ஸ்டெர்லைட் எனும் கருநாகம்

ரத்தினகிரி
மொத்தி அனுப்பும்
குஜராத்
குதறியனுப்பும்
கோவா
மோவாய் பெயர்க்கும்
தமிழ்நாடு மட்டும்
தத்தெடுத்து
உச்சிமுகருமா

தமிழன்
தன் தரங்கெட்டு
அரசியல் அயோக்கியன்
ஆகிவிட்டான்

அதனால்தான்
குரங்குகள் எல்லாம்
தாவிக் குதித்து

நடுவீட்டிலேயே
ஊஞ்சல் கட்டி ஆடுகின்றன

அடுக்களையில்
சிறுநீர் கழிக்கின்றன

படுக்கையறையில்
மலவாய்வு விடுகின்றன

புற்றுநோய் வளர்க்க
தமிழ்மண்ணில்
நாற்றுநடும் தினவை
யார் தந்தார் உங்களுக்கு

இருப்பது
கெடுப்பது போதாதென்று
இன்னொன்றும்
வருகிறதென்றால்
இழிச்சவாயன் தமிழனென்று
எங்கள் நெற்றியில் எழுதி இருப்பதை
நீங்கள் எப்படியோ
வாசிக்கப் பழகிக்கொண்டீர்கள்
என்று அர்த்தமா

அல்லது
நாங்கள் இன்னமும்
யோசிக்கப் பழகவே இல்லை
என்று பொருளா

யோசித்துப்
பொங்கியெழுந்த சிலரையும்
சிறையில் அடைத்தீர்கள்

இப்படிப் பூச்சாண்டி காட்டி
இன்னும் எந்த நஞ்சை
எங்கள் மீது
கக்க இருக்கிறீர்கள்

நாங்கள்
சாதிப்பற்றுச் சோதரர்கள்தாம்
அதைத் தூண்டி
எங்களைப் பிரித்தாளவும்
முடியும்தான்

ஆனால்
அதெல்லாம்
சிறுபொழுதுமாத்திரமே
என்பதை அறிவீர்களா

நீறுபூத்த நெருப்பு
மறத்தமிழன் மார்பு

அது
சிறுமைகண்டு பொங்கும்போது
விம்மித் துடித்தெழும்போது
தடுத்து நிறுத்த இத்தரணியில்
ஒரு சக்தியும் இல்லை

உங்கள் கொட்டங்களை
ஒழித்தழித்து மீட்டெடுப்போம்
தமிழ் மண்ணையும்
தமிழர்தம்
வளமிகு வாழ்வாதாரங்களையும்


தலாக் பற்றிய சுருக்கமான விளக்கம் கீழே: ஒருநாள் அமர்ந்து முழுமையாய் எழுதுவேன்

தலாக் என்றால் ‘விடுவித்தல்’ என்பது பொருளாகும்.

தலாக் கூறி, முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழலாம்.

மூன்றாவது சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுதான் இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்.

ஒரு சந்தர்ப்பம் என்பது, சுமார் 4 மாத காலம்

குடும்ப வாழ்க்கையில் பிணக்கம் ஏற்பட்டு மனைவியை விவாகரத்துச் செய்யும் முடிவுக்கு வருபவன் ”உன்னை தலாக் – விவாகரத்து செய்து விட்டேன்” என்று கூறினால் விவாகரத்து ஆகிவிடும்.

ஆனால் இதனால் திருமண பந்தம் – ஒப்பந்தம் முற்றாக முறிந்து விடாது.

அவனின் மனைவி என்ற உறவுடனேயே மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரைக் காத்திருக்க வேண்டும்.- இந்தக் காத்திருப்பும் அவள் கருவுற்றிருக்கிறாளா என்பதை அறிந்து கொள்வதற்காகவே – இந்த அவகாசத்திங்குள் கணவன், மனைவி இருவரும் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.

அவள் கர்ப்பிணி என்றால் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை திருமண ஒப்பந்தம் முறியாது என்பதை திருக்குர்அன் 65:4 வசனத்திலிருந்து விளங்கலாம்.

இரண்டுமுறை நான்கு நான்கு மாதங்கள் பிரிந்திருப்பதால் இருவரும் மனம் மாறி ஒன்று சேர்ந்துவிடலாம்.

பிரிந்திருக்கும் காலத்தில் இருவரையும் ஒன்று சேர்க்கும்பொருட்டு உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கலந்துரையாடுவார்கள் அறிவுரைகள் வழங்குவார்கள்.

இதை எல்லாம் கடந்து இருவரும் திருமண முறிவுக்கே தயாராகிவிட்டால், அது நடந்துவிட்டால், பிள்ளைகள் எல்லாம் கணவனின் பொறுப்புதானே தவிர மனைவியின் பொறுப்பில்லை.

அதோடு மகர் என்று கொடுக்கப்பட்ட பெண்ணின் சொத்தை அவளின் வாழ்வாதாரத்திற்காகக் கணவன் மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.

பின் அந்தப் பெண் மூன்றாவது தலாக்கின் சுமார் 4 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மறுமணம் செய்துகொள்ள இஸ்லாம் சொல்கிறது

இதில் பெண்ணுக்கு ஏதும் தீங்குள்ளதா? அல்லது ஆணுக்குத்தான் தீங்குள்ளதா?
பாரதிக்கெல்லாம் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுரிமை பேசியவர் முகம்மது நபி அவர்கள்

1. பெண் பிள்ளைகள் பிறந்த உடனேயே புதைத்தார்கள், தடுத்துச் சட்டமே இயற்றினார்

2. பெண் பிள்ளைகளுக்குச் சொத்தில் உரிமை உண்டு என்று உலகில் முதன் முதலில் சொன்னார், சட்டமியற்றினார்

3. பெண்ணும் தனக்குப் பிடிக்காத கணவனை விவாகரத்துச் செய்யலாம் என்று அங்கீகாரம் அளித்தார்

4. தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என்று சொன்னார்

5. வரதட்சணை கூடாது என்றும் அதற்குப் பதிலாக பெண்ணுக்கு ஆண் மகர் என்னும் காப்புத் தொகையைக் கொடுக்க வேண்டும் என்றும் சொன்னார்

6. பெண் கல்வியை வலியுறுத்தினார்

7. விவாகரத்திற்குப் பின் பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பு கணவனுடையது என்று சொன்னார்

8. பெண்ணை திருமணம் செய்யாமல் சின்னவீடாய் வைத்துக்கொள்ளக் கூடாது என்று சொன்னார்

9. பெண்கள்மீது நடக்கும் பாலியல் வன்முறைகளை வேறோடு அழிக்கும் கடுந்தண்டனைகளை வகுத்தார்

10. விதவைகள் மறுமணம் சொர்க்கம் செல்ல சிறந்தவழி என்று வலியுறுத்தினார். விதவைகளைத் தானே மறுமணம் செய்து காட்டியும் வழிநடத்தினார்


அன்புடன் புகாரி
///1. கடவுளுக்கு உருவங்கொடுப்பது ஒருவரின் உரிமை என்பதை மறுக்கிறீர்களா? ///
இல்லை
ஆனால் அறியாமை என்று கருதுகிறேன்
///2. கடவுளுக்கு உருவம் கொடுக்கவில்லை என்போம். கடவுள் உங்கள் முன்வந்தால் எப்படி கண்டுபிடிக்கமுடியும்?///
எப்போதும் முன்னால்தானே இருக்கிறார்?
பின்னாலும் இருக்கிறார்
உள்ளேயும் இருக்கிறார்
வெளியேயும் இருக்கிறார்
ஆடையிலா இருக்கிறது பெண்விடுதலை?

கோவணம் மட்டும் கட்டி
முப்பாட்டன்
வயல் உழுதான்

அட
நீ அப்படியா என்று
முப்பாட்டி
சேலையைக் கழற்றி
வீசிவிடவில்லை

திரைப்படங்களில்
ஆல்ப்ஸ் மலையில்
குளிர்ப் பனிப்பொழிவில்
ஆணும் பெண்ணும்
ஆடிப்பாடுகிறார்கள்

அவன்
கோட்டு சூட்டு ஜாக்கெட்டில்

அவளோ
ஜட்டி பாடி வெற்றுத் தொடையில்

இது
பெண்ணின்
ஆடைச் சுதந்திரமா
ஆணின்
ஆசைச் சுதந்திரமா

சுயசிந்தனைப் பெண்டிரே
பெண் விடுதலை என்ற பெயரில்
ஆண்களின்
வணிக வக்கிர வலைகளில்
நீங்களுமா





பெண்ணின் எதிரி

பெண்ணின்
விடுதலைக் கப்பல்
ஆண்களின்
நாகரிகக் கடலில்தான்
அமைதிப் பயணம்
செல்லவியலும்

நல்ல
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
ஆணினம்
வளர்ந்தால் மட்டுமே
அப் பொன்வானில்
பெண் பிறைநிலாக்கள்
அமுத ஒளிசிந்தி
அமர்க்களமாய் நீந்தும்

ஆண்களை
நாகரிகம் மிக்கவர்களாய்
பண்பாளர்களாய்
வன்முறையற்றவர்களாய்
மாற்றுவதற்கு
எந்த ஓர் ஆணாலும்
எத்தனைக்
குட்டிக்கரணம் போட்டாலும்
இயலாது

ஆனால்
அது பெண்களுக்கோ
வெண்டைக்காய்
நறுக்குவதைப்போல
எளிதானது

எங்ஙனமெனில்
பெண்தானே
அத்தனை ஆணுக்கும் தாய்

அவள்தானே
வளர்த்தெடுக்கிறாள்
ஆண்களை இப்படி

பெண்ணின்
சுதந்திரத்திற்கு
பெண்ணேதானே
எதிரியாகிறாள்
பேடிகளா, இது தமிழ்நாடடா!

பாபர் மஸ்ஜித்
என்று நினைத்துவிட்டார்கள்
பெரியார் சிலைகளை

பாபர் மஸ்ஜிதும்
அம்பேத்கர் சிலையும்
லெனின் சிலையும்
தமிழ்நாட்டில் இருந்திருந்தால்
தெரியும் சேதி

மாணிக்க மலரினைப் போலே
மேன்மையாய் கதீஜா பீவி
மெக்கா என்னும் புனித நாட்டில்
வாழ்ந்தவர் ராணி

ஹாத்தமுந் நபியை அழைத்து
வணிகத்தைப் பேசும் பொழுதில்
கண்டநேரம் கண்ணுக்குள்ளே
காதல் உதயம்
காதல் உதயம்

வணிகமும் வெற்றியானதும்
ரசூலுல்லாஹ் திரும்பி வந்ததும்
திருமணம் பேசத் துணிந்ததே
பூமகளின் நெஞ்சமே

மாணிக்க மலரினைப் போலே
சிரியாவின் கிளர்ச்சிக்காரர்கள் யார்? அவர்களுக்கு என்ன வேண்டும். அமெரிக்க ஏன் கிளர்ச்சிக்காரர்களை ஊக்குவிக்கிறார்கள்? இஸ்ரேலுக்கு இதில் என்ன பங்கு
-நாஞ்சில் பீட்டர்

அந்த அரசியல்தான் உலக நாசத்துக்கே காரணம்

இன்று நேற்றா நடக்கிறது, அந்த உலக அரசியல் இயந்திரம் ஊர்ந்து செல்லும்போது அதனடியில் பல கோடி உயிர்கள் நசுங்கிச் சாகின்றன.

அவர்களுக்கு மதம் பொருட்டில்லை, ஆனால் மதத்தை வைத்து விளையாடுவார்கள்

அவர்களுக்கு இனம் பொருட்டில்லை ஆனால் இனத்தை வைத்து விளையாடுவார்கள்

அவர்களுக்குச் சாதி பொருட்டில்லை ஆனால் சாதியை வைத்து விளையாடுவார்கள்

பிறகு எதுதான் பொருட்டு?

யார் கொம்பன்?
யார் உலக போலீஸ்?
யார் வல்லரசு?

அது ஒன்றுதான் பொருட்டு!

அன்புடன் புகாரி
சிரியா காட்சிகள்

முஸ்லிம்
முஸ்லிமைப்
பிய்த்துத்
தின்கிறான்

பச்சிளம்
பிள்ளைகளைக்
கொத்துக் கொத்தாக
கொன்று
புதைக்கிறான்

வேதியல் வெடியால்
திணறிச்சாகிறான்

சீறிப் பாயும் பூனைகள்
இரட்டைக்
காட்டேறிகளின்
நெருப்பு நாக்குகளில்

சோதிக்கப்படும்
ஆயுதங்கள்
யாருக்கோ விடும்
சவால்களாய்
இருக்கலாம்

நாடுபிடிக்க
நடக்கும்
ஓநாய்க் கூத்தாய்
இருக்கலாம்

சாவதென்னவோ
சிரியாதானே

சிரியா போன்ற
சிந்தனை சிதைந்த
தேசம்தானே

அன்புடன் புகாரி

ஸ்ருதி மணநாள்

திருநெல்வேலி திருநிறைச் செல்வன்
கார்த்தி கார்த்தி
உன்
பருவ ஆகாயத்தில்
பறந்து வந்தாள்
ஒரு பட்டு நிலா
அவள்
தாளலயம் கூட்டி
ராக மழை சிந்தும்
ஸ்ருதி ஸ்ருதி
*
வானம் வையம் நெடுகிலும்
நறுமண மலர்கள் தூவி
என் நெஞ்சின்
நிறைவான வாழ்த்துகள்
குற்றாலம் வற்றலாம்
வற்றாது உங்கள் தேனருவி
கார்முகில் கலையலாம்
கலையாது உங்கள் கனவுகள்
வானவில் நிறம்மாறலாம்
மாறாது உங்கள் காதலுயிர்
வானச் சூரியனும் அணையலாம்
அணையாது உங்கள் வாழ்க்கைத்தீபம்
அன்று
தகவலும் புறாவும்போல
இன்று
செல்பேசியும் செவியும்போல
அன்று
வனமும் வேட்டையும்போல
இன்று
முகநூலும் லைக்கும்போல
அன்று 
கவிதையும் அரசவையும் போல
இன்று
கூகுளும் தேடமும் போல
அன்று
அறிவிப்பும் முரசும்போல
இன்று
வாட்ஸப்பும் ஃபார்வர்டும்போல
காலத்திற்கேற்ப
காதல் வாழ்வைப்
புதிப்பித்துக்கொண்டே
வாழ்க வாழ்க
பல்லாண்டு பலகோடி நூற்றாண்டு
நீக்கமற நிறைந்த நிம்மதிச் செல்வத்தோடு
கனவோடு நிறைவோடு கலையாத அன்போடு
வாழ்க வாழ்க
- அன்புடன் புகாரி
(அமெரிக்காவில் அழகாக நடந்த கார்த்திக் + ஸ்ருதி திருமண வரவேற்பில் நெஞ்சம் நிறைந்ததால் நிரம்பி வழிந்த வாழ்த்துச் சொற்கள்)
கடவுள் மாறிவிட்டாரா?

ஒருவர்
மதம் மாறினால்
அவர் கடவுளை
மாற்றிக்கொண்டதாக
நினைக்கிறார்

கடவுள்
ஒருவர் என்றால்
அவர் எப்படி மாறுவார்

செல்லும்
மார்க்கம்தான்
மாறும்

எல்லா நதிகளும்
கடலுக்கே

ஆனால்
அது செல்லும் வழியைச்
செம்மையாக்குவதே
மனதிற்கு
ஏற்றதாக்குவதே
வாழ்விற்கு
உகந்ததாக்குவதே
மதமாற்றம்

அன்புடன் புகாரி
பூவுலகம் நிறைத்துப்
புலம்பெயர்ந்து வாழும்
புதுப்பிஞ்சுகளின் நாவிலும்
தமிழ்
சர்க்கரைப் பொங்கலாய்ப்
பொங்கவேண்டும்

அதுவே எங்கள் திசை
அதுவே எங்கள் தேடல்
அதுவே எங்கள் பயணம்
அதுவே எங்கள் இலக்கு
அதுவே எங்கள் வெற்றி

அன்புடன் புகாரி
இன்று ஜனவரி 27
யூத இனப்படுகொலையின் நினைவு நாள்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி படையினரால், இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள்:
60 லட்சம் யூதர்கள்,
2 லட்சம் ரோமா ஜிப்சி நாடோடிகள்,
2.5 லட்சம் மாற்றுத்திறனாளிகள்,
9000 ஓரினச் சேர்க்கையாளர்கள்
உலகில் முற்றாக சர்வாதிகாரம் ஒழிய வேண்டும் சமத்துவமும் சகோதரத்துவமுமே பெருக வேண்டும்
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் அதிகார, அக்கிரம வர்க்கங்களும் வக்கிரங்களும் முடிந்துபோக வேண்டும்
அன்புடன் புகாரி
மிக நெருங்கி வந்துவிட்டோம் தமிழர்களே
தமிழ் இருக்கை இதோ இதோ
தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பெருமையடையப் போகும் நற்பொழுது இதோ இதோ
இந்த அளவிற்கு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தை இதற்கு முன் யாரும் உலகறியப் பேசி இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
அந்த அளவிற்கு தமிழால் தமிழ் இருக்கையால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் இன்று பேசப்படுகிறது.
உலகத் தமிழர் அனைவரின் விருப்பங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி நிமிரும் ஆய்வுகளை ஹார்வர்ட் இருக்கை தரவேண்டும்.
அதை அறிவுசால் நம் தமிழ் உலகம் ஒவ்வொரு நொடியும் கவனமாகப் பார்த்துக்கொண்டே இருக்கும்.
தமிழைப் பற்றிப் பிடித்து ஹார்வட்டின் பெருமை இவ்வுலக அரங்கில் மேலும் உயர்ந்து வளரும் என்று நான் முழுதாக நம்புகின்றேன்
அன்புடன் புகாரி
Between 13th and 19 th century there are huge changes in tamil script, which we have accepted as evolution. Between now and 25th century, if there's further evolution to write க ங ச ஞ as "k" "n" "cha" or as क ण च or anything else, who is to say it won't happen.. -Sathis Toronto
சதீஸ், இந்து இந்தி இந்தியா என்ற திசையில் செல்லும் உங்கள் பேராசை அப்பட்டமாய்த் தெரிகிறது.
தமிழன் தமிழ் தமிழ்நாடு என்பதை இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மாற்ற முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். விரைவில் புரிந்துகொள்வீர்கள்.
இந்த க ங ச ஞ வும் சரி क ण च வும் சரி எல்லாம் திசை மாறி abcd என்ற 26 எழுத்துக்குள் முடங்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.
அதற்குக் காரணம் பிஜேபி போன்றவர்களின் மொழி வெறியாட்டங்கள்தாம்.
இரண்டுபேர் அடித்துக்கொள்ளும்போது மூன்றாவது அறிவாளிதான் பயன்பெறுவான். இதை தமிழ்க் குழந்தைகளுக்கான கதை ஒன்றில் அழகாகச் சொல்லி இருப்பார்கள். குரங்கு பூனை அப்பம் கதை இங்கு எவருக்காவது தெரிந்திருக்கலாம்.
இந்தி ஒரு மூலையில் வாழட்டும் தமிழ் ஓரு மூலையில் வாழட்டும் தெலுங்கு ஒரு மூலையில் வாழட்டும் கன்னடம் ஒரு மூலையில் வாழட்டும் என்று மத்திய அரசு என்று உறுதியாய் முடிவெடுக்கிறதோ அன்றுதான் மாநில மொழிகள் எல்லாம் சிறப்படையும் பாதுகாக்கப்படும் மக்களாலும் உணர்ந்து போற்றி பயன்பாட்டில் நிலைக்கும்.
இந்திக்கும் தமிழுக்கும் இந்திக்கும் மலையாளத்திற்கும் இந்திக்கும் தெலுங்குக்கும் இந்திக்கும் பஞ்சாபிக்கும் சண்டை என்றால் அன்று வெள்ளைக்காரன் வந்ததுபோல இன்று ஆங்கிலம் உள்ளே வருகிறது.
இந்தியர்களுக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் வேறென்ன நடக்கும்?
அன்புடன் புகாரி
அடுத்தவன்
பற்றையும்
பற்றென
நினைக்காதவனின்
பற்று 
பற்றே அல்ல
பற்றி எரியும்
கொடும் நெருப்பு
அன்புடன் புகாரி
ஹார்வர்டில் மட்டுமல்ல உலகின் அத்தனைப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும்
தமிழ் இருக்கையின் பலன் என்ன என்று தமிழர்களாகிய நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழ் இருக்கை பலன் தந்துவிடப் போகிறது அதைத் தடுத்துவிட வேண்டும் என்று யாரெல்லாம் சிந்தித்துச் செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று சிந்தியுங்கள்
*
எங்கள்
உணர்வில்
உயிரில்
கலந்திருப்பது
தமிழ்
அதை
உங்கள்
சின்னஞ்சிறு
கைக்குட்டையால்
துடைத்தெறிந்துவிட
முடியாது
வீழ்வது
எதுவாக இருப்பினும்
வாழ்வது
தமிழாகவே இருக்கும்
தமிழர்தம்
நெஞ்சாங்குழிப்
பேழைகளில்
கவிஞர் புகாரி
அடுத்தன்
பற்றையும்
பற்றென
நினைக்காதவனின்
பற்று 
பற்றே அல்ல
பற்றி எரியும்
கொடும் நெருப்பு
அன்புடன் புகாரி
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்நா டே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

-பாரதியார்