*****

யார் இந்த பாரதிதாசன்


சோலையின் நடுவில்
சொக்கிடும் அழகில்
பூக்களைக் கண்டு
பூரித்து நின்றால் - அவன்
இயற்கை நேசன்!

அந்தச்
சோலையின் வேர்களில்
உழைத்தவன் இரத்தம்
ஓடுதல் கண்டு
உள்ளம் நெகிழ்ந்தால் - அவன்
பாரதிதாசன்

தமிழெனும் மொழியில்
கவிதையின் வனப்பில்
நயங்களைக் கண்டு
நெஞ்சம் குளிர்ந்தால் - அவன்
தமிழின் பிரியன்

அந்தத்
தமிழெனும் அமுதில்
அசைகின்ற தேரில்
துடிக்கின்ற உயிரைத்
தனதெனக் கண்டால் - அவன்
பாரதிதாசன்

விதவைச் சிறையில்
வாடும் நிலவின்
வேதனை கண்டு
இதயம் கனத்தால் - அவன்
சமூக நண்பன்

அந்த
விதவை என்பவள்
முடிந்தவள் அல்ல
வேர்ப்பலாக் கனிக்கு
நிகரெனக் கண்டால் - அவன்
பாரதிதாசன்

சொல்லும் சொல்லில்
பொருளை வைத்துச்
சுவைபடச் சொல்லி
அறிவினைத் தந்தால் - அவன்
பாட ஆசிரியன்

அந்தச்
சொல்லின் உள்ளே
நெருப்பை உமிழும்
புரட்சிக் கருத்தைப்
பொதிந்து வைத்தால் - அவன்
பாரதிதாசன்

மனிதன் முகத்தில்
சாதியைத் தேடிச்
சாலை ஓரம்
சண்டைபிடித்தால் - அவன்
சாதிக்காரன்

அந்தச்
சாதியின் நரம்பை
வேரொடு அறுத்துத்
தூர எறிந்திடக்
கூர்வாள் தந்தால் - அவன்
பாரதிதாசன்

பிறந்தது முதலாய்ப்
பழகிய பழக்கம்
புகுத்திய வழியில்
வாழ்வினைக் கண்டால் - அவன்
குடும்பக்காரன்

அந்த
வாழ்க்கை வழியில்
மூடப் பழக்கம்
முற்றிலும் கொல்லும்
முரசினை ஒலித்தால் - அவன்
பாரதிதாசன்

பெண்மையின் மென்மையில்
பேரெழில் வனப்பில்
அதிசயம் கண்டு
ஆனந்தம் கொண்டால் - அவன்
காதலின் ரசிகன்

அந்தப்
பெண்களின் உரிமையே
பெரிதெனக் கண்டு
பாரினில் அவளைப்
போற்றிட எழுந்தால் - அவன்
பாரதிதாசன்

நாட்டை ஆள
நல்லவன் தேடி
ஓட்டுச் சாவடியில்
மைமச்சம் பெற்றால் - அவன்
தேசக் குடிமகன்

அந்தக்
கோட்டை ஆள்பவன்
ஓட்டை அரசியலை
ஊருக்குச் சொல்லி
உயர்வுக்கு நின்றால் - அவன்
பாரதிதாசன்

நாளும் பொழுதும்
மேற்கே பார்த்து
வாழும் வாழ்வை
மாற்றிச் சென்றால் - அவன்
பட்டணக்காரன்

அந்த
நாணம் கெட்ட
வாழ்வைப் புதைத்துத்
தமிழர் வழியை
உரக்கச் சொன்னால் - அவன்
பாரதிதாசன்

இறக்கும் முன்னே
சாதனை ஒன்றைப்
படைத்தே இறப்பேன்
என்றே நின்றால் - அவன்
நல்லதோர் மனிதன்

அந்தச்
சாதனை என்பது
பொழுதும் என்னைச்
சார்ந்தே இருப்பது
என்றே வாழ்ந்தால் - அவன்
பாரதிதாசன்

(பாரதிதாசன் வையவிரி அவையின் 2003ம் வருட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

* (ஏப்ரல் 2003)

2 comments:

Thamizhan said...

புரட்சிக் கவிஞனைப்
புரிய வைத்தீர்!
இசையுடன் இணைந்த
இன்பம் தந்தான்!
இனியொரு கவிஞன்
அவன்போல் என்றோ
என்றே ஏங்கினேன்!
வந்தேன் என்றே
வடித்தீர் படித்தேன்!
வாழ்க தமிழ் போல்
வளர்க அவர் போல்!

Unknown said...

மிக்க நன்றி தமிழன்

அன்புடன் புகாரி