சுவர்களல்ல அறைகளல்ல...

நான் கனடாவுக்கு 1999ல் குடிபெயர்ந்தேன். வந்த ஈராண்டுகளின் நிறைவில் குட்டியாய் ஒரு நகர்வீடு (டவுன் ஹவுஸ்) வாங்கினேன்.

அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்து பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது என் மகள் பள்ளியில் வரைந்த ஒரு பென்சில் ஓவியம் என் கண்ணில் பட்டது. அது ஓர் அழகான வீட்டின் படம்.

ஒரு படத்தைக் கண்டதும் அதன் கீழ் பொருத்தமாக ஓரிரு வரிகள் எழுதுவது எனக்குப் பிடித்தமானப் பொழுதுபோக்குகளில் ஒன்று.

அன்று அந்த ஓவியம் அந்தச் சூழலில் என்னைக் கவரவே அடுத்த நொடி அந்த ஓவியத்திற்கும் ஒரு வரியை எழுதினேன்.

அந்த வரியை என் மகளிடம் கொடுத்து ஓவியத்தின் கீழ் எழுதச் சொன்னேன். அது என் வீட்டுச் சுவரை அலங்கரித்தது.

வீட்டிற்கு வருபவர்கள் அதைப் பார்வையிடும் போதெல்லாம் ஒரு புன்னகையோடும் மன ஒப்புதலோடும் அதைப் பாராட்டுவார்கள்.

”சுவர்களல்ல... அறைகளல்ல... வசிப்போரின் கூட்டுயிரே வீடு...”

இதுதான் அந்த வரி. பின் சில காலம் கழித்து அந்த வரியையே முதல் வரியாய்க் கொண்டு ஒரு முழுக் கவிதையும் எழுதினேன். அதை ”பச்சை மிளகாய் இளவரசி” என்ற என் கவிதை நூலில் இட்டு கனடாவில் வெளியிட்டேன்.

அந்த நூலுக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் அணிந்துரை தந்தார். ”தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை” என்ற பாராட்டை அந்த அணிந்துரை அன்போடு ஏந்தி நிற்பதை என் நூலில் காணலாம்.

*

சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின்
கூட்டுயிரே வீடு

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு

அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு

கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு

மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு

வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு

துயரறிந்து விழிகசிந்து
அயலவர்க்கும்
அன்புதரும் வீடு

பகைவருக்கும் முகமளித்து
வருகவென்று
மனம்திறக்கும் வீடு

யாருக்கும் நிழலாகும்
எந்நாளும்
ஒளிவீசும் வீடு

ஊருக்கு வளம்சேர்க்கும்
உலகுக்கே
சான்றாகும் வீடு

பேருக்கு வாழாமல்
புத்தகமாய்
வாழுமிந்த வீடு

பூட்டுக்குள் பலியான
வீட்டுக்கும்
சாவியாகும் வீடு

அன்புடன் புகாரி

No comments: