#தமிழ்முஸ்லிம்
தொப்பி - குல்லா - முண்டாசு - தலைப்பாகை - தலைத்துணி - ஒட்டகக்கயிறு
முதலில் மனிதர்கள் ஏன் தொப்பி அணிகிறார்கள் என்று பார்க்கலாம்.
தலையை நேரடி சூரியத் தாக்குதலில் இருந்து காக்காவிட்டால், அப்படியே மயங்கிவிழ நேரிடும், பைத்தியம் பிடிக்க வாய்ப்புண்டு, ஏன் சாவுகூட நிகழக்கூடும்.
ஆனால் இந்த தேவை கருதிய இயற்கைக் காரணம் தாண்டி மக்கள் தொப்பியை வேறு சில காரணங்களுக்காகவும் அணிகிறார்கள்.
தன்னை அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலர் அணிகிறார்கள். எம்ஜிஆர் அப்படித்தான் அணிந்தார். பட்டிணப் பெண்கள் தங்களை அழுகுபடுத்திக்கொள்ள அணிகிறார்கள்.
முடிசூடும் ராஜவம்சங்கள் அழிந்தாலும் அப்படி ஒரு கௌரவம் தரும் என்ற நினைப்பில் சிலர் தொப்பி அணிகிறார்கள் முடிசூடிக் கொள்வதைப் போல.
சிலருக்கு இது ஒரு சமூக அல்லது தங்கள் கொள்கையின் அங்கீகாரமாக இருக்கிறது. நேத்தாஜி, நேரு போன்றவர்களை இந்த வகையில் சேர்க்கலாம்.
மதம் சார்ந்த அடையாளமாக சிலர் அணிகிறார்கள். முஸ்லிம்கள், சர்தார்ஜிகள் போன்றவர்களை இந்த வகையில் சேர்த்துக்கொள்ளலாம்.
ராணுவத்தில் தேசப்பற்றின் அடையாளமாகத் தொப்பி அணிகிறார்கள்.
அப்புறம் இந்த சுதந்திரப் போராட்டக்காரர்கள் அவர்களுக்கான ஓர் அடையாளமாக அணிந்தார்கள். இன்றும் அதை ஒரு பண்பின் அடையாளமாக ஆக்கி அரசியல்வாதிகள் சிலர் அணிகிறார்கள். இது போன்று அணிபவர்கள் வட இந்தியாவில்தான் அதிகம்.
இந்தத் தலைப்பாகை என்பதையும் நாம் தொப்பி என்றுதான் கொள்ளவேண்டும். ஒரு தொப்பியை உருவாக்க அறியாத காலத்தில் தோளில் உள்ள துண்டையே தலையில் கட்டிக்கொள்வார்கள், வெயிலுக்காகவும் வசதிக்காகவும்.
பின் தலைப்பாகை கட்டுவது என்பது உயர்ந்தவர் என்ற அடையாளமாகவும் பாரம்பரிய வழக்கமாகவும் சில சாதிகளின் அடையாளமாகவும் இருக்கிறது.
போலீஸ்காரர் தொப்பி அணிந்து தங்களை அடையாளப் படுத்திக்கொள்வார்கள். பதிவிக்கு ஏற்ப தொப்பிகள் மாறும்.
இப்படியே தொப்பிகளைப் பற்றி ஆராயப்போனால், ஏகப்பட்ட விசயங்கள் வந்துகொண்டே இருக்கும்.
தொப்பிகளில் எத்தனை வகை தொப்பி என்று கணக்கெடுக்கத் தொடங்கினாலும் அது சீக்கிரத்தில் முடிவதாய் இருக்காது.
ஆனால் அன்று அராபியர்கள் தேவை கருதியே தொப்பி அணிந்தார்கள்.
பாலைவனத்தில் இரண்டு பெரும் தொல்லைகள் இருக்கும்.
ஒன்று சூரியன் தலைக்கு மேல் ஏறி நடு உச்சியில் உட்கார்ந்துகொண்டு கடப்பாறை சுத்தியல்களால் மண்டையைப் பிளக்கும்.
அடுத்தது அங்கே வீசும் கொடு மணற் புயல்.
இந்த இரண்டையுமே தாங்க முடியாது. சூரியன் சுட்டெருக்கும் என்றால் இந்த மணற்புயல் கடுமையான மூச்சுத் திணறலில் கொண்டுபோய் விட்டுவிடும்.
கண்களிலும் காதுகளிலும் வாயிலும் மண்ணள்ளிக் கொட்டிக்கொண்டே இருந்தால் எப்படித் தாங்கிக்கொள்வது?
இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்க, அராபியர்கள் ஒரு தொப்பியும் ஒரு மேல்துண்டும் வைத்திருப்பார்கள். கூடவே ஒட்டகங்களைக் கட்டுவதற்கான, அல்லது மேய்ப்பதற்கான ஒரு கயிறும் வைத்திருப்பார்கள்.
இந்த தொப்பி துண்டு கயிறு ஆகிய மூன்றையும் தலையில் வசதியாகக் கட்டிக்கொள்வார்கள். இதனால் சூரியனையும் மணற்புயலையும் அவரால் சமாளிக்க முடிந்தது.
இதையே சில முஸ்லிம்கள் கண்மூடித்தனமாகப் பிடித்துக்கொண்டு, பாலைவனம் இல்லாத சோலைவனத்தில் வாழும்போதும் இஸ்லாத்தில் கட்டாயம் தொப்பி அணியவேண்டும் இல்லாவிட்டால் நாம் முஸ்லிம் இல்லை என்று மூட நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
அராபியர்களுள் ஆண்களும் சரி பெண்களும் சரி தலையில் துணி கட்டி இருப்பார்கள். இல்லாமல் மணல் புயலையும் வெயிலையும் சமாளிக்கவே முடியாது அல்லவா?
மணற்புயல் வீசும்போது, தலைத்துணியைச் சுற்றிச் சுற்றிக் கட்டி கண்மட்டுமே தெரியும்படி அமைத்துக்கொள்வார்கள். ஏன் என்று காரணம் சொல்லி இனியும் விளக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
ஆனால், இதுவே முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் ஆனது, முஸ்லிம் ஆண்களுக்குத் தொப்பி ஆனது.
ஹிஜாப் என்றால் முக்காடு போட்டுக்கொள்ளும் தனியான ஒரு தலைத்துணி.
கனடாவில் பல முஸ்லிம் பெண்கள் ஜீன்ஸ் போட்டிருப்பார்கள், டிசர்ட் போட்டிருப்பார்கள், ஆனால் தலையில் மட்டும் ஒரு துணியால் முக்காடு போட்டிருப்பார்கள். முகம் மூடப்பட்டிருக்காது, திறந்துதான் இருக்கும்.
அதாவது, தலையின் ”முடியை” மட்டும் மறைத்து வைத்திருப்பார்கள்.
ஏன் தலையின் முடியை மட்டும் மறைக்க வேண்டும்?
முடிதான் ஒரு பெண்ணின் உடலில் மிகவும் கவர்ச்சியான பகுதியா? இந்தக் கேள்விக்கு அவர்களுக்கு விடை தெரியாது.
பிறகு ஏன் அணிகிறார்கள் என்றால், ஒரு பயம்தான். மதம் சார்ந்த பெரியோர்கள், நீயெல்லாம் ஒரு முஸ்லிம் பெண்ணா என்று கேவலமாகப்
பேசுவார்களே என்ற பயம்தான்.
வேறு சிலருக்கு அப்போதுதான் தான் ஒரு முஸ்லிம் என்று அடையாளப்படுத்தப்படுவோம் என்றும் நினைக்கிறார்கள்.
இந்தத் தலைத்துணி முஸ்லிம் ஆண்கள், பெண்களிம் மீதான அவநம்பிக்கை காரணமாக, தன் பாதுகாப்பின்மை கருதி பெண்களிம் மீது சுமத்திய ஒரு காரியம் என்பதை சற்றே சிந்தித்தால் புரியும்.
ஆகவே அராபியர்கள் தங்களின் பாலைவன ஒட்டக வாழ்க்கை காரணமாக அணிந்த தொப்பி தலைத்துணி ஒட்டகக் கயிறு ஆகியவற்றை இந்த நவீன காலத்திலும் முஸ்லிம்கள் அணிவது அறியாமை மட்டுமே.
மற்றபடி இஸ்லாத்தில் இதெல்லாம் கிடையாது.
காம உணர்வுகளைத் தூண்டும் அங்கங்களை பெண்கள் மறைத்துக் கொள்ளும்படியே குர்-ஆன் பரிந்துரைக்கிறது. ஆணும் சரி பெண்ணும் சரி வெறித்து நோக்குவதை விடுத்து காம உணர்வுகளைத் தூண்டும் வகையிலான தருணங்களில் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக்கொண்டு கண்ணியமாக நடந்து கொள்ளுதல் வேண்டும் என்றே சொல்கிறது. மற்றபடி ஆடைகளால் தங்களை அழகு படுத்திக் கொள்வதை குர்-ஆன் வரவேற்கவே செய்கிறது.
இந்த உலகை அனுபவித்து வாழ்வதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்கவே இல்லை.
முன்பெல்லாம் தமிழ்முஸ்லிம்கள் தொப்பி அணியாமல் பள்ளிவாசலுக்கு வரவே மாட்டார்கள்.
தொப்பி அணியாமல் இறைவனிடம் எதையும் வேண்டிக்கொள்ள மாட்டார்கள்.
தொப்பி அணியாமல் திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள்.
தொப்பி அணியாமல் தொழ மாட்டார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அது மாறிவிட்டது. வகாபியம் அதைப் பெரிதாய் வலியுறுத்தவில்லை என்றதும், சவுதி அதை பெரிதாய்ப் பார்க்கவில்லை என்றதும், தமிழ் முஸ்லிம்களும் தொப்பியைச் சற்றே கழற்றிவைத்துவிட்டார்கள்.
தொப்பியில்லாத தலைகள் இன்றெல்லாம் தமிழ் நாட்டின் பள்ளிகளில் நிறையவே தொழுதுகொண்டு நிற்கின்றன.
இப்படி சவுதிக்காரர்களைப் பார்த்தே தங்களின் ஒவ்வொன்றையும் ஏற்பதும் துறப்பதுமே உண்மையான முஸ்லிமின் சிறந்த செயல் என்று நினைக்கும் முஸ்லிம்கள், நிச்சயமாக குர்-ஆனை நிராகரிக்கிறார்கள் என்றே சொல்வேன்.
நல்ல வேளையாக ஒட்டகக் கயிறையும் தலையில் கட்டுவேன் என்று எந்த தமிழ் முஸ்லிமும் நிற்கவில்லை. அரபுக்காரன் ஒட்டகக் கயிறு கட்டினான் என்றால் அவன் ஒட்டகம் மேய்த்தான் என்பதை புரிந்துகொண்டுதான் கட்டாமல் இருந்திருப்பார்கள் என்று நம்புவோமாக.
எந்த ஐயம் வந்தாலும் ஒரு முஸ்லிம் அனுகவேண்டியது ஐயங்களே அற்ற ”ஆதண்டிகேட்டட்” - ஏற்புடைய என்று சொல்லத் தேவைப்படாத குர்-ஆன் மட்டுமே அன்றி வேறு எதுவும் அல்ல என்பதை முழுதாய் உணரும் காலம் ஒன்று நிச்சயம் வரும் என்று நம்புவோமாக.
தொப்பி இடுவதும் இடாததும் அன்றைய சீதோஷ்ண தேவையைப் பொறுத்தது.
குடை ஏன் வேண்டும்?