*****
சும்மா இருடா


சும்மா சும்மா என்னைச்
சும்மா இரு என்கிறாய்
சும்மா சொல்கிறாயா இல்லை
நிசமாகத்தான் சொல்கிறாயா

சும்மா இருப்பதென்பது
சும்மா வருமா அம்மா?

ம்ம்...
கட்டிக்கொண்டாயிற்று
என் கைகளை
பொத்திக்கொண்டாயிற்று
என் வாயை
மூடிக்கொண்டாயிற்று
என் கண்களை
அடைத்துக்கொண்டாயிற்று
என காதுகளை
ஒதுங்கிக்கொண்டாயிற்று
என் தனிமையில்

இப்போது நான்
சும்மா இருக்கிறேனா
அம்மா?

சூரியன் அடைகாக்கும்
பூமி முட்டை
சுற்றிச் சுழல்வதைப்போல்
என் எண்ணங்கள் எப்போதும்
சுற்றிக்கொண்டேயல்லவா
இருக்கின்றன

இந்த
முதலும் முடிவும் தெரியாத
சிந்தனையும் அற்று
சுகமும் சோகமும் பிழியாத
நினைவுகளும் அற்று
சும்மா இருக்க முடியுமா
அம்மா?

அதற்கு நான்
சும்மா சும்மா மூளை தோண்டி
சிந்திக்க வேண்டுமல்லவா?

ஒரே ஒருமுறை
சும்மாவேனும் சிந்தித்தவன்
பிறகெல்லாம்
சும்மா சும்மா சிந்திக்கத்தானே
செய்வான்

எதையுமே சிந்திக்காமல்
எப்படித்தான்
சும்மா இருப்பது அம்மா?

பாலுக்கழும்
பச்சிளம் குழந்தையும்
சும்மாவா அழுகிறது
சிந்தித்தல்லவா அழுகிறது

முட்டாள் கூட
சிந்திக்காமலா
ஓட்டுப்போடுகிறான்
தவறாகச் சிந்தித்துத்தானே
ஓட்டுப்போடுகிறான்

தன் மூச்சை
நிறுத்திக்கொள்ளாமல்
சிந்திப்பவன்
சிந்திப்பதை நிறுத்திக்கொள்வது
எப்படி அம்மா?

உள்மூச்சை இழுத்து நிறுத்தி
உள்ளத்தை நிலைப்படுத்தி
உசும்பாமல் அமர்ந்தாலும்
ஒற்றைப் புள்ளியில்
ஒரே சிந்தனையில்
ஒளிச்சுடராவததுதானே
தியானமும்

அதீத
எண்ணத்தெளிவிலேனும்
சும்மா இருக்கலாம் என்றால்
எண்ணத்தெளிவென்பதும்
ஓர்
மகத்தான சிந்தனையல்லவா

இனி எப்படித்தான் நான்
சும்மா இருப்பது?

மீண்டும் என்னைச்
சும்மா இருடா என்றுவிட்டு
சமையல் கட்டுக்குள் நீ
சிந்தனையோடு நுழைவது
சும்மாவா அல்லது
என் கேள்விகளுக்கான
சம்மதத்தோடா அம்மா?

No comments: