நடந்தான் நடந்தான்


இருட்டுகள் திரண்டு
இரக்கத்தைக் கழித்து
இறுக்கிக் கட்டிய
இருட்டோ இருட்டு

வெளிச்ச தாகத்தை
விக்கலாய்க் கக்கவும்
வக்கற்ற நிலையில்
அவன் உயிர்

காதுக் கதவு தொடக்
காற்றேறிய ஓசைகள்
கால்தடுக்கிக் கால்தடுக்கிக்
கருச்சிதைவாக...

கண்முன் நகரும்
வண்ணக் காட்சிகள்
கருந்திரை விரிப்பில்
கரியோவியங்களாய் ஓட...

நாசிக்குள் நுழைந்த நரக நாற்றமும்
சாதிக்க வழியற்று விக்கி விக்கி அழுதபடி
வெளியேறிப்போக...

ஈரம் செத்த நாக்கு ருசிமொட்டு கெட்டு
பல்லிடுக்கில் வெட்டுப்படப்
பரிதவிக்க...

துக்கத்துக்கும்
தூக்கத்துக்கும் இடையில்
தூது சென்ற எண்ணங்கள்
தூள் தூளாகித் தொலைந்துபோக....

மனக்குகைகளில்
பயமென்னும் வவ்வால்கள்
கீச்சுக்கீச்சென்று கத்திக்கொண்டு
அலையோ அலையென்று
அலைந்தன

ஆம்
மனிதனை முதலில்
பயம்தானே
பாசத்தோடு பற்றிக்கொண்டு
பின்னடைய மறுக்கிறது

ஆயினும்...
காலமென்னும் கோரைப்பல்லோ
பயத்தைப் பக்குவமாய் மென்று
செரிமானச் சிறை தள்ளும்
வித்தை அறிந்த வித்தகனாயிற்றே

தட்டில் விழும் பிச்சையாய்ச் சேர்ந்த
சில்லறைத் தைரியங்கள்
தூரத்தில் மினுக்கும்
நட்பு நட்சத்திரமாய் அழைக்க....

தானாகவா விட்டோடும்
இருட்டை
நீயன்றோ விரட்டவேண்டும்
என்ற ஞானக்கரம்
பிடறியில் விரலச்சு பதிக்க...

எழுந்து
மெதுவாய்
ஓர்
அடி
எடுத்து
வைத்தான்...

அம்மா...
காலில் பட்ட கல்லடியில்
நகங்கள் உடைந்து இரத்த நதி

இனியோர் அடியும் எடுத்து வைப்பதா
ஊசலாடும் உயிரையும்
ஒழித்துப் போடுவதா என்று
மூளை அடுக்கிலிருந்து
அபாயச் செய்திகள்
அவசர கதியில் அலறின

மனமோ
அட...
இன்னும் எனக்குள்
இரத்தமுண்டோ என்று
சந்தோசம் கொண்டது
கோபத்தோடு....

அடுத்த
அடி
எடுத்து
வைத்தான்...

அய்யோ....
இப்போது
இடறியவன் விழுந்தது
பாம்புகளும் தேள்களும்
நட்டுவாக்காலிகளும் கடித்துக் குதறும்
படுபாதாள நரகத்தில்

திரும்பி ஓடடா மடையா என்று
அறிவு துப்பாக்கி ரவைகளாய்
இராணுவ ஆணையிட்டது

மனமோ...
தரையைப் பெயர்த்து வானத்தில் வீசவும்
வானத்தை உடைத்துக் கடலுக்குள் புதைக்கவும்
தன்மான வெறிகொள்ள....

எழுந்தான்
நரம்புகளில் புகுந்த
ஆத்திரம் முறுக்க...

நடந்தான்
எலும்புகளில் நுழைந்த
மும்முரம் விரட்ட...

கால்களில் கற்கள் அடிபட்டு
கோவென்று அலறின

மிதிபட்ட தளத்திலேயே
விசஜந்துக்களெல்லாம்
மறுபிறப்பில் பார்த்துக்கொள்கிறேன்
என்று சபதமிட்டுச் செத்தன

நடந்தான்
நடந்தான்

அட...
வெளிச்சம்!

முன்பு எப்போதும் கண்டிராத
மகோன்னத வெளிச்சம்!

No comments: