****46 அட எப்படித்தான் வரும் நிம்மதி என்றேன் சலிப்போடு

இந்தக் கவிதை முழுவதும் கேள்வியும் பதிலுமாகவே ஓர் உரையாடலாய்ச் சென்றுகொண்டிருக்கும். சினிமாவில் இரட்டை வேடம் போடுவதுபோல் கேள்வி கேட்பதும் நானே பதில் சொல்வதும் நானே. இதில் கேள்வி கேட்பவனைப் பிடித்திருக்கிறதா அல்லது பதில் சொல்பவனைப் பிடித்திருக்கிறதா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும் ;-)


மூச்சுக்கு
முச்சு தேவைப்பட்டு
மூச்சு நின்றபின்
கிட்டும்
அமைதியா நிம்மதி
என்றேன்

வாழ்வின் தேவைக்கு
செத்தபின் வருமென்பது
எப்படி ஈடாகும்
என்கிறாய்

*

என்னிலும்
துயரத்தில் தள்ளாடும்
உள்ளங்களைக் கண்டு
சமாதானம் கொள்ளும்
புத்திதான்
நிம்மதி என்றேன்

உன்னை
மீறும் எண்ணங்களை
எத்தனைநாள்
ஏமாற்றுவாய் என்கிறாய்

*

எல்லாம் துறந்து
எதையும் சுவைக்காமல
மௌனித்துக் கிடப்பதே
நிம்மதி என்றேன்

இயற்கையைச்
சுத்தமாய்த் துடைத்தெறிவது
எப்படி நிகழும்
என்கிறாய்

*

அன்னை
மடி துயிலும்
மழலைச்சுகமே
நிம்மதி என்றேன்

வளராமல் இருக்க
வரம் இல்லையே
என்கிறாய்

*

காதலியின் அணைவில்
நினைவுகளற்றுப் பறக்கும்
சிறகுகளே
 நிம்மதி என்றேன்

ஒடிப்போயோ
அல்லது உடனிருந்தோ
ஒரு நாளவள்
காணாதொழிவாளே என்கிறாய்

கண்மூடிக்
கண்ணீர் பெருக்கி
தெய்வமே என்று
காலடி கிடக்கும்
பக்தியே நிம்மதி என்றேன்

தினமும் தொழுதெழும்
தீவிர பக்தனும்
தாளாத்துயரென்று வந்துவிட்டால்
இருக்கிறாயா தெய்வமே
என்றுதானே
அழுகிறான் என்கிறாய்

*

அட எதுதான் நிம்மதி
எங்குதான் நிம்மதி
எப்படித்தான் வரும் நிம்மதி
என்றேன் சலிப்போடு

உனக்குள் தேடி
உன்னையே வளர்த்தெடுத்து
உன்னை ஆளவைக்கும்
உன் சக்தியே
நிம்மதி என்கிறாய்

மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும்
வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்... 

8 comments:

Anonymous said...

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி

அன்புடன் ..... செல்வி ஷங்கர்

Shakthiprabha (Prabha Sridhar) said...

//மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும் வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்//

ஆயுள் முடியும் தருணத்திலேனும் வாசற்கதவை தட்டிவிட்டோமல்லவா...அதுவே போதுமானது.

சிவா said...

அருமை ஆசான்.. நிம்மதி வேறு எங்கும் இல்லை .. நம்முள் தான் இருக்கிறது

செல்வன் said...

நல்ல கவிதை

நிம்மதி என்றும் நம்ம சாய்ஸ்தான்:-)

ஆயிஷா said...

நிம்மதியும், சந்தோசமும் நமக்குள் தான் இருக்கு. அதை தெரிந்து கொள்ள முடியாமல் தான் எல்லோரும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கின்றனர். உங்க கவிதை சூப்பர் + அறிவுரை.

அன்புடன் ஆயிஷா

சாந்தி said...

நிம்மதி என ஒன்று கூட தற்காலிகமே ன்னு தெரிந்துகொள்ளலாம்...

அதனால் அதை தேடுவதை விட வருவதை ஏற்கும் மனம் கொள்ளலாம் என்பது என் அனுபவம்...:)

நல்ல ஆழ்ந்த யோசனை கவிதை.. நன்று.



--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

பூங்குழலி said...

//வாழ்வின் தேவைக்கு செத்தபின் வருமென்பது
எப்படி ஈடாகும் என்கிறாய்//


நியாயமான கேள்வி ..இறந்த பின் எதற்கு ?

///உன்னை மீறும் எண்ணங்களை
எத்தனைநாள் ஏமாற்றுவாய் என்கிறாய்///

ரொம்ப சரி

///இயற்கையைச் சுத்தமாய்த் துடைத்தெறிவது
எப்படி நிகழும் என்கிறாய்///

நிகழாது தான்

//அன்னை மடி துயிலும்
மழலைச்சுகமே நிம்மதி என்றேன்
வளராமல் இருக்க
வரம் இல்லையே என்கிறாய்///

அன்னை மடியில் துயிலும் போதெல்லாம் மழலை சுகம் கிட்டுமே

///தினமும் தொழுதெழும் தீவிர பக்தனும்
தாளாத்துயரென்று வந்துவிட்டால்
இருக்கிறாயா தெய்வமே என்றுதானே
அழுகிறான் என்கிறாய்///


:))


///மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும் வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்///

ஆமாம் புகாரி சொல்வதற்கு சுலபமாக தான் இருக்கும் ...வாசல் சிலருக்கு சீக்கிரம் தெரிகிறது .....

Unknown said...

<<<
காதலியின் அணைவில்
நினைவுகளற்றுப் பறக்கும்
சிறகுகளே நிம்மதி என்றேன்
ஒடிப்போயோ அல்லது உடனிருந்தோ
ஒரு நாளவள் காணாதொழிவாளே என்கிறாய்
>>>

nice :)