04 கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை


கணினி வந்த பிறகு காதல் தன் எல்லைக் கோட்டையை எல்லையற்றதாய் விரித்துக்கொண்டது. எங்கோ சைனாவிலிருந்து ஒரு சிட்டுக்குருவியும் அலாஸ்காவிலிருந்து ஒரு மொட்டுடையும் பூவும் தேனுறிஞ்சிக்கொள்கின்றன.
இது கணினிக்குமுன் சாத்தியமானதாய் இருந்திருக்கவில்லை.
இதனால், கணினியைக் காதலின் புதிய கடவுள் என்று அழைக்கலாமா?
பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்துகொண்டு, அன்பே நீ அங்கே நான் இங்கே என்று பாடிக்கொண்டிருந்தது அன்று. இன்று பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் என்றாலும் மடியில் உட்கார்ந்து கொஞ்சுவதுபோல் காதல் புதுமைப்பட்டுவிட்டது.
அப்படியான ஒரு காதலைச் சொல்லும் கவிதைதான் இது. எனக்கு இது முதல் பரிசை வாங்கித்தந்தது ஓர் இணையக் கவிதைப் போட்டியில்.
2000 வருடங்களுக்கு முன்னரே தமிழில் மிக உயர்வான கவிதைகள் வந்துவிட்டன. அந்தப் பெருமை தமிழுக்கு உண்டு. ஆனால் இப்படியான ஒரு கவிதை வர முடியுமா? வாய்ப்பே இல்லை!


சிறகடித்துப்
பறக்குது மின்அஞ்சல்
அதன் சிறகசைவில்
துடிக்கிறதென் நெஞ்சம்

கருமுகிலின்
கூடுகளில் இல்லை
நிலா கணினிக்குள்
கொதிக்கிறது என்முன்

விரலெடுத்து
நடனமாடும் யாகம்
அதில் விரிவதுவோ
காதலெனும் வானம்

இரவுபகல்
விலகாத தாகம்
என் இணையக் கிளி
எழுதுகிறாள் நாளும்

கனிப்பாவை
கணினிக்குள் இருந்து
என் கனவுகளைக்
கேட்பதுவோர் விருந்து

இனிப்பான
கவிதைகளாய் விரிந்து
தினம் என்மனதைச்
சொல்லுவதோ மருந்து

தடதடக்கும்
தட்டச்சுப் பலகை
அதன் தாளலயம்
வெல்லுமிந்த உலகை

படபடக்கும்
நெஞ்சங்கள் பேசும்
அந்தப் பரவசத்தில்
நரம்புகளும் கூசும்

தூதுசெல்லக்
கடிதமேந்தும் பறவை
பல தூரதேசம்
பறந்துபோவ தில்லை

சேதிசொல்ல
வானமேறும் போது
ஒரு வேடனுக்கு
விருந்தாகக் கூடும்

மின்னலுக்கு
முன்சென்று கொஞ்சும்
மின் மடலாடும்
மகிழ்வோ நீர் மஞ்சம்

இன்னமுதக்
கன்னியவள் மடியில்
நான் இருந்தாடும்
சுகங்கூடும் நொடியில்

முகம்மூடி
முகந்தந்தாள் முதலில்
அம் முதல்மடலே
மோதிரம் என் மனதில்

அகந்தானே
அஞ்சல்வழி பூக்கும்
அது அகலாத
உறவுகளின் ஆக்கம்

முகங்கண்டு
வருங்காதல் மயக்கம்
அது முடிந்துவிடும்
மூன்றுநாள் பழக்கம்

அகங்கண்டு
இணைகின்ற உள்ளம்
அது அண்டவெளி
ஈர்ப்பினையும் வெல்லும்

நானிங்கே
உலகிலொரு முனையில்
அவள் நாணமுடன்
சிலிர்ப்பது மறு முனையில்

வானந்தான்
எல்லையிந்த உறவில்
அவள் வாசனையோ
இணையப் பெரு வெளியில்

கூடுவிட்டு
கூடுபாயும் வித்தை
அவள் கணினிக்குள்
விழுந்துவிட்ட தத்தை

தேடுபொருள்
கிடைப்பதில்லை வாழ்வில்
என் தேவதையைத்
தந்தவலை வாழ்க

6 comments:

Anonymous said...

அன்பின் புகாரி

அருமை அருமை - படித்தேன் - மீண்டும் படித்தேன் - மீண்டும் மீண்டும் படித்தேன்.

படிக்கப் படிக்கத் திகட்ட வில்லை - மாறாக நெஞ்சம் மகிழ்ந்தது. இனிய மனநிலை உருவாகியது.

தேடித் தேடி தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்கள் - கருத்தின் ஆழம் - காதலின் கண்ணியம் - கணினியின் மகத்துவம் - பாராட்டச் சொற்கள் இல்லை - மனம் மகிழ்கிறது.

மின்னஞ்சல் அனுப்பியதின் பின்னர் அதன் வேகத்திற்கு மேலும் துடிக்கிறது மனம் - விளைவை எதிர் நோக்கி

இரவு பகல் விலகாத தாகம் - இணையக் கிளியின் பாசம்

கனிப்பாவை கனவுகளின் விருந்தினைச் சுவைத்து அருமருந்டும் அருந்துகிறார்

தட்டச்சுப் பலகையில் தட்டும் போது துடிக்கும் நாடி நரம்புகள் - அனுபவத்தின் வரிகள்

புறா விடு தூது - வேடனுக்கு விருந்தானது அக்காலம்
கண்ணிமைக்கும் நேரத்தினில் காத்திருக்கும் காதலிக்கு மின்னஞ்சல் காதல் சொல்வது இக்காலம்

//மின்னலுக்கு முன்சென்று கொஞ்சும் - மின்

மடலாடும் மகிழ்வோ நீர் மஞ்சம்
இன்னமுதக் கன்னியவள் மடியில் - நான்

இருந்தாடும் சுகங்கூடும் நொடியில்//

பல முறை ரசித்த வைர வரிகள் - சந்தக் கவிதை

முகம் காணாது அகம் காணும் காதல் இணையக் காதல்

ஒரு முனையில் தட்டச்சும் போதே - மறு முனையில் இதயத்துடிப்பு கூடுகிறதே ! - இணையத்தின் வலிமை

புதுமையின் புன்னகை புத்துணர்வாய் வாழச் செய்யும்

தேடு பொருளாய் அவளும் தேவதையாய் வருவாள் - வலையுலகம் வாழ்விக்கும் ! வலை வீசி, வலைக்குள் வாழும் வான்பொருளே !

வாழ்க வாழ்க ! நல்வாழ்த்துகள் நண்ப !

நட்புடன் ..... சீனா

Anonymous said...

அருமையான கவிதையால் அசத்தியிருக்கிறீர்கள்!
'கணினியின் காதலனான' என்னை இக்கவிதையின் ஒவ்வொரு வரிகளும்
ஈர்த்துவிட்டன!

- கி.ம.

Anonymous said...

அற்புதம்...

மிக ரசிக்கும்படியான கருவும், கருத்தாய் காதலும்...

அனுபவித்து எழுதியது...

சாந்தி

Anonymous said...

அருமையாக இருக்கிறது புகாரி

Poongulali

Anonymous said...

கனிப்பாவை கணினிக்குள் இருந்து - என்
கனவுகளைக் கேட்பதுவோர் விருந்து
இனிப்பான கவிதைகளாய் விரிந்து - தினம்
என்மனதைச் சொல்லுவதோ மருந்து

கனவுகளுக்கும், காயங்களுக்கும்
காதுகொடு்ப்பவர்கள் அபூர்வம்
அவர்களைக் கண்டுவிட்டால்
வாழ்வே ஒரு சொர்க்கம்

முகங்கண்டு வருங்காதல் மயக்கம் - அது
முடிந்துவிடும் மூன்றுநாள் பழக்கம்
அகங்கண்டு இணைகின்ற உள்ளம் - அது
அண்டவெளி ஈர்ப்பினையும் வெல்லும்
அகமே நிரந்தரம் அன்பதை அழகாகச் சொல்லியுள்ளீர்கள்

நானிங்கே உலகிலொரு முனையில் - அவள்
நாணமுடன் சிலிர்ப்பது மறு முனையில்
வானந்தான் எல்லையிந்த உறவில் - அவள்
வாசனையோ இணையப் பெரு வெளியில்

என்ன ஒரு ஆழமான ரசனை!

Haran - Jafar Ali

Anonymous said...

அன்பின் புகாரி
கவிதையை மிகவும் ரசித்தேன் ..
மிக அருமையாக இருக்கிறது ..
ஒவ்வொரு வரியும் மிக மிக அருமை ..
மனதிற்கு மிக பிடித்த கவிதைகளில்
இதனையும் இணைத்துக்கொண்டேன் ...
..
நன்றிகளுடன்
விஷ்ணு