*சொர்க்கத்தில் அரபியில்தான் உரையாடுவார்கள்*

இன்று என் தமிழ்முஸ்லிம் நண்பர்களுள் ஒருவர்  என்னைச் சந்தித்தார். நான் இன்னாலில்லாஹி என்று தொடங்கும்  சொற்றொடரை முகநூலில் தமிழில் எழுதலாமே என்று சொன்னதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது மட்டுமல்ல வருத்தமும் கூட ஏற்பட்டிருக்கிறது. அதை அரபியில் சொல்வதுதான் சரி என்று வாதிட்டார்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? இப்போது நாம் இருவரும் தமிழில்தானே உரையாடுகிறோம். நாம் தமிழர்கள் அல்லவா? நம் தாய்மொழி தமிழல்லவா? நமக்கு அரபியில் பேசவும் தெரியாதே என்றேன்.

அவ்வளவுதான், திடீர் என்று சற்றும் எதிர்பாராத வண்ணம் ஓர் அதிர்ச்சியான கருத்தை முன்வைத்தார்.

சொர்க்கத்தில் அரபியில்தான் உரையாடுவார்கள் என்பதுதான் அது.

நான் மூர்ச்சையாகி விழாத குறை. அவருடன் எப்படி தொடர்ந்து உரையாடுவது என்று தெரியாமல் மெல்ல விளக்கம் சொல்ல முயன்றேன்.

*அரபு மொழி உலகின் வேறு எந்த மொழிகளையும் விட மேன்மையானதென்றில்லை.*

*அரபுக் கலாச்சாரம் உலகின் வேறு எந்த கலாச்சாரத்தையும்விட மேன்மையானதென்றில்லை.*

*அராபியர்கள் மற்ற எந்த இனத்தையும்விட மேலானவர்கள் என்றில்லை.*

இது இஸ்லாத்தில் அழுத்தமாகக் கூறப்பட்ட செய்தி. அப்படிச் சொன்னால்தான் இஸ்லாம் சகோதரத்துவத்தைப் போற்றுகிறது என்றும் பொருள் என்றெல்லாம் சொன்னேன். அவரோ, அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

மரணத்திற்குப் பின் வரும் மறுமை நாளில் இறைவனின்முன் உங்கள் நா அசையும். எந்த மொழியில் அசையும் தெரியுமா? அரபி மொழியில்தான் அசையும் என்றார்.

அது எனக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துத் தூக்கிவாரிப் போட்டது.

சொர்க்கத்திலும் இதே நாக்கோடும், இதே கைகால்களோடும் இதே உடலோடும்தான் செல்கிறோமா என்று கேட்டுவைத்தேன்.

குழம்பியதுபோல் முதலில் முகபாவம் காட்டினார், பின்னர் சுதாரித்துக்கொண்டு தன் பிடியை விடாமல், அடித்துக் கூறினார் ஆம் ஆம் என்று.

என்றால், விபத்தில் சுக்கு நூறாய்ச் சிதைந்தவனின் நிலை சொர்க்கத்தில் என்ன? அவன் நாக்குக்கு எங்கே போவான்? குண்டுவைத்துச் சிதறடிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

ரூஹு என்று அழைக்கப்படும் ஆத்மா இறைவனிடம் செல்லவில்லையா? இந்த உடல்தான் செல்கிறதா? என்றெல்லாம் வெறுமனே கேட்டுவைத்தேன்.

பிறகுதான் தெரிந்தது, அவருக்கு நான் கொஞ்சம் அவகாசம் தரவேண்டும். அவர் தானே அமர்ந்து சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறகு உரையாடினால் இன்னும் கொஞ்சம் தெளிவாக உரையாடிப் புரியவைக்க முடியும் என்று.  எனவே அவரிடமிருந்து விடைபெற்றேன் பிறகு உரையாடலாம் என்று.

இவர் சொல்வது சரியென்றால், நானெல்லாம் சொர்க்கத்திற்குப் போய் மொழி தெரியாமல் அல்லாடப் போகிறேனே என்ற கவலை சட்டெனப் பற்றிக்கொண்டது. நரகத்தில் இறைவன் இருப்பானா? அவனோடு நான் தமிழில் உரையாடமுடியுமா என்ற அடுத்த சிந்தனையும் எழ ஆரம்பித்துவிட்டது. ஹா ஹா ஹா….

இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள் கிடையாது. ஆனால் சில இஸ்லாமியர்களிடம் நிறையவே இருக்கிறது என்பதுதான் உண்மை.

குறிப்பாக இந்தியர்களான நமக்கு தேவ பாஷை என்று சொல்லப்பட்டும் கருத்தின் அதீத தாக்கம் இருக்கிறதோ என்றுதான் தோன்றியது.

ஆக, இஸ்லாமியனின் சொர்க்கத்தில் அரபுமொழி. கிருத்தவர்களின் சொர்க்கத்தில் ஹீப்ரூமொழி. இந்துக்களின் சொர்க்கத்தில் சமஸ்கிருதமொழி. நாமெல்லாம் தமிழ் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது போலும்!

சகோதரர்களே, இதை ஒரு நகைச்சுவைப் பதிவாக எடுத்துக்கொள்ளாமம் கொஞ்சம் சிரத்தையாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கான தூண்டுகோலாய் எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி

அன்புடன் புகாரி

No comments: