இலக்கியம் யாதெனிலோ

வாழ்க்கையில்
வாழ்க்கை தேடிக் களைத்து
கற்பனையில் வாழ்க்கை தேடி
விருப்பம்போல் வாழ்வதே
அருங்கலைகளும்
அற்புத இலக்கியங்களும்

இயல்பில் நீ
ஒரே ஒரு கதாநாயகன்
ஆனால்
இலக்கியத்திலோ
நீ பல நூறு கதாநாயகன்

இல்லாததையும்
இயலாததையும்கூட
எண்ணங்களால் வாழ்ந்து
பல நூறு ஜென்மங்களை
ஒற்றைப் பிறவியிலேயே
பெற்றுச் சிறக்கும்
பேரின்ப வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

படுத்த படுக்கையாய்க்
கிடக்கும்
முற்று முடமானவனும்
படபடவெனப்
பொற்சிறகுகள் விரித்து
நீல வானின்
நிறந்தொட்டுப் பறக்கும்
அதிசய வாழ்வு
கலை இலக்கிய வாழ்வு

உன்
உடலைக் கொண்டு
ஒரு வாழ்வுதான்
உன் உள்ளத்தைக் கொண்டு
உனக்கு
ஓராயிரம் வாழ்வு

எழுதி வைத்தால்தான்
அது இலக்கியம் என்றில்லை
ஆக்கிவைத்தால்தான்
அது கலையென்றில்லை
எண்ணத்தில் கருவாகி
உனக்குள்ளேயே
ரகசியமாய்
பொன்னுலகம் படைத்து
பூரித்து வாழ்ந்தாலும்
அது
கலைதான்
இலக்கியம்தான்

கலையும் இலக்கியமும்
இல்லாவிட்டால்
கடவுள் தந்த அரிய வாழ்வும்
கரிக்கட்டையாய்க்
கருகியே போகும்

No comments: