உலக முஸ்லிம்களின் இணைப்பு மொழி எது?

தமிழில் சொல்லலாமே என்ற என் கட்டுரைக்குத் தொடர்ந்து விமரிசனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த விமரிசனங்களுள் முக்கியமான விடயங்களுக்கு என் விளக்கத்தை நான் அளிக்கிறேன். அறிதலும் புரிதலும் வளர்வதாகுக!

*அரபு மொழி என்பது உலக முஸ்லிம்கள் என்ற நிலைப்பாட்டில் ஓர் இணைப்பு மொழியேதான்.*

ஐயமே இல்லை.

ஆனால் அது அல்லாஹு அக்பர் சொல்வதற்கும் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வதற்கும், இன்சால்லாஹ் சொல்வதற்கும் மேலும் சில பொதுச் சொற்களைச் சொல்வதற்கும், சேர்ந்து நின்று தொழுவதற்கும்தான். மற்ற பரிவர்த்தனங்கள் அவரவர் மொழியில்தான் செல்லும். ஏனெனில் அதுதான் அவரவர்க்கு விளங்கும். 

விளங்கும் மொழியில் உரையாடும்போதே விளங்காமல் போகும் சிக்கல் நிறைந்த காலக்கோலத்தில் விளங்காத மொழியில் உரையாடி எதுவும் விளங்காமல் போவதில் எனக்குச் சுத்தமாக உடன்பாடில்லை.

தமிழுக்குள் சமஸ்கிருதம், பார்சி, அரபி, ஆங்கிலம் என்று பல சொற்களும் உள்நுழைந்துள்ளன. அவை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற இலக்கணத்தைத் தொல்காப்பியன் என்றோ வகுத்தும்விட்டான். ஆனால் அவை சொற்களேயன்றி சொற்றொடர்கள் அல்ல.

அரபு மொழியின் சொற்களைப் பயன்படுத்துவது என்பது வேறு முழு சொற்றொடரையும் வலிந்து பயன்படுத்துவது என்பது முற்றிலும் வேறு.

வெள்ளிக்கிழமையின் கூட்டுத் தொழுகையில் கனடாவில் குத்பா என்னும் சொற்பொழிவைப் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலத்தில் செய்வார்கள். பின் அந்தந்த மொழிப் பள்ளிகளில் அந்தந்த மொழியில் செய்வார்கள். எங்கள் எல்லோருக்கும் அது தெளிவாகப் புரியும்.

என் சிறுவயதில் ஒரத்தநாட்டில் வெள்ளிகிழமையின் கூட்டுத் தொழுகைக்குச் சென்றபோது, அரபு மொழியிலேயே எழுத்திவைத்திருந்த சொற்பொழிவை அப்படியே வாசித்தார் இமாம். ஆர்வமாகத் தொழ வந்த எனக்குக் குறட்டைக்கான வழியைத்தான் அது வகுத்துத் தந்தது. நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக்கொண்டேன், இனி இந்த குத்பா என்னும் அரபிச் சொற்பொழிவு முடிந்தபின்தான் கூட்டுத் தொழுகைக்குச் செல்லவேண்டும் என்று முடிவுதான் அது.

இதில் சில மேதாவிகள் சொல்வார்கள், ரசூலுல்லாஹ் அரபியில்தான் குத்பா நிகழ்த்தினார். அரபியில் குத்பா கேட்பதுதான் சுன்னத்து என்பார்கள். நான் அவர்களைப் பற்றி இங்கே பேசி என், நம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அதேபோலவே, கலிமாவைத் தமிழில் சொல்வதே தமிழ்முஸ்லிமிற்குப் பயன்தரும். கலிமா என்றால் என்னவென்றே தெரியாமல் கலிமாவை மனப்பாடமாக ஓதிக் காட்டும் பலரை நான் அறிவேன். அவர்களைவிட அதன் தமிழ்ப்பொருளை அறிந்துகொண்டு அரபியில் ஒப்பிப்பவர்களை நான் ஏற்கிறேன். ஆனால் அதையும் தமிழிலேயே சொன்னால் எத்தனை இனிமையாக அது இதயத்தில் தங்கி நிற்கும் ஒரு தமிழ்முஸ்லிமிற்கு என்று சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

திருமறையைக் கட்டாயம் தமிழில்தான் ஓதவேண்டும். இல்லாவிட்டால் அரபு மொழி தெரியாத நமக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் போய்விடும். அரபு மொழி பேசுவோருக்குக்கூட குரானின் மொழி அந்நியமானதாக இருக்கும். ஏனெனில் குரான் அக்கால அரபு இலக்கிய நடையில் ஒருவகை ஓசை நயம்கொண்ட கவிதை நடையில் அமைந்தது.  திருக்குறளுக்கு எப்படி பல தமிழர்களுக்கு விளக்கம் தேவையோ அப்படித்தான் குரானும் பல அராபியர்களுக்கு.

*இனி தொழுகையில் அரபியா தமிழா என்ற மிக முக்கியமான கேள்விக்கு வருவோம்.*

தொழுகையின்போது ஒரு பொதுமொழி மிக அவசியம். அதன் வாயிலாகவும் சகோதரத்துவத்தை நாம் நிலைநாட்ட முடியும். குறிப்பாக இமாம் ஒருவரின் கீழ் பள்ளிகளில் தொழுகை நடக்கும்போது பொதுமொழியே அவசியம். அதுவே உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றாய் இணைக்கும். அந்தத் தொடர்பு ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிக அவசியம். இயல்பாகவே அது குரானின் மொழியான அரபியில் அமைந்துவிட்டது. அதை ஏற்பதில் யாதொரு சிக்கலும் எவருக்கும் இல்லை.

அதே வேளை தனியே வீட்டில் தொழுகிறோம் என்றால் அது நம் விருப்பம். இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்பது உண்மையல்லவா? சில நேரம் அல்லாஹு அக்பர் என்பதை இறைவா நீ மிகப்பெரியவன் என்று தொழும்போது நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் அது இமாம் தொழுகை வைக்க நான் தொழும்போது அல்ல. தனியே நின்று தொழும்போது.

இவ்வேளையில் இன்னொரு விடயத்தையும் நான் சொல்லியாக வேண்டும். துவா என்னும் இறைவனிடம் இறைஞ்சுதலை, வேண்டுதலை, பிரார்த்தனையைச் சிலர் அரபியில் பொட்டை மடப்பாடம் செய்துவிட்டு வந்து செய்வார்கள். தான் என்ன துவா கேட்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியாது.

இறைவனிடம் இறைஞ்சுவதற்கு நமக்கு ஆயிரம் இன்னல்கள் உண்டு. ஒவ்வொரு உயிருக்கும் அவ்வுயிரின் இன்னல் தனித்துவமானது. அதை எப்படி ஒரு பொது மொழியில் பொதுவில் செய்யமுடியும்?

அதேவேளை ஓர் இமாம் எல்லோருக்கும் பொதுவாக துவாச்செய்யும்போது ஆமீன் ஆமீன் என்று சொல்வதில் பொருள் உண்டு. ஆனால் அந்தப் பொது துவா முடிந்ததும் நம் தனி துவா இறைவனிடம் தொடங்க வேண்டும் அல்லவா? அது இயல்பாகவே நம் தாய்மொழியில்தானே இருக்கும்?

இறைவனுக்கு நன்றி சொல்வதும் தனித்துவமானது இறைவனிடம் இறைஞ்சுவதும் தனித்துவமானது அல்லவா?

அன்புடன் புகாரி

No comments: