புன்னகைக் கொத்து

புன்னகை என்பது ஒரு மாயமொழி. மௌனத்தின்முன் மொழிகளெல்லாம் தங்களின் வீரியம் இழக்கின்றன. புன்னகையின் முன்னோ தம்மையே இழக்கின்றன. ஒரு புன்னகையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த உலகின் அத்தனை பொக்கிசங்களையும் அடைந்துவிடலாம், அனுபவித்துவிடலாம்.

உண்மையான புன்னகையாய் மட்டும் அது இருக்கவேண்டும். எல்லாவ்ற்றுக்கும் போலியைக் கண்டுபிடித்து வித்திருக்கிறானே மனிதன். ஆகையால் பொறுப்புத் துறப்பாக இதையும் எழுதிவிடத்தான் வேண்டும்.

உண்மையான புன்னகை என்பது ஆழ்மனக் கிடங்கில் அன்பின் எழுச்சியில் தானே பிறந்து இதழ்களில் விரியும் புதினப்பூ.

பத்துமாதம் இடைநோகச் சுமந்து பெற்ற பிள்ளையை முதலில் காணும் கண்களில் முதலில் புன்னகை சிறுதுளியாய் கண்களிலிருந்து மலர்கிறது பின் அது இதழ்களை நிறைக்கிறது. ஆம் புன்னகை என்பது இதழ்களிலிருந்து விரியும் பூ மட்டுமல்ல, முதலில் அது கண்களில் மலர்ந்தால்தான் அதன்பின்னால் உண்மையின் ஊற்றுகள் இருக்கின்றன.

ஒரு புன்னகை இதழ்களில் மலரும்போது, அந்த உயிருக்குள் எத்தனை புத்தெழுச்சி மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஆழ் உணர்வுகளின் அதிசயம். ஒவ்வொருவரும் புன்னகை மட்டுமே சிந்தும் பூக்களாகிப் போனால் இந்த பூமி சொர்க்கத்தைவிட பலமடங்கு சுகங்களை அள்ளி இறைக்கும் வரமாகிப் போகும்.

இப்படியே புன்னகையைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் கவிதை புன்னகையைப் பற்றி ஏதோ சொல்கிறது. மூடிக்கிடக்கும் இதழ்களில் ஒரு புன்னகை சட்டென விரியுமா இக்கவிதையை வாசித்தால் என்று சொல்லுங்கள்.

உன் புன்னகையைப் பிடித்துக்கொண்டு என் புன்னகை வரைந்த ஒரு புன்னகைக் கவிதைதான் அன்பே இது!

முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூக்களெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்

அன்புடன் புகாரி

No comments: