14 சொல்லிவிடவா


காதலை தூரத்தில் வைத்து கற்பனையிலேயே வாழ்ந்தது ஒரு காலம். கண்ணில் பட்ட பெண்ணின் ஏதோ ஒன்று இழுத்ததில் முதன் முதலாய்த் தூக்கம் துவண்டுபோக தனக்குள் தானே சற்றும் ஓய்வெடுக்காமல் வெற்று நீச்சலடித்துக் கொண்டது ஒரு காலம்.

தூரநடக்கும்போதெல்லாம் ஓரக் கண் முள்ளால் இதய ரோஜாவை கிழித்துவிட்டு, சின்னதாய்ச் சிரித்து, அக்கறையாய் நலம் விசாரித்துப் போகும் கல்லூரித் தோழியை டேய் மச்சி அவள் என்னைக் கன்னாபின்னான்னு காதலிக்கிறாடா என்று நண்பர்களிடம் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டது ஒரு காலம்.

இந்த உரசல்களும் தடுமாறல்களும் கொஞ்சம் அடங்கியபின், ஒரு திட நிலையை எட்டி சற்றே அமைதி கொண்டபின் நிசமே நிசமாக அந்தப் பூ வந்து பூத்துவிடுகிறது. ஆமாம்.. நமக்கே நமக்கென்று எல்லா நிலையிலும் உச்சத்தில் நின்று துடிக்குமே அந்த உயிர்க் காதல் பூத்து விடுகிற்து. வேரில் நீர் நிறைந்த ஜீவ செடியில்தான் ரோஜா பூ பூக்கும். பட்டமரத்திலும் மிகச் செழிப்பாய் ஒரு பூ பூக்கும் என்றால் அது வேறென்ன பூவாய் இருக்க முடியும்?

மன முதிர்ச்சி வந்தபின்னும், திட எண்ணங்கள் தலை முழுவதும் நிறைந்த பின்னும். எதைச் செய்யும் முன்னும் உலகின் பிற விசயங்கள் எல்லாம் கண்முன் ஊர்வலம் போகும் நிலை வந்தபின்னும். இது சரி இது தவறு என்று தெளிவாகத் தெரியும் ஞானம் வந்தபின்னும். கண்டதும் கொண்டதும் என்ற அவசரம் மாறி மகா நிதானம் வந்தபின்னும்.

இவை அத்தனையையும் தட்டிப்பறித்து மென்று தின்றுவிட்டு, மில்லியன் மின்னலாய் மன மேக இடுக்குகளில் ஊடுறுவிப் பாய்ந்து விடுகிறதே ஓர் அசலே அசலான காதல். அந்த உயிர் ஈர்ப்புக் காதல் வெடித்தபின், என்ன செய்வதென்றே தெரியாத நம் மனம் நம் மனதையே துரத்தும் விளங்காத விளையாட்டு நிகழும். அந்த விளையாட்டின் வார்த்தை ஓட்டங்களாய் எண்ணிக் கொள்ளலாம் இந்தக் கவிதையை.

அட எப்போ வந்து பூத்தா என்னங்க, காதல் பூசணிக்காயை மனச் சோற்றுக்குள் மூடி வைத்துக்கொண்டு, வெறித்த விழி கிழிய மருகும் நிலை இருக்கிறதே.... அடடா அதைச் சொல்ல ஒரு கவிதை வேண்டாமா. இதோ இது அப்படியொரு கவிதை என்று கொள்ளலாம்.

சொல்லத் தைரியம் இல்லாமல் இருக்கக்கூடும் அல்லது சொன்னபின் இந்தத் தவிப்பு இருக்குமா என்ற கவலையாய் இருக்கக்கூடும். நிச்சயப்படுத்திக் கொண்டாயிற்று நிச்சயம் இது காதலென்று. இதைச் சொன்னால் என்ன சொல்லாவிட்டால்தான் என்ன? காதல் காதல்தானே? மாறவா போகிறது, ஏன் சொல்ல வேண்டும், இப்படியே அனுபவிக்கலாமே என்ற நினைப்பாய் இருக்கக் கூடும்.

யாருக்கு எப்படியோ இந்தக் கவிதையின் நாயகனுக்கு எப்படி என்று கண்டுபிடியுங்களேன். இதோ அதற்கான தடயங்களாய் இந்தக் கவிதை. அட இது நம்ம கதையாச்சே என்று நீங்கள் உச்சுக் கொட்டினால் நண்பர்களே நான் நிச்சயம் மகிழ்வேன்.


சொல்லிவிடவா

என்
நெஞ்சக் கூட்டுக்குள்
படபடவென
சிறகடித்துத் துடிக்கும் கிளிகள்
என்ன சொல்லித்
துடிக்கின்றன என்று

அன்பே
உன்னிடம் நான்
சொல்லிவிடவா

உன்
கருவண்டுக் கண்களுக்குள்
அவ்வப்போது
ஒரு
பனிபடர்ந்தமுகம்
அரும்பு விட்டுப்
பூப்பதைப் பார்க்கிறேன்.

கேட்டுவிடவா
அது
என் முகம்தானே என்று.

உன்
கன்னங்களில் சிவந்து
கழுத்துவரை கரைந்து விழும்
வெட்க நிலாக்களில்
ஒரு
தெளிவில்லாத
முகவரி பார்க்கிறேன்.

கேட்டுவிடவா
அது
என் முகவரிதானே என்று

உன்
மாபெரும் மைவிழிகள்
என்
மனவெளியைப் படுத்தும் பாடு

அப்பப்பா
சொல்லவொண்ணாத் தவிப்பு
அன்பே
உன் புன்னகைகள்
என் கனவுகளில் பொழியும்
பொன்மழையைச் சொன்னால்.

கேட்டு மகிழ்வாயா
அன்பே

ஜென்மங்களில்
நம்பிக்கை உண்டா உனக்கு
எனக்குக் கிடையாது

இருப்பினும்
அது
இருக்க வேண்டுமென
இன்று ஆசைப் படுகிறேன்

என்
வார்த்தைக் குஞ்சுகளை
இன்று நான்
அடைத்து வைத்தாலும்

அவற்றை
நம்
மறு ஜென்மத்திலாவது
ஆசையாய்த்
திறந்து விடலாமல்லவா

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

10 comments:

செந்தில் குமார் said...

மிகவும் அருமை புகாரி
மிகவும் ரசித்தேன்.

என்றும் அன்புடன்
செந்தில் குமார்

ஹரன் ஜாபர் said...

----------
இவை அத்தனையையும் தட்டிப்பறித்து மென்று தின்றுவிட்டு, மில்லியன் மின்னலாய் மன மேக இடுக்குகளில் ஊடுறுவிப் பாய்ந்து விடுகிறதே ஓர் அசலே அசலான காதல். அந்த உயிர் ஈர்ப்புக் காதல் வெடித்தபின், என்ன செய்வதென்றே தெரியாத நம் மனம் நம் மனதையே துரத்தும் விளங்காத விளையாட்டு நிகழும். அந்த விளையாட்டின் வார்த்தை ஓட்டங்களாய் எண்ணிக் கொள்ளலாம் இந்தக் கவிதையை.

அட எப்போ வந்து பூத்தா என்னங்க, காதல் பூசணிக்காயை மனச் சோற்றுக்குள் மூடி வைத்துக்கொண்டு, வெறித்த விழி கிழிய மருகும் நிலை இருக்கிறதே....
-----------

என்னைப் பின்னோக்கிப் போக வைத்துவிட்டீர்கள், புஹாரி.
இந்தக் காதலும், காதல் சார்ந்த வாழ்வும் எந்தத் திணைக்குள் அடங்கும் என்பது இதுவரை பிடிபடவில்லை. சில நேரம் குறிஞ்சியாய் மிரட்டும்; சில நேரம் முல்லையாய் மணக்கும்; சில நேரம் மருதமாய் வீசும்; சில நேரம் நெய்தலாய் வறுக்கும்; சில நேரம் பாலையாய்க் கொல்லும்.

காதலை விடக் கொடுமையானது, காதலைச் சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திருப்பது. இன்னும் கொடுமையானது, கிடைக்கும் எதிர்மறை பதில். ஆனால், ஆறுதல் பரிசாக சில கவிதைகளைத் தரும். நமக்குள் காதல் இருப்பதைக் காலம் காட்டும்; கவிதை இருப்பதைக் காதல் காட்டும்.

இங்கே, நல்ல கவிதையைக் கொடுத்துள்ளது, இந்தக் காதல்.

ஹரன்

வேல் said...

எத்தனையோ கவிதை கள் காதலை சொல்லியிருப்பினும், உங்கள் கவிதை தான் அருமையா இருக்கு சார்... நீங்க சொல்லிட்டீங்க... பதில் வந்துச்சான்னும் சொல்லிடுங்களேன்..:)
--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!

சிவா said...

ஆகா ஆசான்.. அருமையான அறிமுகம்.. அற்புதமான கவிதை .. படிக்கும் போதே கண்கள் சொருகி ஒரு மயக்க மாய உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டேன்

--
அன்புடன்
சிவா...

பூங்குழலி said...

ரொம்ப அருமையான கவிதை புகாரி

--------
உன்
கன்னங்களில் சிவந்து
கழுத்துவரை கரைந்து விழும்
வெட்க நிலாக்களில்
ஒரு
தெளிவில்லாத
முகவரி பார்க்கிறேன்.
கேட்டுவிடவா
அது
என் முகவரிதானே என்று
------

இந்த வரிகள் ரொம்ப அழகு

பூங்குழலி

கவிஞர் சக்தி - லண்டன் said...

அன்பின் நண்பரே புகாரி,

அருமையான் விளக்கத்துடன் கூடிய அருமையான கவிதை. புதுக்கவிதைப் புயலின்
மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட மற்றுமோர் முத்து.


>> உன்
கருவண்டுக் கண்களுக்குள்
அவ்வப்போது
ஒரு
பனிபடர்ந்தமுகம்
அரும்பு விட்டுப்
பூப்பதைப் பார்க்கிறேன். >>


அற்புதமான் வரிகள். ஆழமான உணர்வைத் தூண்டும் மென்மையான நிகழ்வின்
விளக்கம்.

பாராட்டுக்கள்

அன்புடன்
சக்தி

பூங்குழலி said...

என்
வார்த்தைக் குஞ்சுகளை
இன்று நான்
அடைத்து வைத்தாலும்
அவற்றை
நம்
மறு ஜென்மத்திலாவது
ஆசையாய்த்
திறந்து விடலாமல்லவா

ஒரு ஜென்மம் முழுதும் சொல்லாமல் போவதெல்லாம்
டூ மச்

nila said...

அருமையான கவிதை

//காதலை விடக் கொடுமையானது, காதலைச் சொல்லிவிட்டு, பதிலுக்குக் காத்திருப்பது. இன்னும் கொடுமையானது, கிடைக்கும் எதிர்மறை பதில். ஆனால், ஆறுதல் பரிசாக சில கவிதைகளைத் தரும். நமக்குள் காதல் இருப்பதைக் காலம் காட்டும்; கவிதை இருப்பதைக் காதல் காட்டும்.//

நிதர்சனமான உண்மை ..... வலியை உணர்கிறேன்...

govi selvaraj said...

nalla kavithai.nandri.vanakkam

வாணிஜெயம் said...

vaasithu magizhgiren.arumayaaga vanthullahu.