200605 காதலி வருவாளா


ஆயிரம் பாவையர்
காதல் விழியோடு
ஓருயிர்ப் பூமகள்
தேரில் வருவாளா

வேருக்குள் வேர்விட்டு
பின்னிக் கொள்வாளா
தூருக்குள் நீர்போல
நெஞ்சில் வாழ்வாளா
மூச்சுக்குள் மூச்சாகி
மூச்சைக் காப்பாளா

தாகத்தின் ராகத்தில்
காதல் இசைப்பாளா
மோகத்தின் தாளத்தில்
முத்தம் விதைப்பாளா

தோளில்
ஏறிக் கொள்வாளா
தோளாய்
மாறிக் கொள்வாளா

கீறும்
காதல் நகத்தால்
காவியம் சொல்வாளா

பூஞ்சோலைப் புன்னகையில்
பூபாளம் வேண்டும்
மூக்குத்திப் பூவோடு
மோட்சங்கள் வேண்டும்

ஏக்கம்
எங்கும் எனைக்கொல்ல
தூக்கம்
எங்கோ விடைசொல்ல

தீயில்
தீயும் உயிரால்
தீபம் தேடுகிறேன்

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை


இலக்கியச் சுடரொளி(3) - தமிழ்க்காதலர் கவிஞர் புகாரி
- சத்தி சக்திதாசன்

நேர்காணல் - நன்றி: நிலாச்சாரல்

'வரவு செய்கிறவன் தமிழ் செய்வதில் ஆச்சரியமில்லை. செலவு செய்கிறவன் தமிழ் செய்வதுதான் ஆச்சரியம். புகாரி, நீங்கள் கவிஞனாக இருப்பது தான் கவிதை, நாங்களல்ல' இப்படி கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்திப் பேசிய கவிஞர் புகாரி தமிழ் இலக்கிய உலகிற்குப் புதியவரல்லர். அவரின் கவிதையின் வாசனை படாத தமிழ் இணைய இதழ்கள் இல்லை எனலாம்.

கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை. மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளைப் பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கும் கவிஞர் புகாரி இது வரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவருடன் ஒரு ரசனை மிகுந்த நேர்முகம் இங்கே
உங்களுக்காக:


1. கவிதை எழுத வேண்டும் எனும் ஆர்வம் எத்தகைய உந்துதலின் பின்னணியில் அமைந்தது ?

திட்டம் தீட்டிக்கொண்டு நான் என் முதல் கவிதையை எழுத அமரவில்லை. என் முதல் கவிதை எதுவென்றே எனக்குத் தெரியாது என்பதுதான் என்
ஞாபக இடுக்குகளில் ஒட்டிக்கிடக்கும் உண்மை.

இன்றும் நான் என் அடுத்த கவிதையை எப்போது எழுதுவதென்ற திட்டமும் இல்லை, அது எதைப் பற்றியது என்ற திடமும் இல்லை. சட்டென கொட்டும் மழைக்குத் திட்டங்கள் இருப்பதில்லை. மிக இயல்பாக அது பொழிகிறது.

அடையாளம் தெரியாத அடர்த்தியான சிற்சில தாக்கங்களால் உள்ளுக்குள் கொதிபடும் எவையெவையோ சட்டென்று ஆவியாகின்றன. ஆவியானவை எல்லாம் எப்போதென்றறியாத விசித்திரப் பொற்கணங்களில் இதய வெளிகளில் கவி இழைகளாய்க் கருக்கொள்கின்றன, சற்றும் எதிர்பாராத ஏதோ ஒரு தனிமைப் பொழுதில் வீரியம்பெற்ற அந்த உணர்வுகள் கறுப்புக் குடை கண்ட பசுக்களாய் நரம்புகளில் வெறித்துக் கொண்டோட, கொட்டோ கொட்டென்று கொட்டிவிடுகின்றன கவிதைகளாய். பின் அவற்றை எடுத்து வைத்துக்கொண்டு, அறிவின் சுடரொளியாலும் மொழியின் உளிகளாலும் தேவைக்கும் ரசனைகளின் உச்சத்திற்கும் ஏற்ப தட்டித் தட்டி செம்மையாய்ச் செதுக்க வேண்டியதுதான் என் மீதப்பணி.

புத்தி மொட்டுக்கள் பூத்துச் செழிக்காத பிஞ்சு வயதில் சிறுவர்களின் கூட்டத்தோடு கூட்டமாய் ஓடிக்கொண்டிருந்தேன். என்னை இழுத்து நிறுத்திய கலைகளையெல்லாம் நின்று நிதானித்து ஆழமாய் ரசித்தேன். என்னை வேரோடு விழுங்கிய வார்த்தைகளில் எல்லாம் விழுந்து விழுந்து தொழுதேன். என்னை அறியாமல் ஆடிய கால்களும் அதனோடு அசைந்த இதயப் பசும்புல் பரப்பும் இசையின் ஆளுமையால் என்று உணராத வயதிலேயே மயங்கி
நின்றேன். நெகிழ்ச்சியோடு முட்டிய கண்ணீர் மணிகள்தாம் என் ரசனையின் உயரத்தை எனக்கு அடையாளம் காட்டித் தந்தன. எதுவுமே அறியாதவன், உணர்வுகளின் தேவைகளால் எல்லாமும் ரசித்தேன்.

கவிதைப் பயிற்சி, இசைப்பயிற்சி, ஓவியப் பயிற்சி என்று முறையான எந்தக் கலைப் பயிற்சியும் என்னிடம் இல்லை. ஆனால் என் இதயம் கவிதைகளை நேசிக்கவே துடித்துக் கொண்டிருப்பதுபோலவும், என் செவிகள் இசையைக் கேட்கவே திறந்து கிடப்பதுபோலவும், என் விழிகள் அழகினை ரசிப்பதற்கே ஆடிக்கொண்டிருப்பதுபோலவும் உணர்வேன் எப்பொழுதும்.

என்றோ என் நினைவு தெளிவில்லாத நாளிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன் என்றாலும், பல காலம் என்னை அறிந்த பலருக்கும் நான் கவிதை எழுதுவேன் என்றே தெரியாது.

2. உங்களுடைய வாழ்க்கைப் பயணம், இலக்கியப் பயணம் இவைகள் எந்த இடத்தில் கைகோர்க்கின்றன எந்த இடத்தில் விலக முற்படுகின்றன ?

அருமையான கேள்வி. வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் இடைவெளியற்று வாழ்பவனே கவிஞன். இதனால் அவன் எதிர்கொள்ளும் கீறல்களையும் முத்தங்களாகவே ஏற்றுக்கொள்கிறான்.

கவிதைகளுக்காக வாழ்க்கையா வாழ்க்கைக்கு வணக்கம் செலுத்தும் விதமாய்க் கவிதைகளா என்று நான் என்னையே கேட்டுப் பார்த்ததுண்டு.

என் ஆயுளெனும் பெரும்பாலையில் வாழ்க்கை அவ்வப்போது கவிதைகளாய்த் துளிர்க்கவே செய்கிறது. அதன் தித்திப்பு முத்தங்களும் திரும்பியோட ஏங்கும் நினைவுகளும் விழிகளெங்கும் கவிதைகளாய்ப் பொழுதுக்கும் வேர் விரிக்கின்றன. உணர்வுகளின் உயிர்ச் சிறகுகளை ஈரம் உலராமல் எடுத்துப் பதித்துக்கொண்ட இதயக் கணங்களே கவிதைகள்.

வாழ்க்கையைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எனக்குள் ஞான முட்டைகள் உடைந்து கவிதைக் குஞ்சுகள் கீச்சிட்டிருக்கின்றன. கவிதைகளைத் தோண்டத் தோண்ட சின்னச் சின்னதாய் எண்ணப் பொறிகள் சிதறி என் மன முடிச்சுகள் அவிழ்ந்திருக்கின்றன.

வாழ்க்கைக்கும் கவிதைக்கும் இடைவெளி இல்லை ஏனெனில் அது என்னுடைய இயல்பு. கவிதைக்கும் வாழ்க்கைக்கும் ஏராள இடைவெளி ஏனெனில் அது வாழ்க்கையின் சிதைவு.

வாழ்க்கையை வளைத்து கவிதை ரதம் ஏற்றும் தவ முயற்சிகளே கவிதைகளாயும் நிகழும் வாழ்க்கையாயும் என்னோடு. என்னளவில் நான் வெற்றி பெற்றே வாழ்ந்துவருகிறேன்.


3. வாழ்வில் எந்தக் கணத்திலாவது உங்களுடைய பிரதான தொழிலாக எழுத்துத்துறையைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டோமா என்று எண்ணியதுண்டா ?

எனக்கு அப்படித் தோன்றியதில்லை. ஆனால், இன்றெல்லாம் அமர்ந்து எழுதிக்கொண்டே இருக்க மாட்டோமா என்று ஏங்கிய நாட்கள் ஏராளம்.

எழுத்தைத் தொழிலாகக் கொள்ளும் நிலை கண்டிப்பாக வளரவேண்டும். ஆனால் எழுதும்போது தொழிலுக்காக என்று எழுதக்கூடாது. அதாவது எழுதுவோர் வயிற்றைக் காயவைக்கும் அவலம் நீடிக்கக் கூடாது. குடும்பத்திற்கு அருகதையற்றவர்கள் என்ற நிலையிலேயே எழுத்தார்களை வைத்திருப்பது மனித இனத்திற்கே அவமானம்.

எல்லோருக்கும் எழுத்து கைவராது. கைவந்தவர்களின் காலை வாராதிருக்க வேண்டும் இந்த உலகம். பாரதி பட்ட துயரங்களைக் கண்டு நான் கண்ணீர் வடித்திருக்கிறேன். இன்றுவரை அவன் கவிதைகளை இந்த உலகம் ரசித்து ரசித்துச் சுவைக்கிறது. அவன் கவிதை வரிகளை நுகர்ந்து எழுச்சிபெற்று சிறப்பு வாழ்க்கை காண்கிறது. ஆனால் அவனை மட்டும் வாழ விடவில்லை.

தொழில் என்று கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு தமிழனும் பலகோடி ரூபாய்கள் அவருக்குக் கடன்பட்டிருக்கிறான். ஆனால் ஒரு பைசா கூட கொடுத்ததில்லை. ஆகையால்தான் கவிதை எழுதுகிறேன் என்று தன் ஆசை மகன் ஓடிவந்து சொன்னால், மகிழ்ச்சியடையாமல், பெற்றோர்கள் கவலையில் மூழ்கிவிடுகிறார்கள்.

நான் எழுதிப் பிழைக்கவில்லை. ஆனால் அது எனக்குப் பிழைப்பாய்க் கிடைத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன். கிடைக்காது என்ற வரலாறுகளை அறியாத வயதிலேயே அறிந்திருந்ததாலோ என்னவோ, நான் எழுத்தைத் தொழிலாய் ஏற்கும் இதயத்தைப் பெறவில்லை.

எழுத்தைத் தொழிலாக ஏற்றால், அவனுக்கு அதில் தோல்வி வந்துவிடக் கூடாது. அப்படி வந்துவிட்டால், அந்த எழுத்து அவமதிப்புக்கு உள்ளாகுமே என்ற கவலை உண்டெனக்கு.

கவிதை எழுதுவதைப் போலவே நான் செய்யும் கணினிப் பணியையும் நேசிக்கிறேன் என்பதால், இதுவே எனக்கு இதய சுகமாய் இருக்கிறது.

4. உங்கள் ஊர் பற்றியும் அங்கே ஊற்றெடுத்த கவிதைகள் பற்றியும் கூறுவீர்களா?

வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்... நான் பிறந்தேன்.

தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.

ஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரை வீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.

உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.


5. நீங்கள் எழுதிய முதலாவது கவிதை எதுவென்று ஞாபகம் இருக்கிறதா? எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?

நான் எழுதிய முதலாவது கவிதை எதுவென்ற எனக்கு ஞாபகம் இல்லை. நான் எத்தனையாவது வயதில் கவிதை எழுதத் தொடங்கினேன் என்றும் எனக்குத் தெரியாது. என் ஞாபகங்களில் நான் எதையோ எழுதினேன், எதையோ உரக்கச் சொல்ல்லிக்கொண்டு திரிந்தேன் என்பதுமட்டும் ஞாபகம் இருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது எழுதிய ஒரு கவிதையை என் பள்ளி நண்பன் கோபி கிருஷ்ணனிடம் தயங்கித் தயங்கிக் காட்டி வெட்கப்பட்டது நினைவிருக்கிறது

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என் தமிழ் ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள் என்னைக் கவிஞரே என்று அழைப்பார். அப்போதெல்லாம் இசைக்குள் மட்டுமே நான் எழுதி வந்தேன்.

நான் கல்லூரி சென்றபின்னர்தான் புதுக்கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.


6. பச்சை மிளகாய் இளவரசி எனும் தலைப்பிற்குப் பின்னணி ஏதாவது இருக்கிறதா?

அது என் பாட்டி வைத்த பெயர். கனடா வானொலி நேர்காணல்களிலும், தொலைபேசி வழியாகவும், நேரிலும் பலர் ஆர்வமாக இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். என் புத்தக வெளியீட்டு விழாவில்தான் நான் அந்தக் கதையைச் சொன்னேன். அங்கே எதைச் சொன்னேனோ அதையே இங்கேயும் சொல்கிறேன்.

பலரும் தான் ஒரு கவிஞனானதற்கு ஒரு பெண்தான் காரணம் என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். "நான் கவிஞனென்றால் அதெல்லாம் அந்த அழகியின் முகம் பார்த்து" என்றும் "அவள் கவிஞனாக்கினால் என்னை" என்றும் பல திரையிசைப் பாடல்களையும் கேட்டிருப்பீர்கள். நான் கவிஞனானதும் ஒரு பெண்ணால்தான். அது வேறு யாருமல்ல என் பாட்டிதான்.

நன்றாக ரசித்து கதை சொல்லத் தெரிந்த பாட்டி கிடைக்கப்பெற்றவர்களெல்லாம் நிச்சயம் கவிஞனாகிவிடுவார்கள் :)

என் பாட்டி லயித்துச் சொன்ன பச்சைமிளகாய் இளவரசி கதையின் தலைப்புதான் முழுமையாய் என் ஞாபகத்தில் இருக்கிறதே தவிர வேறெதுவும் தெளிவாய் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன்.

முன்பொரு காலத்தில், பச்சைமிளகாய்புரி பச்சைமிளகாய்புரி என்று ஒரு நாடு இருந்ததாம். அதை அழகான ஓர் அரசன் ஆண்டுவந்தானாம். அவன் ஓர் அழகான பெண்ணப் பார்த்து காதலில் விழுந்தானாம், அவளையே மணமும் முடித்தானாம். திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தும் அவர்களுக்குக் குழந்தையே பிறக்கவில்லையாம். இப்படியோர் அன்பான கணவனுக்குத் தனனால் ஒரு பிள்ளையைப் பெற்றுத்தர இயலவில்லையே என்ற
கவலையிலேயே மனம் உடைந்து அவள் இறந்துவிட்டாளாம். கதறி அழுத அரசன் அவளை ஓர் அழகிய தோட்டத்தில் புதைத்துவிட்டு தினமும் அவள் சமாதியின் முன்னமர்ந்து கண்ணீர் விடுவானாம். சில தினங்களில் அவள் சமாதியின் மீது ஓர் அழகான பச்சைமிளகாய்ச் செடி முளைத்ததாம். அதில் மிக வசீகரமாகவும் பெரிதாகவும் ஒரே ஒரு பச்சைமிளகாயும் முளைத்ததாம். அது வளர்ந்து வளர்ந்து பத்துமாதங்கள் கழிந்ததும், பட்டென்று வெடிக்க
ஓர் இளவரசி அதிலிருந்து வெளிவந்தாளாம்.

அவளோ அழகென்றால் அழகு அப்படி ஓர் அழகாம். சூரியனைவிட வெளிச்சமாக நிலவை விட குளிர்ச்சியாக மலரைவிட மென்மையாக என்று பாட்டி சொல்லச் சொல்ல அந்தப் பேரழகியின் அழகு என் அடிமனதில் அப்படியே சென்று தங்கிவிட்டது.

அந்தப் பச்சைமிளகாய் இளவரசியை என்றோ என் வாழ்வில் ஒருநாள் சந்திப்பேன் என்று நினைத்துக்கொண்டேன். பிறகு மெல்ல மெல்ல அவளை மறந்தும்போய் விட்டேன். நாட்கள் உருண்டோடின. எனக்குத் திருமணமும் ஆனது. ஆனால் என் பச்சைமிளகாய் இளவரசியைப் பார்க்கவே இல்லை. ஆனால், என் திருமணமான பத்தாவது மாதம் எனக்கே பிறந்தாள் அந்தப் பச்சைமிளகாய் இளவரசி.

என் மகளுக்காக நான் சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். அவற்றுள் ஒன்று இந்தத் தொகுப்பிலும் உள்ளது. அந்தக் கவிதையின் பெயர்தான் பச்சைமிளாய் இளவரசி.

நகைச்சுவை உணர்வுகளோடுதான் நான் இந்தத் தலைப்பை என் நான்காவது கவிதை நூலுக்கு வைத்தேன். பலராலும் அது பாராட்டப்படுவது மகிழ்வினைத் தருகிறது.

7. நீங்கள் ரசித்துப் படிக்கும் கவிதை எத்தகையவை? சமீபத்தில் ரசித்த கவிதை எதுவென்று சொல்ல முடியுமா?

ஆழமான பொருள் கொண்டவை. அழுத்தமான உணர்வு கொண்டவை. இறுக்கமான நடை கொண்டவை. ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புத்தம் புதியாய் இருப்பவை. என்றென்றும் என் உயிரைவிட்டு விலகாத நிரந்தர உயிர் கொண்டவை.

அவை எவையென்று சொல்வது அத்தனை எளிதான காரியமல்ல. அங்கங்கே அவற்றின் கண்ணசைப்புகளைக் கண்டிருக்கிறேன். எங்கெங்கோ அவற்றின் முகவரித் துண்டுகளை முகர்ந்திருக்கிறேன். இன்னும் எழுதப்படவில்லையோ என்றுகூட சிற்சில பொழுதுகளில் தேடல் தவத்தால் விழி வதை கொண்டிருக்கிறேன்.

மற்றபடி, என்னைச் சில கவிதைகள் இழுத்தணைத்து முத்தமிட்டிருக்கின்றன. சில உரசிக்கொண்டு போயிருக்கின்றன. சில ரகசியமாய்ப் புணர்ந்திருக்கின்றன. சில கைகோத்து நடந்திருக்கின்றன. சில கண்ணீரோடு கண்ணீரை விசாரித்திருக்கின்றன. என் ரசிப்பு வட்டம் மிகவும் அகலமானது. அதனுள் நேற்றே முளைத்த பசும்புல் பச்சை தலைகாட்டிச் சிரிக்கும். என்றோ எழுதிய ஓலை வரிகளின் வாசனை மொட்டுகள் அவிழும்.

எழுதிய எழுத்துக்களில் சில என்னை எட்டிப் பார்த்துப் புன்னகைக்கும். எழுதப்படாத மௌனத்தில் சிலிர்ப்பள்ளி வீசும்.


8. உங்கள் மனதைக் கவர்ந்த எழுத்தாளர் அன்றி எழுத்தாளர்கள் யார்?

எல்லோரும் ஏதோ ஒரு வகையில் என்னைக் கவர்ந்தவண்ணம்தான் இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் என்ற பெயர் பெற்றிருந்தாலும் சரி பெறாமலேயே எழுதிக் கொண்டிருந்தாலும் சரி.


9. இணையத்தில் முதன்முதலில் வெளியான உங்கள் கவிதைநூல் பற்றிக் கூறுவீர்களா?

அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு. 2004 பிப்ரவரி 8ல் தொடங்கி பத்து தினங்களுக்கு திசைகள் ஆசிரியர் எழுத்தாளர் மாலன் தலைமையில், லண்டன் பல்கலைக் கழகம் பேராசிரியர் சிவாபிள்ளை முன்னிலையில், தமிழ்-உலகம் குழுமம் இணையப் பந்தலில் என் அன்புடன் இதயம் கவிதைத் தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப் பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே.

வரலாற்றின் வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.

இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.

அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோ ம் நாம்.

சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.


அன்புடன் இதயம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

1. அழைப்பிதழும் வரவேற்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/1.html

2. தலைமையும் உபசரிப்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/2.html

3. வாழ்த்துரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/3.html

4. வெளியீடு ஆய்வுரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/4.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/5.html

5. விமரிசனங்கள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/6.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/7.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/8.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/9.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/11.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/12.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/13.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/14.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html

6. ஏற்புரையும் நன்றியுரையும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/15.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/16.html


10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன்?

நான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன்(2005 ல் எழுதியது). 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான்
எழுதிக்கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.

http://buhari.googlepages.com

அதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முடியும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல்
சேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது.

buhari@gmail.com

யுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன்.

http://groups.google.com/group/anbudan

"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்" என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.

"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது" என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய
முறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்

இன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது.

தினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.


11. இதுவரை உங்கள் கவிதைத் தொகுப்புக்கள் எத்தனை வெளிவந்திருக்கின்றன?

இதுவரை நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறேன்.

1. வெளிச்ச அழைப்புகள் - 2002 - கவிப்பேரரசு வைரமுத்து அணிந்துரையுடன். இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல் இதுதான். இது கனடாவின் பெருநகரமான டொராண்டோவில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதின் சிறப்புப் பரிசு பெற்றது. ஏப்ரல் 2003ல் கனடாவின் மொன்றியல் நகரிலும் மறு வெளியீடு செய்யப்பட்டது. குமுதத்தில் முதல் பரிசு பெற்ற கவிதை, கனடாவில் தங்கப்பதக்கம் பரிசு பெற்ற கவிதை, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் வார்சிகி ஆண்டுமலரில் இந்தி மொழியில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட கவிதை என்று பல சிறப்புக்கவிதைகளைக் கொண்ட என் முதல் கவிதை நூல் இது.

2. அன்புடன் இதயம் - 2003 - கவிநாயகர் வி. கந்தவனம் அணிந்துரையுடனும் இலந்தை சு. இராமசாமி வாழ்த்துரையுடனும். எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணையச் சரித்திரத்தில் முதன் முதலாக இணையத்திலேயே வெளியிடப் பட்ட கவிதை நூல் இது. ஏப்ரல் 2003ல் சென்னையில் சபரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. டிசம்பர் 2003 கனடாவில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில், இணையத்தில் பரிசு பெற்ற கவிதைகளும், சென்னை சுற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் வைக்கப்பட்ட கவிதையும், கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதையும், இணையத்தில் பலராலும் பாராட்டப்பெற்ற பஞ்ச பூதக்கவிதைகளும் உள்ளன.

3. சரணமென்றேன் - 2004 - மாலன் அணிந்துரை தந்தார். முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் பத்திரிகையாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமை தாங்க என் அறிமுகத்தோடு சரணமென்றேனும் அறிமுகப்படுத்தப்பட்டது. மீண்டும் கனடாவில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் வெளியிடப்பட்டது. கவிஞர் இந்திரன், கவிஞர் வைகைச்
செல்வி, படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன் ஆகியோர் நூலை விமரிசனம் செய்தார்கள்.

4. பச்சைமிளகாய் இளவரசி - 2005 - எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அணிந்துரையுடன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது. திரு சிவதாசன் தலைமை ஏற்க, கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள். பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, உதயன் ஆசிரியர் ஆர் என்
லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். விழாவில் வசூலான தொகை தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சேவைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.


12. "தமிழிலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி, கணனியில் ஏற்படும் தமிழின் வளர்ச்சியிலேயே தங்கியுள்ளது" இந்த கருத்திற்கு வலுவான ஆதரவு தரக்கூடிய வாதம் உங்கள் தரப்பிலிருந்து எதுவாக இருக்கும் ?

அன்புடன் இதயம் என்ற என் இரண்டாவது கவிதைத் தொகுப்புக்கு நான் எழுதிய என் முன்னுரை, உங்கள் கேள்விக்கு பதில் சொல்லும் என்று நம்புகின்றேன்.

பல்துலக்கி, பசியாறி, சோம்பல் முறித்து, எட்டிப்பார்த்து, சீண்டி, சிரித்து, மனநடையிட்டு, மல்லாந்து படுத்து, உறங்காமல் கிடந்து, பின் உறங்கியும் போய், விசும்பும் உயிரை விரும்பிய திசையில், இரட்டிப்பாய்த் திரும்பும் வண்ணம் செலவு செய்ய இதோ ஒரு மந்திர வாசல் - இணையம். தமிழ் வளர்க்கும் நவீன தமிழ்ச்சங்கம்.

குப்பைத் தொட்டியில் எறியப்பட்ட தொப்புள் கொடி உலராத அனாதைக் குழந்தையாய்த் தமிழ். வயிறு வாழ்க்கையைத் தின்று ஏப்பம் விடும் நாற்றம் வீதிகளெங்கும். தமிழின் கைகளில் சில்லறையே விழாத பிச்சைப் பாத்திரம். ஆங்கிலக் குட்டைப் பாவாடையை அங்கும் இங்கும் கிழித்துக் கட்டிக்கொண்டு கிராமியச் சந்திப்புகளிலும் நாவழுக்கும் அந்நியச் சொல்லாட்டங்கள். சோத்துக்காகப் போடப்படும் இந்தத் தெருக்கூத்துத் தாளம், இந்த
நூற்றாண்டிலும் நீடிக்கும் தமிழ் அவலம். இந்நிலையில்தான், கணித்தமிழ் என்னும் புதுத்தமிழ், இணையத்தில் எழுந்த ஓர் இனிப்புப் புயல் ஆனது.

நாடுவிட்டு நாடுவந்த தமிழர்களிடம் ராஜ பசையாய் ஒட்டிக் கிடக்கிறது தமிழ்ப்பற்று. உலகின் தமிழறியா மூலையில், என்றோ கற்ற சொற்பத் தமிழை ஊதி ஊதி அணையாமல் காத்து, மண்ணையும் தமிழையும் பிரிந்தேனே என்ற மன அழுத்தத்தின் இறுக்கம், உள்ளுக்குள் வைரம் விளைவிக்க, அதன் வீரிய வெளிச்சத்தில், உள்ளே கனலும் உணர்வுகளை கணினிக்குள் இறக்கிவைக்கும் வெளிநாட்டுத் தமிழர்கள் இன்று தமிழ் வளர்க்கத் தவிக்கிறார்கள் என்பது தித்திப்புத் தகவலல்லவா? இவர்களுக்குள் நீறு பூத்துக்கிடந்த தமிழ் நெருப்பு, மெல்ல மெல்ல எழுந்து, இன்று சுவாலைக் கொண்டாட்டம் போடத் தொடங்கி விட்டது உலகெங்கிலும்.

என்றுமில்லா அளவில் இன்றெல்லாம் உலகத் தமிழர்களின் நட்புறவு, வாழையிலையில் விரித்துக் கொட்டியதுபோல், மின்னிதழ், மின்குழுமம், மின்னஞ்சல் விருந்து. புத்தம்புது எழுத்தாளர்களின் பிரசவ சப்தங்கள். உலகக் கண்ணோட்டங்களோடு கலை, இலக்கியம், அரசியல் என்று அலசி அலசி இணைய உந்துதலால், இன்று சமுத்திரத் தவளைகளாய் வளர்ந்துவிட்டார்கள் தமிழர்கள். வடவேங்கடம் தென்குமரித் தமிழ், பூமிப் பந்தை எட்டி
உதைத்து விளையாடுகிறது இன்று. நிலவில் மட்டுமல்ல எந்தக் கோளில் இன்று கொடி நடுவதானாலும், அதில் 'வாழ்க தமிழ்' என்ற வாசகம் இருக்கும். தரமான கலை இலக்கியங்களை இன்றைய ஊடகங்கள் எதுவுமே உயர்த்திப் பிடிக்காதபோது, இணையம் மட்டும் எழுந்து நின்று தலை வணங்குகிறது.

முதல் நாள் மின்னஞ்சல் வழியே பயணப்படும் ஒரு கவிதை, மறு நாளே இணைய இதழ்களில் பிரசுரமாகிறது! அதன் அடுத்த நாளே வாசக விமரிசன மூச்சுக்கள் கிட்டத்தில் வந்து வெது வெதுப்பாய் வீசுகின்றன. இணையத்தின் துரிதத்தால், எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே அப்படியொரு தென்றலும் புகாத் தொடர்பு இன்று. தமிழர்களைப் பெருமை பொங்க தமிழில் பேசவும், எழுதவும் உயர்த்திவிட்டிருக்கும் இணையத்தில் கணித்தமிழ் வளர்க்கும் உயர் உள்ளங்களுக்கும், கணினி வல்லுனர்களுக்கும் பல கோடி நன்றிகள்.

ஆலமரத்தடி, அரசமரத்தடி, தேனீர்க்கடை, ஆத்துப் பாலம் எல்லாம் அந்தக் கிராமத்துக்கு மட்டுமே மேடை! ஆனால், இணையம் என்பதோ உலகின் ஒற்றை மகா மின்மரம். உலகப் பறவைகளெல்லாம் கணிச் சிறகடித்து, வீட்டுக்கதை துவங்கி உலகக்கதைவரை ஒன்றுவிடாமல் அலசிச் சிலிர்க்கும் வேடந்தாங்கல். தமிழோடும் நல்ல தமிழர்களோடும் புது உறவோடு இணைய வைத்த கணினிக்கும் இணையத்திற்கும் என் உயிர் முத்தங்கள்.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

வாழ்க இணையம்! வாழ்க தமிழ்!


13. "புலம்பெயர் இலக்கியம்" என்றொரு பிரிவு தமிழிலக்கியத்திற்கு அவசியமா?

அவசியம் அவசியம் இல்லை என்பது இரண்டாம் பட்சம். எப்போதும் தானே வளர்வதைத் தாங்கிப்பிடிப்பதே இலக்கியத்தில் உச்சம். இதுகாறும் தமிழில் உருவான இலக்கியங்களெல்லாம் வரலாமா என்று உத்தரவு கேட்டுக்கொண்டு வந்ததில்லை. வந்தபின் அதற்கொரு பெயர் சூட்டிப் பார்க்கிறோம். இலக்கியத்தில் ஒரு போட்டி மனப்பான்மை இருப்பது அதன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே இலக்கியத்தில் பிரிவுகள்
வரவேற்புக்குரியவை. புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் எழுதவேண்டும் என்று ஒன்றுமில்லை. புலம்பெயர்ந்தவர்களே எழுதினால் அதில் வீரியம் அதிகம் இருக்கும் என்பதும் உண்மை. நாடுவிட்டு நாடு நடக்கும்போதே பாட்டு கூடவே வருகிறது என்றால் அதில் எத்தனை உண்மை இருக்கும், உணர்ச்சி இருக்கும், ஆழம் இருக்கும், அதிசயம் இருக்கும்?

அதே வேளையில், புலம்பெயர்ந்தது தமிழனா தமிழா என்றொரு கேள்வியை நான் எனக்குள் கேட்டுவைத்தேன். தமிழனைக் காட்டிலும் அதிகம் தமிழே புலம்பெயர்ந்தது என்று தீர்மானித்தேன். அதற்காக ஒரு கவிதையும் எழுதினேன்.

புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
இளமையோடும் புதுமையோடும்
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்

ஓசைகளாய் இருந்தவள்தான்
ஓலைகளில் பெயர்ந்தாள்
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
சங்ககாலம் கொண்டாள்

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
தாள்களுக்குள் பெயர்ந்தாள்
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
தரணியெங்கும் நிறைந்தாள்

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

அழிந்திடுவாள் என்றோரின்
நரம்பறுத்து நின்றாள்
இணையமென்ற மேடைதனில்
மின்னடனம் கண்டாள்

அயல்மொழியைக் கலந்தோரை
வெட்கியோட வைத்தாள்
அழகுதமிழ் அமுதத்தமிழ்
ஆட்சிமீண்டும் பெற்றாள்


14. சிறுகதை, கட்டுரை என்பனவற்றில் உங்கள் ஆர்வம் எத்தகையது?

சிறுகதைகளைவிட கட்டுரைகளில் அதிக ஈடுபாடு கொண்டவன் நான். கட்டுரைகளுக்காக அதிக நேரம் ஒதுக்கவேண்டும் என்று அவ்வப்போது நினைப்பதுண்டு. ஈர்ப்போடு கவிதைகள் எடுத்துக்கொண்டவை போக மீதமுள்ள நேரமெல்லாம் கட்டுரைகளுக்கே. என் விடலையை விட்டு வெளியேறிய பருவங்களில் சிறுகதை எழுதி இருக்கிறேன். ஒரு சிறுகதை, நா பார்த்தசாரதியின் தீபத்திலும் வெளிவந்திருக்கிறது. ஆனால் தற்போது சிறுகதைகள்
எழுதும் எண்ணம் இல்லை. கவிதைகள்தாம் என்னை அடிக்கடி இழுத்து ஒத்திப்போகும் முத்தங்கள். இருப்பினும், கதைகள் எழுதவும் பின்னாளில் நான் அமரக்கூடும்.


15. தற்போதைய இளம் சந்ததி இலக்கியத்தில் கொண்டுள்ள நாட்டம் திருப்திகரமாக உள்ளதா?

தற்போதைய இளம் சந்ததி மட்டும் அல்ல, முதியவர்களும் திருப்திதருபவர்களாய் இல்லை. அள்ளி அள்ளிக் கொட்டினாலும் தமிழ்த்தாய்க்குத் திருப்தி வரப்போவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், தரமான இலக்கியம் படைக்க வேண்டியவர்களெல்லாம் வியாபார இலக்கியம் படைப்பதில் மும்முரமாகிப் போனார்களே அதுதான் இக்காலத்தின் மிகப் பெரிய நஷ்டம். உயர்ந்த இலக்கியங்களைப் படைக்க வேண்டிய கரங்கள் சில்லறைகளை
எண்ணிக்கொண்டுதான் சிவந்துபோகின்றனவே தவிர உலகத்தரத்தில் எழுதி எழுதி அல்ல.

இந்நிலையில் இளைய தலைமுறையினரைப் பற்றிய கவலை மேலும் அதிகரிப்பது சரியானதுதான். வார்த்தைக்கொரு வார்த்தை என்று ஆங்கிலம் கலந்ததைத் தாண்டி இன்று பத்து ஆங்கிலச் சொல்லுக்கு ஒரு தமிழ்ச்சொல் என்று பேசும் இழிநிலை வந்துவிட்டது. இதற்கான பொறுப்பை நம் தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், பண்ணலை வானொலிகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பெற்றோர்கள் என்று எல்லோரும் சமமாகப்
பிரித்துக்கொண்டார்கள். இதில் ஒருவருக்கு ஒருவர் போட்டிவேறு.

பெற்றோர்கள் மனதுவைத்தால்தான் இந்தக் கேவலமான நிலை மாறும். தமிழ் வாழும். தமிழனின் அடையாளம் காக்கப்படும். தமிழ்க் கலாசாரத்தின் பொருள் புரியும்.

ஆயினும் நானொன்று சொல்வேன். எந்தச் சூழலிலும் தமிழ்மட்டும் செத்துப் போய்விடாது. அதுதான் தமிழின் தனிச்சிறப்பு. ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக அடக்கப்ப்ட்டுக் கிடந்தாலும், வீரியமாய் வெளிவந்ததல்லவா நம் அமுதத் தமிழ்.


16. வளரும் தலைமுறையின் கவனத்தை ஈர்ப்பதற்கு தமிழிலக்கியம் எடுக்க வேண்டிய பாதை உங்களது பார்வையில் என்ன என்று எண்ணுகிறீர்கள்?

தமிழர்கள் தமிழர்களிடம் தமிழில் பேசவேண்டும் என்ற வேண்டுகோள் ஒவ்வொரு செவியையும் ஓயாமல் தட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்றுக்கொடுத்து தமிழர் பண்பாடு சொல்லிக் கொடுத்து வீட்டில் தமிழ் பேசி நல்ல தமிழ்ச் சூழலில் வளர்க்க வேண்டும்

தமிழைத் தவறவிட்டுவிட்டுத் தங்களின் அடையாளம் தொலைந்துபோய் நிற்கும் தமிழர்கள் உணரும் வண்ணமாய் கவிதைகள் கட்டுரைகள் கதைகள் துணுக்குகள், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், வானொலி நிகழ்ச்சிகள் போன்றவை தொடர்ந்து வரவேண்டும்.

திரைப்படமும் ஒரு மகா சக்திதான். அதில் நல்ல தமிழ் உலவவேண்டும். திரைப்பாடல்கள் தரமான தமிழில் வரவேண்டும். அதைப் பாடுவோர் தமிழறிந்து பாடவேண்டும்.

அரசியல்வாதிகள் தமிழைத் தன் பிழைப்புக்காக பயன்படுத்திக்கொள்ளாமல், அதன் வளர்ச்சிக்காகவும் அது அனைத்துத் தமிழர்களின் வாழ்க்கைக்கும் வழி செய்யும் மொழியாகவும் ஆக்குவதற்கு உண்மையாய் உழைக்க வேண்டும். தமிழர்களுக்குத் தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்க வேண்டும்

தமிழின் பெருமைகளைக் கலைகளும் இலக்கியங்களும் வானுயர்த்திப் பிடிக்கவேண்டும்

வாழ்க தமிழ். நன்றி வணக்கம்.
காக்கைச் சிறகினிலே என்றொரு ஹாலிவுட் படம்

சிலர் சொல்வதைப்போல தூயதமிழ் என்பது நிலவ வழியில்லைதான். மொழியின் வளர்ச்சியியல்படி தூய்மை என்பது பொருளற்றுப் போகும்தான்.

ஆனால் எது தூய்மை என்று நாம் வரையறுத்துக்கொண்டால், நம் தமிழ்மொழி தூய்மையாகவே இருக்கும்.

அவசியம் ஏற்படும்போது மட்டும், பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப் படுத்தி ஏற்றுக் கொள்வதால் தமிழின் தூய்மை கெட்டுவிடும் என்று கொள்வதற்கில்லை. இதைத் தொல்காப்பியக்காலம்தொட்டே ஏற்றுக் கொண்டுள்ளோம். இலக்கணமாகவும் வகுத்துக் கொண்டுள்ளோம்.

ஆனால், வேண்டுமென்றே, தமிழென்னும் இனிய நதிக்குள் சாக்கடை கலப்பதுபோல், பிறமொழிச்சொற்களை, தமிழில் இணையான சொற்கள் இருந்தும் வலுக்கட்டாயமாகக் கலப்பது தமிழ் மொழியின் தூய்மைக்கு நாசம்தான்.

சில அறிவியல் கட்டுரைகளை நான் திண்ணையில் வாசித்திருக்கிறேன், அவை நல்ல தமிழில், அழகு தமிழ்ச் சொற்களின் மொழிபெயர்ப்போடு உலா வருகின்றன. அவற்றை நான் பாராட்டுகிறேன்.

ஆனால் சிலர் நான் "வாக்" பண்ணும்போது என் "டாக்" என் "ஹாண்ட்" ஐ விட்டு "ரன்" பண்ணிவிட்டது. என்கிறார்களே. கேட்டால் தமிழ் வளர்க்கிறேன் என்கிறார்கள். தமிழ் எனக்கு மூச்சு ஆனால், அதைப் பிறர்மேல் விடமாட்டேன் என்கிறார்கள். என்ன கூத்து இது.

தமிழைச் செம்மொழி என்று அறிவித்ததன் காரணமாக மிகமுக்கியமாக ஒன்றைச் சொல்கிறார்கள். அது தமிழின் தொடர்ச்சி. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழும் இன்று இருக்கும் தமிழும் மிகச் சிறிய மாற்றங்களோடு மட்டுமே இருக்கின்றன. இச்சிறப்பு வேறு எந்த மொழிக்கும் இல்லை என்கிறார்கள். .

இன்று தமிழ் கணினி மொழியாக அருமையாக பவனி வருகிறது. ஆங்கில மொழிக்குப் பிறகு தமிழ் மொழிதான் இணையத்தில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. சொல்ல வேண்டியவற்றைத் தமிழர்கள் எந்தத் தடையும் இன்றி சொல்லிவருகிறார்கள்.

புதிய சொற்களின் தேடல் ஒருபுறம் செழுமையாய் நடந்து கொண்டிருக்கிறது. கணினி, இணையம், மின்னஞ்சல், மடலாடல், மட்டுநர், ஊடகம், தொலைக்காட்சி என்று ஏராளமான சிறந்த தமிழாக்கங்கள் உருவாகிக்கொண்டும் பலரால் பயன்படுத்தப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டும்தான் இருக்கின்றன.

திடீர் என்று ஒரு சொல் அறிமுகமாகும்போது அதை அப்படியே ஏற்பதும், பிறகு நல்ல தமிழாக்கம் வந்ததும் மாற்றிக் கொள்வதையும் தமிழ் தொன்றுதொட்டே செய்துகொண்டுதான் இருக்கிறது.

"தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga(?), Da(?), Ba(?), Dha(?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும்" என்று சிலர் சொல்கிறார்கள்.

தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் தேவையில்லை. இருக்கும் எழுத்துக்களைக் கொண்டே நம்மால் எந்தச் சொற்களையும் எழுதமுடியும். ஒரு மொழியில் எழுதப்பட்ட வார்த்தையை உச்சரிப்பது அந்த மொழியின் இயல்பைப் பொருத்தது.

உதாரணமாக முகம் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை மு க ம் என்றுதான் எழுதி இருக்கிறோம் ஆனால் உச்சரிக்கும்போது muham என்றுதான் உச்சரிக்கிறோம். அதற்காக இதை முஹம் என்று மாற்றி எழுதலாமா?

இதேபோல, சங்கம் என்ற சொல். இது Changam என்று உச்சரிக்கப்படுகிறது. Chankam என்று உச்சரிக்கப்படாது. இதுதான் நம் தமிழ் மொழியின் இயல்பு.

இது அனைத்து மொழிகளுக்கும் உள்ள இயல்புதான். ஆங்கிலத்தில் இது மிக அதிகம். தமிழில் மிகமிகக் குறைவு. உதாரணம்: enough, cut, station, psychology, knife என்று மிக நீளமாய் நீளும். இவற்றை எழுதி இருப்பதுபோலவே வாசித்தால் வினோதமாக இருக்கும். அது ஆங்கிலத்தின் இயல்பு. இதனால் அந்த மொழி நகைப்புக்குரியதல்ல.

தமிழ் என்ற சொல்லை ஆங்கிலத்தில் எழுதமுடியாது. Tamil என்று அன்று வெள்ளையர் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். அதை இன்றும் தமிழ்நாடு ஏற்று பயன்படுத்துவதை நான் விரும்பவில்லை.

Thamiz என்று அதை அரசு ஆவனங்களில் மாற்றியமைக்க வேண்டும். ழ் என்ற எழுத்துக்கு இணையான எழுத்து ஆங்கிலத்தில் கிடையாது. அதனால் வேறொரு எழுத்தை அதற்காகப் பயன்படுத்தி உச்சரிக்கும்போது சரியாக உச்சரிக்கிறோம். அப்படித்தான் தமிழிலும், இல்லாத எழுத்துக்களுக்குப் பதிலாக, கூடுமானவரை உச்சரிக்கக்கூடிய எழுத்தை இட்டு நம் தமிழ் மொழியைக் காத்து முன்னேறுகிறோம்.

புஹாரி என்ற என் பெயரை நான் புகாரி என்று எழுதுகிறேன். உச்சரிப்பவர்கள், Buhari என்று மிகச் சரியாக உச்சரிக்கிறார்கள். அப்துல் ரஹ்மான் என்ற பெயரை, அப்துல் ரகுமான் என்று கவிக்கோ எழுதுகிறார். எல்லோரும் சரியாகத்தான் உச்சரிக்கிறோம். ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை

பாரதி என்ற பெயரை Bharathi என்று நாம் மிகச் சரியாக உச்சரிக்கிறோம். Paarathi என்று உச்சரிப்பதில்லை. எனவே அது சரிதான் என்பது என் கருத்து. புகாரி என்பதை Puhaari என்று உச்சரிப்பவர்கள், அறியாமல் உச்சரிப்பார்கள், அறிந்ததும் மாற்றிக்கொண்டு Buhari என்று உச்சரிப்பார்கள். இது எல்லா மொழிகளுக்கும் பொது. ஆங்கிலத்தில் "கினவ்லெட்ஜி - knowledge" என்று அறியாமல் வாசித்தவர்கள் பிறகு "நாலட்ஜ்" என்று கற்றுக்கொண்டதும் சரியாக வாசிக்கிறார்கள்.

எனவே தமிழுக்குப் புதிய எழுத்துக்கள் அவசியமில்லை என்பதே என் கருத்து

"கிரந்த எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும்" என்று சிலர் சொல்வதை நான் ஏற்கிறேன்.

ஹாசன் என்பதை காசன் என்று எழுதமுடியாது. ஏனெனில் அது அவர் பெயர். ஆனால் என் தகப்பனார் பெயர் ஹசன் அதை அவர் அசன் என்று எழுதினார். நன்றாகத்தான் இருக்கிறது. பெயரைப் பொருத்தவரை அது அவரவர் விருப்பம்.

ஆனால் பெயர்ச்சொற்களைத் தவிர்த்த தமிழின் சொற்கள் தமிழ்ப் படுத்தப்படுவதையே நான் விரும்புகிறேன். அதையே நான் தூயதமிழ் என்கிறேன்.

ஸந்தோஷம் என்ற சொல் வடச்சொல். அதை நான் சந்தோசம் என்று எழுதுகிறேன். எழுதும்போதே சந்தோசப்படுகிறேன். ஜீசஸ் என்ற பெயர் ஏசுநாதர் என்று எப்போதோ ஆனது. இப்போதும் எனக்கு ஏசுநாதர் என்று சொல்வதே பிடித்திருக்கிறது. செவி பழகியபின் தமிழ் இனிக்கிறது. இதில் தவறில்லை என்பதே என் கருத்து.

என் நண்பர் ஒருவரின் பெயர் ராஜு ராஜேந்திரன். அவர் பெயரை நான் ராசு ராசேந்திரன் என்று எழுதலாம். ஆனால் அதை அவர் அனுமதிக்க வேண்டும். ஏனெனில் அது அவரின் பெயர். நான் விளையாடுவதற்கு ஒன்றும் இல்லை. என் பெயராக இருந்தால் நான் ராசு ராசேந்திரன் என்று மாற்றிக்கொள்வேன். அதனால் என் பெயர் சிதைந்ததாய் நான் எண்ணமாட்டேன். ஆனால் ராஜு ராஜேந்திரன் தன் பெயரை "வேந்தன் அரசு" என்று மாற்றிக்கொண்டார். அது அவரின் தனித் தமிழ்ப்பற்று, பரிதிமாற்கலைஞரைப் போல. அவரின் தனி விருப்பம். நான் அதை மதிக்கிறேன். சுரேஷ் என்று ஒரு நண்பர் பெயரை எழுதும்போது நான் சுரேசு என்று எழுதி நோகடிக்க விரும்புவதில்லை. இது என் வழக்கம். இதெல்லாம் தமிழில் தூய்மையைக் கெடுத்துவிடாது.

சமஸ்கிரதச் சொற்களைப்போல் வேறு எந்த மொழிச் சொற்களும் தமிழில் மிக அதிகமாய்க் கலக்கவில்லை. நாம் எழுதும் அனைத்து எழுத்துக்களிலும் அவை உள்ளன. இன்று இயன்றவற்றை மட்டும் நீக்கிவிட்டு பழந்தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்த முனைகிறோம். அவற்றைச் செய்பவர்களை நான் பெரிதும் மதித்து வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். இதில் தமிழறிஞர்களின் பணி அளப்பரியது. அவர்களுக்கு என் நன்றி.

சங்கம் என்ற சொல் வடமொழிதான் என்று உறுதியாக சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நான் வடமொழி என்று நினைத்த எத்தனையோ சொற்களை சில தமிழறிஞர்கள் தமிழ்தான் என்று சொல்லி நிறுவுகிறார்கள்.

உதாரணமாக. வேட்டி என்ற சொல். இது நம்மிடமிருந்து வடமொழிக்குள் நுழைந்து வேஷ்டியாகி பிறகு நம்மிடமே வந்து மல்லுக்கு நிற்கிறது என்பார் ஒரு தமிழறிஞர். வேட்டி என்பதுதான் மூலம் என்பார்.

பலர் வேறு வழியில்லை என்று சொல்லிக்கொண்டு பயன்படுத்தும் சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் உண்டு. உதாரணம்.

பட்டர் = வெண்ணை
பவுடர் = பொடி
பஸ் = பேருந்து
டிரெய்ன் = புகைவண்டி, புகைரதம்
காலேஜ் = கல்லூரி

அல்ஜிப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ் போன்ற சொற்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம்.

சேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா போன்றவை அவர்களின் பெயர்கள் அதில் நாம் கைவைப்பதில்லை.

தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்கள், தமிழ்ச்சொற்கள் ஆகிவிடுகின்றன. அதன் மூலம் எது என்று ஆராயும்போதுதான் அது எந்தமொழியில் இருந்து வந்தது என்ற தகவல் தெரியவரும். உதாரணமாக, சொர்க் நர்க் என்பார்கள் வடமொழியில். இவை சொர்க்கம் நரகம் என்று தமிழ்ப்படுத்தப் பட்டுவிட்டன. அப்படியே நாம் அவற்றைச் சொர்க் நர்க் என்று பாவிப்பதில்லை.

மன் என்ற சொல்லை மனது என்றும் மனசு என்றும்தான் நாம் பயன்படுத்துகிறோம். இப்படித் தமிழாக்கப்பட்ட மனது என்ற சொல்லை மீண்டும் அதன் மூல மொழியான வடமொழியில் பயன்படுத்தமுடியாது. அங்கே அது மன் தான்.

பர்வாநஹி தமிழில் பரவாயில்லை என்று ஆகவில்லையா?

தமிழ் என்ற சொல்லை Tamil என்று ஆங்கிலேயர் இன்றும் எழுதுகிறார்கள். தஞ்சாவூர் என்ற சொல்லை Tanjore என்றும், மதுரை என்ற சொல்லை Mejra என்றும், தூத்துக்குடியை Tuticorin என்றும்தான் ஆங்கிலேயர் எழுதினார்கள். இந்த அசுத்தங்களைக் களைவது தமிழனின் கடமையல்லவா?

காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்காங், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, கஸ்தூரி, சரஸ்வதி போன்ற பெயர்களை நான் அப்படியே எழுதுவதைத்தான் விரும்புகிறேன். ஏனெனில் இவையாவும் பிறநாட்டு, பிறமொழிப் பெயர்ச்சொற்கள். இவற்றைத் தமிழ்ப்படுத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. தமிழ்ப் படுத்தினாலும் தவறில்லை.

டாமில் டமில் டாமிள் தமில் தமிள் என்று ஆங்கிலம் வாயிலாக என் அழகு தமிழைப் பிறர் உச்சரிக்கும்போது தமிழனாய்ப் பிறந்து தமிழனாய் வாழும் எனக்கு மிகுந்த வேதனையாய் இருக்கிறது.

ஆங்கிலத்தில் 'ழ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்று நான் கேட்கமாட்டேன். அதேபோலத்தான் தமிழிலும் வேண்டாத புதிய எழுத்துக்களை ஏற்றவேண்டிய அவசியமில்லை

சவுதியில் எனக்கு ஓர் இலங்கைத் தமிழர் நண்பராயிருந்தார். அவர் நண்பரானதே நான் அவர் பெயரை மிகச் சரியாக உச்சரித்ததால்தான். அன்று வரை சவுதியில் எவருமே அவர் பெயரைச் சரியாக உச்சரிக்கவில்லை என்றார். Nganendran என்பதுதான் அவர் பெயர். ஞானேந்திரன் என்று நான் அவரை முதல் முறை அழைத்ததும். கண்ணீரே வந்துவிட்டது அவருக்கு. மற்றவர்களெல்லாம், காணேட்ரன், நானேன்ரன், நக்னேட்ரன் என்று கொன்று எடுத்திருக்கிறர்கள். ஞானேந்திரன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதற்கு ஆங்கில எழுத்துக்கள்தாம் காரணம். ஆங்கிலத்தில் 'ஞ' என்ற எழுத்தை ஏன் ஏற்றக்கூடாது. அப்படி ஏற்றாமல் அது என்ன உலக மொழி என்றும் நான் கேட்கமாட்டேன்.

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது. கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது என்று யோசிக்கலாம்.

"முஅஅல்லம்" என்று ஒரு பெயர் அரபு மொழியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபு மொழியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கலாம். பல எழுத்துக்களை நம் செவியால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது, அனைத்து மொழியிலிருந்தும் உள்ள அனைத்துச் சொற்களையும் உச்சரிக்க நாம் புதிய எழுத்துக்கள் கொண்டுவர வேண்டும் என்று விரும்புவோமா?

பிரஞ்சு மொழி வாசகங்களைப் பார்த்திருக்கலாம். எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

ஒவ்வொரு மொழியும் அழகுதான். எந்த மொழி அழகில்லாதது?

தாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதயர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

முகம், மாசம், சனி, சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிக்கிறோம்? க என்றா ஹ என்றா?

மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிப்பு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு. Cut, Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா? Sun, Son எப்படி வித்தியாசப் படுத்துகிறோம்? hire, here, hear, heir, hair நுணுக்கமாக எப்படி உச்சரிக்கிறோம்? Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்? இன்னும் எனக்கு இதுபோல் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் இருக்கின்றன.

உலகத்தில் உள்ள அத்தனை மொழிச் சொற்களும் அதன் மூல மொழியில் உள்ளதுபோலவே பிற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால், அத்தனை மொழிகளையும் அழித்துவிட்டு, புதிதாக ஒரு மொழியை உருவாக்கி, உலகமொழி என்று அழைக்கவேண்டும். இல்லாவிட்டால், இப்படியான தப்பான விருப்பங்கள் சாத்தியப்படாது.

பிறமொழிப் பெயர்களை அந்த மொழியில் உள்ளதுபோலவே தமிழில் எழுத முடியவில்லை (உச்சரிக்கமுடியும்) என்பதற்காகத் தமிழைக் குறைகூறலாமா?

அதேபோல் தமிழ்ச்சொல் ஒன்றைப் பிறமொழியில் எழுதமுடியவில்லை என்பதற்காக அந்த மொழியைக் குறைசொல்லலாமா? ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதை ரசிப்பதும். இயன்றவரை எப்படி வளைக்கலாம் என்பதை சாதுர்யமாய்ச் செய்தும்தானே நாமே மொழியைப் போற்றவும் வளர்க்கவும் முடியும்?

தமிழை ஒரு மருமகளாகக் கற்பனை செய்து பாருங்கள். அடுத்த வீட்டுக்குச் சென்ற மருமகள் தன் அடையாடங்களைச் சுத்தமாகத் தொலைத்துவிட்டு, அப்படியே மாறிவிட்டாள் என்பது ஒன்று. தன் அடையாடளங்களையும் தக்க வைத்துக்கொண்டு, புகுந்த இடத்துக்கும் வளைந்து கொடுத்துக்கொண்டு வாழ்கிறாள் என்பது ஒன்று. இவை இரண்டில் தமிப்பற்றுள்ள ஒருவர் எதை விடும்புவார்?

ஆயினும் தமிழ் மருமகள் ஆகமாட்டாள். தமிழ் ஒரு தாய் அந்தத் தாய் தன் வீடு வந்த மருகளுக்காகக் கொஞ்சம் வளைந்து கொடுப்பாள். ஆனால் தன் வீட்டின் பாரம்பரியம் இயல்பு இவை சிதையும் பட்சத்தில் உறுதியாக நிற்பாள்.

தமிழன் தமிழ்ப் பெயர்தான் வைக்கவேண்டும். நாம் அதற்குத் தயாராயில்லை. ஆனால் தமிழர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் வாழ்கிறோம்.

பிறமொழிப் பெயர்களை நாம் வைத்துக்கொண்டு, அதாவது குறையை நம்மீது வைத்துக்கொண்டு தமிழைக் குறைகூற வருகிறோம்.

பலருக்கும் சில அயல்மொழிப் பெயர்களை அவர்கள் உச்சரிப்பதுபோலவே தமிழில் எழுதமுடியவில்லையே என்ற கவலைதான் இருக்கிறது.

தமிழ்ப்பெயர் வைக்க விரும்பாதவர்கள், ஒரு சைனா பெயரை வைத்துக் கொள்ளலாம். அது அவர்கள் விருப்பம். ஸ்சூங் ஷ்சயாங் ப்ச்ஞ்சூய் என்று தான் அவர் பெயரை தமிழில் எழுதமுடியும். அவர் உச்சரிப்பதை அப்படியே ஒருக்காலும் தமிழில் மட்டுமல்ல வேறு எந்த மொழியிலும் எழுதமுடியாது.

அடுத்தது தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழ்ப்பெயர்கள் சூட்டுவது தொடர்பாகவும் பலரும் பலவாறு பேசுகிறார்கள். கவிஞர் மதுமிதா தன் நேர்காணலில் "நமது இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டுக்குமே தமிழ்த் தலைப்பு கிடையாது. ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, சீவகசிந்தாமணி, வளையாபதி எதிலுமே தமிழ் இல்லையே" என்று சொன்னது என் ஞாபகத்துக்கு வருகிறது.

திருக்குறள், நன்னூல், புறநானூறு, அகநானூறு, குற்றாலக் குறவஞ்சி, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று ஏராளமான தமிழ்த் தலைப்புகளில் கவிதைகள், காவியங்கள் தமிழில் உண்டு.

ஆரியர்களின் வரவால் சமஸ்கிருதப் பெயர்கள் திராவிடர்களுக்கு வைக்கப்பட்டன. மணிமேகலை, சீவகன், கோபால், சண்முகம் எல்லாம் தமிழ்ப் பெயர்கள் அல்ல. அவை புகுத்தப்பட்ட பிறமொழிப் பெயர்கள். அப்துல்காதர், அப்துல்ரகுமான் பொன்ற இஸ்லாமியப் பெயர்கள், டேவிட், ஜேகப் போன்ற கிருத்தவப் பெயர்கள், விக்னேஷ்வர், திலிப் போன்ற இந்துப் பெயர்கள் எல்லாம் மத அடையாளங்களாக வைக்கப்பட்டன.

அன்பு, முத்தழகு, அரசு, பூங்கொடி என்ற தமிழ்ப் பெயர்கள் பிறகு தலைகாட்டத் தொடங்கின. ஈராயிரம் வருடங்களாக, மதம் என்பது சக்திவாய்ந்த ஒன்றாக இருப்பதால், இதன் வளர்ச்சி அத்தனை வேகமானதாக அமையவில்லை. ஆனால் வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

உண்மைதான். பெயரில் ஒன்றும் இல்லை. பெயரைச் சுமந்தவர் தமிழை நேசிக்கும் தமிழராய் இருக்கும் பட்சத்தில். ஆனால் நாம் ஒன்றை இங்கே கவனிக்கவேண்டும். சீவக சிந்தாமணி என்று ஒரு காவியத்துக்குப் பெயரிட அந்தப் பாத்திரம் காரணமாய் இருந்தது.

உதாரணமாக, காந்தி என்று ஆங்கிலப்படத்துக்குப் பெயரிட்டார்கள். அது மிகவும் சரி. அவர்களே, "நல்லவன் வாழ்வான்" என்று ஓர் ஆங்கிலப் படத்துக்குப் பெயர் வைப்பார்களா?

நம் திரைப்படப் பெயர்களைப் பாருங்கள், நியூ, பாய்ஸ், ஜீன்ஸ், ஜெண்டில்மேன், ஆட்டோகிராப். இவர்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஏதேனும் காரணம் உண்டா?

ஆட்டோகிராப் என்ற படம் தலைப்பில் ஆங்கிலம் வைத்திருந்தாலும், ஆதாம் ஏவாள் பேசியது தமிழ்தான் என்றும் மலையாளிக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது போலவும் சிறப்பான தமிழ்ப்படமாய் இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தப் படத்திற்கு தமிழில் பெயரிட முடியாதா?

பெயரிட்டால் அந்தப் படத்தின் கருவுக்கு களங்கம் வந்துவிடுமா? அந்தப் படத்தில் உள்ள அருமையான பாடல்களின் முதல் வரியை வைத்தாலே அற்புதமாய் இருக்குமே. "மனசுக்குள்ளே" என்று கூட வைக்கலாமே. இன்னும் பொருத்தமானதாகத்தானே இருக்கும்?

மாவீரன் நெப்போலியனைப் பற்றி படம் எடுத்தால், "நெப்போலியன்" என்று பெயரிடலாம். அதில் பொருள் உண்டு. திருச்சியிலிருந்து சென்னைக்குப் போய் வாழும் ஒருவனின் படத்துக்கு Run - Joe என்று பெயர் வைத்தால், இவர்கள் என்ன தமிழர்கள்?

தமிழ்ப் படங்களுக்குத் தமிழ்ப்பெயர் வைக்கக் கோரி போராடாமல், ஹாலிவுட் படங்களுக்கு, 'காக்கைச் சிறகினிலே', 'நின்னைச் சரணடைந்தேன்' என்று கூறியா போராடமுடியும்?

அன்புடன் புகாரி

யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம். இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன் அழைக்கிறது.

எந்த மாற்றமும் செய்யாமலேயே யுனிகோடுக்கு மாறலாம் நாம். வெறுமனே மாறும் அந்த மாற்றத்தையும் செய்யாதிருப்பது எப்படி சரி?

காகிதத்தில் கனிந்தவள்தான்
கணினிக்குள் பெயர்ந்தாள்
கணினிக்குள் பெயர்ந்ததனால்
அண்டவெளி வென்றாள்

திஸ்கியில் திளைத்திருந்தோம் நாம் இதுவரையில். இதற்குமுன் அஞ்சல் என்ற தரம்கொண்டுதானே எழுதி வந்தோம். நான் என் எத்தனை கோப்புகளை அஞ்சலிலிருந்து திஸ்கிக்கு மாற்றியிருப்பேன். அதன்பின் திஸ்கி 1.6 லிருந்து 1.7. செய்த மாற்றமெல்லாம் ஒரு வலிதான் என்றாலும், அந்த வலிக்குப்பின் பிறந்த குழந்தை எத்தனை ஆரோக்கியம்.

இன்றும் திஸ்கி, குழுமங்களில் மட்டுமே கூடுகட்டிக்கொண்டு குஞ்சு பொறிக்க முடியாத முட்டைகளை இட்டுக்கொண்டிருக்கிறது. வலைப்பூ, வலைத் தளங்களெல்லாம் யுனிகோடு சிறகுகளை தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன.

ஏன்? அது மட்டும் எப்படி முடிந்தது. இது ஏன் முடியவில்லை. ஏனெனில் இரண்டு பேர் சேர்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றாலே தமிழர்கள் முடிவெடுக்க மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். எல்லோரையும் கேட்டு என்றால் நடக்கும் காரியமா?

தனித் தனியே நின்று தமிழன் வளர்வதும், குழுவானபின் அடித்துக்கொள்வதும் வாடிக்கைதானே? எத்தனை எத்தனை எழுத்துத்தரங்கள் இப்போது? அஞ்சல், திஸ்கி, டாப்பு, டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி. ஆளாளுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்வது மலிந்துவிட்டது.

எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனிதான் ஒரே வழி. இதில் மாற்றுக் கருத்து எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மாறுவதில் காலதாமப் படித்துவோம் என்று சிலர் கூறுவதில் எனக்கு மாற்றுக்கருத்து.

யுனித்தமிழ் நாம் கண்ட
அருஞ்சாதனை - அதை
குழுமங்களிலும் செய்வோம்
பெருஞ்சோதனை

மாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரையில் யுனிகோடு குழுமங்கள் தீபங்கள் ஏற்றி தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய் உண்டு.

திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல், திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள் படிகள் படிகள். யுனிகோடு என்ற நாற்காலியை எட்டிவிட்டால், பிறகெல்லாம் செங்கோல்தான் தமிழுக்கு.

அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்


இனி நாம் மாறவேண்டிய மூன்று விசயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

அ. ஜிமெயில்

அட.... தேவையா ஜிமெயில் (திருமடல்)? ஏற்கனவே நான் ஹாட்மெயில் வெச்சிருக்கேன், யாகூ வெச்சிருக்கேன், சிம்பாடிகோ, ராஜர்ஸ், ஏஓஎல், அப்படி இப்படீன்னு சும்மா பத்துப் பதினைஞ்சு மின்னஞ்சல் சேவை வெச்சிருக்கேணுங்களே. அதையெல்லாம் உட்டுப்போட்டு, இப்போ புதுசா என்னமோ ஜிமெயிலு கீமெயிலுன்னா உங்களுக்கே ஞாயமா இருக்கா? கொஞ்சம் நிம்மதியா தமிழில் தட்டெழுத விடமாட்டீங்களா? என்று புலம்புபவர்கள் கவனத்திற்கு:

ஜிமெயில் யாருக்கு எதைத் தருகிறதோ இல்லையோ, தமிழனுக்குத் தங்குதடையில்லாமல் யுனிகோடு தமிழைத் தருகிறது. சரி இனி அதன் பலன் பட்டியலைப் பார்ப்போம்.

ஜிமெயிலின் குளுகுளு சேவைகள் ஏராளம் என்றாலும், மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே இடுகிறேன்.

குளுகுளு ஜிமெயில் சேவைகள்

1. யுனித்தமிழ் - Unicode Tamil

எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனிகோடு தமிழினைத் தட்டச்ச முடியும்.

2. துரித அஞ்சல் தேடல் - Find any message instantly

சொடுக்கும் பொழுதில் ஒரு சொல்லைத் தந்து, எந்த மடலையும் தேடி எடுத்துவிடலாம். இந்தச் சேவை வேறு எந்த அஞ்சல் சேவையிலும் கிடையாது

3. ஒரு கிகாபைட்டு சேமிப்பு - 1 GB storage

எந்த மடலையும் நாம் நீக்கத் தேவையில்லை. அப்படியே சேமிப்பில் தள்ளிவிடலாம். அத்தனை பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சேமிப்புக் கிடங்கு. வேறு எந்த சேவையும் இத்தனை தருவதில்லை. நான் பல காலம், வருடம் 25 டாலர்கள் கட்டி ஹாட்மெயிலிடம் இதில் ஐந்தில் ஒரு பங்கைப் பெற்றிருக்கிறென்

4. உரையாடல்கள் - conversations

இது மிகவும் அற்புதமான சேவை. வேறு எந்த அஞ்சல் சேவையும் இந்தச் சேவையைத் தருவதில்லை. ஒரு subject-பொருளில் ஒரு மடல் இட்டால், பின் அதனைத் தொடர்ந்து அதற்கு வரும் மறுமொழிகள் எல்லாம் ஒன்றாய் ஒரு கோப்பாய் இணைக்கப்பட்டு நம்முன் நிற்கும். அதாவது இலவசமாய் ஓர் உதவியாளர் நமக்குத் தயார். நாம் மேலாளர் போலவும். நமக்கு ஒரு உதவியாளர் இருப்பதுபோலவும் வசதி. எப்படி?

5. மடல் வந்ததும் அறிவிப்பு - gmail Notifier

இந்தச் சேவையும் வேறு எந்த அஞ்சல் சேவையிலும் இல்லை. இதை நிறுவிவிட்டால், எப்போது மடல் வந்தாலும் விண்டோ சின் வலப்பறம் தெரியும் ஜிமெயில் ஐகான் நீல நிறமாய் மாறி நமக்கு மடல் வந்திருக்கிறது என்ற செய்தியைச் சொல்லும். ஆகவே, ஜிமெயில் எப்போதும் திறந்திறக்க வேண்டியதும் இல்லை நாம் அடிக்கடி சென்று பார்க்கவும் தேவையில்லை. இது அவுட்லுக் போன்ற சேவைகளில் மட்டுமே காணப்படும் ஒன்று. அதாவது ஜிமெயில் அவுட்லுக்கின் பல சேவைகளை உள்ளடக்கியது

6. வேண்டாத மடல் கழிப்பு - Spam control

இது மிக முக்கியம். இந்தச் சேவையும் இத்தனைத் தரத்தோடு வேறு எந்த அஞ்சல் சேவையிலும் இல்லை. வேண்டாத மடல்கள் வருவதே இல்லை. அப்படி வருபவை தனியே ஒரு கோப்பில் கிடக்கும். அதை நாம் பார்க்கக்கூடத் தேவையில்லை.

7. கோப்புகளும் வடிகட்டிகளும் - labels and Filters

Inbox தவிர, Folders என்று அவுட்லுக்கில் அழைக்கப்படும் labels இங்கே மிக எளிதாய் உருவாக்கலாம். நன் தேவைக்கேற்ப மடல்களை வேறு வேறு கோப்புகளில் சேமிக்கலாம். வரும் மடல்களை நேரடியாய் அங்கு செல்வதற்கான திட்டங்களை Filters அமைக்கலாம். இந்த லேபல்கள் எல்லாம் தமிழில் வைத்திருக்கிறேன் நான். தமிழில் பார்க்க எத்தனை அழகாய் இருக்கிறது தெரியுமா?

8. தமிழ்த்திரை - Tamil Interface

கூகுள், தமிலேயை அனைத்தையும் தரவல்லது. இது இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே நான் அதிகம் பேசவிரும்பவில்லை

9. குறுக்குவழி பொத்தான்கள் - keyboard shortcuts

ஒரு பொத்தானை அழுத்தி பல காரியங்களைச் சாதிக்க வழியுண்டு இதில். இதுவும் வேறு அஞ்சல் சேவைகளில் கிடையாது

10. 'பாப்' எடுத்தல் மற்றும் திசைமாற்றல் - POP access and Forwarding

ஜிமெயிலுக்குள் வரும் மடல்களை, வேறு மின்னஞ்சல்களுக்கு எளிதாக அனுப்பி வைக்கலாம். இது வேறு அஞ்சல் சேவைகளில் காசு கொடுத்தாத்தான் நடக்கும், பல அஞ்சல் சேவைகளில் காசு கொடுத்தாலும் நடக்காது. POP Access என்பது அவுட்லுக் போன்ற அஞ்சல் செயலிகளுக்கு ஜிமெயில் வரும்படியாகச் செய்வது. இதனால் ஜிமெயிலைத் திறக்கவே வேண்டாம். ஆனால் எனக்கு ஜிமெயில் திறந்து விளையாடுவதே விருப்பம். அதன் சேவைக்குப் பழகிய எவரும் அதை விடமாடார்கள் என்னைப் போலவே என்பது உறுதி.

11. தொடர்புகள் ஓரிடத்தில் - contacts in one place

அனைத்துத் தொடர்புகளையும் நாம் ஓரிடத்திலேயே அருமையாய் வைத்துக் கொள்ளலாம். அதுவும் தமிழில் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்துவதும், மிக எளிது.

12. Import contacts from Yahool, Outlook, Hotmail & other programs

இது மிகவும் வரவேற்கக் கூடியது. வேறு எங்கெல்லாமோ உள்ள தொடர்புகளை எல்லாம் மிக எளிதாக ஜிமெயிலுக்குள் கொண்டுவந்து குவித்துவிடலாம்.http://gmail.google.com/ - இங்கே சென்றுதான் ஜிமெயில் வாசிக்க வேண்டும். Gmail Notifier நிறுவிவிட்டால், அந்தச் சங்கடமும் இல்லை.பிறகென்ன தோழர்களே தோழியரே, இவற்றைவிட வேறு என்ன வேண்டும் ஜிமெயில் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு. அழைப்பு இல்லாமல் யாரும் ஜிமெயில் பெற்றுவிடமுடியாது என்பதால், அழைப்பு வேண்டுவோர் என் mailto:%20buhari@gmail.com முகவரிக்கு எழுதினால், நான் அழைப்புக்கு உடனே ஏற்பாடு செய்வேன்.

எகலப்பை 2.0:
buhari.googlepages.com


ஜிமெயில் உதவி:
http://gmail.google.com/gmail/help/tour/start.htmlhttp://gmail.google.com/support/http://gmail.google.com/
ஆ. கூகுள் குழுமம்அட இதற்கு ஏன் 'ஆ' என்று கொடுத்தேன். தமிழர்களையெல்லாம் அப்படி ஆச்சரியப்படுத்தும் இந்தச் சேவை.

தமிழுக்காகவே கூகுள் இதனைத் தொடங்கி இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் நிச்சயம் வரும். அப்படி என்ன இருக்கிறது இதில். ஏன் நாம் யாகூவை விட்டுவிட்டு இங்கே செல்லவேண்டும்?

1. பலரும், யுனிகோடில் எழுதி தங்கள் வலைப்பூவில் இட்டுவிட்டு பின் அதன் தகுதரத்தை மாற்றி திஸ்கியாக்கி யாகூ குழுமத்தில் இடுகிறார்கள். இது அபத்தமில்லையா? இரண்டு இடத்திற்கும் செல்வது தமிழ்தான். ஆனால் தரம்தான் வேறு. கொக்குக்கு கூஜா, நரிக்கு தட்டு என்பதுபோல இருக்கிறதல்லவா? நாம் கொக்கும் இல்லை நரியும் இல்லை, தமிழர்கள். நமக்கு வேண்டுவது அமுதம் - அதற்கான அட்சய பாத்திரமே கூகுள் குழுமம்.(இக்கட்டுரையை எழுதி, வலையேற்றுவதற்குள் யாகூ யுனிகோடு சேவையைத் தொடங்கிட்டது மகிழ்வினைத் தருகிறது. ஆயினும் யாகூவைவிட பல சிறப்பான சேவைகள் கூகுளில் உண்டு. அதோடு இன்னும் வர இருப்பவை ஏராளம்.)


2. மகேனின் எழில் நிலா - http://ezilnila.com/மாலனின் திசைகள் - http://thisaigal.com/ எனது அன்புடன்புகாரி - http://buhari.googlepages.com/இப்படி ஏராளமான வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனிகோடில்தானே? ஏன் திஸ்கியிலேயே தொடங்குவதில்லை. நானும் முதலில் திஸ்கியில்தான் என் வலைத்தளம் வைத்திருந்தேன். அதை யுனிகோடாய் மாற்றி வருடம் ஒன்றாகப் போகிறது. காலம் மாறிப்போச்சுங்க! யுனிகோடு முதலிடம் வகிச்சாச்சுங்க. வலைப்பூக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனிகோடு தமிழ்தானே?

3. எகலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக வந்தது. அது பின் எகலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் யுனிகோடும் திஸ்கியும் ஒரு பொத்தானைக் குத்தி தரம் மாற்றித்தட்டச்சி சாதனைபுரியலாம், சமாய்த்து மகிழலாம்.

4. யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோ சின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. ஆனால் அது யுனிகோடாக இருக்குமே தவிர, திஸ்கியாக இருக்காது. உதாரணமாக MS Sans Serif என்ற விண்டோ ஸ் எழுத்துருவுக்குள் தமிழ் உண்டு. நம்ப முடிகிறதா? அதுதாங்க யுனிகோடு. மைக்ரோசாப்டே தமிழ் தருகிறது. நாம் வேண்டாம் என்பதா? ஏனய்யா?

5. திஸ்கியில் பயன்படுத்தியதுபோல, தகுதரத்தை-encoding, user defined ஆக்கத் தேவையில்லை. விண்டோ சின் இயல்பிலேயே உள்ள UTF(8) போதும். ஆக நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. தானே தமிழ் தட்டச்சு செய்யலாம்.

6. அடுத்து, யாகூவைப்போல் கூகுள் குறைவான இடம் தருவதில்லை. GB கணக்கில் தருகிறது. எனவே மடல்களை வெட்டி ஒட்டி என்ற கதையெல்லாம் வேண்டாம். சும்மா பூந்து விளையாடலாம். இணையத்தில் அரண்மனை வாசம்தான் நம் தமிழுக்கு.

7. இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

8. தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது மாங்குமாங்கென்று நாம் இணைய குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால் எதுவும் தேடினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச் சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகலாவ விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தப்போல தேடியதும் தட்டுப்பட்டுவிடும். இது தமிழுக்கும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களுக்கும் மிக மிக அவசியம். உதாரணமாக, "புகாரி" என்றோ "அன்புடன் புகாரி" என்றோ "வெளிச்ச அழைப்புகள்" என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி தேடு பொத்தானைச் சொடுக்கிப் பாருங்கள், நிறைய வாசிக்கக் கிடைக்கும். அட என் பெயரிலேயே இப்படி என்றால், உங்கள் பெயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

9. இவற்றோடு, கூகுளில் உள்ள மடல்களை, ஒரு வார்த்தை தந்து தேடச்செய்யலாம். எப்போது என்ன மடல் என்றெல்லாம் கண்வலிக்கத் தேடவேண்டாம். கூகுளே தேடித்தரும். போன வருடம் நண்பர் தன் தொலைபேசி எண்ணை, நம் குழுமத்தில் இட்டாரே என்ற நினைவு வந்த அடுத்த கணம், அவர் தொலைபேசி என்னைப் பிடித்துவிடலாம். Mail search not by subject line but content. கூகுளு கூகுளு கூகுளு - அட குளுகுளு குளுகுளு கூகுளு திஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - மூச்சுத் திணறியும் முனகியும் சாகுது


10. http://groups-beta.google.com/group/anbudan இதயம் மீறும் எண்ணங்களால் நாம் எழுந்து பறப்போமே இதய நிழலில் இதயம் கிடத்தி இன்னல் துறப்போமேஇங்கே சென்று பாருங்கள். மடல்கள் குவிந்துவிட்டன. ஏராளமான சோதனைகள் செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று இன்னொரு சோதனை செய்தேன். இணைப்புகள் அனுப்பினேன். அப்படியே வருகிறது. ஆக தற்போதைக்கு பழைய மடல்களைச் சீர் செய்து கோப்புகளாக்கி கூகுள் குழுமங்களுக்குள் இறக்கிவிடலாம். இதனை விரைவில் உயிரெழுத்தில் செய்வேன்.http://groups-beta.google.com/group/uyirezuththu

11. புதிதாக ஒருவர் 'அன்புடன்' குழுமத்திற்கு வந்தார். நீங்கள் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு மடலிட்டேன். இப்போது யுனிகோடு எழுதி சமாய்க்கிறார். அவர் நேற்று ஒரு விசயம் என்னிடம் கேட்டார். என் சிரிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை 'புகாரி, திஸ்கியில் எப்படி எழுதுவது?'http://www.jaffnalibrary.com/tools/Unicode.htmhttp://www.higopi.com/ucedit/Tamil.htmlஇங்கே சென்றால் விண்டோ ஸ் 98 பயன்படுத்துபவர்களும் மிக எளிதாக யுனிகோடு தமிழ் தட்டச்சு செய்யலாம்.

12. இணையத்தோரே குழுமத்தோரே பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுங்கள். நான் புறப்பட்டு நாளாச்சு, என்னோடு அங்கே வந்து சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாச்சு. பரிட்சார்த்தமாக ஓர் இணைகுழுமம்-parallel group தொடங்குங்கள். அது போதும். மிகவிரைவில் அங்கேயே தங்கிவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாய் உண்டு.

என் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே உங்கள் சோதனை மடல்களை இட்டுக்கொள்ளலாம்.

அது உங்கள் குழுமம்.

அன்புடன் குழுமம்.http://groups-beta.google.com/group/anbudan

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

பச்சை மிளகாய் இளவரசி


நீதான் நீதான் நீயேதான்
என் பச்சை மிளகாய்
இளவரசி

நீளும் நாக்கின் நுனியோரம்
பொன் ஊசி உறைப்புச்
சிங்காரி

நாளும் பொழுதும் பாசம்தான்
நெடும் ஆயுள் வளர்க்கும்
நேசம்தான்

செல்லச் சிணுங்கல் பூங்குருவி
நீ உள்ளம் ஊறும்
பாலருவி

யாரும் உன்போல் இருப்பாரோ
மிகச் சின்னஞ் சிறிய
கன்னித்தாய்

தன்னை மகளாய் ஈன்றவனை
மன வயிற்றில் சுமந்து
பெற்றவளாய்

காலை எழுந்தால் உன்முகத்தை
என் கண்ணின் மணியே
தேடுகிறேன்

மாலை கவிழ்ந்தால் தளிர்மடியில்
என் மனதின் கிழிசல்
தைக்கின்றேன்

எல்லாம் உதிர்ந்த பூஞ்சோலை
அதில் சொக்கத் தங்கம்
பூத்திருக்கு

கல்லோ முள்ளோ காலடியில்
எனை அள்ளிக் கொள்ளும்
மாம்பிஞ்சு

பெண்ணைப் பெற்றவன் மகராசன்
தினம் பிறையின் மடியில்
பிறக்கின்றான்

பொன்னும் மணியும் யாருக்கு
ஒரு பெண்ணே வேண்டும்
உயிருக்கு

* (ஏப்ரல் 2004)

கனடாவே உயரந்தான்


கழுத்தெலும்பு ஒடிய ஒடிய
கண்ணுமணி விரிய விரிய
ஆச்சரியம் கூச்செறிய
அதிசயத்தைப் பாரு
இது கனடா சீயென் டவரு

உச்சிமேல உச்சி ஏத்தி
உலகத்தையே பாக்க வச்சு
கட்டி முடிச்ச ஓவியமிது
நீண்டு வளர்ந்த தாவரம்
இந்தக் கனடா தேசக் கோபுரம்

கோபுரந்தான் உயரமா
கனடாவே உயரந்தான்
கனடாவின் உயரத்துக்கு
அருமையான சிகரத்துக்கு
இந்தக் கோபுரமும் சாட்சிதான்

(கழுத்தெலும்பு...)

கூவிக் கூவிக் கொட்டும்
கணமும் ஓயாப் பாட்டு
நயாகராவின் நாதம்
இதயக் கதவு மோதும்
சுகம் ஆயுள் முழுதும் போதும்

நூறு நூறு மொழிகள்
வேறு வேறு இனங்கள்
ஊரு ஊராய்த் தேடு
ஒன்றாய் இங்கே பாரு
அது கனடா என்றே கூறு

தமிழ் மணக்கும் தெருவு
தமிழ் பேசும் நிலவு
ஈழத்தமிழ் நெஞ்சம்
இளைப்பாறும் மஞ்சம்
இது சொர்க்கத்தையே மிஞ்சும்

(கழுத்தெலும்பு...)

சட்டம் மதிக்கும் மக்கள்
தணிந்து பேசும் குயில்கள்
சத்தியத்தின் மேன்மை
சொல்லும் மனித இனங்கள்
ஒரு வஞ்சமில்லா மான்கள்

மேடைப் பேச்சு இல்லை
சாலை கோஷம் இல்லை
தூய கைகள் விரித்து
தெளிந்த நல்ல ஆட்சி
தினம் மேன்மை தானே மூச்சு

கவிஞர் அறிஞர் கூடி
அன்பும் அறிவும் கூட்டி
நேசக் கொடிகள் ஏற்றி
சட்டம் தீட்டி வைத்தார்
உலக ஒட்டு மொத்தம் வென்றார்

காற்றில் மூச்சில் கருணை
கனடா மண்ணின் மகிமை
கோடி அன்னை தெரிசா
கூடிச் சேர்ந்த அங்கம்
எங்கள் கனடா என்னும் தங்கம்

(கழுத்தெலும்பு...)

* (ஜீன் 2002)

*****

யார் இந்த பாரதிதாசன்


சோலையின் நடுவில்
சொக்கிடும் அழகில்
பூக்களைக் கண்டு
பூரித்து நின்றால் - அவன்
இயற்கை நேசன்!

அந்தச்
சோலையின் வேர்களில்
உழைத்தவன் இரத்தம்
ஓடுதல் கண்டு
உள்ளம் நெகிழ்ந்தால் - அவன்
பாரதிதாசன்

தமிழெனும் மொழியில்
கவிதையின் வனப்பில்
நயங்களைக் கண்டு
நெஞ்சம் குளிர்ந்தால் - அவன்
தமிழின் பிரியன்

அந்தத்
தமிழெனும் அமுதில்
அசைகின்ற தேரில்
துடிக்கின்ற உயிரைத்
தனதெனக் கண்டால் - அவன்
பாரதிதாசன்

விதவைச் சிறையில்
வாடும் நிலவின்
வேதனை கண்டு
இதயம் கனத்தால் - அவன்
சமூக நண்பன்

அந்த
விதவை என்பவள்
முடிந்தவள் அல்ல
வேர்ப்பலாக் கனிக்கு
நிகரெனக் கண்டால் - அவன்
பாரதிதாசன்

சொல்லும் சொல்லில்
பொருளை வைத்துச்
சுவைபடச் சொல்லி
அறிவினைத் தந்தால் - அவன்
பாட ஆசிரியன்

அந்தச்
சொல்லின் உள்ளே
நெருப்பை உமிழும்
புரட்சிக் கருத்தைப்
பொதிந்து வைத்தால் - அவன்
பாரதிதாசன்

மனிதன் முகத்தில்
சாதியைத் தேடிச்
சாலை ஓரம்
சண்டைபிடித்தால் - அவன்
சாதிக்காரன்

அந்தச்
சாதியின் நரம்பை
வேரொடு அறுத்துத்
தூர எறிந்திடக்
கூர்வாள் தந்தால் - அவன்
பாரதிதாசன்

பிறந்தது முதலாய்ப்
பழகிய பழக்கம்
புகுத்திய வழியில்
வாழ்வினைக் கண்டால் - அவன்
குடும்பக்காரன்

அந்த
வாழ்க்கை வழியில்
மூடப் பழக்கம்
முற்றிலும் கொல்லும்
முரசினை ஒலித்தால் - அவன்
பாரதிதாசன்

பெண்மையின் மென்மையில்
பேரெழில் வனப்பில்
அதிசயம் கண்டு
ஆனந்தம் கொண்டால் - அவன்
காதலின் ரசிகன்

அந்தப்
பெண்களின் உரிமையே
பெரிதெனக் கண்டு
பாரினில் அவளைப்
போற்றிட எழுந்தால் - அவன்
பாரதிதாசன்

நாட்டை ஆள
நல்லவன் தேடி
ஓட்டுச் சாவடியில்
மைமச்சம் பெற்றால் - அவன்
தேசக் குடிமகன்

அந்தக்
கோட்டை ஆள்பவன்
ஓட்டை அரசியலை
ஊருக்குச் சொல்லி
உயர்வுக்கு நின்றால் - அவன்
பாரதிதாசன்

நாளும் பொழுதும்
மேற்கே பார்த்து
வாழும் வாழ்வை
மாற்றிச் சென்றால் - அவன்
பட்டணக்காரன்

அந்த
நாணம் கெட்ட
வாழ்வைப் புதைத்துத்
தமிழர் வழியை
உரக்கச் சொன்னால் - அவன்
பாரதிதாசன்

இறக்கும் முன்னே
சாதனை ஒன்றைப்
படைத்தே இறப்பேன்
என்றே நின்றால் - அவன்
நல்லதோர் மனிதன்

அந்தச்
சாதனை என்பது
பொழுதும் என்னைச்
சார்ந்தே இருப்பது
என்றே வாழ்ந்தால் - அவன்
பாரதிதாசன்

(பாரதிதாசன் வையவிரி அவையின் 2003ம் வருட கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை)

* (ஏப்ரல் 2003)

கடத்தப்பட்ட நகரங்கள்


ஆகஸ்ட் 14, 2003 ஒண்டாரியோ, நியூயார்க், மிச்சிகன் ஆகிய வட அமெரிக்க மாகாணங்கள் ஒரே நேரத்தில் மின்சாரமற்றுப் போயின. அடுத்தநாள் இரவுக்குள் அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டன என்றாலும் அந்த இருட்டு இரவின் எண்ணங்கள் ஒரு பிரகாசமான கவிதைக்கு வெளிச்சம் தந்ததென்னவோ உண்மை.


கஞ்சா கடத்தினால்
சிலமாதச் சிறைவாசம்
விமானம் கடத்தினால்
சிலவருடச் சிறைவாசம்
செழித்துக் கொழித்த சில
நகரங்களையே கடத்தினால்?

ஆம்!
உலகின் தலைசிறந்த
வட அமெரிக்க நகரங்களுள்
சிலவற்றை
சிரஞ்சீவிமலை பெயர்த்துச்
சிவ்வென்று பறந்த அனுமந்தனாய்க்
கடத்திக்கொண்டுபோய்
கூடுவாஞ்சேரியும் கிண்டலடிக்கும்
ஓர் ஆதிவாசிப் பொட்டலில்
அப்படியே போட்டுவிட்டு
அநியாயமாய்ப் பறந்துவிட்டது
மின்சாரம் என்னும் துரோகி

வினோதம் என்னவென்றால்
கடத்தப்பட்ட நகரங்கள்
கடத்திய கொடுங் கள்ளன்
மின்சாரத்திடமே
ஆயுளுக்கும்
சிறையிருக்கக் கோரி
கண்ணீர்விட்டுக் கதறின

இருட்டுப் பற்கள்
மயான நிசப்தமாய் நெறிய
சத்தமில்லாமல்
சாத்தானாய்ச் சிரித்தான்
மின்சாரம்

ஆசைகளே தேவைகள் -அந்தத்
தேவைகளே மனிதர்கள்

'என்னை எடுத்துக்கோ
ஏய்... என்னையும் எடுத்துக்கோ'
என்றே அழகுகாட்டி
அங்காடிச் சாளரங்களில்
வீற்றிருக்கும்
தேவையில்லாப் பொருட்கள்
ஆசை வாகனங்களேறி
நம்வீட்டு
அலமாரிகளை நிறைக்கும்
கதையல்லவா நம் கதை

இந்த நவீன நாட்களில்
சூரியனைக் கிள்ளித்தரும்
செயற்கை நிலாக்களாய் அணிவகுக்கும்
சாலை விளக்குகள் முதல்
வாழ்வின் எல்லாமுமாகிப்போன
இணையம் வரை
கொடுத்துக் கொடுத்து
மனிதவாழ்வை அடிமைவாழ்வாக்கிய
மின்சாரம் என்னும் மகா பூதம்
ஒருநொடி தொலைந்துபோனால்
உயிர் தொலைத்தப் பரிதவிப்பில்
தேடியோடும் பிணங்களாய்
மக்கள்

பெண்டாட்டி
பிறந்தகம் போனால்
வரும் வரை காத்திருக்கலாம்
கண்ணில் பொங்கும்
புதுப்பிக்கப்பட்ட காதலோடு

மின்சாரம் போனால்?

வங்கிநிறையப் பணமிருந்தும்
ஓர் அட்டையைத்தானே
வைத்திருந்தோம்

காசுகேட்டு நின்றால்
பேசாமல் நின்று
நம்மைப்
பிச்சைக்காரனாக்கிய
வங்கி இயந்திரத்தின்
பேச்சை நிறுத்தியது யார்?

சின்னச் சிறகடித்து
வானம் பாய முடியாத
கோழிக்குஞ்சுகளாய்
மின்தூக்கிப் பருந்துகளிடம்
அகப்பட்ட அவலங்கள்

'ஆயிரத்தெட்டாம் திருப்படி
சரணம் பொன் மின்சாரம்' என்று
அடுக்கு மாடிப் படிக்கட்டுகளில்
அழுகுரல்கள்

உணவை
விசமாய் மாற்றித்தரும்
குளிரில்லாப்பதனப் பெட்டிகள்

தண்ணி இல்லாக்
கழிப்பறைக் கொடுமையை
எங்கே கொண்டுபோய்க்
கழிப்பது?

இந்தத்
திருடர்களின் சுதந்திரதினத்தில்
மிரட்டும் இருட்டுக்குப் பயந்து
அவர்களும் பதுங்கிவிட்டார்கள்

உங்கள் பிரச்சினை உங்களோடு
எங்களுக்கு தொலைக்காட்சியில்
சித்திரப்படம் காட்டு என்று
உருண்டுபுரளும் இரண்டுவயது
புதிய சுகவாசிகள்

இப்படிப்
பட்டியலிட்டால்
முடிந்துபோகும் அவதிகளா
மின்சாரமில்லா அவதிகள்?

ஆனாலும்
இந்த ஓர் இரவு மட்டும்
ஊருக்குப் போய்வந்த
அடிமன நிறைவு

மெல்ல மெல்ல
இருட்டைப் பழகிய கண்கள்
தங்களின் உட்பாவைக்குள்
ஊரை உயிர்ப்பித்துக்கொண்டன

நேற்றுவரை
கண்ணில் தெரியாத வானம்
ஆயிரம் கவிதைகள் சொன்னது

மெல்லிய ஓசைகளின்
இனிய காதலைக்
காதுகள் அங்கீகரித்து
மோகம் கொண்டன

இத்தனையையும்
தின்றுவிட்டுத்தானே
மின்சாரம் என்ற பக்காத்திருடன்
நம்மை உள்ளே அடைத்துத்
தாளிட்டுக் கொள்கிறான்

அந்தச் சிறையில்
காலமெல்லாம்
கம்பி எண்ணிக்கொண்டே
நம் நவீன வாழ்க்கை

* (ஆகஸ்ட் 2003)

நியூயார்க் நியூயார்க்


நீர்க்குடங்கள் கொட்டும்
நயாகராவின் கரைகளிலிருந்து
கட்டிடங்கள் கொட்டிக்கிடக்கும்
நியூயார்க் சென்றுவந்தேன்

உலகம் சுழல்வது ஒருபுறம் இருக்க
நியூயார்க் மட்டும்
தனியே சுற்றுகிறதோ
என்ற ஐயம் வந்தது

கடுகாய்த் தொலைந்துபோய்
கற்சிலையாய் மீண்டுவந்தேன்

திரும்பும் திசையெல்லாம்
திமிர்பிடித்தக் கட்டிடங்கள்
வானத்தை ஏளனம் செய்ய
மேகத்தை மறிக்க
மின்னலைத் தடுக்க
இடிகளைப் பிடிக்க
அடடா... நின்று நோக்க
பிரமிப்பாய்த்தான் இருக்கிறது

கட்டிடங்களல்ல அவை
எழுந்து நிற்கும் வீதிகள்

உலகின் அதி உயர
கட்டிடம் எழுப்பும்
நீயா நானா போட்டியில்
பில்லியன்களை
சிரபுஞ்சி மழையாய்க்
கொட்டிக்கொட்டி
ரொட்டிக்கு அலையும்
பட்டினிகள்
உலகெங்கிலும் செத்துமடிய
வானுடைக்கும் கோபுரங்களை
எழுப்பிவிட்டுக்
காலியாய் வைத்திருக்கும்
தர்ம தண்டம் உலக மகா நட்டம்

கோடையின் கொடையாய்க்
குவிந்த மக்கள் தம் முகங்களில்
மத்தாப்பு வெளிச்சங்களோடு
அலைவதைக் காண
முடிந்துபோகாத திருவிழா
முகத்தைக் காட்டுகிறது

கூட்டக் கூட்டக் குவியும் குப்பை
கொட்டக் கொட்ட அள்ளும் சேவை
நியூயார்க் அதிசயங்களில் ஒன்று

கண்களைப்
பிடித்துத் தள்ளிக்கொண்டு
இரவில் ஒளிப் புயல் வீசுகிறது

கட்டிடங்கள் அத்தனையும்
நட்சத்திரங்களைக்
குவித்துவைத்தக் குவியல்கள் ஆக
வானத்தைச் சுருக்கிக் காட்டும்
கண்ணாடியானது பூமி

உலகின் மிகச்சிறந்த ரொட்டி
இங்குதான் கிடைக்கும்
என்ற கடையோர வாசகத்தால்
கிச்சுக்கிச்சு மூட்டப்பட்டு
வெடித்துச் சிரித்தேன்

ஏய்ப்பும் திருட்டும்
நான்தான் என்ற ஜம்பமும்
இங்கே சுவாசங்களல்லவா

எதைத் தொட்டாலும்
எதனுள் நுழைந்தாலும்
பேய்க்காற்றில் வாழையாய்ப்
பெரிய டாலர்கள் கிழிய...

வீதியில் அலைந்தவர்களை
ஊடுறுவிப் பார்த்தால்
முகங்கள் அல்ல
டாலர்களே தெரிகின்றன

இரு தினங்கள்
சுற்றித்திரிந்ததும்
இனி என்ன செய்ய்வதென்ற
கேள்வி வாளெடுத்தது

ஆம்
இம்மாதிரி வியப்பின் ஆயுள்
இரு தினங்கள்தானே

நடப்பதறியா நடையும்
ஓடுவதறியா ஓட்டமும்
சுறுசுறுப்பு நியூயார்க்கின்
சுகங்கள்

முகம் பார்க்கவும் அவகாசமின்றி
இப்படி ஓடும் மக்கள்
எப்படித்தான் வாழ்க்கையைப்
பார்ப்பார்களோ

மஞ்சள்நிற வாடகை வாகனமா
வெள்ளைநிறக் காவலர் வாகனமா
எது அதிகம் என்று
முடிவுசெய்ய முடியவில்லை சாமி

உலகின் தலைநகரம் என்றார்கள்
உலகின் மிகப் பெரிய
வணிக அங்காடி என்றார்கள்
வியப்பாகத்தான் இருந்தது

உலகின்
அமைதிகாக்கும் கருணைக் கோட்டம்
இங்குதானா என்று கேட்டுவிட்டால்
வியப்பு அவர்கள் முகத்தில் சூழுமோ
அல்லது.... வீராப்பாய் ஓர்
அமெரிக்கப் பொய்வந்து வீழுமோ!

* (ஆகஸ்ட் 2004)

கழுத்துக்குமேல் எதுவும் இல்லாதவன்


சமீபத்தில் டொராண்டோவில் நடந்த பழைய மாணவர் அமைப்பின் விழாவிற்குச் சென்றிருந்தேன் இலங்கையின் இன்றைய சூழலில் பாடசாலைகளின் நிலை சற்று சிக்கலே என்று நான் கூறித்தான் அறியவேண்டுமென்பதில்லை. ஆனால், அதன் பழைய மாணவர்கள் அமைப்பு அப்பாடசாலைகளைத் தூக்கி நிறுத்தும் பொற்பணி ஏற்றது கண்டு ஒட்டுமொத்தமாய் என் உள்ளும் புறமும் ஒன்றாகப் புல்லரிக்கக் கண்டேன். அந்த உயர் நன்றி எனக்குள் ஈந்த உணர்வுகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதை நான் ஒரு மகத்தான கடமையாகக் கருதுகிறேன்

கல்லாதவன்
கழுத்துக்குமேல்
எதுவும் இல்லாதவன்

இல்லாமை என்பது
கல்லாமையேயன்றி
வேறில்லை காண்
.

பள்ளிப் பாடங்களால்
நம் மூளை வயல்களிலும்
பிஞ்சு மனத் தோப்புகளிலும்
அள்ளிப் பதியனிட்டு
அன்றாடம் வளர்த்தெடுக்கும்
அறிவுக் கொழுந்துகளோ
ஆயிரம் ஆயிரம்

அத்தனைக் கொழுந்துகளிலும்
அற்புதப் பசுமை காட்டும்
சொர்க்கக் கொழுந்து யாதெனில்
அது கற்பதைப் போற்றுவோம் என்ற
கற்பூரச் சிந்தனைதானே
.

எழுத்தறிவித்தவன்
இறைவனென்றால்
எழுத்தறிவிக்க
எல்லா வசதிகளையும்
அள்ளிப் பொழியும்
மேகமனக்காரன் யார்

இறைவனுக்கெல்லாம்
அவனே இறைவனென்றால்
அது மிகையாகுமா
.

பத்து ரூபாயைப்
பசியால் வாடும்
பிச்சைக்காரனுக்கு இட்டால்
அவனின்
அந்த வேளைப் பசியே அழியும்

ஆனால்
அதில் பாதியையேனும்
கல்வியின் வேர்களில்
உரமாய் ஊட்டினால்
உலகில் பிச்சைக்காரர்களே
இல்லா வாழ்வல்லவா மலரும்
.

உணவு தந்தால் வாய் திறக்கும்
ஓசை தந்தால் செவி திறக்கும்
கல்வி தந்தால்தானே
நம் கண் திறக்கும்

தாய்க்குச் சோறிடுவதும்
கல்விக்கு நீரிடுவதும்
வேறு வேறு என்றாகுமா

கல்வி வளர்க்காத
செல்வமும் வீரமும்
கடலில் வீசிய
உப்பென்று ஆகாதா
.

ஒரு தந்தை தாயாவதில்லை
அந்தத் தாயும் முற்றாய்
ஒரு தந்தையாவதென்பது
நிகழ்வதில்லை

ஆனால்
நம் பாடசாலைகளைப்
பாருங்கள்

பண்பினை ஊட்டுவதில்
பொன்னழகுத் தாயாய் - நல்ல
அறிவினைப் புகட்டுவதில்
பேரருள் தந்தையாய் - நம்முன்
ஓங்கி உயர்ந்தல்லவா கிடக்கிறது
.

பழைய மாணவனே
ஒரு பள்ளியின் அழியாச் சொத்து

அவன்தான்
அந்தப் பழைய கூடத்தைப்
பள்ளிக்கூடம் என்று
அழைக்கக் கிடைக்கின்ற
அற்புதச் சான்று

அவனை
அள்ளித்தராவிடில்
அது பள்ளியென்று ஆகுமா
.

பழைய மாணவர்கள்
ஒன்றாய்க் கூடி
விம்மும் நன்றிப் பெருக்கோடு
தம் பள்ளிக்கு விழா எடுக்கும்
வைரப் பொழுதுகளிலெல்லாம்

ஆயிரமாயிரமாய்ப் பொருளிறைத்துத்
தம் பள்ளியை
இமாலய வெள்ளிப் பனிமலைக்கு
உயர்த்திச் சிரிக்கும் அந்த
உத்தமப் பொழுதுகளிலெல்லாம்

என் உள்ளம்
சீனிக் கண்ணீரில் நீந்திச்
சத்தேறி மிளிர்கிறது
.

நம் வாழ்க்கை வளர
நல்ல சந்ததி தழைக்க
இந்த ஒட்டுமொத்த உலகமும்
ஒன்றாய் உயர

அந்தக் கல்வியின்
விரிந்த மடிகளில்
கணக்கற்றுத் தினந்தோறும்
நாம் அள்ளியள்ளிக் குவிப்போம்

நல்ல
நன்றியின் பெருமை தரும்
வீர மதர்ப்போடு
நாம் அள்ளியள்ளி இறைப்போம்

நன்றி

* (செப்டம்பர் 2002)

ஆயிரம் தீவுகள்


கனடாவின் கிழக்கில், கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செயிண்ட் லாரன்ஸ் என்ற அழகிய நதி எல்லையாய் அமைந்திருக்கிறது. சுத்தமான குடிநீருடன் அகன்று நீண்ட இந்த நதியின் 50 மைல் தூரத்திற்கு 1865 தீவுகள் அமைந்து பேரழகினைச் சொரிகின்றன.

ஆரம்பத்தில் ஏகப்பட்டத் தீவுகளை ஒரே இடத்தில் கண்ட அதிசயத்தில் ஒரு பிரஞ்சுக்காரர் அவசரமாய் இட்ட பெயர்தான் இந்த ஆயிரம் தீவுகள். அவற்றைக் கண்டுவந்த அதே இரவு என் ஆனந்தத்தில் எழுதிய கவிதையே இது.


வரம் தரும் தேவதை
வாரி வாரி இறைத்த
வைரமணித் தொட்டில்களோ

வசந்தங்கள் தாலாட்ட
யௌவனம் ததும்ப
நனைந்து நனைந்து
மிதக்கும்
நந்தவனங்களோ

வனப்புகள் புடைசூழ
மாலை வெயில் மஞ்சள் பூசி
நீராடி நாணுகின்ற
தங்கத் தாமரைகளோ

நிச்சயப் படுத்திய
அழகுப் போட்டிக்கு
அணி வகுத்த கன்னியரோ

தீர்வுக்குத் திணறித்
தப்பியோடிய தலைவனைத்
தேடித்தான் நிற்கிறீரோ

அடடா...
பொழியும் அழகினில்
மூழ்கி மூழ்கியே
நானும்
சிலிர்ப்புக்குள்
சிக்கிக்கொண்டேன்

பறவைகள் மாநாட்டை
வேடந்தாங்கலில் கண்டேன்
பூக்களின் மாநாட்டை
ஊட்டியில் கண்டேன்
அருவிகளின் மாநாட்டைக்
குற்றாலத்தில் கண்டேன்

தீவுகளின் மாநாட்டை
முதன் முதலில்
இங்குதான் காண்கிறேன்

இயற்கையே...
என்றென்றும் உனக்கு என்
முதல் வணக்கம்

தீவுகளை இணைக்கும்
சின்னஞ்சிறு பாலம்
இங்குமட்டுமே
என்றறிந்தபோது...

விலகி விலகி
என்றும்
வீணாகிப் போகும்
நம் மனிதமனங்களையும்
இணைத்துப் போடப்
புதுப் பாலங்கள் வாராதோ
என்ற
ஏக்கம் எழுந்தது

நதியால்
தீவுகளுக்குப் பெருமையா
தீவுகளால்
நதிக்கு மகுடமா
என்றொரு
பட்டிமன்றமே நடத்தலாம்

அப்படியோர் அழகு
அந்த லாரன்ஸ் நதிக்கு

ஓடாத ஓடங்களாய்
எங்கெங்கும்
தீவுகள்... தீவுகள்...

அவற்றில்
ஓடிப்போய் நின்று...
ஓஹோ வென்று
உச்சக்குரலெழுப்ப
உள்ளம் மனுப்போடுகிறது

சிற்றோடைக் கரைகளில்
சின்னஞ்சிறு பருவத்தில்
காகிதக் கப்பல் விட்டுக்
களித்த நாட்களை
மனம் இன்று
ஒப்பிட்டுப் பார்க்கிறது

எந்தச் சிறுவனின்
அற்புத விளையாட்டோ
இந்தத் தீவுகளின்
சுந்தர ஊர்வலம்?

திசைகளெங்கும் பரவித்
திளைத்தோங்கிய
தீவுகளே... தீவுகளே...

நீங்கள்
நீராடி முடித்ததும்
மெல்ல எழுந்து
என்முன்
நடக்கத் துவங்கிவிடுவீர்களோ...

காத்திருக்கவா
நானிந்த நதிக்கரையில்?

(ஆகஸ்ட் 2000)

உயிர் முத்தங்கள் - பச்சைமிளகாய் இளவரசி


மனதை
உயிர்ச் சிமிழில்
இட்டுக்கொள்ளும்
குங்குமங்களுக்கும்

உயிரை
மனத் திரியில்
ஏற்றிக்கொள்ளும்
தீபங்களுக்கும்

நடந்தான் நடந்தான்


இருட்டுகள் திரண்டு
இரக்கத்தைக் கழித்து
இறுக்கிக் கட்டிய
இருட்டோ இருட்டு

வெளிச்ச தாகத்தை
விக்கலாய்க் கக்கவும்
வக்கற்ற நிலையில்
அவன் உயிர்

காதுக் கதவு தொடக்
காற்றேறிய ஓசைகள்
கால்தடுக்கிக் கால்தடுக்கிக்
கருச்சிதைவாக...

கண்முன் நகரும்
வண்ணக் காட்சிகள்
கருந்திரை விரிப்பில்
கரியோவியங்களாய் ஓட...

நாசிக்குள் நுழைந்த நரக நாற்றமும்
சாதிக்க வழியற்று விக்கி விக்கி அழுதபடி
வெளியேறிப்போக...

ஈரம் செத்த நாக்கு ருசிமொட்டு கெட்டு
பல்லிடுக்கில் வெட்டுப்படப்
பரிதவிக்க...

துக்கத்துக்கும்
தூக்கத்துக்கும் இடையில்
தூது சென்ற எண்ணங்கள்
தூள் தூளாகித் தொலைந்துபோக....

மனக்குகைகளில்
பயமென்னும் வவ்வால்கள்
கீச்சுக்கீச்சென்று கத்திக்கொண்டு
அலையோ அலையென்று
அலைந்தன

ஆம்
மனிதனை முதலில்
பயம்தானே
பாசத்தோடு பற்றிக்கொண்டு
பின்னடைய மறுக்கிறது

ஆயினும்...
காலமென்னும் கோரைப்பல்லோ
பயத்தைப் பக்குவமாய் மென்று
செரிமானச் சிறை தள்ளும்
வித்தை அறிந்த வித்தகனாயிற்றே

தட்டில் விழும் பிச்சையாய்ச் சேர்ந்த
சில்லறைத் தைரியங்கள்
தூரத்தில் மினுக்கும்
நட்பு நட்சத்திரமாய் அழைக்க....

தானாகவா விட்டோடும்
இருட்டை
நீயன்றோ விரட்டவேண்டும்
என்ற ஞானக்கரம்
பிடறியில் விரலச்சு பதிக்க...

எழுந்து
மெதுவாய்
ஓர்
அடி
எடுத்து
வைத்தான்...

அம்மா...
காலில் பட்ட கல்லடியில்
நகங்கள் உடைந்து இரத்த நதி

இனியோர் அடியும் எடுத்து வைப்பதா
ஊசலாடும் உயிரையும்
ஒழித்துப் போடுவதா என்று
மூளை அடுக்கிலிருந்து
அபாயச் செய்திகள்
அவசர கதியில் அலறின

மனமோ
அட...
இன்னும் எனக்குள்
இரத்தமுண்டோ என்று
சந்தோசம் கொண்டது
கோபத்தோடு....

அடுத்த
அடி
எடுத்து
வைத்தான்...

அய்யோ....
இப்போது
இடறியவன் விழுந்தது
பாம்புகளும் தேள்களும்
நட்டுவாக்காலிகளும் கடித்துக் குதறும்
படுபாதாள நரகத்தில்

திரும்பி ஓடடா மடையா என்று
அறிவு துப்பாக்கி ரவைகளாய்
இராணுவ ஆணையிட்டது

மனமோ...
தரையைப் பெயர்த்து வானத்தில் வீசவும்
வானத்தை உடைத்துக் கடலுக்குள் புதைக்கவும்
தன்மான வெறிகொள்ள....

எழுந்தான்
நரம்புகளில் புகுந்த
ஆத்திரம் முறுக்க...

நடந்தான்
எலும்புகளில் நுழைந்த
மும்முரம் விரட்ட...

கால்களில் கற்கள் அடிபட்டு
கோவென்று அலறின

மிதிபட்ட தளத்திலேயே
விசஜந்துக்களெல்லாம்
மறுபிறப்பில் பார்த்துக்கொள்கிறேன்
என்று சபதமிட்டுச் செத்தன

நடந்தான்
நடந்தான்

அட...
வெளிச்சம்!

முன்பு எப்போதும் கண்டிராத
மகோன்னத வெளிச்சம்!

சுட்ட வீரப்பன் வேண்டுமா?


சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா

அதிரடி மரத்தின்
கிளைகளிலிருந்து
நழுவி விழுந்த வினாவிற்குத்
தம் பெருங்குரல் சுருக்கி
ஓசை மண் ஒட்டாமல்
விடை மொழிந்திருப்பார்
முன்பே யாரோ

உலகறிய இவ்வேளையில்
ஒலிபெருக்கிகள் கதறும்போது
கீழே நிலத்தில் நிற்கும்
அறிவுக் கண்கள்
கிழக்கு வான் காலையாய்த்
திறந்து கொள்கின்றன

சுட்ட வீரப்பன் நம்மூரில்
சட்டென்று ஆகிவிடுகிறான்
தியாகி

ஊதி ஊதி
உணர்ச்சி அடுப்புகளில்
மகாத்மாவாகக்கூட
சுடர் நீட்டக்கூடும்

பத்திரிகை பசிக்கு
ஒன்றிரண்டு கூட்டோடு
கொஞ்சமாய் அப்பளம் நொறுக்கி
அரைவயிறு நிறையலாம்
அவ்வளவுதான்

சுடாத வீரப்பன்
அரசியல் விசமிகளின்
அடிமடி குதறும் வியாதி

சட்ட வளாகங்களில்
சத்தமாய்ப் பேசப் பேச
கூவத்தில் மத்தாடக்கூடும்
மூக்குவெடிக்க

ம்ம்ம்....
இவ்வளவு பொறுத்த காவல்
இன்னும் கொஞ்சம்
பொறுத்திருக்கலாம்
தானே செத்திருப்பான்
வயதான பழம்

அடுத்து....

சந்தனமில்லாத ஒரு
மனிதக் கடத்தலோடு
காட்டு மத்தியிலிருந்து
கடிதில் வந்து சேரலாம்
ஓர் தகவல்
அடுத்த வீரப்பன் யாரென்ற
அறிவிப்போடு

கூட்டு அதிரடிப்படை
வீட்டில் கொஞ்சம்
பாட்டு கேட்கும் அதுவரைக்கும்

காட்டுராணி கோட்டையிலே
காவல்கள் இல்லை
அங்கே
காவல் காத்த நாட்டுத் துரோகி
உயிருடன் இல்லை

சுட்ட வீரப்பன் வேண்டுமா
சுடாத வீரப்பன் வேண்டுமா

வீரப்பன்கள் வேண்டாம்

ஐயா அப்துல் கலாமோடு
அவசரகதியில்
ஈராயிரத்து இருபது நோக்கி
நிறைய
நடக்கவேண்டி இருக்கிறது
இந்தியா

கொடைமிளகாய் கண்ணழகா


கொடைமிளகாய் கண்ணழகா
கொத்தவரும் மூக்கழகா
விடைசொல்லாச் சிரிப்பழகா
ஊசிவெடிப் பேச்சழகா

தொடைமீறும் நடையழகா
தொட்டழியா ஆணழகா
எடையில்லா இடுப்பழகா
எஃகிரும்புத் தோளழகா

மீசைவரும் மணியோசை
மேலுதட்டில் கேட்குதடா
ஓசையில்லாச் சொல்நூறு
உதட்டோரம் ஏங்குதடா

ஆசைகொட்டிப் பேசயிலே
அடிவயிறு ஊறுதடா
மேசையிலே பூங்கொத்தா
மனசெல்லாம் நிறையுதடா

சின்னஞ்சிறு விரலெடுத்து
சிக்கெடுக்க வருகின்றாய்
இன்னுமின்னும் வேண்டுமென்று
இனிப்பள்ளித் தூவுகிறாய்

எண்ணயெண்ண இனிக்குதடா
இதயவெளி மணக்குதடா
தின்னத்தினம் திகட்டாத
திங்கள்முகம் யோகமடா

விழுதாடும் ஆலமரம்
தானூஞ்சல் ஆடுதடா
உழுதநில எழிலான
உன்னழகைக் கொஞ்சுதடா

நழுவிவிழும் விழித்துளிகள்
நன்றிமழை கொட்டுதடா
பழுதில்லாப் பிள்ளைபெற
புண்ணியமோ கோடியடா

சுவர்களல்ல அறைகளல்ல...

நான் கனடாவுக்கு 1999ல் குடிபெயர்ந்தேன். வந்த ஈராண்டுகளின் நிறைவில் குட்டியாய் ஒரு நகர்வீடு (டவுன் ஹவுஸ்) வாங்கினேன்.

அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்து பொருட்களை அடுக்கிக் கொண்டிருக்கும்போது என் மகள் பள்ளியில் வரைந்த ஒரு பென்சில் ஓவியம் என் கண்ணில் பட்டது. அது ஓர் அழகான வீட்டின் படம்.

ஒரு படத்தைக் கண்டதும் அதன் கீழ் பொருத்தமாக ஓரிரு வரிகள் எழுதுவது எனக்குப் பிடித்தமானப் பொழுதுபோக்குகளில் ஒன்று.

அன்று அந்த ஓவியம் அந்தச் சூழலில் என்னைக் கவரவே அடுத்த நொடி அந்த ஓவியத்திற்கும் ஒரு வரியை எழுதினேன்.

அந்த வரியை என் மகளிடம் கொடுத்து ஓவியத்தின் கீழ் எழுதச் சொன்னேன். அது என் வீட்டுச் சுவரை அலங்கரித்தது.

வீட்டிற்கு வருபவர்கள் அதைப் பார்வையிடும் போதெல்லாம் ஒரு புன்னகையோடும் மன ஒப்புதலோடும் அதைப் பாராட்டுவார்கள்.

”சுவர்களல்ல... அறைகளல்ல... வசிப்போரின் கூட்டுயிரே வீடு...”

இதுதான் அந்த வரி. பின் சில காலம் கழித்து அந்த வரியையே முதல் வரியாய்க் கொண்டு ஒரு முழுக் கவிதையும் எழுதினேன். அதை ”பச்சை மிளகாய் இளவரசி” என்ற என் கவிதை நூலில் இட்டு கனடாவில் வெளியிட்டேன்.

அந்த நூலுக்கு எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்கள் அணிந்துரை தந்தார். ”தீவிரம் குன்றாத இவருடைய படிமங்கள் மனதிலிருந்து இலகுவில் மறைவதில்லை” என்ற பாராட்டை அந்த அணிந்துரை அன்போடு ஏந்தி நிற்பதை என் நூலில் காணலாம்.

*

சுவர்களல்ல அறைகளல்ல
வசிப்போரின்
கூட்டுயிரே வீடு

ஒருவருக்குள் ஒருவரென்று
பூவிதழ்போல்
பூத்திருக்கும் வீடு

அன்பளித்து வம்பொழித்து
அரவணைப்பில்
வாழ்ந்திருக்கும் வீடு

கண்ணசைத்துப் புன்னகைத்து
நிம்மதிக்குள்
ஒளிர்ந்திருக்கும் வீடு

மூடமன இருள்விலக்கி
முழுநிலவாய்
அறிவிலாளும் வீடு

வாடிவந்த எளியவர்க்கு
வளரமுத
விருந்தூட்டும் வீடு

துயரறிந்து விழிகசிந்து
அயலவர்க்கும்
அன்புதரும் வீடு

பகைவருக்கும் முகமளித்து
வருகவென்று
மனம்திறக்கும் வீடு

யாருக்கும் நிழலாகும்
எந்நாளும்
ஒளிவீசும் வீடு

ஊருக்கு வளம்சேர்க்கும்
உலகுக்கே
சான்றாகும் வீடு

பேருக்கு வாழாமல்
புத்தகமாய்
வாழுமிந்த வீடு

பூட்டுக்குள் பலியான
வீட்டுக்கும்
சாவியாகும் வீடு

அன்புடன் புகாரி

விடுபட்ட நரம்புகளில்
விட்டுவிட்டும்
பொடிபட்ட எலும்புகளில்
புதைபட்டும்

இடிபட்ட மத்தளத்தின்
துடியதிர்வில்
விடைகேட்டு நடுக்கத்தில்
எனது உயிர்

கிழிபட்ட நெஞ்சத்தின்
சந்துகளில்
கீறலிட்ட இசைத்தட்டின்
பாட்டாக

****
முதுமை


இளமொட்டுக் காலத்து
நினைவலைகள்
இடைவிடாத லயத்தோடு
பொழுதெங்கும்

காற்றடித்தச் சுடுமணலின்
வரிக்கவியாய்
கணக்கற்று மேனியெங்கும்
சுருக்கங்கள்

சுருக்கத்தின் இடுக்குகளில்
சரிந்துவிழும்
சுவையான அனுபவத்தின்
பழங்கதைகள்

நான்கூட மழலைதான்
அண்டத்தில்
சூரியனின் வயதென்ன
கொஞ்சமோ

ஏனெனக்கு பூமித்தாய்
இளையவளோ
என்சிரிப்பு குழந்தைக்கு
ஒவ்வாதோ

ஊன்றுகின்ற கம்பெனக்கு
இன்னொருகை
மூன்றாவது காலென்பது
அறியாப்பொய்

கையைத்தான் நானூன்றி
நடக்கின்றேன்
கைக்கிடையே கம்பொன்றை
வைக்கின்றேன்

முதுமைநிலை என்பதுவும்
சிலந்திவலை
வலையோடு சிலந்திகூட
நானேதான்

சாவென்னும் காற்றுவந்து
வீசும்வரை
தினமோடித் திரிகின்றேன்
எனக்குள்ளே

விழிப்புக்கும் நித்திரைக்கும்
இடையிலொரு
மங்கலான மோனநிலை
எனக்குள்ளே

தனிமையென்று தனித்துவொரு
பொழுதுமில்லை
தனிமைதானே நானென்று
ஆனநிலை

எனைச்சுற்றிக் கேட்கின்ற
சப்தங்கள்
அத்தனையும் இன்றெனக்கு
நிசப்தங்கள்

நினைவுகளில் கனவுகளில்
நின்றாடும்
அந்நாளின் ஓசைகளே
செவிப்பறையில்

வந்துமண்ணில் விழுந்தபோது
அழுதநாளும்
எனக்கேநான் சொல்லாத
பிரிவுநாளும்

ஒன்றென்றே ஆவதையும்
கண்டீரோ
இரண்டுக்கும் ஞாபகத்தில்
இடமுண்டோ

சாவினின்று கையணைத்து
எனைக்காத்த
முன்பறியா புதியவனின்
அன்புமுகம்

ஒருமுறையே கண்கலந்த
தேவதையின்
ஒருநாளும் மறவாத
அழகுமுகம்

ஓய்வென்று ஒதுக்கிவைத்த
தனிமைநாளில்
உயிரேந்தி எனைக்கண்ட
ஈரமுகம்

ஒவ்வொன்றாய் ஒவ்வொன்றாய்
இவைபோல
அத்தனையும் காணவேண்டும்
இந்நாளில்

இன்றுகூட இறுக்கமாக
நான்பற்றும்
என்னுயிரின் பொருளென்று
எனக்குண்டு

என்னைவிட்டு முன்போன
என்னவளின்
இடுப்பழுக்குச் சேலைநுனி
தலைப்பு அது

முழுமொத்த விழிவிரித்து
நான்காண
முற்றாக என்பேத்தி
தெரிவதில்லை

விழிமொத்தம் நான்சுருக்கிக்
கூர்ந்தாலென்
வாழ்க்கைக்கு அர்த்தமெனச்
சிரிக்கின்றாள்

நோக்கித்தான் நிற்கின்றேன்
மரணத்தை
நெஞ்சிலின்று உணர்கின்றேன்
இன்பத்தை

நோக்கியநாள் வந்தாலது
சுகந்தானா
நெஞ்சேது நானேது
அறிவதற்கு

சுனாமி வேட்கை


மனம் பறிகொடுத்து
மணிக்கணக்காய் ரசிக்கும் மக்கள்
இன்று உயிர் பறிகொடுத்து
அலை பார்க்க நேர்ந்தது

படுத்துக்கிடக்கும்போதே
பயமாய் இருக்கும்
கடல், எழுந்து நின்றால்
என்னாவது

கரைகளிலெல்லாம்
கண்ணீர்
ஓரங்களிலெல்லாம்
ஓலம்

சிப்பிகளுக்கெல்லாம்
முத்து வழங்கும் கடல்
உயிர் முத்துக்களை
அபகரித்துக்கொண்டு
மனித உடல்களை
வெற்றுச் சிப்பிகளாக்கி
விசிறியடித்துவிட்டது

தன்னிடம் வந்து
உழைப்பைக் கொட்டிய
மீனவ உயிர்களைக்
கட்டாய ஓய்வு கொடுத்துப்
பிணங்களாய்
ஊருக்குள் கொண்டுவந்து
கொட்டிவிட்டுப் போய்விட்டது

பாவம்...
கடல் என்ன செய்யும்
நிலநடுக்கத்தின்
பினாமிதானே இந்தச் சுனாமி

கடலின் இடுப்பை
நிலம் ஒடிக்க ஒடிக்க
கதறிக்கொண்டு வந்த
ஒப்பாரிதானே இந்தச் சுனாமி

தன் கோடிக் கரங்களால்
வெறிகொண்டமட்டும்
கரைகளைப் பிறாண்டியபோது
கணக்கற்ற உயிர்கள்
கிழிந்து உதிர்ந்தன

எனக்கொன்றும் தெரியாது
நான் குற்றமற்றவளென்று
நிலத்தின் மடிகளிலேயே
சடலங்களை வீசிவிட்டுச்
சடுதியில் ஓடிவிட்டது கடல்

பூமிக்கு
இது வெறும் நடுக்கமல்ல
மல்யுத்தத்தில்
மரணஅடி பட்ட நிலை

நாடுகளெல்லாம்
நகர்ந்துபோய்விட்டன
தாழ்ந்தும் உயர்ந்தும்
நிலைகுலைந்துவிட்டன

பூமிக்கோள்
தன் அச்சிலிருந்து
சடக்கென்று வழுக்கி
விலகிப்போய்விட்டது

பூமியைச் சொல்லியும்
குற்றமில்லை
இவையெல்லாம்
வானத்தின் லீலைகள்

மனிதனின் சக்தி
எப்போது
வானத்தை வளைக்கும்?

நாச வேலைகளை
உதறியெறிந்துவிட்டு
எப்போது மனிதன்
முழுமையாய்த் தன்னை
அதில் நுழைப்பான்?

அதுவரைக்கும் ஆளாளுக்கு
ஆயுள் கணக்குப் போடாதீர்கள்

நிரந்தரமென்று எதுவுமில்லை
என்ற நிரந்தரத்துக்குள்
முடங்குங்கள்

கும்பகோணம் காட்சிகள் ஜூலை 2004


மூடு பள்ளிகளை
அகற்று கீற்றுகளை
கைதுசெய் துரோகிகளை
இது என்ன பள்ளியா
அரசின் முழக்கம்

களுக்கென்று சிரிக்கிறார்
ஓர் அதிகாரி
இன்னும் எத்தினி நாளைக்கி
இந்தக் கூத்து?
.

இனி என்ன செஞ்சு
எனக்கு என்ன ஆச்சு
பாவியளா பாவியளா
எம்பிள்ளை போச்சே
கதறிக் கதறிக்
கருகிக் கருகி
மடிஞ்சே போச்சே

நாளைய துக்கம் தடுக்க
யார் சட்டையைப் பிடித்தும்
கண்ணீரா உலுக்கும்
கைகள்தானே உலுக்கும்?
.

எத்தினியோ பிள்ளைகள்
சாகாம வீட்டுக்கு வந்துட்டாங்க
விதியிருந்தா உம்பிள்ளையும்
வீடுவந்திருக்காதா?

இருநூறு கொடுத்தாப்
போலீசு விட்டுடுவான்
இரண்டாயிரம் கொடுத்தாத்
தாசில்தார் விட்டுடுவான்
இருபதாயிரம் கொடுத்தா
அடுப்பு மேடையும்
பள்ளிக்கூடம் ஆகிடாதா?
.

வாத்தியாருங்க எல்லாம்
எங்கே போனாங்க
பிள்ளைகளைவிடத்
தப்பிக்கிற அறிவு
அதிகமா இருந்ததாலே
தப்பிச்சுட்டாங்களோ?

அவர்கள் கைகளில் இருந்த
இந்தியாவின்
வளமான எதிர்காலத்தைப்
பாதுகாக்க ஓடிவிட்டார்களோ
.

கருகிய பிஞ்சுகளின்மேல்
கட்சிக்கொடி போர்த்தி
எதிர்க்கட்சியைத் தூற்றி
மேடை முழக்கம்
பெரும் சாலை கோசம்

அடப்பாவிகளா
என்னிக்குத்தான்டா உங்க
வியாபாரத்தை நிறுத்துவீங்க
இன்னிக்காச்சும்
விடுமுறை விடக்கூடாதா
.

கல்விதேடும் பிள்ளைகளைக்
காசுதேடும் பள்ளிகள்
கண்மூடிக் கொளுத்த

உதிரத்தில் உறவுநெய்து
உயிர்விட்டு உயிர்வளர்த்துப்
பறிகொடுத்த உயிர்க்கெல்லாம்
பதிலென்று ஒன்றில்லை
.

வீடெங்கும் ஒப்பாரி
வீதியெங்கும் கருமாதி

இந்தக்
கறுப்பு நெருப்பு எரிப்பு நாளை
பள்ளிகளின்
பாதுகாப்புத் தினமாக அறிவித்து
ஆவன செய்ய ஆணையிடுகிறது
மௌனத்தில் எரியும்
இதயம்

(ஜூலை 16, 2004 கும்பகோணம் தனியார் பள்ளியில் இடம்பெற்ற
தீவிபத்தில் கிட்டத்தட்ட 100 குழந்தைகள் பரிதாபமாய் உயிரிழந்தனர்)

உயிருறவு


(ஒரு வரியின் இறுதிச் சொல்லை, அடுத்த வரியின் முதல் சொல்லாக அமைத்து எழுதப்பட்ட அந்தாதிக் கவிதை)


இதயமென்ற பெட்டகத்தில்
எத்தனையோ உதடுகள்

உதடுகளின் முணுமுணுப்பில்
ஓசையில்லா ஆசைகள்

ஆசைகளின் அலையடிப்பில்
அனுதினமும் ஏக்கங்கள்

ஏக்கங்களின் பரிதவிப்பில்
இரையாகும் தூக்கங்கள்

தூக்கமெனும் தொட்டிலிலே
தொடர்கதையாய்க் கனவுகள்

கனவுகளில் காண்பதெலாம்
கட்டறுந்த காட்சிகள்

காட்சிகளை உண்மையாக்கக்
கண்ணுறங்கா முயற்சிகள்

முயற்சிகளின் முக்குளிப்பில்
முத்தெடுக்கும் யோகங்கள்

யோகங்களும் கனவுகளும்
இழைபிரிந்தால் சோகங்கள்

சோகங்களே சொந்தமல்ல
சுற்றுமுற்றும் தேடுங்கள்

தேடல்களின் பரிசுகளாய்த்
தேடிவரும் உறவுகள்

உறவுகளே ஜென்மங்கள்
உயிரேந்தும் தீபங்கள்