ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை

குர்ஆனை ஓதினால் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என்பது ஆதாரப்பூர்வமான நபிமொழி என்கிறார்கள் சிலர்.

ஆதாரப்பூர்வம் என்பது விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனாலும் அதை இப்போதைக்கு ஒத்தி வைப்போம்.

அந்த நபி மொழிக்குச் சரியான பொருளை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதை இப்போது பார்ப்போம்.

பொருள் தெரியாமலேயே ஓதுதல் என்பதுதான் குர்ஆனை ஓதுதல் என்று இன்று சிலர் பிழையாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

அன்று நபிபெருமானார் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் அராபியர்கள். அராபியர்களுக்கு அரபு மொழி தெரியும்.

ஓதுதல் என்றாலே அன்று அது பொருளுடன் ஓதுதல் என்று மட்டும்தான் பொருள்.

இங்கே நாம் பொருள் தெரியாமல் வெறும் சப்தங்களை ஓதினால் ஆயிரம் நன்மை பத்தாயிரம் நன்மை என்று நினைத்துக்கொள்வது சிந்தித்துப் பாராமையினால் மட்டுமே.

நபிமொழியை அனுகும்போது அது சொல்லப்பட்ட காலம் எது? எவருக்குச் சொல்லப்பட்டது? எதன் காரணமாகச் சொல்லப்பட்டது? அதில் நம்பகத்தன்மை உள்ளதா? என்ற பலவிடயங்களையும் நாம் ஆய்ந்தறிந்து கருத்தில் கொள்ளவேண்டும்.

பாடப்புத்தகத்தை எடுத்துப் படி அதுதான் உனக்கு நன்மை பயக்கும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளிடம் சொல்கிறார்கள்.

பொருள் தெரியாமல் படி என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றதை எடுத்துக்கொள்வீர்களா?

நல்ல நூல்களை வாசித்தால் நன்மை பெருகும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள் தெரியாமல் வாசியுங்கள் என்று அவர்கள் சொல்வதாக எடுத்துக்கொள்வீர்களா?

பொருள் விளங்காமல் எதை வாசித்தாலும் அதில் எந்த நன்மையும் இல்லை.

இதை நபிகளார் மீண்டும் உயிர்பெற்று வந்துதான் நமக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டுமா?

நம்மால் சிந்தித்துப் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமமா அது?

No comments: