Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ

தன் உயிருள்ளவரை இசைதான் உயர்ந்தது கவிதைகள் தாழ்ந்தவை என்று நிரூபிக்கும் வெறி இளையராஜாவை விட்டு அகன்றால் நான் ஆயிரத்தெட்டு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டிக்கொண்டேன் எங்கள் வீட்டின் சட்னித் தேவைக்கு ;-)

என் நாடி நரம்புகளை எல்லாம் தீண்டிய இசையைத் தந்த இளையராஜா ஏன் இப்படி ஆகிப்போனார் என்று எனக்குக் கவலை உண்டு. என் இதயம் கவர்ந்த இசைவேந்தர் இளையராஜாவின் கர்வ நெஞ்சம் அப்போதே மாறவேண்டும் என்று அந்த நொடியே ஆசைப்பட்டேன்.

இளையராஜாவின் திறமைக்கும் இசை ஞானத்திற்கும் அவரின் தலையில் இமயமலை அளவுக்குக் கனம் இருக்கலாம் தப்பே இல்லை. அதை நான் அப்படியே ஏற்றுக்கொள்வேன். ஆனால் அந்தக் கனம் தமிழை நசுக்கிச் சாகடிக்கிறதென்றால் ஏற்க ஒரு தமிழனாய் என்னால் முடியவில்லை.

ஓ.... இளையராஜா, நம் தமிழன்னை அள்ளிக் கொஞ்சி நேசிக்கும் தமிழன் நீ. அது உங்கள் பிரியமான எதிரி வைரமுத்து சொல்வதுபோல நெருப்பில் போட்டெடுத்த நிஜம்.

சுமார் பத்தாண்டுகள் வைரமுத்து + இளையராஜா பாட்டுக்களால் இந்த வையம் தித்திக்கும் தேன் பூக்களால் மூச்சு முட்ட முட்ட நிறம்பிப் போனதை எவரும் மறந்திருக்க முடியுமா?

இளையராஜா இசை உலகில் ஒரு நீல வானம் என்றால் வைரமுத்து திரையிசைப் பாடல் உலகில் ஒரு செவ்வானம்.

களங்கள் வேறு என்றாலும் உயரம் சற்றும் குறைந்ததல்ல. இப்படியான பிள்ளைகளைக் கொண்ட தமிழன்னை உள்ளம் முழுவதும் பூரித்திருந்தாள். ஆனால் இயல் என்ற தமிழை தற்காலிகமாக நசுக்கிய இளையராஜா இசை என்ற தமிழால் அவள் கண்ணீர் மட்டுமே சிந்தினாள். இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இளையராஜாவின் தனிச்சிறப்பே அவர் தமிழிசையை வானுயர உயர்த்தினார் என்பதுதான். ஆனால் அதில் பெரும் கரும்புள்ளியாய் தமிழை அதல பாதாளத்த்துக்குத் தள்ளினார் என்பது எத்தனைப் பெரிய கலங்கம் இளையராஜாவுக்கு?

கனடாவின் மேடையிலும் வைரமுத்து இளையராஜா இணைந்த பாடல்களுள் ஒன்றுகூட பாடப்படவே இல்லை. பாடியிருந்தால், நான் புல்லரித்துப் போயிருப்பேன். அரங்கமே அழுது நிறைந்திருக்கும்.

இளையராஜா தன் நிகழ்ச்சியைத் தொடங்கும்போது இது பனிவிழும் மலர்வனம் என்றார். வெளியே பனி உள்ளே இசை வனம் என்று அழகாகச் சொன்னார்.

அது இளையராஜாவும் வைரமுத்து இணைந்திருந்ததால் வந்த அற்புதப் பாட்டு.

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்

சேலை மூடும் இளம் சோலை
மாலை சூடும் மண மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிர்விடும்
இளமையின் கனவில் விழியோரம் துளிர்விடும்

இப்படியே தேன் சொட்டச் சொட்ட வழிந்துகொண்டே போய்க்கொண்டிருக்கும் இந்தப் பாட்டு.

ஆனால் மேடையில் அந்தப் பாடலை இளையராஜா பாடவே இல்லை!

கண்ணதாசன் திரையிசைப் பாடல்களுக்குள் சந்தக் கவிதைகளையும் சங்கடமே தராத எளிய வார்த்தைகளையும் அற்புதமாய் வழங்கினார்.

வைரமுத்து புதுக்கவிதைகளை திரையிசைப் பாடல்களுக்குள் அப்படியே முறுகல் நெய் தோசைகளாக ஐவகை சட்னி சாம்பார் பொடிகளோடு அமர்க்களமாகத் தந்தார்.

வைரமுத்துவுக்குமுன் புதுக்கவிதைகளை பாடல்களில் பொத்தி வைத்த மல்லிகை மொட்டு வேறு யாராவது உண்டா? அந்தப் பாட்டுக்காரனுக்குத்தான் எத்தனை எத்தனை தேசிய விருதுகள். வேறு எவருக்கு அத்தனை தேசிய விருதுகள் திரைப்படப்பாடலுக்காக இந்த உலகில் கிடைத்தது? சிந்திக்க வேண்டாமா?

அவன் தமிழை அடித்து நொறுக்கி அழித்துப் போட்ட ராஜா ராஜாதானா? பட்டு ரோஜா ரோஜா இவர்தானா? எப்படி இருக்க முடியும் பட்டு ரோஜாவாய்?

வைமுத்து என்ற மனிதனை ராஜா மானசீகமாக வெறுக்கலாம், ஆனால் வைரமுத்துவின் இசைத்தமிழை எப்படி தமிழர்கள் கேட்கக்கூடாது என்று தடுக்கலாம்?

கண்டநாள் முதல் வைரமுத்துவைப் போற்றிப்பாடிய நீங்களே தூற்றிப்பாடுவது சரியா ராசய்யா?

உங்கள் இருவரின் இணைவில் வந்த கற்பூரப் பிறப்புகள் எத்தனை எத்தனை. அவை அனைத்தையும் தமிழர்களுக்கு இல்லாமல் செய்ய உங்களுக்கு என்ன உரிமை உண்டு இளையராஜா?

-அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
-பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு
-இளைய நிலா பொழிகிறது இதயம் வரை
-இது ஒரு பொன் மாலைப் பொழுது
-கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
-சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை
-சூரியன் வழுக்கிச் சேற்றில் விழுந்ததது சாமி
-என்விதி அப்போதே தெரிந்திருந்தாலே கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே?

என்று எத்தனை எத்தனை மகுடங்கள்? அத்தனை மகுடங்களையும் தமிழன்னையின் தலையிலிருந்து கழற்றி எறிய உங்களுக்கு உரிமை தந்தது யார்?

எங்கள் கண்களெல்லாம் உங்கள் இசைகேட்டுக் கசியாத நாளுண்டா? ஆனால் தமிழைத் தள்ளிவைத்து தவறு செய்தது மட்டுமல்லாமல் இன்றுவரை அதே பிடிவாதத்தில் இருக்கிறீர்களே இளையராஜா. இது தகுமா?

தமிழைவிட உங்களுக்கு உங்கள் வரட்டுக் கௌரவம்தான் பெரிதாகிவிட்டதா?

எந்த மேடையிலும் உங்களைத் தரக்குறைவாகப் பேசுவதில்லை வைரமுத்து. ஆனால் நீங்கள்? கிடைக்கும் மேடைகளை எல்லாம் அவரைத் தூற்றவே பயன்ப்டுத்துகிறீர்களே? என்றால் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்றுதானே அர்த்தம்?

இளையராஜா மறக்காமல் மலேசியா வாசுதேவன் அவர்களை நினைவு கூர்ந்து பேசியதைக் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தது. மலேசியா வாசுதேவன் பாடிய ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே அதேபோல அழகாகப் பாடப்பட்டது.

ஜெயச்சந்திரன் பாடிய...

மாஞ்சோலைக் கிளிதானோ
மான் தானோ மீன் தானோ
வேப்பந் தோப்புக் கிளி நீ தானோ?

என்ற பாடலை ஹரிஹரனை வைத்துப் பாடவைத்தார் இளையராஜா. அத்தனை அற்புதமாய் இருந்தது அது. ஹரிஹரன் குரலிலும் பாவத்திலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது தனக்கு வேறு வகையில் இந்தப் பாடலை அமைக்கத் தோன்றுவதாக இளையராஜா விரும்புவதாக பார்த்திபன் சொன்னார்.

அடுத்து எனக்குப் பிடித்தபாடலாய் வந்தது ”நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று சொன்னாத் தெரியுமா?” இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதே இல்லை எனக்கு.

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ என்ற பாடலை எஸ்பிபி பாடினார். பாடல் முடிந்ததும் சுவையான இசை விருந்து ஒன்று நிகழ்ந்தது.

கரகாட்டக் காரன் படத்தில் வரும் “மாங்குயிலே பூங்குயிலே” என்ற மெட்டில் அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் பாடல் வரிகளைப் பாடிக்காட்டினார் இளையராஜா. அரங்கு அப்படியே கைத்தட்டல்களால் சூடானது. அப்படியே ராத்திரியில் பூத்திருக்கும் மெட்டில் மாங்குயிலே பாட்டு வரிகளையும் பாடிக்காட்டினார்.

”தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே” என்ற உருக்கமானப் பாடலையும் பாடிவிட்டு, அண்ணே நீங்க எப்படி “நிலா அது வானத்துமேலே” என்றும் பாடினீங்க என்று விவேக் கேட்டார். அதற்கு இளையராஜா ஒரு சுவாரசியமான தகவலைச் சொன்னார்.

உண்மையில் மணிரத்தினம் நாயகனில் கேட்ட சூழலுக்கு “தென்பாண்டிச் சீமையிலே” மெட்டையும் ”நிலா அது வானத்து மேலே” என்ற மெட்டையும் போட்டுக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஒன்றை எடுத்துக்கொண்டு, அதோடு நில்லாமல் இரண்டாவது மெட்டையும் தனக்கே வேண்டும் என்றும் அதைக் கொஞ்சம் மாற்றி உஜாலாவாகப் பாடுவதுமாதிரி மாத்திக்கொடுங்கள் என்றும் கேட்டாராம்.

நிலா அது வானத்து மேலே என்ற பாடலை தென்பாண்டிச் சீமையிலே பாடல் போன்ற ஓர் உருக்கமான மெட்டில் மிக அழகாகப் பாடிக்காட்டி ஏராளமான கைத்தட்டல்களைத் தட்டிக்கொண்டுபோனார் இளையராஜா. இப்படியே இசையின் நெளிவு சுழிவுகளைப் பேசப் பேச நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன். அதனால்தான் அப்படியான நிமிடங்களையே எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

மற்ற இசையமைப்பாளர்கள் செய்வதுபோலெல்லாம் நடனங்களோடு பாடல் என்றெல்லாம் இளையராஜா செய்யவில்லை. நிகழ்ச்சி முழுவதும் இசை இசை இசை மட்டுமே என்று அழகாகவும் எளிமையாகவும் செய்திருந்தார். நிச்சயம் அது பாராட்டுக்குரிய ஒன்று.

பார்த்திபன் பாதியில் விடைபெற்றதும் விவேக் வந்தார். வரும்போதே அரங்கம் சிரிப்பால் கடகடத்துப் போனது. உனனே பார்த்திபன் அவரை புதுமாதிரியாக அறிமுகம் செய்யத் தொடங்கினார். நிகழ்ச்சியின் உச்ச நிலைக் கைத்தட்டல்களில் அதுவும் ஒன்று.

விவேக் இளையராஜாவின் மிகப்பெரிய ரசிகர். இளையராஜா பாட்டைக் கேட்டுக் கேட்டு இளையராஜா பாட்டாகவே ஆகிப்போனார் விவேக். அதைக் கொஞ்சம் சோதித்துப் பார்க்கலாமா என்றார் பார்த்திபன். விவேக் சரியென்று சொல்லி நேராக நின்றார்.

விவேக்கின் தலையில் பார்த்திபன் தன் கையை வைத்தார். உடனே தலை தொடர்பான ஒரு இளையராஜா பாட்டு வந்தது விவேக்கிடமிருந்து. கைத்தல்கள் அரங்கைப் பிளந்தன. பின் நெற்றியைத் தொட்டார். நெற்றி தொடர்பான இன்னொரு பாட்டு. மீண்டும் கைத்தட்டல்கள். பின் மூக்கைத் தொட்டார்.... அதற்கொரு பாட்டு. ஆ ஆ வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன் என்ற மூக்கால் பாடும் பாட்டு. கைத்தட்டல். பிறகு இடுப்பைத் தொட்டார்..... அவ்வளவுதான் ஹாங்ங்ங்ங்ங்ங்ங்ங்.... நிலாக்காயுது நேரம் நல்ல நேரம்.... என்று வெகு கவர்ச்சியாகப் பாடினார். சொல்ல வேண்டுமா?

அப்போது தொடங்கியதுதான் சிரிப்பலைகள். விவேக் அசராமல் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். நிச்சயமாக விவேக் இளையராஜாவின் இசை நிகழ்ச்சிக்கு மிகுந்த வலிமைதான்.

நீ ஒரு காமெடியன் நீ எதை வேண்டுமானாலும் காமெடி பண்ணு என்னை வெச்சிமட்டும் காமெடி பண்ணாதே என்று இளையராஜா ஒரு முறை சிரித்துக்கொண்டே ஆனால் சீரியசாகச் சொன்னார்.

பாத்தீங்களா, அண்ணன் ரொம்ப ஸ்ட்ரிக்டு...... ஸ்ட்ரிக்டு..... ஸ்ட்ரிக்டு..... என்று சொல்லி அதையும் காமெடி ஆக்கினார் விவேக்.

விவேக் விடைபெற்றதும் பிரசன்னா வந்தார். அவர் மைக்கைக் கையில் எடுத்து ஏதோ கிசுகிசுத்தார். ஒருவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. மைக்கை பக்கத்துல வெச்சிக்கங்க என்று பார்த்திபன் சொன்னார். மீண்டும் பாதாளத்திலிருந்துதான் குரல் வந்தது. பிரசன்னாவுக்கு மேடை அனுபவமே இல்லை என்று புரிந்துகொண்டேன். மைக்கைக் கையில் வாங்கினால் அரங்கத்தை அதிரடிக்க வேண்டாமா?

அப்படியே முக்கலும் முணகலுமாய் இதோ என் மனைவி சினெகா வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் இளையராஜாவின் ரசிகர்கள். எங்கள் காதலுக்கும் கல்யாணத்துக்கும் காரணம் இளையராஜாதான் என்றார். அவர் பாடல்களைப் பாடித்தான் நாங்கள் காதலித்தோம் கைப்பிடித்தோம் வாழ்கிறோம் என்று புகழ்ந்தார்.

ஆனால் இளையராஜா இதற்குச் சட்டெனக் குறுக்கிட்டார். நீங்க பண்ற கூத்தையெல்லாம் என் தலையில் போடாதீர்கள். நான் ஏதோ என் இசைப்பயணத்தில் இருக்கிறேன். அந்தப் பாடல்களை நீங்கள் கேட்டு காதல் வயப்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என்றார்.

ஆனால் அடுத்த பாட்டு ஆரம்பிக்கும்போது பிரசன்னா இளையராஜாவுக்கு ஒரு பதிலோடு வந்தார். ”இந்தக் கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு” என்று நீங்க தானே சார் பாடினீங்க அதனால்தான் நாங்க காதலிச்சோம் என்றார்.

மேடையில் சினேகா தோன்றினார். பிரசன்னா சினேகா இருவரின் ஆடையலங்காரம் மிக மிகக் கவர்ச்சிகரமாக இருந்தது. மேடைக்கே அது ஒரு புது வர்ணம் பூசியது. ஹலோ டொராண்டோ என்று சினேகா கணீர் என்று முழங்கினார்.

கடைசியாக இளையராஜா, வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்காக என்று ஒரு பாடலின் வார்த்தைகளை மாற்றிப் பாடினார். ஆனால் ஈழத் தமிழர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவர்களுக்காக ஒரு பாடலை உருவாக்கிக்கொண்டு வரவில்லை. அந்த ஈழ ஏக்கக் கண்களுக்கு எந்த ஒரு போலிக் கனவைக்கூட பரிசளிக்கவில்லை. அவர்மட்டும் அல்ல நீயா நானா கோபியோ, பார்த்திபனோ, விவேக்கோ, கார்த்திக் ராஜாவோ, யுவன் சங்கர் ராஜாவோ எவருமே ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அது ஏன் என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

அப்படியே ஒருவழியா இளையராஜாவின் வடை பாயச இசை விருந்து முடிந்துபோனது. நான் பனியில் நனைய என்னைத் தயார்ப் படுத்திக்கொண்டேன். அந்த ஊசிக் குளிரில் கொட்டும் பனியில் மக்கள் இறங்கி நடந்து விடைபெற்றார்கள். ஒரு ஆறுதல் வார்த்தை தந்திருக்கலாம்தான் வேறு எதைச் செய்துவிட முடியும் உங்களால் என்று மீண்டும் எனக்குத் தோன்றியதைத் தடுக்க முடியவில்லை.

நிகழ்ச்சிக்குச் செல்லும்போது எனக்கு அதிக அளவில் எதிர்ப்பார்ப்புகள் இருந்தன. நான் இன்னும் ஆழத்துக்குப் போகலாம் என்ற கனவுகளோடுதான் சென்றேன். என் எதிர்பார்ப்புகளில் தவறிருந்ததாக நான் இப்போதும் நினைக்கவில்லை. எனக்கான இசைத் தீனி போதவில்லை என்று எனக்குப்பட்டது.

இளையராஜா என்னை ஆட்டிப்படைத்த இசைஞானி. இன்று அவரைத் தேடித் தேடிப் பார்க்க வேண்டிய நிலை.

என்ன காரணம் என்று மீண்டும் யோசித்துக்கொண்டே வீடுவந்து சேர்ந்தேன்.

(நிறைந்தது - உள்ளமல்ல நிகழ்ச்சி வர்ணனை)

17 comments:

Massy spl France. said...

புகாரி, தமிழில் ரொம்ப நல்லா எழுதுறீங்க. படிக்க ஆரம்பித்தால் நிறுத்த மனம் வரலைய்யா. உங்க நடை வேகமா போகுது. வாழ்த்துக்கள். நேரடி வர்ணனை போலுள்ளது உங்கள் பதிவு.

நிற்க.

பொதுவாக திறமை அளவுக்கு அதிகமா உள்ளவர்களிடம் திமிரும் மண்டை கனமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இது ஒரு ஊனம் என நான் கருத மாட்டேன். இம்மாபெரும் இசை ஞானியின் திறமைகளுக்கும் படைப்புகளுக்காகவும் அதை மன்னித்துவிடலாம்.

நல்ல பதிவை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.புகாரி.

Anonymous said...

இளையராசாவின் முகாமைச் சேர்ந்தோர்- அதாவது பெரியாரிய, தமிழ் ஆர்வலர் அல்லாத வலதுசாரிகள் - ஈழத்துக்கு எதிராக அவருக்கு நிறையவே ஓதியிருக்கின்றனர். ஜெயகாந்தன் போன்றோர் இதில் முதலோர்.... வாக்னர் போன்ற இசைவல்லுநர்கள் கூட யூத எதிர்ப்பைக் கக்கியிருக்கின்றனர் என்கிறது வரலாறு. அகங்காரமும், மமதையும், அரசியல் விழிப்புணர்ச்சி பெற இயலாது, வறட்டுப் பிடிவாதத்துடன் அழுந்திக் கிடக்க வைக்கிறது இந்த மேதைகளை. இளையராசா இரு தசாப்தங்கள் தமிழ்நிலத்தைக் கட்டியாண்டவர். அவர் இசை கேட்டுத் தான் இரு தலைமுறை வளர்ந்துள்ளது. அவர்கள் இளமைப் பருவத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வது அந்த இசையைத்தான். இப்படிப் பட்டவர் தன் ஆணவக் குணத்தை மேடைகளில் காட்டிப் பலரையும் முகஞ்சுழிக்க வைத்தேவருகிறார். பலருக்கு வித்யாகருவம் உள்ளது. அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் உறுத்தாது இருக்கும், ஆனால் இளையராசா போன்றோருக்கு இதை செறுக்கு தலைக்கேறியதனத்துடன் மட்டுமே வெளிப்படுத்தத் தெரிந்திருக்கிறது சோகம்!

ஜீவன் சுப்பு said...

மிக ரசனையான வர்ணனைங்க . ஒரு இசை பதிவே ஒரு இசை கோர்வை போல அழகாக இருந்தது. இளையராஜாவின் இசைக்கு நிறையா ரசிகர்கள் உண்டு . ஆனால் இளையராஜா என்ற மனிதற்கு ....

Ash M said...

ராசய்யாவின் நிகழ்ச்சியிலே நெஞ்சு நெகிழ்ந்ததோ இல்லையோ,..... ஏய் புகாரி.....உன் வார்த்தைகளை வாசித்தபிறகு, பட்டணத்து புஹாரி ஓட்டலின் ஒரு மட்டன் பிரியாணி பொட்டலத்தை பிரித்து மேய்ந்தது போன்ற நிறைவு நிச்சயம் இருக்குது .

Dr Nadesan Australia said...

Very good article

Thank u for sending

தங்கராசா சிவபாலு said...

நல்லது புகாரி

கவிதை வரிகள் இல்லாது வெறும் இசையை யார் ரசிபார் இளையராசா வரிகளை விட்டுவிட்டுட்டுக் காட்டட்டும் தனது வித்தையைப் பார்ப்போம் அப்படியென்றால் அவருக்கு அடிமை யாரையா பொருளற்ற இசையை ரசிப்பார்கள்? இது தெரியாத ஒரு அடிமுட்டாளாய் இருக்கிறாரே

Ragu Sundararaj said...

Anbar Buharikku,

I cannot type in tamil, however your discussion on Vairamuthu and Ilayaraja is thought provoking.

Yes they both helped each other to grow and if they are like north and south poles, it is only a misfortune to both of them and Tamilnadu.

We could not attend the funtion, however you provided a detailed commentary. We tried to get some tickets in the last day, however we failed.

Hope you are all doing fine.

Regards,

Ragu
(179 Staines Road, Toronto)

Nivetitha Thirukanasan said...

என்னுடனும் பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிகள் புகாரி uncle... இசை நிகழ்விற்கு நான் செல்லவில்லை.மிகுந்த ஆவலாக சென்றிருந்த என் நட்புக்கள், உறவுகள்(இளையராஜாவின் விசிறிகள்) மிகவும் மனம் உடைந்தே போனார்கள்... அவரின் வறட்டுக்கௌரவமும், உதாசீனப்போக்கும் அவரின் தரத்தையே கீழ் இறக்கி விட்டதென்றால் மாற்றுக்கருத்து இல்லை.

உங்கள் பதிவிற்கு மீண்டும் நன்றிகள்....

Regards,
Nive.T

மீனா முத்து மலேசியா said...

(நிறைந்தது - உள்ளமல்ல நிகழ்ச்சி வர்ணனை)

நிறைந்தது உள்ளம்!நிறை குறைகளை இதமாக சொல்லிய விதத்தால்!

நன்றி.

அன்புடன் புகாரி said...

Dear Anbudan Buhari,

Your blog is one of the best and it narrates exactly the way it happened at the Roger’s center. One hand you support Ilayaraja music on the other hand you take dig at him where ever it requires by siding with poets. I did notice some negativity with Ilayaraj ever since AR Rahman won Oscar. He kept talking about he doesn’t care about awards and copying whereas his son Yuvan does the same but his face is full of smile. I can’t digest this double standard from him. If he doesn’t need any award why can’t give back all the awards he got for his achievements. I do sense jealous and copying okay if it is by his son.



He is legend and I like his music as I grow up listening his music but I am not going to respect him for his double standard. BTW I will circulate your blog to all TNCSC family. Thank you again for contributing to our community. You are the best

Thanks

Bala - President, Tamilnadu Cultural Soceity of Canada


Siva Pillai London said...

நன்றி புகாரி
வணக்கம்
கவிப்பேரரசுவை கடந்த சென்னை ஆசிரிய மாநாடு பயணத்திற்கு சென்றி போது சந்தித்தேன்
இளையராஜா ஏன் இகோவுடன் இருக்கிறாரோ தெரியாது
தகவலுக்கு நன்றி

Anonymous said...

Best analytical commentary I seen in years. You are awesome. best part of the commentary I like is the way you present his negative character in a way everyone can understand and accept.

Nathan

உசிலை விஜ‌ய‌ன் said...


இளையராஜா பண ஆசை பிடித்தவரா?

இங்கே அமேரிக்கா நியூ ஜெர்சியில் இளையராஜா இசை நிகழ்ச்சியை ஏற்படு செய்திருந்ததது ஒரு தெலுங்கு இணைத்தள தொலைகாட்சி நிறுவனமாகும். டிக்கட் விலையோ மிக அதிகம் 80$ லிருந்து 300$ வரை. வேறு வழியில்லை. கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களையும் கவரவேண்டிய சூழ்நிலை. (அடுத்து கலிபோர்னியாவில் விலைகளை பாதியாக குறைத்துவிட்டனர்)

நிகழ்ச்சி என்னமோமிக நன்றாகதானிருந்த்தது 5 மணிகள் 5 நொடித்துளிகளென பறந்துவிட்டது. ஆனால் மிகவும் காசு செலவழித்த தெலுங்கு ரசிகர்கள் ஏமாந்து போய்விட்டனர். மிகவும் சொற்பமான தெலுங்கு பாடல்களே பாடப்பட்டன. எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் மனோவும் நிலமையறிந்த்து ஒருசில தெலுங்கு பாடல் களை பாட ஆரம்பித்தாலும் இளைய ராஜா தமிழுக்கே இழுத்தார்.
தெலுங்கு ரசிகர்கள் பொறுமையிழந்து காத்த ஆரம்ப்பித்தனர் உடனே இளையராஜா கோபமாக என் இப்படி சத்தம் போடுகிறீர்கள். உங்களுக்காக கஷ்ட்டப்பட்டு பயிற்ச்சி செய்து வந்திருக்கின்றோம். இதுக்கு நான் வரணுமா? இதுதான் வெளிநாட்டில் நீங்கள் கற்ற நாகரீகமா என்று கத்தி விட்டார்.

இளைய ராஜா தமிழ் சங்க காரர்கள் அழைத்தால் வரமாட்டார் போல இருக்கு, தெலுங்குக்காரர்கள் அதிக ரூபாய் கொடுத்தால் மட்டுமே வருவார் போல.

மறுநாள் விருந்தில் இளையராஜாவை யாரும் நெருங்க முடியவில்லை. அவர் அருகில் நின்று ஒரு போட்டா எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த ரசிகர்களின் ஆசை நிராசையானது.

பாவம் நியூ ஜெர்சி தமிழ் சங்க காரர்கள் ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சங்கம் சார்பாக அவருக்கு எதோ கொடுக்கணும்ன்னு பிரயாசைப்பட்டார்கள் கடைசிவரை முடியவேயில்லை.

நமது கிராமத்து மண்ணில் பிறந்தது வளர்ந்தது எங்கோ உயரத்தில் சென்றுவிட்டார். கைக்கு எட்டுவாரா என்று பார்ப்பது தப்புதான். அனாலும் இப்படி ஒரு பாராமுகம் தேவையா என்றுமனம் வருத்தம் கொள்ளத்தான் செய்கிறது.

வேறுவழியில்லை அத்துணை திறமை இருக்கின்றது அவரிடம், சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.



விஷால் said...

இதைப் படிக்கவும்.

http://kaarigan-vaarththaiviruppam.blogspot.in/2013/08/x.html

சரியாக எழுதியிருக்கிறார்.

அன்புடன் புகாரி said...

ஆம் விஷால், நன்றாக எழுதி இருக்கிறார்

Rajan said...

வைரமுத்து வாய்க்கு வாய் புகழும் கருணாநிதி தானே தமிழர் சாக பார்த்துக்கொண்டிருந்தவர்.
இளையராஜா இசையின் அதிசயம்.அவர் வைரமுத்துவுக்கு முன்பே தனது சாதனையை செய்துகாட்டியவர்.
நமக்கு அவரது இசைதான் முக்கியம்.அவரது இசைக்கு யார் பாடல் எழுதினாலும் இசை நன்றாக தான் இருக்கும்,
அவரின் தமிளை ரகுமானின் இசையில் வடித்துக் கொட்டிக் கொண்டுதானே இருக்கிறார்.
அவர் தான் இவரை வேண்டாம் என்றால் விட வேண்டியது தானே தம்பி.

Anonymous said...

அருமையான பதிவு...