Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ


யூனியன் சப்வே ரயிலைவிட்டு இறங்கி ராஜர்ஸ் செண்டரை நோக்கி நான் நடக்கும்போது மணி ஐந்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. என்னோடு பெண்கள் தங்களின் அழகழகு கூந்தலுடன் நடந்துவந்தார்கள். ஈழப் பெண்களுக்குக் கூந்தல் அழகுதான். கார்மேகக் கூந்தல் என்று வர்ணிப்பார்களே அதனினினும் அடர்த்தியான கூந்தல்.

ஆனால் ஒருவர் தலையிலும் மல்லிகைப்பூ இல்லை. அது எனக்குச் சற்றே வருத்தமாக இருந்தது. ஆனால் என் வருத்தத்தைக் கண்ட கனடாவின் பனிப்புயல் சும்மா இருக்குமா? அப்படியே வெள்ளை வெள்ளையாய்ப் பனிப்பூக்களைச் சூடிவிட்டது அவர்கள் தலையில். எனக்கு அப்போதே மகிழ்ச்சி என்ற ஒரு எழுச்சி உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டுவிட்டது.

நான் பெரும்பாலும் என் வேனில்தான் எங்கும் செல்வேன். ஆனால் (பார்க்கிங்) தரிப்பிடத் தகறாறு காரணமாக வாகனத்தைப் பாதியில் விட்டுவிட்டு மீதிதூரத்தை, அதாவது கென்னடி சப்வேயிலிர்ந்து யூனியன் சப்வேவரை ரயிலில் பயணப்பட்டேன். வெகு காலங்களுக்குப் பிறகு சப்வே ரயில் பயணம் நன்றாகவே இருந்தது.

ஒருவழியாய் உள்ளே வந்தாச்சு. வந்தால் அங்கே இளையராஜாவைக் காணவில்லை. நீயா நானா கோபிநாத் கூட்டத்தைக் கட்டுக்குள் வைக்க கண்டதையும் செய்துகொண்டிருக்கிறார்.

கோபி நீ போய் ராஜாவை அனுப்பி வைக்கிறாயா இல்லையா என்று ஒரே விசில் விசில் விசில்........... நீயா? நானா? என்று கோபி ஒரு பக்கமும் ஆவல் கொண்ட கூட்டம் இன்னொரு பக்கமுமாய் ஒரே கூச்சல்...

முதலில் இந்த ராஜர்ஸ் செண்டரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லியாக வேண்டும். இது திறந்து மூடும் கூரையைக் கொண்ட பிரமாண்டமான அரங்கு.

இதுதான் உலகத்திலேயே 20 நிமிடங்களில் திறந்துமூடும் முதலாவது பெரிய அரங்கு என்று சொல்கிறார்கள்.

இது நிகழ்ச்சிகளுக்கான அரங்குமட்டும் இல்லை மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் ஆகும். இந்த விளையாட்டு மைனாத்தில் எட்டு 747 விமானங்கள் அல்லது 743 இந்திய யானைகள் சுலபமாக நிறுத்தலாம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதன் பழைய பெயர் ஸ்கைடூம் -SkyDome. இதன் இன்னொரு முக்கிய அம்சம் இது CN Tower என்றழைக்கப்படும் கனடா தேசக் கோபுரத்தின் காலடியில் இருக்கிறது.

இந்த அரங்கில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அருமையாக நடந்தது. 25 ஆயிரம் ரசிகர்கள் வந்து அமர்க்களப்படுத்தி இருந்தார்கள். ஏ ஆர் ரகுமானுக்கு இதைவிடவும் மிக அதிக கூட்டம் வந்திருந்தது. ஆனால் ஏ ஆர் ஆர்க்கு வந்த கூட்டம் தமிழர்கள் மட்டும் இல்லை. ஆனால் இளையராஜாவுக்கோ அவ்வளவு பேரும் தமிழர்கள். அது ஓர் ஆனந்த விசயம்.

அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும்கூட மக்கள் வந்து குவிந்திருந்தார்கள். கனடாவிலும் டொராண்டோ மட்டும் இல்லாமல் மாண்றியால் போன்ற பல தூர ஊர்களிலிருந்தும் வந்து குவிந்திருந்தார்கள்.

வெளியில் பனி கொட்டுகிறது. உள்ளே இசை கொட்டுகிறது. அதுதான் ராஜா மழை!

இலையில் விழுந்த பனித்துளி இலையின் நரம்புகளில் இயல்பாய் இழைவதுபோல் இளையராஜாவின் இசை இழைந்தோடியது.

நிகழ்ச்சி தொடங்கவேண்டிய நேரம் மாலை 5 மணி. நான் என் அரங்கச்சீட்டை வாங்கும்போதே அதன் அமைப்பாளர்கள் சொல்லிவிட்டார்கள், அரங்கு 4 மணிக்கே திறந்துவிடும். ஆனால் இசை நிகழ்ச்சி ஏழுக்குத்தான் தொடங்கும் என்று.

அது சரி, ஐந்து முதல் ஏழுவரை மக்களை எதைச் சொல்லி சமாளிப்பது? அதற்காகப் பணிக்கப்பட்டவர்தான் நீயா நானா கோபிநாத். ஆரம்பத்தில் கோபிக்கு ஏகோபித்த வரவேற்பைக் காட்டிய கூட்டம் நேரம் செல்லச் செல்ல கடுப்பைக் காட்டத் தொடங்கிவிட்டது. நானா மாட்டேங்கிறேன், இதோ வந்துகிட்டே இருக்கார்ல என்று கோபி சொன்னது சிரிப்பாக இருந்தது.

கோபி கூடவே ஒரு பெண்ணைத் துணைக்கு வைத்துக்கொண்டு, யாருக்கெல்லாம் பாடத்தெரியும் பாடுங்க என்று ஒவ்வொருவரிடமும் மைக்கைக் கொடுத்தார்.

ஒரு சிறுமி மட்டும் பாடினாள். மற்றவர்களெல்லாம்..... மக்களை பாடி (body) ஆக்கினார்கள். இடையில் வந்த ஓரிரு குரல்கள் சட்டென முடிந்தாலும் பரவாயில்லை என்ற வகையில் பாடியது.

கோபிநாத்திடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். இளையராஜாவின் இசைக் கதைகளைத் தொகுத்துச் சொல்லி இருக்கலாம். உலக இசை பற்றிப் பேசி இருக்கலாம்.

கனடாவில் இந்தத் தமிழனின் இசை நிகழ்ச்சி பற்றிப் பேசி இருக்கலாம். ஆனால் அது எதுவுமே செய்யாமல், வெறுமனே நேரத்தை எப்படி இழுப்பது என்று மேலும் ஜவ்வாக்கினார்.

சட்டென திட்டத்தில் இல்லாமல் அவர் முன் நிறுத்தப் பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

இடை இடையே வெள்ளைக்கார மந்திரிகள் வந்து வணக்கம், நன்றி என்று சொல்லிப் போனார்கள். ஒருவர் மட்டும் கொஞ்சம் காகிதத்தில் எழுதிக்கொண்டு வந்து இரண்டு வரி வாசிக்க முயன்று எல்லோரையும் சிரிப்பில் ஆழ்த்தினார்.

அரங்கின் உள்ளே சுடு-நாயும் ;-) குளிர்பானமும் வாங்க நான் வரிசையில் நின்றபோது ஒருவர் மிகவும் கோபமாகக் கத்திக்கொண்டிருந்தார். அஞ்சு மணிக்குன்னு சொன்னானுவ. மணி ஏழாவப் போவுது. எவனையும் காணோம். எட்டுக்கு ஆரம்பிச்சு பத்துக்கு முடிச்சுடுவானுவ. எல்லாம் போச்சு. ஏமாத்துக்காரணுவ ஏமாத்திட்டானுவ. இளையராஜாவை கண்ணுலயே காட்டமாட்டேன்றானுவ...

டிரினிடி இவெண்ட்ஸ் தான் ஏற்பாட்டாளர்கள். இத்தனை மணிக்குத்தான் நிகழ்ச்சி தொடங்கும் என்ற சரியான தகவலை முன்கூட்டியே அவர்கள் சொல்லி இருக்க வேண்டும். அல்லது கோபிநாத் மூலமாகவாவது இத்தனை மணிக்கு மிகச் சரியாக இளையராஜா தோன்றுவார் என்றாவது சொல்லி இருக்க வேண்டும்.

பாவம் கோபி அல்லாடினார்.

இதன் காரணம் என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். வசூல்தான் வேறென்ன. கூட்டம் இன்னும் வரட்டும் என்றும் தனிச்சலுகை டிக்கட் விற்பனைக்காக கனடிய தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி சேவைகளைப் பயன்படுத்தி மக்களை வரவழைப்பதுமாக இருந்திருக்கிறார்கள். கூடவே அநியாய விலை விற்கும் அந்தக் கடைகளுக்கு எந்தக் கூட்டம் வரும்? 3 டாலர் கொடுத்து வாங்கவேண்டியதை 30 டாலர் கொடுத்து வாங்கிக்கொண்டிருந்தோம்.

25000 பேர் வந்திருந்தார்கள் என்றாலும் இது அரங்கு நிறைந்த கூட்டம் இல்லை. அரங்கு திணரும் கூட்டம் என்றால் அது 60 ஆயிரத்தைத் தாண்டவேண்டும்.

ரசிகர்களுக்கு வேண்டுமானால் இது கலை நிகழ்ச்சி. ஆனால் ஒருங்கிணைப்பாளர்களுக்கு இது வருமான முயற்சிதானே?

இளையராஜா நிகழ்ச்சியின் இடையில் பல முறை குறிப்பிட்டார். நாங்கள் நிறைய தொகுத்துக்கொண்டு வந்திருந்தோம். நேரம் போதாததால் எல்லாவற்றையும் உங்களுக்கு வழங்க இயலவில்லை என்றார். இயன்றவரை சிறப்பானவற்றைத் தருகிறோம் என்றார்.

ஆனால் நிகழ்ச்சி 7 மணி தொடங்கி 11:45 வரை சென்றது அதாவது நாலேமுக்கால் மணி நேரம். இடையில் வந்துபோல சில மந்திரிகளுக்கு 15 நிமிடங்களைக் கழித்துவிட்டாலும் இளையராஜா நாலரை மணி நேரங்கள் எங்களோடு இருந்தார்.

நீங்கள்லாம் கொட்டும் பனி என்றும் பாராமல் 5 மணிக்கே வந்து உக்கார்ந்து இருக்கீங்க. ஆனால் நாங்க இந்திய நேரப்படி இந்த அரங்குக்கு அதிகாலை மூணு மணிக்கே வந்துட்டோம் என்று விவேக் காமெடி பண்ணப் பார்த்தார், ஆனால் யாரும் ரசிக்கவில்லை.

ஆறரை மணி நேரம் இருக்க வேண்டிய நிகழ்ச்சி நாலரை மணி நேரமாகக் குறைந்துவிட்டதே என்ற கவலை தெரியவில்லை மக்களிடம். ஐந்து மணிக்கே ஏன் ராஜா வரவில்லை என்ற ஆதங்கம்தான் தெரிந்தது.

நேரம் தாழ்த்தித் துவங்கியதுமட்டுமல்ல. இன்னொரு குளறுபடியையும் செய்தார்கள் டிரினிட்டி இவெண்ட்ஸ்காரர்கள். ஏகப்பட்ட பாடகர்களைப் பட்டியலில் இட்டிருந்தார்கள். அங்கே வந்ததோ அதில் கால்வாசிகூட இருக்காது.

மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் எஸ்பிபி வந்திருந்தார், ஹரிஹரன் வந்திருந்தார். சித்ரா வந்திருந்தார். சாதனா சர்க்கம் வந்திருந்தார். கார்த்திக்
வந்திருந்தார். யுவன் & கார்த்திக்ராஜா வந்திருந்தார்கள். அவ்வளவுதான். வேறுயாரும் வரவில்லை.

நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்குவதற்கு கோபி வந்திருந்தார். பார்த்திபன் வந்திருந்தார். விவேக் வந்திருந்தார். ப்ரசன்னாவும் சினேகாவும் ஜோடியாக வந்திருந்தார்கள்.

இவர்களோடு இளையராஜா. இளையராஜாவோடு நாங்கள்.

அரங்கு நிறைய வந்திருப்பவர்களிடம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் எந்தத் தகவல் பறிமாற்றமும் செய்யவே இல்லை. இத்தனை மணிக்குத்தான்
தொடங்குவோம், வர முடியாமல் போன பாடகர்களுக்காக வருந்துகிறோம் என்றெல்லாம் ஏதும் சொல்லவில்லை.

இது ஒரு விஜய் நிகழ்ச்சிகூட. அவர்களும் ஏதும் சொல்லவில்லை.

இளையராஜாவுக்கு நேரம் போதவில்லை என்பதை இளையராஜாவே மேடையில் சொல்லிவிட்டார். இதெல்லாம் ஒருங்கிணைப்பாளரின் குறைபாடு என்றே நான் காண்கிறேன். இளையராஜாவை ஒன்றும் சொல்லமுடியாது.

அந்த இரண்டு குறைகளைத்தவிர வேறு ஏதும் குறையே இல்லை. எல்லாம் நிறைதான் நிறைதான் நேர் நேர் நிறைதான் ராஜா இசையில்.

அந்த இரு குறைகளுக்கும் நிச்சயமாக ராஜா பொறுப்பு இல்லை. அது அமைப்பாளர்களின் சதியன்றி வேறில்லை.

இளையராஜா வந்ததும் வழக்கமான தன் ஜனனி ஜனனியைக் கம்பீரமாகத் தொடங்கினார். அந்த அற்புதப் பாட்டுக்கு அரங்கம் குத்தாட்டமே போட்டது. விசில் ராக்கெட்டுகளாய்க் கிளம்பி அரங்கத்தையே அல்லோலகல்லோலப்படுத்தியது.

உங்களிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள். எவ்வளவு வேணும்னாலும் கைத்தட்டிக்கங்க, கூச்சல் போட்டுக்கங்க விருப்பம்போல உங்கள் உணர்களை
வெளிப்படுத்திக்கங்க. ஆனால் இந்த விசில் மட்டும் வேண்டாம். விசில் என்றாலே எனக்கு அலர்ஜி. என்று இளையராஜா கறாராகக் கூறிக்கொண்டிருக்கும்போதே ஒரு மூலையிலிருந்து விசில் ஒன்று எம்பிக் குதித்து ராஜாவை நோக்கி ஏவுகணையாய் வந்தது.

அவ்வளவுதான் ராஜாவுக்கு ’அது’ வந்துவிட்டது. ஒரு முறைமுறைத்தார். அந்த விசிலும் உயிரைவிட்டுவிட்டது. விசில் அடிச்சீங்கன்னா நான் போய்க்கிட்டே இருப்பேன் என்றுவேறு ஒரு அலாரக்குண்டு (டைம்பாம்) வைத்தார்.

விசிலடிச்சாங்குஞ்சுகள் வாடி வதங்கி வெம்பி வெறுத்துவிட்டார்கள். அதன் பின்னெல்லாம் ஒரே அமைதிதான். கைத்தட்டுங்க கைத்தட்டுங்க என்று விவேக் கெஞ்ச வேண்டியதாயிடுச்சு.

இப்படித்தான் அண்ணே ரொம்ப ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... ஸ்ட்ரிக்டு.... என்று விவேக் அடிக்கடி சொன்னது அரங்கத்தினரை சிரிப்பு ஞானிகளாய் ஆக்கியது.

இளையராஜா கொஞ்சம் மேடையைவிட்டு உள்ளே சென்றார். அதைப் பயன்படுத்திக்கொண்ட விவேக், அரங்கத்தை விசிலடிக்க உற்சாகப்படுத்தினார். அவரு வந்துருவாரு இத்தோடு நிறுத்திக்கவும் செய்யுங்க என்றும் சொன்னார்.

இந்த விசிலுக்கும் ராஜாவுக்கும் இடையில ஒரு கதை இருக்கு. உண்மையிலே ராஜாவுக்கு விசில்னா ரொம்பப் பிடிக்கும் அதை அப்புறம் சொல்றேன் விவேக் விவரித்தது ஒரு இசைக்கதை.

காதலின் தீபம் ஒன்று என்ற அற்புதமான பாடலை தரும்போது இளையராஜாவுக்கு கடுமையாக உடல்நலம் சரியில்லையாம். அப்போது விசில் வழியாகவே கொடுத்த பாட்டுத்தான் அதுவாம். கைத்தட்டல்கள் ராஜர்ஸ் கோபுரத்தைத் திறந்து மூடின.

(தொடரும்)

2 comments:

அமுதா கிருஷ்ணா said...

ஓ ஒருவழியாக நிகழ்ச்சி நடந்ததா? சூப்பர்.

bizcondos said...

Thanks
http://ekuruvi.com/ilayaraja%20toronto