உயிருறவு


(ஒரு வரியின் இறுதிச் சொல்லை, அடுத்த வரியின் முதல் சொல்லாக அமைத்து எழுதப்பட்ட அந்தாதிக் கவிதை)


இதயமென்ற பெட்டகத்தில்
எத்தனையோ உதடுகள்

உதடுகளின் முணுமுணுப்பில்
ஓசையில்லா ஆசைகள்

ஆசைகளின் அலையடிப்பில்
அனுதினமும் ஏக்கங்கள்

ஏக்கங்களின் பரிதவிப்பில்
இரையாகும் தூக்கங்கள்

தூக்கமெனும் தொட்டிலிலே
தொடர்கதையாய்க் கனவுகள்

கனவுகளில் காண்பதெலாம்
கட்டறுந்த காட்சிகள்

காட்சிகளை உண்மையாக்கக்
கண்ணுறங்கா முயற்சிகள்

முயற்சிகளின் முக்குளிப்பில்
முத்தெடுக்கும் யோகங்கள்

யோகங்களும் கனவுகளும்
இழைபிரிந்தால் சோகங்கள்

சோகங்களே சொந்தமல்ல
சுற்றுமுற்றும் தேடுங்கள்

தேடல்களின் பரிசுகளாய்த்
தேடிவரும் உறவுகள்

உறவுகளே ஜென்மங்கள்
உயிரேந்தும் தீபங்கள்

 

Comments

"என்னைப்பற்றி..." வாசிக்க முடியாத படி சின்னதாய் இருக்கிறது எழுத்துரு. கொஞ்சம் அதிகப்படுத்த முடியுமா ?
அன்பு சேவியர்,

பெரிய எழுத்துக்களாய் மாற்றிவிட்டேன். நான் பெரிய அகண்ட கணித்திரை பயன்படுத்துவதால் நிகழ்ந்த தவறு இது. அறியத்தந்ததற்கு நன்றி சேவியர்.

அதோடு ”என்னைப்பற்றி” பகுதியை கவிதைகளுக்குக் கீழே கொண்டுசென்றுவிட்டேன். மாற்றம் தேவையெனில் அன்புடன் கூறுங்கள். நன்றி

அன்புடன் புகாரி

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ