வளைகுடா இருட்டில்...


இருட்டில்
உன் நிழல்தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

ஒவ்வொரு முறையும்
விழிகளில் அடர்த்தியாய்ப்
பூக்கும் கனவுகள்
வந்து சூழும் வரண்ட
பொழுதுகளால்
கருகிக் கருகி உதிர
மிச்சத்தையேனும்
காப்பாற்ற வேண்டுமே
என்ற அச்சத்தில்
அவசர அவசரமாய்
ஓடி வந்தாய்

அன்பும் பாசமும் கூட
விலைப்பட்டியலில்
இடம்பெற்றபின்
காசுதானே இந்தப் பிரபஞ்சம்
என்று உணர்ந்த பின்
அவசர அவசரமாய்
ஓடிவந்தாய்

இன்றோ
இந்த வளைகுடா இருட்டில்
எது இருந்தும்
எது இல்லாவிட்டாலும்
காலைச் சுற்றிக்கிடந்த
உன் நிழல் தேடிக்
காணாமல் தவிக்கிறாய்

1 comment:

cheena (சீனா) said...

கவிதையின் உட்கருத்து நெஞ்சை நெகிழச் செய்கிறது.

//மிச்சத்தையேனும்
காப்பாற்ற வேண்டுமே
என்ற அச்சத்தில்
அவசர அவசரமாய்
ஓடி வந்தாய்//

//காசுதானே இந்தப் பிரபஞ்சம்
என்று உணர்ந்த பின்
அவசர அவசரமாய்
ஓடிவந்தாய்//

//இன்றோ
இந்த வளைகுடா இருட்டில்
எது இருந்தும்
எது இல்லாவிட்டாலும்
காலைச் சுற்றிக்கிடந்த
உன் நிழல் தேடிக்
காணாமல் தவிக்கிறாய்//

குடும்பத்தினரின் நியாயமான ஆசைகளை நிறைவேற்ற வேண்டிய
குடும்பத் தலைவன் வேறு வழியின்றி பொருள் தேடி அயலகம் செல்கிறான். இது சங்க இலக்கிய காலத்தில் இருந்து நடைபெறும் செயல்தான். தனிமை இருவரையும் வாட்டுகிறது. என்ன தான் வழி.