவி
     வத்தாத செங்குருதி

ஒடஞ்சது ஒம்மனசு
     இடிஞ்சது ஒங்கனவு
துடிக்குது ஒன்னுசுரு
     ஒன்னநீ காக்கவாடீ

காதலித்ததுண்டா கிறுக்கனாய்ப் பினாத்தி




















இருநீல மலர்களைச்
சிறுமுகப் பொய்கையில் பூத்தவளே
நான் உன்மீது கொண்ட பிரியத்துக்குப் பெயர் காதலென்றால்
காதல் தெய்வீகமானது அழிக்க முடியாதது இணையே இல்லாதது

ஒருநாள் உன்னை வர்ணிக்கும் தாகத்தில்
உனக்கொரு உவமைதேடிப் புறப்பட்டேன்
என் புறப்பாடு விரயமாகிவிடுமோ என்றுநான் அஞ்சியபோது
நீயே கிடைத்தாய் நான் மகிழ்ந்துபோனேன்

நீல நதிக்கரையில் நீ ஒருநாள் பாதம் பதித்தபோது
அது நின்றுவிட்டதைக் கண்டு நீ திடுக்கிட்டுப் போனாய்

உன்னைக் காணத்தான் அது நின்றுவிட்டது
என்று நான் புரியவைத்தபோது
உன் புன்னகை மலர்களை என்மீது அபிசேகித்தாய்

ஒருநாள் நான் பிரம்மனைக் கனவில் கண்டு
கொன்றுவிட்டேன் என்றபோது நீ அதிசயித்தாய்

அவன் மட்டும் என் பௌர்ணமியைத்
தொட்டுத் தீட்டியிருக்கலாமோ என்றபோது
நீ சிணுங்கினாய் நான் சிதைந்துபோனேன்

சூரியக் கதிர்களின் சர்வாதிகாரத்தில் ஓர்நாள்
நான் உன்னைக் கண்டேன்
என் முகத்தில் பூத்த வியர்வை மொட்டுக்களைப்
பனிமலர்களோ என்று நான் பறித்துக்கொண்டேன்.

உன் இதய வனத்தில் நான் ஒதுங்கிக்கொள்ள
கொஞ்சம் நிழல் கேட்டேன்
நீயோ உன் இதயத்தையே பெயர்த்துக் கொடுத்தாய்

உன் முக முற்றத்தில் வந்துவிழும்
கூந்தல் கற்றைகள் மேகங்களா - எனில்
அவை என்னைத்தவிர வேறெவர்க்கும்
பொழிவதில்லையே

உன் விழிக் குளத்தில் பூப்பதெல்லாம் கவிதைகளா - எனில்
அவை என்னைத் தவிர வேறெவர்க்கும் புரிவதில்லையே

நான் உன்னைத் தரிசிக்கும்
பொழுதுகளில் மட்டுமே என் உடலின்
இரத்த ஓட்டத்தை உணர்கின்றேன்

அன்றொருநாள் நானுன்னைத் தொடாமல் தொட்டபோது
என்னுள் மூடிக்கிடந்த கோடி புஷ்பங்கள்
ஒரே சமயத்தில் விழித்துக்கொண்டன

உன் சிலம்பற்ற பாதங்களின் மென்மையான நாட்டிய நடையில்
சங்கீதம் கேட்டபோது நான் மிதந்துகொண்டிருந்தேன்

உன் இதழ் மலர்கள் மொட்டாகவே இருந்தபோதும்
எனக்குக் கேட்ட மெல்லிய சிரிப்பொலியில்
நான் தினமும் புரியாமல் விழித்திருக்கிறேன்

நீ பொட்டிடுவது உன் நெற்றியை அலங்கரிக்க
என்றுநான் என்றுமே நினைத்ததில்லை
பொட்டை அலங்கரிக்கவே என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால் உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால் நான் கவிஞனானேன்

இன்றெல்லாம் நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லையடி
உன்னை நினைத்திருப்பதால் நான் விழித்திருக்கிறேன்

நான் வருசங்களை நிமிசங்களாய்க் கணக்கிட்டபோது
நீ என்னருகில் அமர்ந்திருந்தாய்

அன்றொருநாள் சூரியக் கண்களை பூமி இமைகள்
மூடிக் கொண்டிருந்தபோது
நம் கண்கள் விழித்திருந்தன நேருக்கு நேராய்
நினைவுகள் மட்டும் உறங்கிவிட்டன

நாம் விழித்தபோது என் உன் எனக்கு உனக்கு
என்னுடைய உன்னுடைய எல்லாம் மறந்தோம்

பொங்கல் வாழ்த்துக்கள்

இன்று நான் கனடாவில் வாழ்கிறேன். ஆனால் நான் பிறந்ததும் விடலைப் பருவம் முடியும்வரை வளர்ந்ததும் தமிழ் நாட்டில்தான். கிராமங்களால் மட்டுமே சூழப்பட்ட இந்த ஒரத்தநாட்டுக்காரனின் ஒரு கவிதை. பசுமையாய் என் நெஞ்ச வெளிகளில் மிதந்துகொண்டிருக்கும் தை மாதக் கதை. 




மஞ்சள் கொத்தோடு
        மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
        எறும்பூரும் கரும்போடு

வட்டப் புதுப்பானை
        வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
        பொங்கிவரும் பொங்கலிது

கரும்பைக் கைபிடிக்க
        கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
        குமரியிதழ் தேன்வடிக்க

வயலில் வாய்க்காலில்
        ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
        பாடிவரும் பொங்கலிது

வீட்டுப் பசுமாடும்
        வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
        பொன்னழகுப் பொட்டுவச்சி

தோட்டத் தெருவெல்லாம்
        தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
        அழகுமணிப் பொங்கலிது

மண்ணைக் கையெடுக்க
        மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
        பெருமிதத்தில் கண்விரிய

அன்னம் கொடுப்பவளின்
        அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
        நிலம்புகழும் பொங்கலிது

முடிந்ததென்று நினைப்பதெல்லாம்

முடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   முடிந்துபோவதில்லை
உடைந்ததென்று நினைப்பதெல்லாம்
   உடைந்துபோவதில்லை
வடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   வடிந்துபோவதில்லை
மடிந்ததென்று நினைப்பதெல்லாம்
   மடிந்துபோவதில்லை
நடித்ததென்று நினைத்ததெல்லாம்
   நடித்ததின்றிப் போகலாம்
நடிக்கவில்லை என்றதெல்லாம்
   நடித்ததுபோல் ஆகலாம்
எடுத்ததென்று நினைத்ததெல்லாம்
   கொடுத்ததென்று ஆகலாம்
கொடுத்ததென்று நினைத்ததெல்லா
   எடுத்ததுபோல் ஆகலாம்
 
விடிந்ததென்று நினைத்துவிட்டால்
   விடிந்துவிடும் வானம்
கிடைத்ததென்று நினைத்துவிட்டால்
   கிடைத்துவிடும் ஞானம்
படர்ந்ததென்று நினைத்துவிட்டால்
   படர்ந்துவிடும் பாசம்
தொடர்ந்துதென்று நினைத்துவிட்டால்
   தொடர்ந்துவிடும் சொந்தம்

பெட்னா இதழில்

கைச்சொர்க்கமாக இல்லாவிட்டாலும்

ஒரு
சுவர்க்கடிகாரத்தின்
பெண்டுலத்தைப் போல

அதுவா
இதுவா

இதுவா
அதுவா

என்று
அல்லாடும்போது
நிலம் விழுந்த
திமிங்கிலத்தைப்போலத்தான்
நிம்மதி செத்துக் கொண்டிருக்கும்

0
எதுவென்று
ஒரு
நெருப்புக் கனியைக்
கண்டதுபோல
அறிந்துகொண்டதும்

நெடுந்தூரம்
விடைபெற்றுச் சென்றிருந்த
நிம்மதி
மீண்டு வந்து
கண் பிழிந்த நீரில் மூழ்கியும்
கனலாய்ச் சுட்டுக்கிடந்த நெஞ்சில்
பூரணமாய் நிறைந்தும்விடும்

0
விரும்பியதுதான்
அறியப்பட்டதும் என்றால்
அந்நொடியே
அது சொர்க்கம்தான்
மறுப்பதற்கில்லை

ஆனால்
விரும்பாததாயினும்
அலைபாய்ந்து அலைபாய்ந்து
அறற்றிக் கிடந்த
அல்லாடல்களிலிருந்து
விடுதலை பெற்று
அறியப்பட்ட நிறைவு
நிச்சயம்

கைச்சொர்க்கம் இல்லாவிட்டாலும்
மிக விரைவில்
காணப் போகும் சொர்க்கம்தான்
இருபத்திநாலு மணி நேரத்தில்
இருநூற்றி நாற்பது வினோதங்கள்

எதையும்
தப்பாமல் செய்யும் நானேதான்
தம்பிக்குத் தபால் எழுதி
தாசில்தாருக்கு அனுப்பிவைத்தேன்

அலுவலகத்தில் சுறுசுறுப்பாய்
ஏதேதோ செய்தேன்
அது எதுவுமே என் நிறுவனத்திற்குத்
தேவையே இல்லை

கணினியின் சாளரங்களில்
காட்டுப் பூனைகள் பல
பதுங்கிக் கிடப்பதுபோல்
என் விரல்களுக்குள் சிக்காமல்
மின்னெலி
துள்ளிக்கொண்டே இருந்தது

நலமா என்று கேட்டு
என் மின்னஞ்சல் பெட்டிவிழுந்த
அத்தனை நட்பு மடல்களையும்
கன்னாபின்னாவென்று வைதுவைத்து
பதில் பொத்தானை அழுத்திவைத்தேன்

மதிய உணவிற்கு 'ஹாட் டாக்' வாங்கி
இரண்டாவது கடியாக
என் கட்டை விரலைக்
கடித்து முடித்தேன்
கூடவே ’ஹாட் டாக்’ என்றால்
சுடுநாய் என்று
தூய தமிழில்
மொழிபெயர்த்து மகிழ்ந்தேன்

ஐந்தாவது தளத்தில் ஏறவேண்டிய
கோ-ட்ரான்சிட் ரயிலுக்காக
மூன்றாவது தளதில்
மூன்று மணி நேரமாய்
நின்றுகொண்டிருந்தேன்

கவிதை நூல் ஒன்றைப் பிரித்து
முதல் வரியை மட்டும்
முந்நூறுதரம் வாசித்தேன்

என் சீறுந்தில் அமர்ந்து
(அதாங்க ’என் காரில் அமர்ந்து’)
சாவியிடாமலேயே உந்து விசையை
(உந்துவிசை புரிந்திருக்குமே)
அழுத்திக்கொண்டிருந்தேன்

என் பெயரை
யாரோ கூவிக் கூவி அழைக்க
செத்துப் போன எவனையோ
அழைக்கிறார்களே என்று
விடுவிடுவென்று வீடுவந்து சேர்ந்தேன்

அன்பே
இதுபோல் என்னால்
இனியொருநாளை
கைகால்களில்
சங்கிலி பூட்டிக்கொள்ளாமல்
கடத்த முடியாது

செல்வழி
நீ என் செவியில்
சொல்லின்றி கிசுகிசுத்ததைச்
சத்தமாய் நீயே சொல்லிவிடு
நம் சத்தியத் தமிழால்


காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சிறகுகள் இருந்தும்

சிறகுகள் இருந்தும் பறக்காத பறவை
தனக்கே தனக்கான சிறை

கனவுகள் இருந்தும் கனியாத கண்கள்
சந்தோசம் விலக்கிடும் திரை

இயல்புகள் மறுத்து ஏங்கும் உள்ளம்
வளர்ந்தும் வளராத குறை

உணர்வுகள் இருந்தும் வாழாத உயிர்கள்
மயான நெருப்புக்கே இரை
நிகழும் வாழ்க்கையாக

தெய்வம் கல்லாகும்
கல் தெய்வமாகும்
ஒரு கால வெள்ளத்தில்

மறந்தது துளிர்க்கும்
துளிர்த்தது மறக்கும்
ஒரு கால வெள்ளத்தில்

தர்மம் அதர்மமாகும்
அதர்மம் தர்மமாகும்
ஒரு கால வெள்ளத்தில்

மரணச் சங்கடங்கள்
உயிரோடு நிரந்தரம்
ஆனபின்
நியாய தர்மங்கள்
குப்பை மேடுகள்

சட்டதிட்டங்கள்
சாம்பல்
பொட்டலங்கள்

யாரிடம் இருக்கின்றன
நளிந்த இதயம் வருடும்
தோகை விரல்கள்

மாற்று நினைவு பொருத்த
எந்த விஞ்ஞானத்துக்கு
வக்கு இருக்கிறது

மன உயிர் பிரிந்தபின்
உடல் உயிர்
ஒட்டி இருப்பதல்லவா
நரகம்

அன்றாடம்
உறவுகள் பொய்களாக
தேவைகளே நிஜங்களாக
அடடா... அதுவே
நிகழும் வாழ்க்கையாக
மரணத்தைத் தேடிய ஒரு தெரு முனையில்

மரணத்துக்கு
அவனிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசி அவனுக்கு

ருசியில்லாப் பண்டம்
அவனை
மரணம் மறுதலிக்கிறது

தெருத் தெருவாய்
அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்

உயர உயரப் பறந்தாலும்
உறையும் கூடில்லாப்
பறவை

அவனை
மென்று மென்று பார்த்து
இடம்பாதி வலம்பாதியாய்த்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று அவனது
மரணம்

மிச்ச எலும்புகளைப்
பொறுக்கி எடுத்துப்
புதைத்துப் பார்த்தான்

கிழிந்த தசைத்
தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தான்

விடைதரா விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
அவனிடம் தங்கிக் கொண்டது

வேறொரு புண்ணிய உடல்தேடி
எங்கோ அலைந்துகொண்டிருக்குமோ
அவனுக்கே அவனுக்கான
மரணமும் கூட என்று அவன்
அலைந்து திரிந்தான்

திரிந்த தெருக்களின்
வசந்த முனை ஒன்றில்
அவன் எதைச் சந்தித்தான்
என்று எவராவது சொல்லுங்கள்

ஏனேனில்
மரணம் தேடிக் கிடந்தவன்
பலம் கொண்டமட்டும்
தன் சகல சாட்டைகளாலும்
விரட்டியடித்துக் கொண்டிருக்கிறான்
அவனது மரணத்தை இன்று
கவிதைகள் நிரம்பிய
நிலவுக்குள்

வீசும்
அலைகளின் மீது

இமைத் துடுப்புகள்
அசைத்து

விழிப்படகுகள்
நீந்த

தனித்த தீவுகளுக்குள்
ஒதுங்கி

சிலிர்ப்புச்
சிறகசைத்து

இளைப்பாறுகின்றன
நெஞ்சக் குஞ்சுகள்

அன்புடன் புகாரி
20121223

உன் கண்ணீரை
என் கைகளில் ஏந்திக்கொள்கிறேன்

உன் கனவுகள்
நிறைவேறும் வழி சொல்கிறேன்

உன் துயரங்கள்
கரைந்துபோகும் உறவுதருகிறேன்

உன் இதயத்தில்
இருந்துகொண்டு நீயாகிறேன்

உன் தோல்விகளைச்
சுமக்கின்ற தோளாகிறேன்

உன் வெற்றிகளைக்
கொண்டாடும் பூக்களாகிறேன்

உன் குழந்தை மனச்
செயல்களை ரசித்துக்கொள்கிறேன்

உன் திறமை தேடிப்
பாராட்டி உன் வானமாகிறேன்

உன் உணர்வோடு
உணர்வாகும் நிலையாகிறேன்

உன் உயிரோடு
உயிர் கோக்கும் உயிராகிறேன்

ஆகையினால் என் அன்பே...

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
சந்தனப் பேழைகள் சிந்தினவோ

சவுதியின் வரண்ட பாலையிலிருந்து விடுப்பில் ஊர்வந்தேன். வந்தவன் காடம்பாறையின் மலைக்காடுகளில் முதன் முறையாக வாசம் செய்தேன். அந்த ஈர நாட்களில் எழுதியதே இந்தச் சந்தக்கவிதை


சந்தனப் பேழைகள் சிந்தினவோ
           சாயங்காலமாய்ப் பூத்ததுவோ
சிந்தையில் மணக்கும் அவ்வேளைதனில்
           சீட்டியடித்து நான் புறப்பட்டேன்

தந்தங்கள் இல்லா யானைகளாய்
           தரிசனம் தந்தன மாமலைகள்
சிந்துகள் பாடியே அருவிமகள்
           சித்திரம்போல் மண் மடிவீழ்ந்தாள்

வந்தனம் பாடிய வண்டுகளோ
           வந்த என் வரவை ஆதரிக்க
எந்தவோர்ப் பூவினில் ராசவண்டு
           எத்துணை சுகங்கள் அள்ளிடுமோ

அந்த நற்பூவின் மனதினைப்போல்
           ஆனந்தமாய் நான் நன்றியென்றேன்
வந்ததும் கண்களைத் தேனமுதாய்
           வருடியப் பசுமைகள் வாழ்கவென்றேன்

துள்ளித் துள்ளியோர் மான்கன்று
            தூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்
அள்ளித் தெளித்தச் சந்தனமாய்
            அங்கோர் அழகுப் பூந்தோட்டம்

சொல்லிச் சிரித்திடக் குரங்குகளோ
            சொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி
தள்ளி நின்றவோர் நெடுமரத்தின்
            தனிந்த கிளையினிற் தாவினவே

சில்லென வீசியக் குளிர்வாடை
            சிலிர்த்திட வைத்தது என்னுயிரை
நில்லெனக் கூவிட வேண்டும் வண்ணம்
            நிலைத்துப் பொழிந்தது பனித்தூரல்

உள்ளமோ மகிழ்வின் உச்சியிலே
            உடலோ ஆடிட வாடையிலே
இல்லை இச்சுகத்துக்கு ஈடுயிணை
            இடிபடும் பட்டிணத் தெருக்களிலே

மன்மத அம்புகள் எய்தவண்ணம்
            மாலையும் இரவாய் மாறிவர
வண்ண நிலவோ மலைமுகட்டில்
            வந்து வனப்பாய் நின்றிருந்தாள்

இன்று ஏன் புதிதாய் அம்புலிக்கு
            இல்லாப் பொலிவு வந்ததென்றே
கண்ணிமை அசைக்க நான்மறந்து
            கண்ணுக்குள் ஏந்திக் களிப்படைந்தேன்

கண்களை மூடிட கிடைத்ததங்கே
            கனவினில் வருகிற தனியில்லம்
எண்ணும் போதே மனம் சிலிர்க்கும்
            இரவின் தனிமையில் என் வீட்டின்

முன்னும் பின்னும் ஏதேதோ
            முரட்டுக் காலடிச் சத்தங்கள்
கண்களைச் சுருக்கி சன்னல்வழி
            கண்டேன் ஓரிரு கரடிகளை

மெல்லப் புலர்ந்ததும் அதிகாலை
            மேனியிற் புதியதோர் மினுமினுப்பு
வெள்ளை வெள்ளையாய்ப் புகைபோலே
            முல்லையில் நெய்த குடில்வனப்பில்

பள்ளியறை என முகிலினங்கள்
            படுத்து உறங்கின மலைமுகட்டில்
அள்ள அள்ள அவ்வழகெல்லாம்
            அடிமனம் வரைக்கும் பாய்ந்தனவே

மெள்ளத் துள்ளிநான் ஆடியோடி
            மிதந்தேன் அருவியின் மடியினிலே
சொல்லி முடியாச் சுகங்கோடி
            சொர்க்க வெளியில் எனைத்தள்ளி

இல்லை இல்லை நான் திரும்பவில்லை
            எனக்கிம் மலையே யாவுமென
சொல்லி விடடா ஊருக்கென
            சொல்லின சுகங்கள் சுகங்களெங்கும்
என்றும் நீ வரமாட்டாய்...

எல்லாமும் ஆனதுபோல்
          இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
          முனகித்தான் பயனேது

சொல்லில் தினம் புண்ணாகிச்
          சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
         ஒப்பாரி தந்ததெது

ஒன்றுபோல வயிறுமனசு
         உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
         ஒற்றைச்சொல் பசியன்றோ

வன்மையாக வாட்டுமிந்த
         வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
         எவரிடத்தோ யாசித்தா

கல்தாண்டி கடல்தாண்டி
         காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
        இருளன்றி வேறேது

இல்லையொளி எங்குமென
         எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
        உள்ளேதான் ஒளியுண்டு

பெண்ணுக்குள் உதயமாகும்
        பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
        மரணங்கள் பாக்கியங்கள்

இன்னும்கேள் இவையிரண்டின்
        இடைவந்த வாழ்க்கையோ
உண்மையல்ல உண்மையல்ல
        உடைதரித்தப் பொய்வனப்பே

உண்மையெங்கே என்றுநீயும்
        ஓயாமல் தேடித்தினம்
உன்நாட்கள் செலவழிய
        உண்டாகும் மாற்றமோ

என்றைக்கோ தேடிநின்ற  
         எவரெவரின் சுவடுகளில்
இன்றைக்கும் உன்பாதம்
         உருவாக்கும் புதுச்சுவடே

உண்மைதான் புத்துயிரே
          உன்பாதம் மட்டுமல்ல
பெண்ணுக்குள் புதையுண்டு
         பிறந்தபெருங் கூட்டத்தின்

வன்மையான பாதங்கள்
         வான்தொட்டுத் தேடிநின்று
மண்தந்த அழைப்பேற்று
         மரணத்தில் நிறுத்தினதாம்

என்மனதிற் பட்டதைநான்
         என்றென்றும் சொல்லிவைப்பேன்
இன்றும்நான் சொல்லுகின்றேன்
         இசைவாயோ மாட்டாய் நீ

உன்நாட்கள் முடியும்வரை
         உலகலாவித் தேடிநிற்பாய்
உன்னைமட்டும் விட்டொழித்து
         உறங்கிடுமோ பசியின் விசை

என்சொல்லும் கேளாமல்
         எங்கெங்கோ தேடிநிற்பாய்
உண்மைதனைக் கண்டறிந்தால்
         உடன்வந்து கூறிவிடு

உன்னைநான் எதிர்பார்த்து 
         உயிர்பிரியும் வரையிருப்பேன்
என்னறிவு உரைப்பதுவோ
         என்றும் நீ வரமாட்டாய்
அஞ்சோன் அஞ்சு 

அஞ்சாத சிங்கம்போல்
அஞ்சுபத்திப் பாடவந்தேன்
அய்யாவும் அம்மாவும்
அக்கறையாக் கேப்பியளா
கொஞ்சம் அக்கறையாக் கேப்பியளா

நஞ்சோடு நாகந்தான்
அஞ்சுதலை விரிச்சாக்கா
நடுநடுங்கிப் போவியளா
குலைநடுங்கிச் சாவியளா
சும்மா குலைநடுங்கிச் சாவியளா

பஞ்சநதிப் பாஞ்சோடும்
பஞ்சாப்ப பாத்தியளா
பஞ்சாப்பு வரப்புக்கும்
பக்கத்துல நிப்பியளா
அய்யா பக்கத்துல நிப்பியளா

அஞ்சுவிரல் இல்லாம
கையுமொரு கைதானா
அஞ்சுபுலன் இல்லாம
உசுருமொரு உசுர்தானா
அய்யா உசுருமொரு உசுர்தானா

சொகமுன்னா என்னான்னு
அளந்துத்தான் பாத்தியளா
சொர்க்கத்தை அளப்பதுக்கும்
அஞ்சேதான் வேணுமுங்க
அய்யா அஞ்சேதான் வேணுமுங்க

மகராசந் தங்கிவர
மாளிகையா விடுதிங்க
மாளிகையின் சொகத்துக்கு
நச்சத்திரம் அஞ்சுங்க
அய்யா நச்சத்திரம் அஞ்சுங்க

அஞ்சுமணிக் காலையிலும்
அஞ்சுமணி மாலையிலும்
ஆகாயத் திரையெல்லாம்
அழகுன்னா அழகுங்க
அய்யா அழகுன்னா அழகுங்க

அஞ்சருவி பாத்தியளா
அம்புட்டுந் தேனுங்க
அழுக்கோடு நெஞ்சத்தை
அலசித்தான் போகுங்க
சும்மா அலசித்தான் போகுங்க

அஞ்சுக்கே எந்திரிச்சா
ஆயுளுக்கே தெம்புங்க
அஞ்சுமணிக் காத்துக்கு
அம்புட்டும் பூக்குங்க
அய்யா அம்புட்டும் பூக்குங்க

அஞ்சுமணி ஆனாக்கா
அலுவலகம் விட்டாச்சு
அஞ்சுநாளு போனாக்கா
அந்தவாரம் முடிச்சாச்சு
சோரா அந்தவாரம் முடிச்சாச்சு

அஞ்சேதான் பருவமுங்க
அவனியிலே பெண்ணுக்கு
ஆரம்பம் கொழந்தைபின்
சிறுமியாயாகி சிறகடிப்பாள்
சின்னச் சிறுமியாய்ச் சிறகடிப்பாள்

நெஞ்சத்தைப் பஞ்சாக்கும்
கன்னியவள் மனைவியாகி
நெறமாசங் கொண்டாடி
தாயாகி நெறஞ்சிடுவாள்
அருமைத் தாயாகி நெறஞ்சிடுவாள்

அஞ்சு அறைப் பெட்டித்தான்
அடுக்களைக்கு பொக்கிசங்க
அஞ்சில்லாச் சாப்பாட்டில்
அடுப்புக்கும் வெறுப்புங்க
அய்யா அடுப்புக்கும் வெறுப்புங்க

அஞ்சுப்பொன் சிறப்புங்க
அஞ்சுப்பால் அறிவீங்க
அஞ்சுபெரும் காவியங்கள்
அழகுதமிழ் சொல்லுங்க
அய்யா அழகுதமிழ் சொல்லுங்க

அஞ்சுக்கே வளையாட்டி
அம்பதுக்கும் வளையாது
அஞ்சோடு சேராட்டி
பாடந்தான் ஏறாது
பள்ளிப் பாடந்தான் ஏறாது

அய்யெட்டு ஆனாத்தான்
அமைதிக்கே வருவீங்க
அதுவரைக்கும் ஆடாத
ஆளுந்தான் ஏதுங்க
அய்யா ஆளுந்தான் ஏதுங்க

அஞ்சேதான் பூதங்கள்
அந்நாளில் சொன்னாங்க
அஞ்சுக்குள் அடங்கித்தான்
அத்தனையும் சுத்துதுங்க
அய்யா அத்தனையும் சுத்துதுங்க

அஞ்சாம மேடையில
ஆனவரைச் சொல்லிப்புட்டேன்
அய்யாவே அம்மாவே
அசரடிங்க கையத்தட்டி
சும்மா அசரடிங்க கையத்தட்டி

(மார்ச் 2002)
சந்தவசந்த கவிதைக் குழுமத்தில் ஆளுக்கு ஓர் எண் கொடுத்து கவிதை எழுதச் சொன்னார்கள். எனக்கு வந்தது ஐந்து. நானும் எழுதினேன். அது ஒரு காலம். இதையும் கவிதைக் கணக்கில் சேர்த்துக்கொள்ளுங்கள், தப்பில்லை!

துப்பாக்கி எடுத்துவிட்டான்


துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

சுதந்திரம் இழந்து
புழுவாய்ப் பூச்சியாய்
அடிமையாய்க் கிடந்த நாட்களில்கூட
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான் - இந்தியன்
அகிம்சையைத்தான் கையில் எடுத்தான்

இன்றோ
துப்பாக்கி எடுத்துவிட்டான் - இந்தியன்
துப்பாக்கி எடுத்துவிட்டான்

அண்ணல் காந்தியின் அகிம்சா வேதங்களை
நொறுக்கிப் புதைத்து புதைத்த இடத்தில்
நெடுமரங்களே வளர்த்து விட்டான்
இந்தியன்
ஆனால்...
அமிதாப் அங்கேயும்
அஜித்குமார் இங்கேயும்
அரிதாரம் பூசிக்கொண்டு
பொய்த் திரையில் எடுத்ததை
நிஜமாகவே எடுத்துக்கொண்டான்

இந்தியன்
ஏன்தான் எடுத்தான்
துப்பாக்கி?

அன்னா அசாரேயின் உண்ணாவிரதம்
ஒன்றுக்கும் ஆகாது
துப்பாக்கி மட்டும்தான் துளைத்தெடுக்கும்
தேச ஊழலைக் கொன்றழிக்கும் என்று
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

அன்பளிப்பு என்ற அடைமொழிபோய்
இலவசம் என்ற புதுமொழியோடு
அரசியல் எருமைகள் இந்திய ஓடைகளைக்
கலக்கி எடுக்கின்றனவே என்று
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

சாதியும் சாகாது மதமும் இணங்காது
கலவரமும் தீராது
கொட்டும் ரத்தமும் நிற்காது என்று
கோபப்பட்டு இந்தியன்
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

நீர் என்றாலும் தகராறு
நிலமென்றாலும் தகராறு
மொழி என்றாலும் தகராறு
முதலீடு என்றாலும் தகராறு
என்று சினந்த இந்தியன்
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

வறுமைக்கு முற்றுப்புள்ளி இல்லை
விவசாயத்திற்கு வாழ்வில்லை
மக்கள் பெருக்கத்துக்குக் கட்டுப்பாடு இல்லை
சுகாதாரத்துக்கு வழியில்லை
என்று கொந்தளித்து
கையில் எடுத்தானா துப்பாக்கி?

இல்லை இல்லை

பிறகு
ஏன்தான் எடுத்தான்
துப்பாக்கி?

வீட்டின் முன் சிறுநீர் கழிக்காதே என்று
பதினேழு வயது பள்ளி மங்கை
இந்தியத் தலைநகர வீதியொன்றில்
கண்டித்தாள்

அவ்வளவுதான்....

எதற்குமே ரோசம் வராத அசல் இந்தியனுக்கு
அதிவேகமாய்ப் பொத்துக்கொண்டு
வந்துவிட்டது ரோசம்

எடுத்தான் துப்பாக்கியை
அடுக்கடுக்காய் எறிந்தான்
அநியாயக் குண்டுகளை

கொன்றழித்தான்
நியாயத்தின் குரலை

ஒழுக்கம் கேட்டதால் உயிரிழந்தாள்
வாழ்வின் நுழைவாயிலில்
பருவத்தோடும் கனவுகளோடும் நின்ற
அந்த அபலை

பாவம்....
சுதந்திர இந்தியாவில்
வாழ்நாள் கழிப்பதற்கு
சளைக்காத சகிப்புத் தன்மை
வேண்டும் என்று
அவளுக்குத் தெரியாமல் போயிற்று

நிர்வாணப்படுத்தி
நடுவீதி இடுவார்கள் குண்டர்கள்
புன்னகைக்க வேண்டும்

மலம் ஊட்டிவிட்டு மகிழ்வார்கள்
மேல் சாதி மைந்தர்கள்
வாய் திறக்க வேண்டும்

கற்பழித்துக் குதூகலிப்பார்கள்
கற்றைப்பண வாசிகள்
வசதியாக்கித் தரவேண்டும்

இதெல்லாவற்றுக்கும்
மேலாக....

ஓட்டுக் கேட்டு
வணக்கத்தோடு வருவார்கள்
வெள்ளைச் சட்டைக்காரர்கள்
பேசாமல் போட்டுவிட்டுப்
பொத்திக்கொண்டு போக வேண்டும்

இந்தியா
வல்லரசாகிவிட்டது உண்மைதான்

சிறுநீர் கழிக்கும் சுதந்திரமும்
பறிபோவதைப் பொறுக்கமாட்டாமல்
புறப்பட்டுவிட்டான்
பண்பாட்டு பாரதக் குடிமகன்
இன்று துப்பாக்கியோடு

*
செய்தி: வீட்டின்முன் சிறுநீர் கழித்தவரை தடுத்த மாணவி சுட்டுக்கொலை
http://articles.timesofindia.indiatimes.com/2012-11-23/delhi/35318847_1_girl-shot-police-officer-mother-shot