அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்?


அடீ மருதாணீ
என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க
அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய்

எந்த மன்மதன் அனுப்பி
இங்குநீ தூது வந்தாய்

நீ முத்தமிட்டு முத்தமிட்டா
என் விரல் நுனிகள் இப்படிச் சிவந்தன

மருதாணீ
நீ யாருக்குப் பரிசம் போட
இங்கே பச்சைக் கம்பளம் விரித்தாயோ

அடியே
நீ வெற்றிலையைக் குதப்பி
என் விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்

அன்றி
உன்னை நசுக்கி அரைத்து
இங்கே அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ இது

அழாதேடி தோழீ
உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என் அவருக்காய் காத்திருக்கிறேன்

அவர் வரட்டும்
உன் காயங்களுக்கு அவர் இதழ் எடுத்து
ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறேன்

8 comments:

சேவியர் said...

வாவ்.. மிக மிக அருமையான கவிதை. எல்லா வரிகளுமே சிறப்பு.

//நீ முத்தமிட்டு முத்தமிட்டா
என் விரல் நுனிகள்
இப்படிச் சிவந்தன
//

//அடியே...
வெற்றிலையைக் குதப்பி
என் விரல்களிலா
துப்பிவிட்டுப் போகிறாய்//

அருமை.

cheena (சீனா) said...

அனைத்து அடிகளுமே கல்வெட்டுக்கள். காலத்தால் அழியாதவை.

//அழாதேடி தோழீ
உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என் அவருக்காய் காத்திருக்கிறேன்

அவர் வரட்டும்
உன்
காயங்களுக்கு
அவர் இதழ் எடுத்து
ஒத்தடம் கொடுக்கச் சொல்லுகிறேன்
//

மருதாணியின் காயங்கள் இரத்தக் கறைகளாய் கை விரல்களில். தோழியின் அவர் இதழ் பதிக்கும் இடமோ இது தானே

நல்ல கற்பனை . நல் வாழ்த்துகள்.

சேதுக்கரசி said...

எனக்குப் பிடித்த ஒரு கவிதை இது :-)

பூங்குழலி said...

அன்றி
உன்னை நசுக்கி அரைத்து
இங்கே அப்பிவிட்டுச் சென்றதற்கு
நீ சிந்தும் இரத்தக் கண்ணீரோ
இது

இந்த வர்ணனை நல்ல இருக்கு புகாரி.
(இன்று உங்கள் கவிதைகள் ரத்த சாயம் பூசிக் கொண்டிருக்கின்றன)

பூங்குழலி

பிரபுகுமரன் said...

அன்புள்ள திரு.புகாரி,
தங்கள் கவிதைகளான வளைகுடா, அறுவடை, மருதாணி, பைசா கோபுரம், யாரோ ஒருவன்.., தொலைபேசி, என் குரல்...., மின்னஞ்சல் ஓசை பாடல் ம்ற்றும் அனைத்தும் மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை.
வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் விளையாடியிருக்கிறீர்கள்.அற்புதம்.
-த.பிரபுகுமரன்.

பிரபுகுமரன் said...

அன்புள்ள திரு.புகாரி,
தங்கள் கவிதைகளான வளைகுடா, அறுவடை, மருதாணி, பைசா கோபுரம், யாரோ ஒருவன்.., தொலைபேசி, என் குரல்...., மின்னஞ்சல் ஓசை பாடல் ம்ற்றும் அனைத்தும் மிக மிக அருமை. பாராட்ட வார்த்தைகளில்லை.
வார்த்தைகளிலும், கருத்துக்களிலும் விளையாடியிருக்கிறீர்கள்.அற்புதம்.
-த.பிரபுகுமரன்.

அன்புடன் மலிக்கா said...

என்னவென்று சொல்வதம்மா ஆசானின் கவிதை வரிகளை
சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

''..உன் மரகத மொட்டுக்கள்
என் சின்ன விரல் காம்புகளில்
செந்தூரப் பூக்களாய்ப் பூத்ததாலேயே
நான் பூத்திருக்கிறேன்
என் அவருக்காய் காத்திருக்கிறேன்..''

ஆத்தி!...அசத்தல் வரிகள்!.
ஊத்துதே கற்பனை!
ஏத்துக்குங்க வாழ்த்தை.
வேதா. இலங்காதிலகம்.