30 அன்புடன் இதயம்


விரல்கள் விரித்து
விரல்கள் கோத்து
விலகா உறவாய்

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

என்
கையளவே நிறைந்த
உன் சந்தோசங்களையும்
உன்
கையளவே நிறைந்த
என் சந்தோசங்களையும்
இணைத்த சந்தோசத்தில்
முளைத்த சந்தோசங்கள்
வான்நிறைத்துப் பூப்பதை
வாய்பிளந்து ரசிக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

கிட்டத்தட்ட நெருக்கமென
கிட்டக்கிட்டக் கிடக்கும்
தண்டவாளத் தொடர்களாய்
நம்
இருவர் எண்ணங்களும்
அருகருகே
நெருங்கிக் கிடப்பதை
அதிசயமாய்க் கண்டு
அளவற்ற பெருமிதம் கொள்ள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

முகமூடி உடுத்தாத
சத்திய முகங்களுடன்
சுத்த பாவங்களை மட்டுமே
சத்தமாய்க் காட்டி
என்றும் நிலைக்கும் நிதர்சனம் தழுவ

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க
என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

’சரியா?’ -- ’நூறுசதம்’
’அழகா?’ -- ’அற்புதம்’
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

’சரியா?’ -- ’ம்ஹூம்’
’அழகா?’ -- ’மாற்று’
என்னும் அக்கறை
விமரிசனங்களும் தந்தருள

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த
உலக நம்பிக்கை அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள்
ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய

         அன்பே நீயென்
         உடன் வருவாயா

இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க

         அன்பே நீயென்
         உடன் வருவாயா


25 கவியரசனே கண்ணதாசனே
அக்டோபர் 17, 1981 கவியரசர் கண்ணதாசன் நினைவு நாள். அந்த நினைவுநாளில் அவர் நினைவாக நான் அவரின் பிறந்தநாளுக்காக எழுதிய ஒரு கவிதை


*

எத்தனை எத்தனையோ
காலங்கள்
எப்படி எப்படியோ
கழிந்தாலும்

சொப்பனத்திலும்
தப்பிப்போகாமல்
நெஞ்ச மத்தியில்
ஞாபகப் பேழைக்குள்

அப்படி அப்படியே
ஒட்டிக்கிடக்கும்
சில
மாண்புமிகு நினைவுகள்

அப்படி ஓர் நினைவினில்
நேசக்கவிதா ஆசனமிட்டு
கம்பீரமாய் அமர்ந்திருக்கும்

என்
இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

ஆனால் நீ இறந்த நாள்தானே
என் ஞாபக நெடுநதியில்
தன்னந்தனிக் கருப்பு ஓடமாய்
தத்தளித்துத் தத்தளித்து
என் உயிரைக் கீறுகிறது

ம்ம்ம்
எப்படி மறப்பது

அன்றுதானே
நீ உன் கடைசி கவிதையை
எழுதி முடித்தாய்..

அன்றெல்லாம்
கூட்டமாய் நண்பர்கள்
என் கூடவே இருந்தபோதும்
எவருக்கும் புலப்படாத
என் தனிமைக் கூட்டுக்குள்
நான் அடைந்து அடைந்து
உள்ளுக்குள் உடைந்து
உதிர்த்த முத்தெழுத்துக்களை
மீண்டும் இன்று
கோத்தெடுத்துக் கட்டுகிறேன்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

இதோ என் கண்ணீர்:

ஞானத் தாமரை ஒன்று
மண்ணின் இரைப்பையில்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது

வேதனை நெஞ்சங்களை
வருடிக் கொடுக்கும்
ஒரு மகத்தான கவிமலர்க்கரம்
தீக்கரங்களுடன்
கை குலுக்கிக் கொண்டுவிட்டது

மாகவியே
இதுதான் உன்
கடைசிக் கவிதையா

ஆனால்
இதை நீ இவ்வளவு சீக்கிரம்
இத்துணைச் சோகமாய்
எழுதி விடுவாய்
என்று நான் எண்ணியிருக்கவில்லையே

கவிதேவனே
உன் வலக்கர விரல்கள் ஆறு

ஆம்..
மைவற்றா தூரிகையும்
உனக்கொரு விரல்தானே

உன்
பாதம்பட்ட இடங்களில்தாம்
எத்தனைக் கவிமணம்

நீ
மயானத் தீவில் நின்று
பாடினாலும்
அங்கே மண்ணைப் பிளந்து
செவிப் பூக்கள் வெளிப்படுமே

உனக்குத் தெரியுமா
கடைசியில் இடும்
என் கையெழுத்தைத் தவிர
என் காதல் கடிதங்களில்
உன் கவிதை முத்துக்களே
ரகசியம் பேசுகின்றன

கண்ணதாசா
என் உயிர் தொட்ட
உன்னதக் கவிஞனே

உன் செவிமலர்க் கதவுகளில்
சாவுமணி ஒலித்தபோது
நீ என்ன செய்தாய்

அழுதாயா

இல்லை
நீ அழுதிருக்கமாட்டாய்

அந்த அகோர ராகத்திற்கும்
ஓர் அழகு கவியல்லவா
படைத்திருப்பாய்

நீ
இருந்தது கொஞ்ச நாள்
இயற்றியது எத்தனை கோடி

நிறுத்தப்படாத
இந்த என் அழுகை
உன் சமாதியைக் கரைத்து
உன்னை வெளிக்கொண்டு வருமா

என் இனிய கவிஞனே
கவியரசனே கண்ணதாசனே
இன்றுனக்குப் பிறந்தநாளாம்

உன் பிறந்தநாளுக்கு
நீ இறந்தநாளின்
வேதனைக் கண்ணீரே
நான் தரும்
பரிசுத்தமான பெரும் பரிசு..

கண்ணதாசன்: ஜூன் 24, 1927 - அக்டோபர் 17, 1981

22 தமிழை மறப்பதோ தமிழா

தமிழை மறப்பதோ தமிழா
உன் தரமின்று தாழ்வதோ தமிழா

கற்கும் மொழிகள்
கணக்கற்றவையாயினும்
உன் உயிரின் மொழியென்பது
தமிழன்றி வேறோ

தமிழச்சியிடம்
தாய்ப்பால் பருகிப் பருகி
நிமிர்ந்த உன் முதுகெலும்பை
தாய்மொழிக்கன்றி
வேறெதற்கும் வளைக்கலாமோ

அடகுவைக்க
உன் உயிரை வேண்டுமானால் உரசிப்பார்
தன்மானத்தையா தொடுவாய்

தாய்மொழி இழந்தவன்
தன் முகம் இழந்தவன்

தமிழற்றுப் போனவனோ
தன் தலையற்றுப் போனவனன்றோ

கணினிக் கோட்டையிலும்
இணைய இடுக்குகளிலும்
இணைச்செங்கோல் ஏந்தி
ஏகமாய் ஒளிவீசும்
நம் செந்தமிழ் மறுப்பதோ தமிழா

நம்
மூச்சுக் காற்றிலும்
கன்னித் தமிழ் மணம்
என்றும் வீசுதல் வேண்டாமோ

நம்
இரத்தக் குழாய்களிலும்
சுத்தத் தமிழெழுத்துக்கள்
வற்றாது ஓடுதல் கூடாதோ

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

வார்த்தைகள் அவிழ்ந்து உதிரும்போது
சுற்றுப்புறமெங்கும் சுகந்தம் வீசுமே
அதற்காக

நாக்கு நர்த்தனங்களில்
நல்லோசை எழும்புமே
அதற்காக

உச்சரிப்பு ஒவ்வொன்றும்
சிற்பங்கள் செதுக்குமே
அதற்காக

எந்த இசையிலும் இயைந்து கலந்து
நெஞ்சின் மத்தியில்
கொஞ்சிக் கிசுகிசுக்குமே
அதற்காக

உள்ள உணர்வுகளை அள்ளிப் பொழிய
நல்ல வார்த்தைகள்
நயாகராவாய்ப் பொங்குமே
அதற்காக

வா தமிழா
நல்ல தமிழில் நாம்
நாளெல்லாம் பேசுவோம்
வா

10 தோழியரே தோழியரே


தோழியரே தோழியரே...

ஓ பெண்ணே நீ போகாதே பின்னே
நீ பின்னுக்குப்போனால்
வாழ்க்கை மண்ணாகிப் போகும்
உன் கண்ணுக்கு முன்னே

போராடு
யாரையும் சாகடிக்க அல்ல
உன்னையே நீ வாழ வைக்க
உன்னோடு இந்த உலகப் பெண்களையும்
உயர்த்தி வைக்க

முன்னுக்கு வருவதென்பது
முதலையே மோசமாக்கும் மூர்க்கச் செயலல்ல
ஆண்களை மிதித்துக்கொண்டு
அதிகாரம் காட்டுகின்ற அவலமல்ல
ஆணோடு பெண்ணும் சமமென்றே கைகோக்கும்
அற்புதம் செய்ய

பிறப்புச் சூட்சுமம் உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர் உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள் பெண்
ஆக ஊதாரிதானே ஆண்
கவலையை விடுங்கள்

பெண்களின் விருப்பமே அறியாமல்
ஓடிக்கொண்டிருக்கலாம் உங்கள் ஆண்கள்
அவர்களிடம் கேளுங்கள் தோழியரே
காதல் பேசிய விழிகளால் மட்டுமல்ல
சம்மதம் சொன்ன மொழிகளாலும்
உங்கள் தேவைகளைக் கேளுங்கள்

தொட்ட நாள் முதல் தொடரும் நாளெல்லாம்
விட்டு விடாமல் வீரமாய் நின்று
வார்த்தை மொட்டவிழ்த்துக் கேளுங்கள்
கேட்பது என்பது எவருக்கும் பொது
நாளெல்லாம் அவர்கள் உங்களிடம்
கேட்டுக் கேட்டுப் பெறுகிறார்களே அதைப் போல
கேளுங்கள் தோழியரே

வரம் கேட்டு
வாங்கிக்கொள்வதெல்லாம் பெண்கள்
அதைக் கொடுத்துவிட்டு அல்லல் படுபவரே
ஆண்கள் என்றுதானே
நம் இலக்கியங்களும் எழுதப் பட்டிருக்கின்றன
அந்தப் பயத்தில் எவரேனும் முரண்டுபிடிக்கலாம்
அது வெறும் பயமே தவிர
பாரபட்சம் காட்டும் போக்கு அல்ல

உங்கள் வரங்கள் வாழ்வதற்கன்றி
வதைப்பதற்கல்ல என்று
உங்கள் முகப்பூக்களின் விழிச் சுவடிகளில்
இனிமையாய்த் தெளிவாய் எழுதி வையுங்கள்

பிறகு பாருங்கள்
நீங்கள் கேட்கும் முன்னரே
எல்லாமும் கிடைக்கக் கூடும்

திருமணம் என்பது தண்டனை அல்ல
செக்கில் கட்டிச் சிதைக்கும் காரியமல்ல
தலையைக் கொய்யும் தலையெழுத்தல்ல
அடிமையாவதற்கு அடிமைகளே எழுதித் தந்த
அடிமைச் சாசனம் அல்ல

இதைத் தெளிவாக்கிக்கொண்டுவிட்டால் தோழியரே
பெண்ணின் மீது இடப்பட்ட அத்தனை விலங்குகளும்
பட்டுப் பட்டென்று தெறித்துச் சிதறி
எங்கும் சமத்துவமே துளிர்க்கும்
வாழ்த்துக்கள்

6 வெள்ளிப் பௌர்ணமியே


வெள்ளிக் கால்கொலுசு
வீதியெல்லாந் தாளமிட
முல்லைச் சிரிப்புதிர்த்து
முந்தானைக் கையசைத்து

வெள்ளிப் பௌர்ணமியே
விரைகிறாயடி - மனதைக்
கிள்ளித் தவிக்கவிட்டே
மறைகிறாயடி

அல்லிக் குளத்தினிலே
அந்தியொளி மஞ்சளிலே
மெல்ல நீரிறைத்து
முகப்பூவை ஈரமாக்கிப்

புள்ளி இளமானே
நிற்கிறாயடி - நெஞ்சை
அள்ளிப் பனிமடியில்
வைக்கிறாயடி

உள்ளக் கனவுகளை
ஒருவருக்கும் சொல்லாமல்
நெல்லி மரத்தடியில்
நெடுநேரம் தலைசாய்த்து

மெல்ல வேறுலகம்
நுழைகிறாயடி - என்பால்
உள்ளம் உருகுவதை
ரசிக்கிறாயடி

கள்ளக் கண்ணோட்டம்
கண்மணியே போதுமினி
உள்ளம் எனக்கென்றே
உருகிவரும் சத்தியத்தைக்

கிள்ளை மொழியாலே
சொல்லிவிடடி - என்னைக்
கொல்லும் தவிப்பினையே
கிள்ளிவிடடி

3 கைகள் ஏந்தி

கழுத்தில் தொங்கிய
தங்கச் சங்கிலியைக்
காணவில்லை நேற்றுமுதல்

ஓர்
அனாதை ஆசிரமத்திற்கு
வழங்கியிருக்கலாம்

மனம்
எவ்வளவு நிறைவாய்
இருந்திருக்கும்


உருப்படாத படம்
நூறு ரூபாய் தண்டம்

ஓர் ஏழை வீட்டு
அடுப்பெரிக்க
காரணமாயிருந்திருக்கலாம்

நல்லதாய்
நான்கு
வாழ்த்தாவது வந்திருக்கும்



சட்டைப்பையில் இருந்த
பத்து ரூபாய்
பறிபோயிருக்கிறது
பேருந்து நிறுத்தம் வரும்முன்

கண்ணில்லாப்
பிச்சைக்காரிக்கு
கண்திறந்து போட்டிருக்கலாம்

அந்தச் சிரிப்பில்
இறைவனையாவது
பார்த்திருக்கலாம்



சரி சரி

இனியும் இந்த
லாம்... லாம்.... கள் வேண்டாம்
புறப்படு

இன்றைய தேதிக்கு
உன் மனிதாபிமானத்தின்
மதிப்பென்ன

எத்தனையோ
மனிதநேய அமைப்புகள்
கைகள் ஏந்திய வண்ணம்

கொடுக்கத்தான்
மனிதர்கள் இல்லை

2 நான்தான் வேண்டும் எனக்கு

 அன்பே

நீ
கேட்டதைவிடக்
கூடுதலாய்த்தானே கொடுத்தேன்
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால்
சுடப்பட்ட நிஜங்கள்
என்றுதானே நம்பினேன்

காதல்
வெறும் வாய் வித்தையல்ல
செயல் என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து
வண்ண வண்ணக் கனவுகளை
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன்
என்று நான்
உன்னைப் பார்த்துத்தானே
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும்
காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய்

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில்
செலுத்தினாய்

உன்
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

இறுதியாய்
என் உயர்காதல் விழிநோக்கும்
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரியஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன்

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான்

மௌனங்கள் பூட்டி உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது

உன்னை இழந்தேன் என்பதை நான்
நம்பமறுத்தாலும்
தொடர்ந்து என்னை என்னாலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்
மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய்
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

ஆ. அணிந்துரை - கவிப்பேரரசு வைரமுத்து


புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகள் மீது எனக்கு எப்போதும் ஒரு மரியாதை உண்டு. காரணம், என் கவனத்தில் கல்லெறியும் அவர்களது கனமான எழுத்துக்கள்தாம்.

அந்த வரிசையில் நெஞ்சைப் பிழியும் ஆழமான பதிவுகளையும், புகைப்படத்தின் நிழலுருவுக்கு நிஜம் கொடுக்கும் வார்த்தைகளையும் சுமந்து வந்திருக்கும் கவிஞர் புகாரியின் "வெளிச்ச அழைப்புகள்" வாசித்த போது மெல்லிய அதிர்வுகள் மனமெங்கும் பரவுவதை உனர்ந்தேன்.

குழந்தையின் புகைப்படத்தோடு தொடங்கும் இவரது கவிதைப் பிரசவம் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து - நடந்து - பேச முற்படும்போது முதிர்ந்த சிந்தனைகள் சிறகடிக்கின்றன.

"விழிகளில்
நம்பிக்கை ஒளியூட்டி
நடுங்கும் கரங்களைப்
பிடித்து நிறுத்தி
இயல்பு வாழ்க்கைக்குள்
இழுத்துச் செல்லும்
அன்புக்கரம்
கவிதை"


கவிதை குறித்த இந்தக் கவிதை ஓர் அழகான வெளிப்பாடு.

இளங்குழந்தை இளைஞனானதும் காதலியின் மௌனம் கலையும் நேரத்திற்காய் தவமிருக்கையில்

"அடியே
உன் மௌனமென்ன
என் உயிரைக் கிள்ளிவிடும்
பவள நகங்களா"
- என்கிறார்.நம்பிக்கை குறித்த 'உலகம்' எனும் கவிதை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பொறித்துக் கொள்ள வேண்டிய முத்திரைக் கவிதை.

"அப்பப்பா
இத்தனை பேரையும்
மொத்தமாய் முத்தமிட
உனக்கே சாத்தியம்".


- தமிழ்நாட்டின் நயாகரா குற்றாலம் குறித்த கவிஞர் புகாரியின் வர்ணணையில் நம் மனமும் குளித்துக் குதூகலமடையும் சுகானுபவத்தை என்ன சொல்ல

஑இலவசம்஑ எனும் கவிதை வணிக வாழ்க்கையின் சாமர்த்தியத்தை அழகாகச் சித்தரித்து விழிப்புணர்வு ஊட்டுகிறது.

இந்த "வெளிச்ச அழைப்புகள்" இருட்டின் இலக்கணத்தைத் தேன் தோய்த்துத் தரும்போது எதார்த்தம் இனிக்கிறது.

கேளிக்கைகளோடு முடிந்து போகும் கவிதைத் தொகுப்போ என்ற என் எண்ணத்தின் திசையைத் திரும்பி பார்க்க வைத்தன ஑செப்டம்பர் 11, 2001ஒ, ஑இறுதியாய் ஒரு கேள்விஒ எனும் இரு கவிதைகள்.

நியூயார்க் கட்டடங்களைத் தீண்டிய தீவிரவாதத்தையும், குஜராத் மக்களின் மன அமைதி திருடிய வன்முறையையும் பதிவு செய்யும் போது கவிஞர் புகாரியின் ஈர இதயம் பற்றி எரிந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

சமகால நிகழ்வுகளின் பதிவுகளை நாளைய வரலாறாய் ஆக்குவது படைப்பாளர்களே அதில் புகாரியும் ஒருவர்.

அன்றாட வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களைச் சமூக விமர்சனத்துடன் பார்க்கும் இவரது பார்வையில் புதுமைகள் பூத்துக்குலுங்குகின்றன.

஑நினைத்துப் பார்க்கிறேன்ஒ கவிதையில் பொருள் தேடி கண்ணுக்குத் தெரியாத தேசத்தில் குடும்பத்தைப் பிரிந்து வாடும் தலைவனின் பிரிவுத் துயரை உணர்ச்சியோடு எழுதி உருகவைத்திருக்கிறார். அந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

"மண்ணுக்குப் பொழியாத
மழைமேகம் மேகமல்ல
தென்னையினைத் தழுவாத
தென்றலுமோர் தென்றலல்ல
கண்ணுக்குள் விரியாத
கனவும் ஓர் கனவல்ல
உன்னருகில் இல்லாயென்
உயிரும் ஓர் உயிரல்ல"


புதுக்கவிதையை விடவும் இவருக்கு இசை லயத்துடன் கூடிய இந்த நடை இயல்பாக அமைந்திருக்கிறது.

நவீனத்தின் போக்குவரத்து நெரிசலில் இருந்தாலும் கவிஞரால் ஑எழுது ஒரு கடுதாசிஒ கவிதை மூலம் கிராமத்து நடவு வாழ்க்கையோடும் நடந்துவர முடிகிறது; நேசத்தோடு அதன் வாழ்வியலை நுகர்ந்து வர முடிகிறது.

஑எங்கள் கலைக்கூடம் கலைந்ததுஒ எனும் நடிகர் திலகம் அவர்கள் பற்றிய கவிதை இத்தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று; அந்த மகா கலைஞனின் மகத்துவம் சொல்லும் அந்தக் கவிதையால் ஆசிரியர் என் மனதின் மதிப்பில் உயர்ந்தார்.

உற்றதை உணர்ச்சியின் உயிர்கெடாது வார்த்தெடுக்கும் வல்லமை சிலருக்கு மட்டுமே வாய்க்கும்; அந்த உன்னதம் கவிஞர் புகாரிக்கும் வாய்த்திருக்கிறது.

புதுக்கவிதையின் பொருளடர்த்தியோடும் சொற்செட்டுகளோடும் மனதில் சுருக்கெனத் தைக்கும்படி சொல்லும் ஆற்றலைப் புகாரி பெற்றிருக்கிறார்.

நுட்பமான கருத்தாழமும் பரந்து பட்ட பார்வையும் அமையப்பெற்றால் இன்னும் கனமான கவிதைகளை வருங்காலங்களில் படைப்பார் என்பது என் எண்ணம்.

இந்த "வெளிச்ச அழைப்புகள்" கவியுலகில் பிரகாசமான எதிர்காலத்தைக் கவிஞர் புகாரிக்குத் தரும் என்பதும் திண்ணம்.

கடல்தாண்டி இருந்தாலும் தமிழையே சுவாசிக்கும் புகாரியைப் போன்ற படைப்பாளிகளின் புதிய வரவுகளால் தமிழ்க் கவிதை தழைக்கும் என நம்புகிறேன்.

வாழ்த்துக்களோடு
வைரமுத்து

அ. முன்னுரை - வெளிச்ச அழைப்புகள்


கவிதைகளாக
இந்த மனசு
மனசாக
அந்தக்
கவிதைகள்

*

உயிர் முத்தங்கள்

என்னை
எழுதத்
தூண்டும்
உணர்வுகளுக்கும்
எழுத
வைக்கும்
தமிழுக்கும்

*

தமிழ் நெஞ்சங்களே

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில்
அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு
சிந்தனா முற்றத்தில்
கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே
எனக்குக் கவிதைகள்

என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை
எனக்குப் பிடித்த வண்ணமாய்
என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய்
இங்கே பிடித்து வைத்திருக்கிறேன்

எனக்கு ஞாபகம் முளைத்த
அந்தப் பழைய நாள் முதலாய்
கவிதைகளை என் உயிரின் ஆழம் வரை முகர்ந்து
நான் சுவைத்து வருகிறேன்

என் தாய் மொழி தமிழ் என்பதில்
எனக்கு அளவில்லா ஆனந்தம்
தமிழகத்தில் பிறந்த நான்
இன்று கனடாவில் வாழ்கிறேன்.

இங்கே,
ஒரு தமிழனைச் சந்தித்து
தமிழில் உரையாடும்போது மட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன்.

தமிழ் வாழ்க

கவிதைகளுடன்,
புகாரி

186 Staines Road
Toronto, Ontario M1X 1V3
Canada

416-500-0972
anbudanbuhari@gmail.com

30 வெளிச்ச அழைப்புகள்


எல்லோருக்கும் முதல்காதல் என்று ஒன்று வரும். பெரும்பாலும் அது தோல்வியாகவே முடிந்திருக்கும். அப்படித்தான் எனக்கும் ஆனது. பதின்ம வயதின் முதல் ஏக்கக் கனவுகள் சட்டென்று கீழே விழுந்து உடைந்ததும் மனம் கிடந்து துடிக்கும் பாருங்கள் அதைவிட கொடுமை வேறு ஒன்று இருக்க முடியாது.

சுமக்க முடியாதவனுக்குத்தான் சுமையின் வலி மிகுதி. நடக்க முடியாதவனுக்குத்தான் நடையின் முயற்சி கொடுமை. ஆயினும் காலம் தன் மழையைக் கருணையோடு அந்த இளைய இதயத்திலும் பொழியத்தான் செய்கிறது. வாழ்க்கை வந்து முன்னின்று வாவென்று அழைக்க கனவுகள் மெல்ல வழிவிட்டுவிடுகின்றன. நாம் நடக்கத் தொடங்கிவிடுகிறோம். அப்போது நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதனம் நமக்கு நாமே அருளும் மகா வரம்.

மத்திய கிழக்குக்குப் புறப்பட்ட விழிகளின் முன்னால் சூரியன் தன் ஒளிக்கரங்களை நீட்டுகிறான். அந்த வெளிச்ச அழைப்புகள் வாழ்க்கையின் படிக்கட்டுகளை செம்மையாய் அமைத்து அடியெடுத்து வைக்கச் சொல்லி அன்பு காட்டுகிறது ஆதரவு தருகிறது. வேறென்ன வேண்டும்?



வெளிச்ச அழைப்புகள்

அதோ
நம் கதாநாயகன்
செழித்த தாடிக்குள்
வாடிக்கிடக்கிறானே
அவனேதான்

கண்களில் ஒரு
காதல்கொடி ஏற்றினான் நேற்று

பாவம்
இன்று அது
அரைக்கம்பத்தில்
நிறம்மாறி இறங்கி நிற்க
வெறும்
கண்ணீர்க் கொடியாகிப்போனான்

நின்றுபோன
கடிகாரத்தைப்போல
அவன் நெஞ்சம்
கடந்தகால
வசந்தங்களையே
காட்டிக் கொண்டிருக்கிறது

அரளிப்பூ கூட
அழகாய்த்தான் சிரிக்கிறது

அப்படி ஒரு
புறச்சிரிப்பில் தானே
அவன் தன்னை இழந்து விட்டான்

வாலிபத்தின் நச்சரிப்பில்
அவன்
முட்டாளாகிக் கொண்டிருக்கிறான்
என்று அவனுக்குத்
தெரியாமல்தான் போய்விட்டது

ஆம்
அவனை
அவனாலேயே
புரிந்து கொள்ள முடியவில்லை

கண்களிலும்
கன்னங்களிலும் வழிந்த
தென்னங்கள்
அவள்
உள்ளத்தைச் சுவைக்கும் முன்
அவனை மயங்கச் செய்து விட்டது

போதை தெளிந்தபோது
புத்தி தெளிந்ததில்
உடைக்கப்பட்ட
அவன் இதயம்
ஒன்று சேரவா போகிறது

காலன் கட்டிவைத்த
கவலை வலைக்குள் சிக்கிக் கொண்டு
நிம்மதிக்குத் தவமிருக்கிறான்

வலையை அறுத்தெறியும்
வலிமையில்லாமலில்லை

அதில்
சிக்கிக் கிடப்பதிலும்
அவனொரு
சுகமல்லவா காண்கிறான்

ஆயினும்.

அவன் எதிரே
மௌனமாய்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
இரத்த பந்தங்களை ஊடுருவுகின்றான்

தன்
கைகளைக் கொண்டு
அவர்களின் கோட்டையைத் திறக்க
நம்பிக்கை பூண்டிருக்கும்
அந்தக்
கண்களை நோக்குகின்றான்

எழுந்து நடப்பதென்பது
நெருஞ்சி முட்பாதையில்
விழிகளையே பாதங்களாக்கி
நடைபயில்வதைப் போலத்தான்

இருப்பினும்
அந்தத் தவநடை

அவனையொரு
வெளிச்சமாகவல்லவா
உயர்த்திவிடும்

ஆம்
நம் கதாநாயகன்
நடக்கத் துவங்கிவிட்டான்

அவன் பயணம்
இனி
கிழக்கை நோக்கித்தான்

அவனை வரவேற்க
வெளிச்ச அழைப்புகள்
என்றென்றும்
விழித்துக்கொண்டே
இருக்கும்.

29 ஊசிகளாய் உறையும் கனடியக் குளிர்

எங்கள் ஊரில், அதாவது கனடாவில் உள்ள டொராண்டோ நகரத்தில் (22 ஜனவரி 2013) இன்று குளிர் எவ்வளவு தெரியுமா? மைனஸ் 26 செல்சியஸ். 

உணவைக் கெடாமல் வைத்திருக்கும் ரெஃப்ரிஜிரேட்டர் அதாவது குளிர்ப் பெட்டியில் இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியல் இருந்தால் போதும். ஆனால் எங்கள் ஊரில் மைனஸ் 26 செல்சியஸ்.

உணவை உறைநிலையில் வைத்திருக்கும் ஃப்ரீசர் அதாவது குளிர்ப்பதனப் பெட்டியில் மைனஸ் 18 லிருந்து மைனஸ் 23 வரை இருக்கும். ஆனால் எங்கள் ஊரில் இப்போது மைனஸ் 26. 

இது வெறும் மைனஸ் 26ஆக மட்டுமே இருக்காது மேலும் இறங்கி இறங்கி மைனஸ் நாற்பதுக்குக்கூடச் செல்லக்கூடும்.

குளிர்பதனப் பெட்டியில் இருக்கும் உணவு கெட்டுவிடாது, பாதுகாப்பாக இருக்கும். அதனால்தான் நாங்களும் கெட்டுப் போகாமல் அப்படியே பிறந்த குழந்தைகளாகவே இருக்கிறோம் ;-)

நான் முதன் முதலில் 1999ல் கனடாவில் குளிரைச் சந்தித்தபோது எழுதிய குளிர்க் கவிதை இப்போதும் என் நேசிப்புக்குரியதாகவே இருக்கிறது.


ஆடை துளைத்து
தோல் துளைத்து
தசைகள் துளைத்து
இரத்த நாளங்கள் துளைத்து
இருதயம் துளைத்து
உயிர் துளைத்து

இதோ
உள்ளே ஊசிகளாய்
உறைய வந்துவிட்டது
அந்தக் கனடியக் குளிர்

ஓ தீக் குழம்பே
நீதான்
எத்தனைச் சுகமாகிப் போனாய்
இப்போது

உன்னையே
ஆடையாய் நெய்து நான்
உடுத்திக் கொள்ளத் தவிக்கிறேன்
இந்தக் குளிருக்கு

காற்றே
உனக்குக் குளிர் தாளாவிட்டால்
வேறு எங்கேனும் போய்த் தொலை
கதறிக் கொண்டு வந்து
என்னை ஏன் குதறுகிறாய்

நானோ
துளைகளே இல்லாத
இன்னுமோர் கவசத் தோல் கேட்டு
இங்கே தவமிருக்கிறேன்

திமு திமுவென வந்திறங்கும்
வேற்றுக் கோளின்
வெள்ளைப் சிப்பாய்களாய்
எங்கும் பனி

கொட்டுகிறது
கொட்டுகிறது

அன்று
பூத்துப் பூத்துக் குலுங்கிய
பூக்களெல்லாம் இன்று எங்கே

சிகப்பும் மஞ்சளுமாய்
வர்ணங்கள் மாறி மாறி
சின்னச் சின்னக் கன்னியராய்
கைகோர்த்தும் முகம்முட்டியும்
ஆடி ஆடி
உள்ளத்தின் உட்தளங்களையும்
கொள்ளையடித்த
அந்த இலைகள் எங்கே

எழிலத்தனையும் இழந்துவிட்டு
எங்கெங்கும்
சிலுவையில் அறைந்த ஆணிகளாய்
கண்ணீர்க் கசிந்து நிற்கும்
மூளி மரங்களே
இன்று மிச்சம்

உயிர்களை
வேர்களில் ஒளித்து வைத்துக் கொண்டு
இன்னும் எத்தனை நாட்கள்தாம்
தங்களையே கரங்களாய் உயர்த்தி
அந்த வானதேவனிடம்
யாசித்து நிற்குமோ
இந்தப் பச்சை ஜீவன்கள்

அங்கிங்கெனாதபடி
எங்கும் பனியின் படர்வு

எண்ணிக்கையில் அடங்காத
வெள்ளை வெள்ளைப் பிரமிடுகளாய்

வெண்ணிற முகமூடிக்குள்
ஒளிந்து கொண்டு
குளிர் மூச்சு விடும் ராட்சச பூதங்களாய்

சிறைப்பட்ட வசந்தங்கள்
வானிலிருந்து சிந்தும்
வெள்ளை இரத்தமாய்
எங்கும் பனியின் படர்வு

எப்படி?

என் கண்கள் பார்த்திருக்க
இந்தக்
காடு மலை மேடுகளெல்லாம்ஒரே நாளில்
வெள்ளை ஆடைகட்டி
விதவைகளாகிப் போயின

ஆடைகளும்
ஆடை உடுத்திக் கொள்ளும் இந்த நாட்களில்
ஆள் அரவமில்லாத அனாதை வீதிகளில்
காற்று மட்டும் கட்டறுந்து ஓடுகிறது

காது மடல்களை
கண்ணில் அகப்படாத கொடிய மிருகம்
தன் விஷப் பற்களால் கடித்துத் துப்பியதுபோல்
ஒரு சுளீர் வலி நிரந்தரமாய் நீள்கிறது

தொடு உணர்வுகளெல்லாம்
எங்கோ தொலைந்துபோயின

கால்களைத் தொட்டுப் பார்க்கக்
கைகளை நீட்டினால்
கால்களையும் காணவில்லை
தொடப்போன கைகளையும் காணவில்லை

இதயத்துக்குள்
இனம்புரியாத ஏதோ ஓர்
இக்கட்டு நிலவுகிறது

நுரையீரல் சுவர்களில்
குளிர் ஈக்கள்
சவப்பெட்டிக் கூடு கட்டுகின்றன

பனிக்குள் காணாமல்போன
போக்குவரத்துச் சாலைகளில்
ஓடமறுக்கும் காருடன்
ஒரு பொழுது சிக்கிக் கொண்டால்
கடைசி ஆசை என்னவென்று கேட்காமலேயே
கொன்றுபோடும் இந்தக் குளிர்

வீதியெங்கும் வெள்ளைச் சகதி
சாலைகளில் உப்பைத்தூவி
உழுது உழுது நின்றால்தான்
இங்கே கார்கள் ஓடும்

குளிர்ப்பதனப் பெட்டிக்குள் அமர்ந்து
இறுக மூடிக்கொண்டுவிட்டால்
இந்தக் கனடியக் குளிரிலிருந்து
கொஞ்சம் தப்பிக்கலாமோ
என்றுகூடத் தோன்றுகிறது

ஒரே ஒருநாள்
இந்த மின்சாரம்
தன் மூச்சை நிறுத்திக் கொண்டுவிட்டால்
ஒட்டுமொத்த மக்களும்
மூச்சின்றிப் போவார்களோ என்ற பயம்
என்னை முட்டுகிறது

பூமியே
கொஞ்சம் வேகமாய் ஓடு

மீண்டும் அந்த
கனடிய வசந்தங்களில்
எங்களைத் தவழவிடு

அங்கேயே நீ
நிதானமாய் இளைப்பாறலாம்.

28 எங்கள் கலைக்கூடம் கலைந்தது


ஜூலை 21, 2001

காற்று, ஓர் உன்னத தமிழனின் மூச்சுக்கு நிராகரிக்கப்பட்டு தன் புனிதம் கெட்டது. தமிழ் மொழிபோல் இனிதாவது வேறெங்கும் காணோம் என்று பாரதி சொன்னான். அதை நிரூபிக்கும் சான்றுகளாய், தன் உயிர் சொட்டும் உச்சரிப்பால், நம் செவிகளையெல்லாம் தலையாட்ட வைத்த நடிகர் திலகம் இன்று மறைந்தார்.

கட்டபொம்மனாகட்டும் அல்லது அந்தக் கடவுளாகட்டும் அவர் காட்டாமல் எந்தப் பாமரனுக்கும் தெரியாது. நகமும் முடியும்கூட நடிப்பை உருக்கி உணர்வுகளை வார்க்க, பொய்யான திரைக்குள், நிஜத்தைக் காட்டி தமிழ் சினிமாவுக்குக் கிரீடம் சூட்டிய பத்மஸ்ரீ இன்று மறைந்தார்.

எப்படி கர்ஜிப்பது என்று சிங்கங்களுக்கு வகுப்பெடுக்கும் குரல் சக்கரவர்த்தி. பாசமலர் பார்த்தால், நமெக்கெல்லாம் சகோதரனாவார். புதிய பறவை பார்த்தால், 'எங்கே நிம்மதி' என்று நம்மையும் அலையவைப்பார். பார்க்க வந்தவர்களையும் பாத்திரங்களாக்கி வென்ற செவாலியர் சிவாஜி இன்று மறைந்தார்.

நடிப்பின் அகராதி, மூன்றாம் தமிழின் ஒப்பற்ற கலைக் களஞ்சியம், இப்படி மறைந்துவிட்டார், மறைந்துவிட்டார் என்று கூறுவது சரியா கலைஞர்கள் மறைவதில்லை. கலைஞர்களையே உருவாக்கும் பிரம்மக் கலைஞருக்கு ஏது மறைவு




தீந்தமிழ்ச் சாறெடுத்து
தித்திக்கும் தேன்குழைத்து
பாந்தமாய்ப் பேசியாடி
பலகோடி மக்கள் நெஞ்சில்

வேந்தனாய் பவனிவந்த
வெற்றித்திலகமே தமிழனே
ஏந்தினாய் தீபமொன்று
எந்நாளும் அணையுமோ


தவமெனப் பெற்றாளே
தமிழன்னை உனையிங்கே
எவருண்டு உன்நடிப்பை
எள்ளளவும் நகலெடுக்க

சிவனே என்றாலும்
சிவாஜி நீ காட்டாது
நவரசக் கலைஞனே
நானிலந்தான் அறியுமோ


நடையெனில் ஒருநூறு
நகைப்பெனில் நானூறு
புடைக்கின்ற நரம்புகளில்
புவியையே அளந்தவன்

தடையற்ற வெள்ளமெனத்
தமிழ்ச்சொல் வீசியே
படையெடுத்து நின்றவுன்
பார்புகழ் அழியுமோ


இனிதெனில் தமிழேயென
ஈடற்ற மாகவியும்
பனிமலர்த் தூவியே
போற்றினான் செந்தமிழை

தனியனாய் நின்றதனை
தங்கக் குரலெடுத்து
இனியது தமிழேயென
வழிமொழிந்தத் திலகமே


நுண்மதி மாந்தர்கட்கும்
நடிப்பையா காட்டினாய்
வண்ணத்திரையில் நீ
வாழ்க்கையன்றோ காட்டினாய்

சின்ன அசைவினிலும்
பொன்னென மின்னினாய்
இன்னுமோர் நடிகனும்
இனியில்லை என்றானாய்


மூன்றாம் தமிழ்வளர்த்த
முதன்மைக் களஞ்சியமே
ஆன்றோர் வியந்துவக்கும்
அகராதி நீதானே

வான்தொடு உயரத்தில்
வெற்றித் திருச்சுடர் நீ
தேன்வளர் திரைக்கலைஞர்
தேடும் பொற்கனா நீ


சிங்கங்கள் அணிவகுக்கும்
சிம்மக்குரல் கேட்க
அங்கங்கள் சிலிர்க்குமெந்த
அரசவைப் புலவர்கட்கும்

மங்கா புகழ்வென்றாய்
மறையா நிலைபெற்றாய்
எங்கெலாம் கலையுண்டோ
அங்கெலாம் சிரிக்கின்றாய்


கண்ணீர் பொங்குதய்யா
காலனுனைக் கவர்ந்தானே
வெந்நீர் விழுந்தமலர்
வேதனையில் துடிக்குதய்யா

உன்னதக் கலைஞர்களை
உருவாக்கும் பிரம்மனே
உன்புகழ் வாழ்க வாழ்க
உனக்கென்றும் மரணமில்லை

26 உயிரைத் தேடாதே


யாரங்கே
குட்டிச் சுவரோரம் நின்று
திருட்டுத் 'தம்' அடிப்பது

உன்
நுரையீரல் மாளிகையில்
ஒட்டிக் கொள்ளப் போகும்
பிசாசுகளை விரட்ட
மந்திரக்கோல்
வைத்திருக்கிறாயா

வளையம் வளையமாய்த்
துப்புகிறாயே புகை
அவை உன் ஆயுட் கைகளை
நீட்ட விடாமல் மாட்டப்படும்
விலங்குகளென்று தெரியுமா உனக்கு

உன்
சல்லடை உடலை
மெல்லப்போகும்
கல்லறைக் குழியை
அவசர அவசரமாய்த் தோண்டும்
மண்வெட்டிகளே சிகரெட்டுகள்
ஞாபகமிருக்கட்டும்

ஏன்
புகையைக் காதலித்துச்
சாம்பலை மணக்கிறாய்

உன்
தற்கொலை முயற்சிக்கு
சிகரெட்டு நார்களிலா
கயிறு திரிக்கிறாய்

ஒரு கொள்ளிக்குத்
தாங்காத நீ
இன்னும்
எத்தனைச் சிகரெட்டுகளுக்குக்
கொள்ளி வைப்பதாய்
உத்தேசம்

22 இந்தியனே நீ வெட்கப்படு

*இந்தியனே நீ வெட்கப்படு*

என் முதல் தொகுப்பான வெளிச்ச அழைபுகள் கவிதைத் தொகுப்பில் இருபத்தி இரண்டாவது கவிதையாக அச்சேறிய கவிதைதான் இது. இன்று மீண்டும் எடுத்து வாசித்து நேசித்தேன்.

எண்பதுகளில் என் இந்தியாவை நான் பார்த்து துக்கப்பட்டு சினந்து கொதித்து கொப்பளித்து எழுதிய இளவயதுக் கவிதைதான் இது.

”வெளிநாட்டுக்குப் போய் உக்காந்துகிட்டா என்ன வேணும்னா சொல்லலாமா?” என்று நான் என்னையே கேட்டுக்கொண்டேன். நிச்சயமாக இன்றும் சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. காரணம், நான் வெளிநாட்டில் குடியேறியவனாக வாழ்ந்தாலும் ஓர் இந்தியனாகவே வாழ்கிறேன். மண்ணின் வாசனையோடும் தமிழ்க் கலாச்சார வேர்களில் பலாவாய்ப் பழுத்தவனாகவும்தான் வாழ்கிறேன்.

அடுத்து இன்னொரு கேள்வி எனக்கு எழுந்தது. அன்று நான் உணர்ந்து எழுதிய இந்தியாவுக்கும் இன்று இருக்கும் இந்தியாவுக்கும் இந்த கவிதையின் வாயிலாகப் பார்த்தால் ஏதேனும் மாற்றம் உண்டா என்பதுதான் அது. மாற்றம் ஏதும் தெரியவில்லையே என்பதே இதை மீண்டும் வாசித்த எனக்குள் வந்த எண்ணங்கள். உங்களுக்கு எப்படி?

*
*

வெட்கப்படு இந்தியனே
நீ வெட்கப்படு

நீ வெட்கப்படாததால்தான்
இந்தியா துக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறது

O

பசித்தால்-
கையேந்த மட்டுமே
உனக்குத் தெரியும்

தேவைப்பட்டால்-
திருட மட்டுமே
உனக்கு விருப்பம்


கோபப்பட்டாலும்-
கொளுத்துவதற்கு மட்டுமே
உன் கைகள் நீளும்

O

நீ
படிக்கப் போனால்
வினாத்தாள் திருடுகிறாய்

ஆளப்போனாலோ
நாட்டையே திருடுகிறாய்

தினமும்
வீட்டிலும் வீதிகளிலும்
உண்டியல் குலுக்கியே
பாரதத்தை
இன்று ஒரு
சில்லரைக் காசாக்கிவிட்டாய்

O

சொல்
கண்டதுக்கெல்லாம்
கொடி தூக்கிக்
கோஷம் போடுகிறாயே

என்றாவது உன்
தேசியக் கொடியை
நேசித்தது உண்டா
O

ஜீவநதிகள்
ஊர்வலம் வருகின்ற
நாட்டில்
விக்கித் தவிக்கிறாய்

அள்ளித்தரும் நன்நிலங்கள்
எங்கும் கிடக்கின்ற நாட்டில்
பட்டினி கிடக்கிறாய்

O

ஒன்றா இரண்டா
உனக்கு
எத்தனை கோடி கைகள்


இருந்தும் அவை
பிச்சையெடுக்கவே
என்று
பிரகடனப்படுத்திவிட்டாயே


இந்தியனே
நீ வெட்கப்படு

நீ
வெட்கப்படாததால்தான்
இந்தியா
துக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது

அன்புடன் புகாரி
19800101

21 இந்த மனசு

தேடித் தேடி
தினமும் வாடும்

வாடி வாடி
உயிரைச் சுடும்

விட்டுவிடு என்று
கட்டளை இட்டால்

முன்னைவிடத் தீவிரமாய்
தொட்டுக்கொண்டு
அழும்

தொடலாம் வா
என்றழைத்தாலோ

தூரமாய்ப் போய்
துவண்டு கிடக்கும்

அவ்வப்போது
உறக்கத்தைத்
திருடிக்கொண்டு
கெக்கரித்துச் சிரிக்கும்

ஆசைகளைச்
சேகரித்துக் கொண்டு
கனவுகளாய் முளைக்கும்

அவிழ்த்துவிட்டால்
விளையாடும்

அடைத்துப் போட்டால்
உடைத்துக் கொண்டு
வெளியேறும்

இந்த மனசு

20 முடிக்கக் கூடாத கவிதை


எங்கிருந்து வந்தது
இந்த
வேதனை

முதலில்
இது
வேதனைதானா
அல்லது சுகமா

இல்லை
இது ஒரு
சுகமான வேதனை

நீ
என் நெஞ்சத்தில்
நடக்கிறாய் என்பதற்காகநான் மூச்சுவிடாமல்
தம்
கட்டிக்கொண்டிருக்கிறேனே
இதுவும் ஒரு
சுகமான வேதனைதானே

O

உன்
பெயரை உச்சரிக்கும்போதே
என் ரோமங்கள்
சிலிர்த்துக் கொள்கின்றனவே
உன்னையே உச்சரித்தால்

உன்
விழிச்சுடரைத் தொடும்போதே
சுற்றுப் புறங்கள்
இருண்டு விடுகின்றனவே
உன்னையே தொட்டால்

நீ என்
நெஞ்சவீணையில் வாசிக்கும்
ராகத்திற்குப் பெயர்தான்
காதலா

உன்னிடம் அப்படி
எதைக் கண்டுவிட்டு
இப்படி நான்
என்னை மறந்திருக்கிறேன்

உன்னிடம்
வெளிச்சம் போட்டுக் கிடக்கும்
அந்த அழகா

தூசு
தொடமுடியாத
அந்த உள்ளமா

ஏன்
என் நினைவுகளை இப்படி
மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்

O

அன்பே
எனக்குள் நீ எழுதுவது
தேவ கவிதைதானே

எழுது எழுது

ஆனால்
எல்லா கவிதைகளையும் போல
இதற்கும் ஒரு
முற்றுப்புள்ளி வேண்டும்
என்றுமட்டும் எண்ணிவிடாதே.

19 ஓ... பாரதத்தாயே

ஓ பாரதத்தாயே...

உன்
ஓட்டை வீட்டின் நடை பாதைகளில்
எலும்புக் குழந்தைகள்
விழிக் குருதியைக்
கன்னப் பாலைகளில் ஆவியாக்கி
மேகக் கன்னிகளைக்
கர்ப்பம் தரிக்கச் செய்ய வேண்டாம்

உன் பட்டினிக் காட்டினில்
பச்சிளங்கன்றுகள்
ஒட்டிய மார்களில்
இரத்தம் குடிக்க வேண்டாம்
உன்
இருண்ட வீதிகளில்
இராப்பிச்சைகள்
பகல் பிச்சைப் பாத்திரங்களில்
எச்சமிட வேண்டாம்

எச்சிலைத் தோப்புகளில்
வறண்ட நாக்குகளைத் தொங்கப் போட்ட
காய்ந்த நாய்கள்
உன் வாரிசுகளால்
பட்டினி போடப்பட வேண்டாம்.

உன் கண்ணகிகள்
வயிற்றடுப்புகளை அணைக்க
கற்புச் சிலம்புகளைக்
கோவலன்களிடமே
விற்பனைக்கு அனுப்ப வேண்டாம்

O

ஆம் தாயே.
இனியேனும்
உன்
செல்லக் குழந்தைகள்
இந்திய நரகத்தில்
வயிறின்றி பிறக்கட்டும்

இல்லையேல்
உன்
கர்ப்பக் கருவறைகள்
கால வரம்பின்றி
மூடிக் கிடக்கட்டும்.

18 செப்டம்பர் 11, 2001

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வானத்தை முத்தமிட்டுக்கொண்டு கம்பீரமாய் நின்றுகொண்டிருந்த இரட்டைக் கோபுரங்கள் பல்லாயிரக்கணக்கான மக்கள் பணியில் இருந்த ஒரு செவ்வாயின் காலையில் தீவிரவாதிகளால் கொடூரமாய் தகர்க்கப் பட்ட செய்தியை செவ்வாய் உயிரினங்கள் கூட அறிந்திருக்கும்.

சுமார் 5000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற முதல் செய்தி நெஞ்சை நெருப்பு ரவைகளால் துளைத்தது. உயிர்களைச் சுமந்த உயிரற்ற விமானப் பறவைகளின் முதல் இடி நடந்ததுமே தொலைக்காட்சிகள் மூலம் முழு அவலத்தையும் காணநேர்ந்தது. அது ஏதோ ஒரு புதிய ஹாலிவுட் திரைப்படத்தின் விளம்பரக் காட்சிபோல் இருந்ததே தவிர உண்மையில் நிகழ்வதாய் நம்பமுடியவில்லை.

இன்றைய தொழில்நுட்பங்களும் ஊடகங்களும் ஒரு நாள் என்பது 48 மணிநேரம் என்று நம்பும்படியாய் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தன. அவற்றையெல்லாம் உள்ளடக்கிக்கொண்டு என் இதயம் ஏற்படுத்திய துடிப்புகளை நான் வார்த்தைகளாய் மொழிபெயர்த்ததுதான் இந்தக் கவிதை.

இரட்டைக் குமரிகளாய்
வான் தொட்டு வளர்ந்து நின்ற
உலக வணிகக் கோபுரங்கள்
மூர்க்கர்களின் வெறியில்
இன்று சுடுகாட்டுச் சாம்பல்

அமெரிக்கப் பாதுகாப்பு அமைப்பை
நடு ரோட்டில் வைத்துத்
துணிகரத் துகிலுரிப்பு

பறப்பதற்கு
பறவைகளுக்கும் பயம்

நேரம் தவறாமல்
வேலைக்கு வந்தவர்களுக்கு
மரணம் பரிசளிப்பு

தீவிரவாத அட்டூழியத்தின்
சரித்திரம் காணாத
புதிய சாதனை

நாடு-நிறம்-மதம்-ஜாதி என்று
வேறுபட்டப் பறவைகள்
கூடிப் பணிபுரிந்த
வணிக வேடந்தாங்கலில்
வக்கிர வல்லூறுகளின்
வஞ்சகச் சதி நெருப்பு

உலகப் பொருளாதாரத்தை
அடித்துத் துவைத்துக்
கிழித்துப்போட்ட அவலம்

உள்ளூர் வெளியூர்
வேலை வாய்ப்புகளுக்குக்
கட்டாய ஓய்வு

உலகமென்றால் அமெரிக்கா
அமெரிக்காவென்றால் உலகம்
என்றிருந்த
சராசரி அமெரிக்கர்களுக்கு
உலக வரைபடத்தின்
அறிமுகப் பாடம்

அடையாளம் தெரியாத
அரசியல் விளையாட்டுகளில்
இது என்ன விளையாட்டோ
என்ற பல கோணக் குழப்பம்

உலக அழிவிற்கு
தீவிரவாதமே காரணமாகிப்போகும்
என்று தீர்மானம்

மதத்தின் முகம்
விகாரமாய்ச் சிரிக்க
மனிதகுலம் செத்து மடிந்த உண்மை

17 அம்மா


அம்மா
இந்த உலகம் சிறியது
உன் பாசம் மட்டுமே
பெரியது

என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை

உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது

.

பொழுதெல்லாம்
உன் முத்த மழையில்
என் உயிரை நனைத்தப்
பாச அருவியே

நீ
என்றென்றும்
எனக்காகவே கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று சொன்னாலும்
என் எண்ணம் குறுகியது

என் கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன் மேனியைத் தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே

நான் வசித்த முதல் வீடு
உன்
கருவறையல்லவா

நான் உண்ட முதல் உணவு
உன் இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா

நான் கேட்ட முதல் பாடல்
உன் ஆத்மா பாடிய
ஆராரோ ஆரிரரோ வல்லவா

நான் கண்ட முதல் முகம்
பாசத்தில் பூரித்த
உன் அழகு முகமல்லவா

நான் பேசிய முதல் வார்த்தை
என் ஜீவனில் கலந்த
'அம்மா' வல்லவா

நான் சுவாசித்த முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா

.

வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே

என் பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன் கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு வழி சொல்லித்தந்தன

உனக்காக நான்
என் உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி பொக்கிஷங்களில்
ஒரே ஒரு துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா

Amma...
This world is just so tiny 
When compared to
The grandeur of your immense love


Even before my tongue could move
You taught me a language  -
The language of this universe
LOVE - that needs no words


When I first peeped into this world
Cuddled in the warmth of your arms
In a blissful comfort
The whole world seemed
So sweet and serene
With a lot of  promising love


Oh my beloved Amma....
You are my Niagara of love
Drenching my soul deeply
With the never ending shower of
Your hugs and kisses


Oh my most beautiful Amma....
I feel I would have expressed less
When I  said
You are my dark, rain bearing cloud
Ready always for
A heavy downpour of your love
Over me and only me


Oh my selfless Amma...
You have been a candle
All your life
Burning yourself - Sacrificing
Only to bring light to my eyes


Isn't it true?
The first home I ever lived
Is your precious womb


Isn't it true?
The first food I ever consumed
Is the sacred milk
From your body and blood


Isn't it true?
The first lullaby I ever heard
Is the 'Araaro... Aariraro.... '
Which is the voice of your loving soul


Isn't it true?
The first face I ever saw
Is your beautiful face
That glowed with nothing but endless love


Isn't it true?
The first word I ever spoke
Is 'Amma...'
Which is deeply forged in my soul


Isn't it true?
The first breathe I ever took
Is your divine gift to me


Oh my affectionate  Amma....
Like a bird that keeps grains in the beak
To feed its young
You fast always
Waiting for me to eat first
Before taking a morsel for yourself


When in my life I wandered astray
Only your tear drops were the beacon
That guided me to the right path.


Oh my angel Amma....
Isn't it true?
Even If I promise to offer you my life
In place of all your endless sacrifice
I will still be an ungrateful soul
As I will be giving back only a small drop
For the ocean of treasures
You showered upon me


Amma....  Amma...
I love you
Amma....

16 இன்னும் விடியாமல்

பலர்
பதவிப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்
நாட்டுப் பற்றே நோக்கமென
சப்தமாய் முழங்கினர்

சிலரோ
நாட்டுப் பற்று மிஞ்சியே
அரசியலுக்கு வந்தனர்

ஒரு
நாற்காலி வேண்டுமென
மெல்லவே மொழிந்தனர்

இருந்தும், இந்த
நாட்டுப் பற்றுக் காரர்களையே
நாற்காலியில் அமர்த்தியதும்
பதவிப் பற்றுக் காரர்களாய்
அழுக்காக்கி விடுகிறதே
நம்மின் பொல்லாத அரசியல்

பார்த்தீரா
அழுக்கைப் புழுக்களாய் மாற்றும்
ஒரு சாதாரண சாக்கடையல்ல
நம் அரசியல்
பயனுள்ள மனிதர்களையே
புழுக்களாய் மாற்றும் ஒரு
நரகலோகச் சாக்கடைக் கடல்

.

எத்தனையோ கற்பக விதைகள்
தங்களை
இதில் விதைத்துக் கொண்டு
கள்ளிகளாய் வளர்ந்துவிட்டன

எத்தனையோ புத்தர்கள்
இங்கு புண்ணியம் கற்பிக்க வந்து
சித்தார்த்தர்களாகி
தங்களின்
சில்லறை விளையாட்டுக்களில்
செலவழிந்து போயினர்

இந்த
வளைவுகளையெல்லாம்
நிமிர்த்திவிட்டுத் தான்
உயிர் விடுவேன் என்று
வரிந்து கட்டிக் கொண்டு
இதில் குதித்தவர்களில்

பலர்
வளைந்து போயினர்
சிலரோ
ஒடிந்தே போயினர்

.

என்ன ஒரு புதுமை பாருங்கள்

நம்
அரசியல் வயலில்
அழுகிய விதைகளுக்கே
அமோக விளைச்சல்

காரும் நிலமும்
கடிதில் வேண்டுமென்று
அரசியலுக்கு வந்த
பொல்லாதவாதிகள் தாமே
இன்று
முக்கால் வாசி அரசியல் வாதிகள்

இங்கே
சத்தியங்களுக்காய்ப் பிறந்தவர்களெல்லாம்
எங்கே போனார்கள்

சுதந்திர மரத்தின்
வேர்களுக்கு நீரூற்ற வந்த
ஒவ்வொருவருமா
அதன் கிளைகளைத் திருடுவது

.

அடடா
நம் இந்தியாவில் தான்
எத்தனை தேசாபிமானிகள்

கணிசமாய் வரதட்சணை வாங்க
ஒரு பட்டம் வேண்டுமென்ற
வணிகத்தனத்தில்
கேள்வித் தாள்களைப் பற்றி மட்டுமே
கவலைப்படும்
ஒரு கல்லூரி வருகையாளனைப் போல

பலரும்
இந்த தேசத்தைப் பற்றிக்
கவலைப் படுகிறார்கள்

உண்மைதானே
இந்த அரசியல் அங்கவஸ்திரம்
தோளில் ஆடினால்
இவர்களின்
மீசைக்கே தகுதியற்றமேலுதடுகள் கூட
மீசையை விடவும்
அதிகமாய்த் தானே துடிக்கின்றன

.

தம் பெயரைக்
கல்லில் நாட்டுவதற்காகவே
பல மந்திரிகள் இங்கே
மைல் கல்லுக்கும் கூட
அடிக்கல் நாட்டத் தவிக்கிறார்கள்

மந்திரிகளில் பெரும்பாலோர்
தங்களின்
சொந்த சுகதுக்கங்களைக்
கொண்டாடத் தானே
அரசியல் கூட்டம் கூட்டுகிறார்கள்

குண்டர்களே நல்ல தொண்டர்கள்
என்று
தீனி போடப்பட்டால்
நம் சுதந்திரப் பெண்ணின் கற்பு
காற்றில் பறக்காமல்
கலையழகோடவா நடக்கும்

பல நேரங்களில்
தவறு
நம் மந்திரிகளிடமில்லை
கைநாட்டுகள்தாம்
கைத்தட்டுகின்றன என்றால்
இந்தக் கற்றோர்களில் பலருங்கூட
இங்கே கண்மூடியல்லவா கிடக்கிறார்கள்

.

யோசித்துப் பாருங்கள்
நாம்
வாக்களிக்க
முகராசியைத்தானே பார்த்தோம்
கொள்கைகளையா பரிசீலித்தோம்

கட்சிக் கூட்டங்களில்
பெரும்பாலோர் கேட்கும் விருப்பங்கள்
எதிர்க்கட்சித் தலைவரின்
வீட்டு விமரிசனங்கள்தாமே

நம்மில் பலர்
மந்திரிகள் எதைச் சொல்கிறார்கள்
என்பதை விட
மந்திரிகளுக்கு எத்தனை
மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டன
என்று தானே
கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்

.

வாய் வித்தைகளுக்காய் மட்டுமே
வாக்களித்து விட்டுப் போகும்
வாக்காளப் பெருமக்கள்
நம்மில் கொஞ்சமா

வியாபார விசயமாய்த்
தங்கள் வாக்குகளை
இரகசிய ஏலம் விடும்
தேசத் துரோகிகள் நம்மில்
கொஞ்சமா

.

இந்தியர்களே
நம்
தேசத்தின் அரசியல் நிர்ணயத்தில்
முழுப் பங்கும்
மொத்த வலிமையும் கொண்டோர்
நீங்களே

உங்களின்
அறியாமை ஓடுகளை
உடைத்தெறிந்து
சுதந்திமாகச் சுவாசிக்கச்
சிந்தியுங்கள்

சுதந்திரம்
தனியினச் சுவாசமல்ல - அது
மொத்த நாசிகளின்
முழுச் சுவாசம்

ஒரு சுத்தமான
இரத்த தானம்தான்
விழுந்து கிடக்கும் இந்தியாவை
எடுத்து நிறுத்துமெனில்
தயங்க வேண்டாம்

எழுங்கள் இந்தியர்களே
எழுங்கள்.