வன்முறை அறுப்போம்

நெஞ்சுக்கே திரும்பும்
கூர்முனைக் கத்தி

கண்ணுக்குக் கண்கேட்கும்
குருட்டுக் கோடரி

ரத்தம் குடிக்கத் துடிக்கும்
போதை ராட்சசன்

தலைமுறை அழிந்தாலும்
அழியாப் பிணந்தின்னி

வன்முறை வெறுப்போம்
நாம் வாழ

வன்முறை துறப்போம்
நம் குடும்பம் வாழ

வன்முறை மறுப்போம்
நம் ஊர் வாழ

வன்முறை அறுப்போம்
நம் உலகம் வாழ

குடி
குடியைக் கெடுக்கும்

குடிக்காவிட்டால்
குடியரசு
தடியால் அடிக்கும்

ஊற்றித் தந்து
ஊட்டம் பெறுகிறது
தமிழரசு

குடித்துவிட்டு
மாய்ந்து மடிகிறது
தமிழினம்

தமிழ்நாடு
தனிநாடு

தன்னிகரில்லா
தண்ணிநாடு

அன்புடன் புகாரி
மனசாட்சி எனப்படும் ஆழ் உள்ளத்தின் குரலுக்கு உண்மையாகவே செவி சாய்த்து, அதன் வழியில் நேர்மையாக நடப்பதும் வழிபாடு எனப்படும்
இறைவன் வழியைப் பின்பற்றுதல் என்பதும் வழிபாடு எனப்படும்
ஆகவேதான் இறைவன் உன் உள்ளத்தில் இருக்கிறான் என்கிறார்கள்
இறைவனின் அறத்தை காலங்காலமாகக் கேட்டு வளர்ந்த உள்ளத்தில்தான் மனசாட்சி உறுதியாக நிற்கும்
இறைவனைத் தொழுதல் என்றாலும் அவனை வழிபடுதலே
இறைவணக்கம் என்றாலும் அவனை வழிபடுதலே
சொல்லில் ஏதும் இல்லை, வைக்கும் எண்ணத்தில்தான் எல்லாம் இருக்கிறது
அடுக்கடுக்காய் அடுக்கடுக்காய்
இத்தனைச் சோதனைகளா

என்றால்
ஏதோ மிக நல்லதொன்று
உங்கள் வாழ்வில்
வெகு விரைவில் மலரப் போகிறது

கரி
மேலும் கருகிக் கருகி
இறுகுவது
வைரமாவதற்குத்தான்

உங்கள் வழமையான
அன்பிலும் பண்பிலும்
நயாகராவாகவே
இருங்கள்

வந்து குவியும் துக்கங்களை
வந்த நொடியே
காலைக் கடன்போல
வெளியேற்றிக்கொண்டே
இருங்கள்

ஏறும் துன்பம்
எதுவென்றாலும்
இறங்குவதே இல்லை
அதைச்
சுமந்து கொண்டே
நின்றால்

உங்களை
உண்மையிலேயே
உயிரில் வைத்து நேசிப்பவர்கள்
யார் யார் என்பதை
இவ்வேளையில்
கணக்கெடுத்துக்கொண்டே
இருங்கள்

பகட்டுகளையும்
ஏமாற்று வித்தைகளையும்
அடையாளப்படுத்திக்கொண்டே
இருங்கள்

இறைவன் உங்களை
அடுத்ததோர் உயர் நிலைக்குத்
தயார் செய்கிறான்

வெற்றி பெறுங்கள்
வாழ்த்துக்கள்






25 எழுது ஒரு கடுதாசி

கிராமங்களில்தான் ஒரு நாட்டின் கலாச்சார உயர்வுகள் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிராமங்களில் வளர்ந்தவர்கள், பெருநகரத் தெருக்களில், கிராமிய மணங்கமழ தம் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை நெறிகளையும் நினைவுகூர்ந்து உரையாடும்போதும், அவை தொடர்பான எண்ணங்களை பரிமாறிக்கொள்ளும்போதும், பெருநகரத்துச் செயற்கை நாடகங்களால் உள்ளே செத்துக்கிடக்கும் அத்தனை உணர்வுகளும் உயிர்பெற்று மீண்டும் புலர்ந்துவிடுவது இன்றும் நம்மை நம் அடிப்படைப் பண்பு மாறாமல் பாதுகாத்துவருகின்ற வரம்.

இங்கே ஒரு கிராமத்து மகன், புகைப்படத்தையும் உறவினர்களின் பரிந்துரைகளையும் மட்டுமே முழுமனதுடன் ஏற்று, ஒரு வண்ண நிலவை வாழ்க்கைத்துணையாக்க நிச்சயம் செய்கிறான். உரையாடுவதோ கடிதம் வரைவதோ ஏற்றுக்கொள்ளப்படாத அந்த கிராமத்தில், பெருநகர வாழ்க்கையின் தூண்டுதலால், அவளிடம் கடித சுகம் கேட்டு அவன் எழுதும் கடிதமே இந்தக் கவிதை.

அவர்களின் நாட்டுப்புற நடையிலேயே நடக்கிறது.


நேத்துவர எம்மனச
      நெலப்படுத்தி நானிருந்தேன்
பாத்துவச்ச தாய்தம்பி
      பருசமுன்னு சொன்னாங்க

வேத்துவழி தெரியாம
      விழுந்தேன் நான் வலைக்குள்ள
ஊத்தாட்டம் எம்மனசு
      ஒன்னெனப்பா பொங்குதிப்போ

பாழான எம்மனசு
      பனியே ஒன் வசமாயி
நாளாவ நாளாவ
      நீ நடக்கும் நெலமாச்சி

மாளாத கனவாச்சி
      மங்காத நெனப்பாச்சி
தாளாத தனிமையில
      தீராத ஆசையில

வாடாத மருக்கொழுந்தே
      வத்தாத தேனூத்தே
போடேண்டி கடுதாசி
      பொல்லாத மனசமாத்தி

போடாட்டி எம்மனசு
      புண்ணாகிப் போகூன்னு
மூடாத முழுநிலவே
      மச்சினனத் தூதுவிட்டேன்

ஆடாத மனசோட
      அசையாத மொகத்தோட
போடாம கடுதாசி
      புதிராக இருந்துட்டே

வாடாத எம்மனசும்
      வாடிப்போய்க் கெடக்குதடி
கூடாத காரியமா
      குத்தமுன்னு யாருசொன்னா

தாத்தா சொன்னாரா
      தாய்மாமஞ் சொன்னாரா
பூத்த புதுப் பூவாட்டம்
      போட்டாவக் கொடுத்தாங்க

கூத்தாத் தெரியலியா
      கூடாது கடிதமுன்னா
வேத்தாளு ஆனேனா
      வீணாயேன் மறுத்தாங்க

யாருவந்து கேட்டாங்க
      ஏம்பரிசம் போட்டாங்க
ஊரயெல்லாங் கூட்டிவச்சி
      ஒன்னெனப்பக் கொடுத்தாங்க

நீரயள்ளி எறைச்சாக்கா
      நெலம் ஈரம் ஆவாதா
தூரநாடு வந்ததால
      தொலையுதுன்னு போவாதா

தேர இழுத்தும் இப்போ
      தெருவசந்தங் காணலியே
பூவப் பரிச்சும் இப்போ
      புதுவாசம் வீசலியே

நாளமெல்லப் போக்காத
      நரகத்துல தள்ளாத
யாருநின்னு தடுத்தாலும்
      எழுதமட்டும் தயங்காத

நாந்தான ஒங்கழுத்தில்
      நல்லமல்லி மாலையிடுவேன்..
வாந்தாலும் எங்கூட
      வாடினாலும் எங்கூட

நாந்தானே ஒனக்கூன்ன
      நாடறிஞ்ச சேதிய நீ
ஏந்தாமத் தூங்காத
      எழுது ஒரு கடுதாசி

- அன்புடன் புகாரி

24 அன்பு நெஞ்சே

ஏறிடுங் கால்களைத் தடுக்கிவிட்டு
         ஏணியைப் பள்ளத்தில் இறக்கிவிட்டு
ஊறிடுஞ் சுனைகளை அடைத்துவிட்டு
         உள்ளமே இல்லாத கள்வர்களாய்
ஊரிலே பலபேர் நல்லவரே
         உன்தலை மீதேறி நடப்பவரே
யாரிவன் யாரவன் என்பதைநீ
         எண்ணி நடப்பாயென் அன்புநெஞ்சே

தோளிலே கையிடும் நண்பனென்பான்
         துணைக்குநீ அழைக்காமல் வந்துநிற்பான்
நாளிலே பலமுறை தேடிவந்து
         நன்றியே நானென்று கூறிநிற்பான்
ஏழைநீ துயர்பெற்ற நாட்களிலோ
         எங்கும் உன்கண்களில் படமாட்டான்
தேளிவன் கொடுக்கினை மறைத்துவிட்டான்
         தெரிந்துநீ நடப்பாயென் அன்புநெஞ்சே

யாருமே போற்றிடும் ஏற்றதொழில்
         எவனையோ குறைகூறித் திரிவதென
ஊரிலே பலபேர் அப்படித்தான்
         உன்னையே குறைகூற வந்துநிற்பார்
யாரினைக் கண்டும் நடுங்காதே
         எவர்சொல் கேட்டும் நீ சிதையாதே
பேருக்கு அவர்முன் செவிமடுத்து
         பிறகதைத் தனிமையில் எடைபோடு

ஏனெனுங் கேள்வியைக் கேட்பதற்கு
         என்றும் எவருக்கும் அஞ்சாதே
ஆனது ஆகட்டும் என்பதுபோல்
         அசைய வெறுத்துமட்டும் விலகாதே
ஆனது உன்னால் எவையெவையோ
         அனைத்தையும் செய்து நீ முன்னேறு
ஊனமே எதுவென அறிவாயோ
         உடைந்து கைகட்டிக் கிடப்பதுதான்

தேனினைப் போலே இனியதெது
         தெளிந்தநல் லறிவுக்கு ஏற்றதெது
மானிட மொழிகளில் உயர்ந்ததெது
         மௌனமே யல்லாது வேறெதது
தூணிணைப் போலே அமைதியினைத்
         தூக்கி நிறுத்துவதப் பேரழகு
வேணும் போதே வாய்திறந்தால்
         வேதனை ஒண்டாது அன்புநெஞ்சே

சாதிகள் சிறிதெனத் தள்ளிவிடு
         சமத்துவம் பெருஞ்சுகம் போற்றிவிடு
சேதிகள் கேட்டிட அனுதினமும்
         செவியினைப் பிறருக்காய் வளர்த்துவிடு
பாதியை மெழுகிப் பொய்யுரைக்கும்
         பகட்டினை மதியாதே என்றென்றுமே
தேதியொன் றானதும் நிலைமறந்து
         தேவையைப் பெருக்காதே அன்புநெஞ்சே

ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
         ஆயிரம் படிகீழே தாழ்ந்திருப்பார்
ஆயிரம் மாந்தரோ உன்னைவிட
         ஆயிரம் படியேறி உயர்ந்திருப்பார்
ஆயினும் அவற்றையே பெரிதாக்கி
         ஆணவம் அவமானம் அத்துமீறும்
நோயினில் வீழ்ந்தே நோகாமல்
         நேர்வழி நடப்பாயென் அன்புநெஞ்சே

சாதனை ஆயிரம் செய்துவிடு
         சாவினை அழிக்கப் பெயர்நாட்டு
வேதனை வேண்டாம் தோல்விகளில்
         வேண்டும் திடநெஞ்சம் எப்போதும்
சோதனை எத்தனை வந்தாலும்
         சோர்வது கூடவே கூடாது
பாதம் பணிந்திட ஆசைகளைப்
         பழக்கப் படுத்திவை அன்புநெஞ்சே
ஆசை கொண்ட
எந்த உரையாடல் துவக்கமும்
வாக்குவாதச் சம்மட்டியால்
காயப்படாமல்
நிறைவு பெற்றதாய்
ஞாபகமே இல்லை

எடுத்துச் சென்ற
அப்பழுக்கற்ற
எந்த அன்பும் பாசமும்
அடிபட்ட புறாக்களைப் போல்
காலொடிந்து
அலகொடிந்து
சிறகொடிந்து
திரும்பும் வாடிக்கையேயன்றி
வேறெதுவும் இருந்ததே இல்லை

இன்று உறுதியாய்
புரியவைத்தே தீரவேண்டும்
விடிவுபெற்றே ஆகவேண்டும் என்ற
அரும்பெரும் முயற்சிகளெல்லாம்
குழப்பங்களின் மீது
கொடுங் குழப்பங்களைக்
கொப்பளிக்காமல் இருந்ததே இல்லை

இருப்பதோ
ஒரே ஒரு வாழ்க்கை
இதிலும்
ஏன் தட்ட வேண்டும்
இந்தக் கதவையே என்று
உட்கிளி கெஞ்சிக் கெஞ்சிக்
கேட்டழாத நாளே இல்லை

இருந்தும்
உறவுச் சங்கிலிகளில்
சின்னச் சின்ன வண்ண விழிகளின்
பெரிய பெரிய கண்ணீர்த் துளிகள்
கொட்டிக் கொட்டி
இறுக்கும் இறுக்கத்தை
அவிழ்த்து முடிப்பதற்கும்
அவிழாதவற்றை
உடைத்தெறிவதற்கும்
நாள் குறித்தால்
பாழும் மனம்
கேட்கவா செய்கிறது

இதோ
வந்துவிடப் போகிறது
மரணம்
பிறகென்ன விட்டுத் தள்ளு
என்று
சொல்லிச் சொல்லியேவல்லவா
எதிராய் நிற்கிறது

அன்புடன் புகாரி
20170404

நெஞ்சுடையச் செய்திடுமோ
என்றஞ்சி
தன் பொன் முட்டையை
அடைகாத்துத்
தவித்துத் துடித்துக்
காத்திருக்கும் மௌனம்

சட்டென்று
தாறுமாறாய் உடைந்து
வெளியேறும்
தகரக் குஞ்சுகளாய்

மௌனக்
கவிமொழியறியா
மந்தைகளிடம்

அன்புடன் புகாரி
20170321
அமெரிக்க மாப்பிள்ளை

பட்டில் வைத்துப்
பவளத்தில் வளர்த்த
என் தேவதை மகளை

முதிர்கன்னியாகவே
வைத்திருப்பேன்

கழுதைக்குக்
கட்டிக்கொடுப்பேன்

பாழுங் கிணற்றில்
பிடித்துத் தள்ளுவேன்

குதிருக்குள் அமர்த்தி
நெல்கொட்டி மூடுவேன்

எரியும் நெருப்பில்
இறங்கச் சொல்வேன்

ஆனால்...

அமெரிக்க
மாப்பிள்ளைக்கு மட்டும்
கட்டித் தரவே மாட்டேன்

இது
டிரம்பின் வெற்றிமீது
உறுதியாக

டிரம்பின் நிறம்மீது
நிச்சயமாக

டிரம்பின் ஆட்சிமீது
சத்தியமாக

அன்புடன் புகாரி
20170305
தோல்விகளைக்
கொண்டாடு

ஒரு வெற்றி என்பது
பல தோல்விகளால்
ஆனது

அன்பினிய நண்பனே

தோல்விகளின் சுமைகளைத்
தூக்கித் தூக்கி
தோள்வலிமை உயர்த்தி உயர்த்தி
ஒரு நாள் நீ உன்
வெற்றியை ஏந்தி நிற்பாய்

ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றி கிடைக்கவில்லை
என்று நீ புலம்புவது 
அறிவீனம்

ஒவ்வொரு தோல்வியிலும்
வெற்றியின் ஒரு பகுதி
உனக்குக் கிடைக்கிறது என்பதால்
உண்மையில்
நீ உன் தோல்விகளைக்
கொண்டாடத்தான் வேண்டும்

தேன்கூடு என்பது
எத்தனையோ தேன் துளிகளின்
கூட்டு அல்லவா

தேன்கூடு 
நிறைவடையும்வரை
நீ காத்திருக்கத் தேவையில்லை

ஒவ்வொரு 
தேன் துளிக்குமே
நீ உன் வெற்றியைக் கொண்டாடலாம்

மீண்டும் மீண்டும்
தேன் 
கொண்டுவருவதுமட்டுமே
தேன் கூட்டிற்கான 
மாறாத நியதி

அதுதான்
வெற்றியைத் 
தக்கவைத்துக்கொள்ளும்
ரகசியம்

ஆனால்
உன் கொட்டாட்டங்கள்
உன் வலியைக் கொன்றுவிட்டால்
அன்றோடு உன் முயற்சிகள்
நின்றுவிட்டால்
அது ஒன்றே உண்மையான தோல்வி

கவலை வேண்டாம்
அதற்கும் 
மாற்றுமருந்து உண்டு

மீண்டும் எழு
நண்பனே மீண்டும் எழு

அன்புடன் புகாரி
20170227

12 இருட்டு பேசுகிறது


நான் இருட்டு
கொஞ்சம் ஊடுருவிப் பாருங்கள்
நானே நிஜம்
வெளிச்சம் விருந்தாளி
நானே நிரந்தரம்

புலன்கள் ஐந்து
அவற்றுள் ஒற்றைப்புலனே
வெளிச்சத்தின் அடிமை
அந்த விழிகளும் என்னில் மட்டுமே
கனவுகள் காண்கின்றன
கனவுகளே உங்களின்
சத்தியப் பண்புகளைச் சொல்கின்றன

உங்களின் சரியான முகவரி
உங்கள் கனவுகளில்தான்
பொறிக்கப் பட்டிருக்கிறது

வெளிச்சம் உங்களைப் பொய்யுடன்
பிணைத்துக் கட்டுகிறது
வெளிச்சம் பொய்களின் கூடாரம்
இருட்டே உண்மையின் தீர்மானத் தளம்

என்றாவது உங்களை
வெளிச்சத்தில் பார்த்திருக்கிறீர்களா
இருட்டில்தானே நீங்கள் தெரிவீர்கள்
வெளிச்சத்தில் உங்களுக்கு தினம் ஒரு முகம்
இருட்டில் உங்களுக்கு ஒரே முகம்
வெளிச்சத்தில் நாளும் நிறம்மாறுகிறீர்கள்
இருட்டில்தான் நீங்கள் நீங்களாகவே இருக்கிறீர்கள்
வெளிச்சம் பொய் இருட்டே நிஜம்

வெளிச்சம் துயரம் இருட்டே சந்தோஷம்
வெளிச்சம் அரக்கன் இருட்டே உங்கள் தாய்
நிறைய அழுகை மனிதனுக்குச் சொந்தம்
அவை அனைத்தும்
வெளிச்சம் உங்களுக்குத் தந்த விசங்கள்
அத்தனைக் கண்ணீரையும் கொட்டித்தீர்க்க
இருட்டே உங்களுக்கு மடி வார்க்கிறது

கரு எங்கே உதிக்கிறது
விதை எங்கே முளைக்கிறது
உயிர்கள் அத்தனைக்கும் மூலம் இருட்டுதானே

வெளிச்சம் வேசம்
வெளிச்சத்தில் சொல்லப்பட்ட
கதைகள்தாம் இருட்டை பயமென்று பிதற்றுகிறது
கருப்பையில் பயந்தீரா வெளிவந்து அழுதீரா
இருட்டா உங்களுக்குப் பயம் சொல்லித்தந்தது
வெளிச்சம் கவலைகளின் தொழிற்சாலை
இருட்டு உங்களின் சத்தியமான வாழ்க்கை

புறக்கண் என்றேனும் எவரின் நிஜத்தையும்
உங்களுக்குக் காட்டி இருக்கிறதா
சொல்லுங்களேன்
பாசமென்பது பெத்தவளின் முகமா
அவள் அரவணைப்பா
காதல் தந்தது காதலியின் வெளியழகா
அவள் உள்ளழகா
நிம்மதிச் சொத்து உருவங்களாலா
உள்ளங்களாலா

யோசித்துப் பாருங்கள்
இருட்டையே நீங்கள் காதலிக்கிறீர்கள்
வெளிச்சத்தை வெறுக்கிறீர்கள்

வெளிச்சம் இதயத்தை மதிப்பதில்லை
இருட்டு உருவத்தை மதிப்பதில்லை
தினம் தினம் வெளிச்சம் உங்களை
ஏமாற்றுகிறது

தவறாக எண்ணாதீர்கள்
இருட்டு வெளிச்சத்தைக் கண்டு
ஓடி ஒளிவதில்லை
வெளிச்சத்துக்கும் வாழ்க்கை தருகிறது
வெளிச்சம் இல்லாமல் இருட்டு இருக்கும்
இருட்டே இல்லாமல்
வெளிச்சம் எங்கே இருக்கும்

பூமி இருட்டு நிலா இருட்டு
கோள்களெல்லாம் இருட்டு பிரபஞ்சமே இருட்டு
உயிர்கள் அத்தனையும் இருட்டின் துகள்கள்
இருட்டே நிஜம் வெளிச்சம் பொய்
மெரினா
தமிழ்நாட்டின்
அரசியல் போதிமரம்

புத்தன்வரக் காணவில்லை
ஆனாலும்
புத்திவரக் காண்கிறோமோ

காற்று
வாங்கப்போகும் இடத்தில்
கல்லறைகள்

ஏன்?

செத்தும்
அகலாத புழுக்கத்தோடு
அரசியல் தலைகள்
இங்கே அடக்கம்

தலைகள் ஏதும் வழிநடத்தாமல்
தங்கத்தமிழ் எழுச்சி மக்களின்
சல்லிக்கட்டுப் போராட்டம்
இந்தக் கல்லறையைச்
சுத்தப்படுத்தியது

ஆனால்
தடால் தடியடியால்
தறுதலைகளோடு நடுத்தலை
மீண்டும் இதை
அசுத்தப்படுத்தியது

எண்ணையைக் கொட்டி
கடல்வளம் அழிக்கும்
வணிகக் கப்பல்கள்
மெரினாவில்

கேட்க வாயற்றவை
சமாதிகள் மட்டுமல்ல
நடமாடும் சமாதிகளும்தான்
என்று நிரூபிக்கின்றன

எத்தனையோ குரல்களையும்
எண்ணற்ற கூக்குரல்களையும்
கேட்டவண்ணம்
பரந்து விரிந்து
அலைவீசிக் கிடக்கிறது
மெரினா

இன்றுவரை
இங்கே நடந்த கூட்டங்கள்
குவிந்த மக்கள்
மணல் எண்ணிக்கையை
என்றோ மூழ்கடித்த
சாதனை

இன்றெல்லாம்...

மெரினா
தமிழ்நாட்டின்
அரசியல் போதிமரம்

புத்தன்வரக் காணவில்லை
ஆனாலும்
புத்திவரக் காண்கிறோமோ

அன்புடன் புகாரி
20170210
இந்நொடி உனைக்காண
ஏதோவொன்று
உள்ளிருந்து
துடியாய்த்துடிக்கிறது

கொஞ்சும் தமிழோடும்
குழையும் இதழோடும்
என் உயிரே


காலங்கள்
தன் திருப்பங்களோடு
தொடர்ந்து
பயணித்துக்கொண்டேதான்
இருக்கிறது

நிகழாத நிகழ்வெல்லாம்
நிகழ்த்திக் கொண்டேதான்
இருக்கிறது

ஆனாலும்
யாதொரு மாற்றமும் இல்லை
கண்ணுக்குள் உயிராக
உயிருக்குள் கண்ணாக
நீ

தித்திக்கத் தித்திக்கச்
செவிக்குள் கரும்பாய்
என் இனிய பாவாய்

உன்
கண்களும் காந்தமும்
தமிழும் தகிப்பும்
ஆழமாக பதிந்த
சொர்க்கத்தின் சொர்க்கங்கள்

வந்தால் தருவேன்
நயாகராவாக
வந்ததும்
சட்டென்று கேட்டுவிடாதே
கேட்கும் முன் கொடுக்காவிட்டால்
உனக்கான என் உணர்வுகள்
வெறும் சொத்தைகள்

களவாடப்பட்ட கனவா
நீ
ஆனால்
கனவு எப்படி களவுபோகும்

களவுபோக வழியற்ற
என் கனவே

உயிரும் உயிரும் உயிர்க்கும்
நம் கனவுகளின் திருவிழா
எப்படியும் பூக்கும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
நாயக்கட்டு பேயக்கட்டு
         பீட்டாவுக்குப் பாடைகட்டு
நாட்டுடமை பாடிக்கிட்டு
        நடக்கட்டும்டா ஜல்லிக்கட்டு

ஓட்டப்போட்ட எம்பிசீட்டு
       ஒடச்சுப்போட்ட முட்டபல்பு
ஆறப்போட்டு ஆறப்போட்டு
       அமுக்குறாண்டா வெத்துவேட்டு

அடக்கிப்போட்டு முடக்கிப்போட்டு
       அட்டூழியம் யாரைக்கேட்டு
ஒண்ணுகூடு சுத்துப்பட்டு
       ஒசத்திப்பாடு உரிமைப்பாட்டு

ஊரைக்கூட்டு உலகைக்கூட்டு
       ஊர்வலமா கோசங்கட்டு
மறத்தமிழன் வீரங்கேட்டு
       மறுபடியும் ஜல்லிக்கட்டு

அன்புடன் புகாரி
20170210
ஸ்பெயினின்
கொலைக்களம் அல்ல

எருதுகளின்
விருது மேடை

தமிழ்நாட்டின்
சல்லிக்கட்டு
திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

சொர்க்கத்தை
மண்ணில் காணவும்
நரகத்தை
நாட்களிலிருந்தும்
நெஞ்சினின்றும்
விலக்கிவைக்கவும்


திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

இதயங்களின் ஈர்ப்புகளிலோ
இதழ்களின் தவிப்புகளிலோ
இன்பமாய் வாழ
இனிமையாய் வாழ

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

நரகத்தை
மண்ணில் கண்டுவிட்டால்
சொர்க்கம்
நாட்களிலிருந்தும் நெஞ்சினின்றும்
விலகிப் போய்விட்டால்
ஒப்பந்தம் என்பது
தானே முறிந்து
அதன் தலை தொங்கிவிடுகிறது

திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயக்கப்பட்டதல்ல

ஏனெனில்
கண்ணில் காணும்
இத்தனை நரகத்தையும்
சொர்க்கமா
நிச்சயித்திருக்க முடியும்

திருமணம் என்பது
ஆயிரம் காலத்துப் பயிர்
என்பதும் பிழை

இன்பத்தின் ஆயுள்
எத்தனை எத்தனை மணநிலங்களில்
காய்ந்து கருகி உதிர்ந்து
சாம்பலாய்க் கிடக்கின்றன

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்

நீ விரும்புகிறாய்
நான் விரும்புகிறேன்
இதோ சொர்க்கம்

நீ வெறுக்கிறாய்
நான் வெறுக்கிறேன்
அது நரகமல்லவா

இந்த வாழ்க்கை
ஒரே ஒரு முறைதான்
அதை
வாழாமல் போனால்
போனதுதான்

இந்த உயிர்
எந்த உத்திரவாதத்திற்கும்
கட்டுப்படுமா

வருடங்களா நாட்களா
நிமிடங்களா நொடிகளா
சொல்லமுடியுமா

இதனுள்
மல்யுத்தம் வேண்டுமா
கயிறிழுத்தல் வேண்டுமா
துரோகங்கள் வேண்டுமா
காயங்கள் வேண்டுமா
கண்ணீரில்
கரைதல்தான் வேண்டுமா

அன்பு அல்லவா
வேண்டும்
காதல் அல்லவா
வேண்டும்

காதல் என்பது
ஓர் அற்புதப் பயிர்

இறுக்கிக் கட்டும்
கட்டுகளுக்குள்
காதல்
காந்துபோய்விடுகிறது

அன்பில் கட்டும்
நட்பில் கட்டும்
ஈர்ப்பில் கட்டும்
பிணைப்புக் கட்டுகளுக்குள்
காதல் செழித்து வளரும்
கல்யாணம் நீடித்து நிற்கும்

திருமணம் என்பது
ஓர் ஒப்பந்தம்
*வெற்றிக்கு மந்திரம் மனவீரம்*

இசை கூட்டி தமிழ்க் கவிதைகள் எழுதுவது எனக்குப் பிடித்த விசயம். 

யாப்பிலக்கண விதிகளைப்பற்றி அதிகம் நான் கவலைப்படுவதில்லை. ஆனால் அதன் சுவைகளைப் பெரும்பாலும் களவாடிக்கொள்வேன்.

இந்தக் கவிதை ஒவ்வொரு வரியிலும் ஒரு கருத்தைச் சொல்லி நிறைவு செய்துகொள்கிறது. 

நிறைவு செய்து கொள்வதோடு நின்றுவிடாமல் அடுத்த வரியையும் தன் கருத்தோடு கொக்கியிட்டு இணைத்துக்கொள்கிறது.

இதுபோன்ற கவிதையின் ஒரு வரியை மட்டுமே ஒரு கவிதையாய் அறிமுகம் செய்யலாம். 

சில வரிகளை மட்டும் இணைத்து ஒரு கவிதையாய்க் காட்டலாம்.

கீழிருந்து மேலாக வாசித்துச் சுவைக்கலாம் அல்லது இடையிலிருந்து தொடங்கி கீழ்நோக்கிச் சென்று பின் மேல்நோக்கிச் செல்லலாம்.

காலங்களில் அவள் வசந்தம் என்று ஒரு திரைப்பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி இருப்பார். அந்தப் பாடலும் இவ்வகைக் கவிதைதான். ஒவ்வொரு வரியும் தனித்து இயங்கக் கூடையன


*

கோடுகள் வாழ்க்கையில் ஏராளம் - அந்தக்
         கோட்டுக்குள் நாடகம் அன்றாடம்

தாவிடும் ஆசைகள் கூத்தாடும் - இன்பத்
         தவிப்புக்குள் சிக்கியே நாளோடும்

மூடிய மாங்கனி வீடாகும் - உள்ளே
         முத்தாக வாழ்வது வண்டாகும்

கூடுகள் இன்பத்தின் ஆதாரம் - அந்தக்
         கூட்டுக்குள் அன்புதான் தேனூட்டும்

கட்டிய காலுடன் நாட்டியம் - கண்கள்
         கட்டித்தான் காட்சிகள் அரங்கேற்றம்

ஒட்டிய தேவைகள் போராட்டம் - உயிரின்
         ஓலந்தான் ஞானமாய் வேரோட்டும்

வெட்டிய கீறலாய் ஏமாற்றம் - தொடரும்
         வெற்றெதிர் பார்ப்போ ரணமாக்கும்

தொட்டது தோற்பது சிறையாகும் - தொட்டுத்
         திறவாமல் வெற்றியும் திசைமாறும்

இருட்டினில் கண்களும் கூராகும் - துயரம்
         இடைமுட்ட வாழ்வோ சீராகும்

கருத்தினில் இழையா கனவுலகம் - வெற்று
         காற்றோடு கரைந்து மணலாகும்

பருந்திடம் மாட்டிய குஞ்சாக - நாளும்
         போராடித் தவிக்கும் நன்னெஞ்சம்

விருந்தென மடிவது படுமோசம் - வாழ்க்கை
         வெற்றிக்கு மந்திரம் மனவீரம்

அன்புடன் புகாரி
பாரதியும் இஸ்லாமும் - Nov 29, 2016 by மாலன்

“மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் ‘உங்க’ பாரதியார்?” என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார்.
“சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை”
“அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?”
“சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்”
“சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்”
“நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்” என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார். கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்” என்றார்.
“பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்.”
“நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?”
நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று:
நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார். அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள் ”
பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார். “இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?” என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு.
“சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ‘பரமாத்மாவான அல்லாஹீத்த ஆலா அருள் புரிவாராக’ என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்? ”
“இது என்ன புதுக் கதை?”
“இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள். அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது.”
“படியுமேன். கேட்போம்”
“நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்”
“மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?”
” ‘மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்’ என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?”
“நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்”
நான் படித்துக் காட்டினேன்: “… எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும் கலந்தால் பொது இன்பம் ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம் முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்.”
“அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?”
“படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்:
“பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், “இனி என்ன செய்வது?” என்று தயங்கினான். அப்போது நபி, “அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை. “என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்”
“கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?”
பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில் 1905 ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும்.
அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார் “.
“அவருக்கு இஸ்லாமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?”
“அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் ‘தாடி ஐயர்’ (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை ‘. ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து ‘என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார் . ஆனால் அதற்குப் பின்னும் 1918 ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார் “.
“இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?”
“இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை. கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ? ‘வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்’ என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார்.
பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார் “.
“ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?”
“அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது:” நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும் “என்று ஓரிடத்தில் எழுதுகிறார்”.
வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர்.
“ஓ! அப்படியா! அப்ப நான் வர்ரேன். உங்க ‘பாய்’ பாரதியாரிடமும் சொல்லுங்க! என்றார் நண்பர் கிண்டலாக.
நான் புன்னகைத்தேன்.
நலமாக இருக்கிறாயா
அம்மா

ஆறும்
ஆறுக்கு வந்த ஆறும்
பெற்றெடுத்தப் பதினாறும்
உன்னை
முதியோர் இல்லத்திற்கு
அனுப்பவில்லை
நீ இருக்கும் இடத்தையே
முதியவள் இல்லமாய்
மாற்றிவிட்டு
வெளிநாடுகளுக்குப் பறந்துவிட்டன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எங்களுக்குத் தவித்தபோது
உனக்கே தவித்ததுபோலத்
தண்ணீரோடு நின்றாய்
இன்று
உன் தவித்த வாய்க்குத்
தண்ணீர்தர உன்னுடன்
ஒருவருமே இல்லை
கண்ணீரோடு நிற்கிறாய்

*

பிள்ளைகள் சுகம் மட்டுமே
போதும் என்ற தியாகத்தைப்
பொட்டலாய்ப் போன
உன் வாழ்க்கையிலும்
தீபமாய் ஏற்றிக்கொண்டாய்

ஐந்து ஆண் பெற்ற உனக்கு
பெண்பிள்ளை என்றால் உயிர்

மருமகளிடமே
இத்தனைப் பாசம் கொட்டும் நீ
மகளிடம் எத்தனைக் கொட்டச்
சேர்த்துச் சேர்த்து வைத்துக்
காத்திருந்திருப்பாய்
உன் கனவுதிர் இரவுகளிலும்
தரிசுப் பகல்களிலும்

*

இன்று உன்னோடு
சேர்ந்து வாழும் ஜீவன்கள்
நீ பெற்ற பிள்ளைகள் அல்ல
நீ பெற்ற நோய்கள்தாம்

காசுதருவோம் வீடுதருவோம்
ஸ்கைப் வழியே முத்தம் தருவோம்
வேறு எதைத் தந்துவிடப் போகிறோம்

உன் உடல் நோய்க்கு
உலகின் எந்த மூலையில் இருந்தாலும்
கொண்டுவரச்சொல்லி
மருந்து தருவோம்

உன் மன நோய்க்கு
பொங்கும் கண்ணீரைத் தவிர
வேறு என்ன தருவோம்

*

வெளிநாடு சென்றால்
எவனும்
பணக்காரன் ஆவதில்லை
எல்லோருமே
பிச்சைக்காரர்கள்தான்
ஆகிறார்கள்

*

விமானம் ஏற
உன் கால்களுக்கு வலுவில்லை
ஆகாயப் பயணம் செய்ய
உன் நெஞ்சுக்குள் திடமூச்சு இல்லை

தாபங்களும் தவிப்புகளுமோ
நாளும் பொழுதும்
பல்லாயிரம்கோடி மைல்களை
அநாயாசமாய்க்
கடந்து கடந்து உயிர்கடுக்கத்
தேம்பி நிற்கின்றன

*

நலமாக இருக்கிறாயா
அம்மா

எப்படி
நலமாக இருப்பாய்

நீ எத்தனைதான் சமாளித்தாலும்
உன் காயங்களை மறைத்து மறைத்து
நல்லா இருக்கேண்டா நல்லா இருக்கேண்டா
என்று நீ சொல்லிக்கொண்டே இருந்தாலும்

உன் பிள்ளைகள் எல்லோரையும்
ஒருநாளேனும் ஒன்றாய் ஒரு கூடத்தில்
ஒற்றை இரவிலாவது
வரிசையாய் மெத்தையிட்டு
அடுக்கடுக்காய்ப் படுக்க வைத்து
இந்தக் கடைசி முதல் அந்தக் கடைசிவரை
பார்த்துப் பார்த்து பேசிப்பேசி
அணைத்து அணைத்து
ஆனந்தக் கண்ணீர் உகுத்து உகுத்து
உறங்கித் தீர்க்க வேண்டும்
என்ற உன் ஆசையை உன்னால்
மறைக்கவே முடியவில்லையே
அம்மா

*
நலமாக இருக்கிறாயா
அம்மா

இதோ
இந்த மண்ணில்தான் கேட்கிறாய்
உன் சொர்க்கத்தை

அது ஒன்றும்
கிடைக்கவே கிடைக்காத
பேராசையும் இல்லை

என் வேண்டுதலும் உனக்காக
அது ஒன்றுதான் அம்மா

இதோ
வெகு பக்கத்தில் இருக்கிறது

இதோ
இப்போது வந்துவிடப் போகிறது

இதோ இதோ
எல்லோரும் ஒன்றாக
உன்னுடன் இருப்போம்

அந்த நினைவுகளில்
கனியும் கனவுகளில்
நீ நலமாக இரு அம்மா

- அன்புடன் புகாரி  நவம்பர் 5, 2016
*****

எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கிறது

வேறு எவரின் கதையோடும்
ஒன்றிப்போகாமல்
தனக்கே தனக்கான கதை என்று
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எவ்வளவு விளக்கமாகச் சொன்னாலும்
உன்னால் புரிந்துகொள்ளவே முடியாது
என்று சத்தியம் செய்யும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

எனக்கு நடந்ததுபோல்
இந்த உலகில் எவருக்குமே
நடந்துவிடவே கூடாது என்று
கண்ணீராடிக் கேட்டுக்கொள்ளும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

என் நிலை மட்டும்
எவருக்கேனும் வந்திருந்தால்
என்றோ அவர்
மண்ணோடு மண்ணாக
மடிந்துபோயிருப்பார் என்று
திட்டவட்டமாகச் சொல்லும்
ஒரு கதை
எல்லோரிடமும் இருக்கிறது

ஒவ்வொரு கையின்
ரேகைகளைப் போலவே
அத்தனைபேர் வாழ்க்கையுமே
வித்தியாசமானவைதானா

வலி என்பது
போதை தரும் சக்தியா

உள்ளுக்குள் வெகுநாட்களாய்
ஊறி ஊறிப் புளித்துப்போய்
நுரைத்துக்கொண்டு நிற்கும்
உணர்வுகளும் நினைவுகளும்தான்
வலியா வேதனையா

மதுவில் மூழ்கியவன் உளறுவதைப்போல
வலியில் மூழ்கியவனும்
தான் என்ன சொல்கிறோம்
எப்படிச் சொல்கிறோம்
என்பதையே அறியாதவனாய்ப்
பினாத்துகிறானே

ஆனாலும்
ஒருவனின் துக்கத்தைப்
போதை என்று சொல்லும்போது
உள்ளுக்குள் திரள்திரளாய்
துக்கம் பற்றிக்கொண்டு வருகிறது

துக்கத்தைவிட்டு
விலகிக்கொள்ளுங்கள்

துக்கம்
நம் உடன் பிறந்தவையல்ல

காலில் குத்திய முள்ளைக்
கையில் எடுத்துத்
தலையுல் குத்திக்கொள்வதுதான்
வலியும் துயரமும் துக்கமும்

உங்கள் கதைகளை எல்லாம்
மூட்டைகட்டிக்
குப்பையில் எறியுங்கள்

எறிந்த குப்பையை
மறக்காமல்
தீயிட்டுக் கொளுத்திவிட்டுத்
திரும்பிப் பார்க்காமல் நடங்கள்

பிறகும் எல்லோரிடமும்
ஒரு கதை இருக்கும்

ஆனால் அது
பொதுவான சுகமான
ஒரே கதையாக இருக்கும்
வெற்றிக்
கதையாக இருக்கும்

அன்புடன் புகாரி
20161105