நெஞ்சக் குகையில் மரணக் கழுகு
நெஞ்சக் குகையில்
மரணக் கழுகு
நெருப்புச் சிறகை
விரிக்கிறது
கொஞ்சல் வழிந்த
பொந்துகள் எல்லாம்
கொத்திக் கொத்தித்
தின்கிறது
வஞ்சம் அறியா
நெஞ்சின் குமுறல்
வானம் கிழித்துப்
பறக்கிறது
மிஞ்சும் வரமாய்ச்
செத்தச் சவமும்
மீண்டும் மீண்டும்
இறக்கிறது
அறியார் அறியார்
ஊரார் அறியார்
உறவார் அறியார்
நண்பர் அறியார்
நலங்காப்பார் அறியார்
பெற்றோர் அறியார்
பிறந்தோர் அறியார்
பிரிந்தே மறைந்த
உயிருறவும் உம்போல்
உணர்ந்துணர்ந்து
அறியார் அறியாரே
நெருப்பூட்டும் ஈர
நினைவுகளோடும்
நொறுங்கிக் கதறும்
வெறுமை மனத்தோடும்
இழந்தோரே இழப்பை
அறிவதைப்போல்
மேதினியில் வேறெவரும்
வேறெங்கும்
அறியார் அறியார்
அறியாரே உயிரே
சின்ன இதழ் விரித்தாள்
சின்ன இதழ் விரித்தாள்
சிரித்தாள் செவ்வந்திப்
பூவானாள்
தினமும்
வண்ண விழி அசைத்தாள்
மொழிந்தாள் வளமிக்கக்
கவியானாள்
மனதில்
பின்னல் ஆட நடந்தாள்
மயிலாள் பேரின்பச்
சுவையானாள்
பருவக்
கன்ன வனம் சிவந்தாள்
வளைந்தாள் கற்கண்டு
நிலமானாள்
எழிலாள்
தந்த உடல் நெளிந்தாள்
மிளிர்ந்தாள் தரைவந்த
நிலவானாள்
விழிக்குள்
வந்து வந்து நுழைந்தாள்
விரிந்தாள் வாவென்று
எனையழைத்தாள்
நினைவால்
வெந்து வெந்து மடிந்தேன்
மலைத்தேன் நினைவுக்கு
விருந்தானேன்
எனக்குள்
சிந்தை சிதையக் கண்டேன்
சிலிர்த்தேன் இவளன்றி
உயிர்வாழேன்
என்னைப்பற்றி...
வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்...
நான் பிறந்தேன்.
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை, நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் அழைக்கப்படும்.
ஏழெட்டு வயதிலேயே என் செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற சின்னச் சின்னக் கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று வார்த்தைகளை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வார்த்தைகளில் கிறங்கினேன். அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் ஆசனமிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.
உச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடரும் மனவலியை ஓர் உன்னத ரசனையோடு, சிந்தனா முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப் பிரசவிப்பதே எனக்குக் கவிதைகளாகின.
என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.
கல்லூரி முடித்ததும், நண்பர்களின் தூண்டுதலால், என் கவிதைகளைப் பத்திரிகைகளுக்கு அனுப்பத் துவங்கினேன். தினமும் ஒரு கவிதையேனும் எழுதாமல் உறங்காத நாட்கள் அவை. "அண்டா கா கசம்! அபூ கா ஹூக்கூம். திறந்திடு சீசேம்!" என்று நான் குளியளறையில் நின்று கத்தியதை அலிபாபா பத்திரிகை ஒட்டுக்கேட்டிருக்க வேண்டும். மகாத்மாவைப் பற்றி நான் எழுதிய கவிதையை அது பிரசுரித்தது. முதன் முதலில் என் கவிதையை அச்சில் கண்ட நான் ஓரடி உயர்ந்துவிட்டதாய் உணர்ந்தேன்.
0 சவூதி அரேபியா
1981 ஜூலை மாதம் சவூதி அரேபியா சென்றேன். கல்லூரி முடித்து நான் பணிதுவங்கிய முதல் நாடு சவூதி அரேபியாதான்.
எண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் என் கவிதைகளைத் தொடர்ந்து பிரசுரித்து வந்தது.
மாலனின் திசைகள் என் கவிதைகளை வரவேற்றது.
1984, "அரபு மண்ணில் இதோ ஓர் அழகு ஊற்று" என்று தாய் தன் ஆசிரியர் (வலம்புரி ஜான்) பக்கத்தில் என் கவிதைகளைப் பிரசுரித்து என்னைப் பெருமைப்படுத்தியது.
1988, இந்தி-தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, டெல்லி பல்கலைக்கழக இந்திப் பேராசிரியராய்ப் பணிபுரிந்த குமாரி ஜமுனா, 1986 அக்டோ பர்-நவம்பர் தீபம் இதழில் வெளிவந்த 'உலகம்' என்ற என் கவிதையை அந்த வருடத்தின் தமிழ் மாநில அடையாளக் கவிதையாய்த் தேர்ந்தெடுத்து இந்தியில் மொழி பெயர்த்து, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின்(Ministry 0f Human Res0urces Devel0pment - India) ஆண்டுமலரான வார்சிகி 86ல் வெளியிட்டார்.
1988, குமுதம் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்களால் தேர்வுசெய்யப்பட்டு பரிசு பெற்றேன்.
0 கனடா
1999 ஜூலை கனடா வந்தேன். கனடா தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என் கவிதைகளை கனடியத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் வழியே அறிமுகப்படுத்தியது.
1999, நிலாவிலும் கற்கள் என்ற என் வலைத்தளத்தில் மின்கவிதைத் தொகுப்பொன்றைத் துவங்கினேன்.
2000, கனடா தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை என்ற பல்சுவைத் தமிழிதழின் ஆசிரியராய் இருந்து அதனை வெளியிட்டேன். இது என் கணினிப் பிரதி என்று கூறலாம்.
2001, கனடா உதயன் தமிழ் வாராந்திர பத்திரிகை, தனது ஆண்டுவிழாயை யொட்டி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் கவிஞர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் என் கவிதையொன்றை முதலாவது பரிசுக்குரியதாகத் தேர்வு செய்து திரு. லேணா தமிழ்வாணன் அவர்களின் கரங்களால் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தது.
2002, இலங்கையின் முக்கிய கவிஞர்களுள் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கவியரங்கங்களில் பங்கேற்றேன். கனடா உதயனின் தங்கப்பதக்கக் கவிதைத் தேர்வுக்குழுவில் கவிநாயகர் கந்தவனம் அவர்களோடு நானும் நடுவராக தொடர்ந்து இருந்து வருகிறேன்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினராக இருக்கிறேன். அதன் கவிதைத் தேர்வுக்குழுவில் ஒருவனாகவும் இருக்கிறேன்.
2002, ஏப்ரல் 4ம் தேதி தமிழ்-உலகம் என்ற இணைய குழுமத்தில் உறுப்பினராகச் சேர்த்தேன். அதன் 'பாரதிதாசன் வைய விரி அவை' நடத்திய கவிதைப் போட்டியில் என் 'தோழியரே! தோழியரே!' கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.
2002, என் முதல் கவிதைத் தொகுதியான 'வெளிச்ச அழைப்புகளை' கனடாவில் வெளியிட்டதன் மூலம், தமிழ் நாட்டிலிருந்து வந்து கனடாவில் குடியேறிய தமிழர்களுள் தமிழ்ப் புத்தகம் வெளியிடும் முதல் தமிழன் என்ற பெயர் பெற்றேன்.
வெளிச்ச அழைப்புகள் தொகுதிக்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அற்புதமான அணிந்துரை வழங்கி என்னைக் கௌரவித்தார்.
கனடியன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கனடா கீதவாணி போன்ற 24 மணிநேர கனடிய தமிழ் வானொலிகளிலும் கனடா வேங்கூவர் வானொலியிலும் கவிதைகள் வாசிக்கின்றேன்.
திண்ணை, திசைகள், நிலாச்சாரல், எழில்நிலா போன்ற பல இணைய மின்னிதழ்களிலும் என் கவிதைகள் வெளிவருகின்றன.
தமிழ்-உலகம், சந்த வசந்தம், உயிரெழுத்து, அகத்தியர் போன்ற யாகூ தமிழ் மின்குழுமங்கள் பலவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன்
இணையத்தில் பல கவியரங்கங்களிலும் கலந்துகொள்கிறேன். கவியரங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறேன்.
புத்தகப்புழு இணையக் குழுவில் மட்டுநராக இருந்தேன். உயிரெழுத்துக் குழுவின் உரிமையாளராகவும் மட்டுநராகவும் இருக்கிறேன்.
கனடாவின் தமிழ் ஆரம் தொலைக்காட்சி என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பியது.
பிப்ரவரி 14, 2003 ஆஸ்தான கவிஞராக தமிழ்-உலகம் மின்குழுமம் என்னை அறிவித்தது.
தினம் ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறேன்
2003, இணையத்தில் தமிழ்-உலகம் என்ற யாகூ குழுமம் வாயிலாக பாரதிதாசன் வைய விரி அவை நடத்திய கவிதைப் போட்டியில் என் 'அவன்தான் பாரதிதாசன்!' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
2003, இணையத்தில் புத்தகப்புழு நடத்திய காதல் கவிதைப் போட்டியில் 'கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
கனடாவில் தமிழன் என்ற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்
ஏப்ரல் 4, 2003ல் மொன்றியல், கனடாவில் என் வெளிச்ச அழைப்புகள் மீண்டும் வெளியிடப்பட்டது
ஏப்ரல் 13, 2003ல் 'அன்புடன் இதயம்' என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்பின் பிரமாண்டமான வெளியீடு சென்னையில் நடந்தது
கவிதை உறவு - ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூல்களுக்கான துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதுக்கான போட்டியில் என் 'வெளிச்ச அழைப்புகள்' கவிதை நூல் சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறது. மே மாதம் 18ம் தேதி சென்னையில் நடைபெறும் கவிதை உறவின் 31ம் ஆண்டு நிறைவு விழாவில் பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜி.கே வாசன், தனுஷ்கோடி ஆதித்தன், அருளாளர் ஆர்.எம்.வீரப்பன், ஊர்வசி செல்வராஜ், டாக்டர் மோகன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று இதன் நிறுவனர், சிறப்பாசிரியர் கலைமாமணி ஏர்வாடி எஸ். இராதா கிருஷ்ணன் எனக்கு அறியத்தந்தார்
தீபாவளி 2003 இலக்கியபீடம் இதழில் 'வெட்டிப் பயல்கள் பேச்சு' என்ற என் கவிதை பிரசுரமானது
டிசம்பர் 13, 2003, என் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அன்புடன் இதயம்' கனடாவில் வெளியிடப்பட்டு ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இணைய இதழ் திண்ணையிலும் கனடிய தமிழ் செய்தித்தாள்களிலும் மற்றும் வானொலிகளிலும் இவ்விழா பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் கவிதைகளும் வெளியாகின.
எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் குழுமம் மூலம் என் அன்புடன் இதயம் கவிதைத்தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப் பட்டது. அது பற்றிய திரு. மாலனின் தலைமையுரையிலிருந்து சில வரிகள் கீழே.
வரலாற்றின் வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.
இந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்
இந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.
அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோ ம் நாம்.
சென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.
அடுத்த தலைமுறைக்கு இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை.
2004 ஜூன், நிலாவிலும் கற்கள் என்ற பெயரில் திஸ்கி எழுத்துருவில் 2000 திலிருந்து செயல்பட்டுவந்த என் வலைத்தளத்தை முழுவதும் யுனித்தமிழுக்கு மாற்றினேன். http://anbudanbuhari.com என்ற முகவரியில் வெளிச்ச அழைப்புகள் என்ற தலைப்பில் அது இயங்கி வருகிறது.
2005 மார்ச் 7, முழுவீச்சில் செயல்படும் 'அன்புடன்' யுனித்தமிழ் கூகுள் குழுமத்தை உலகிலேயே முதன்முறையாக தொடங்கினேன். அது வெற்றிநடைபோட்டுக்கொண்டு திஸ்கி எழுதும் அனைவரையும் யுனித்தமிழுக்கு வரவேற்றவண்ணம் இருக்கிறது.
2005 ஏப்ரல், http://anbudanbuhari.blogspot.com/ என்ற முகவரியில் ஒரு வலைப்பூவும் தொடங்கினேன்.
2005 மே, என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'சரணமென்றேன்' என்ற் காதல் கவிதைகளின் தொகுப்பை அணிந்துரை அளித்த மாலன் தலைமையிலேயே சென்னையில் வெளியிடப்பட இருக்கிற்து.
2005 மே, பச்சை மிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதைத் தொப்பு வெளியிட்டேன். எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அணிந்துரை தந்திருக்கிறார்.
2005 மே 9ம் தேதி சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலன் தலைமையில் எனக்கு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வாழ்த்துரை வழங்க கவிப்பேரரசு வைரமுத்து வந்திருந்தார்.
பத்திரிகையாளர்களும் கவிஞர்களும் பார்வையாளர்களாக வந்து சிறப்பித்தார்கள். கவிஞர் இந்திரன், அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன், படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகச் செல்வி ஆகியோர் சரணமென்றேன் என்ற என் மூன்றாவது கவிதை நூலை விமரிசித்தார்கள்.
2005 அக்டோபர் 1, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில், சரணமென்றேன் என்ற என் மூன்றாம் தொகுதியும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காம் தொகுதியும் திரு சிவதாசன் தலைமையில் வெளியிடப்பட்டது.
கவிஞர் ரமணன் சிறப்புரையாற்ற, பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, கவிஞர் ஜெயபரதன், கவிஞர் குலமோகன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களை விமரிசனம் செய்தார்கள்.
உதயன் ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்
*
என்னைப்பற்றி சுருக்கமாக:
1981 - 1999 சவூதி வாழ்க்கை
1999 ஜூலை 14ம் தேதி முதல் கனடிய வாழ்க்கை
பணி: கணினி வல்லுனர் - தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்
பிறப்பிடம்: ஒரத்தநாடு, தஞ்சைமாவட்டம்
நாலெல்லாம் இணையத்தில் எழுதுகிறேன். வலைத்தளம், வலைப்பூ, கூகுள் யுனித்தமிழ் குழுமம் நடத்துகிறேன். திருக்குறளை புதுக்கவிதையாக்கிக் கொண்டிருக்கிறேன். கனடாவில் தமிழன் என்ற தொடர் கட்டுரை எழுதுகிறேன்
தீபம், திசைகள், தாய், குமுதம், அலிபாபா, இந்திய அரசின் வார்சிகி, அமுதசுரபி, இலக்கியபீடம், கனடா உதயன், கனடா முழக்கம் என்று பல பத்திரிகைகளில் என் கவிதைகள் வந்திருக்கின்றன.
குமுதம் கவிதைப்போட்டியில் பரிசு
உதயன் கவிதைப்போட்டியில் தங்கப்பதக்கம்
தமிழ் உலகம் கவிதைப்போட்டியில் இரண்டாம் பரிசு
பாரதிதாசன் வையவிரி அவை கவிதைப் போட்டியில் முதல் பரிசு
புத்தகப்புழு கவிதைப்போட்டியில் முதல்பரிசு
கனடா எழுத்தாளர் இணையம் உறுப்பினர்
உதயன் கவிதைத் தேர்வு நடுவர்
கனடிய தமிழ் வானொலிகளில் பங்கேற்பு
பல யாகூ தமிழ்க் குழுமங்களில் பங்கேற்பு
தமிழ் உலகம் குழுமத்தின் ஆஸ்தான கவிஞர் (2003-2004)
வெளிச்ச அழைப்புகளுக்கு கவிதை உறவு சிறப்புப் பரிசு
அச்சேறிய கவிதை நூல்கள்
2002 வெளிச்ச அழைப்புகள்
2003 அன்புடன் இதயம்
2004 சரணமென்றேன்
2005 பச்சைமிளகாய் இளவரசி
உலகில் முதன்முறையாக மாலன் தலைமையில் இணையத்தில் என் அன்புடன் இதயம் கவிதைநூல் வெளியீடு
*
அன்புடன் புகாரி (டிசம்பர் 24, 2003)
.....................................................
ஒன்றிரண்டாய்க் கவிவரிகள்
ஒளிந்தொளிந்து முகங்காட்ட
அன்றுஅந்த இளவயதில்
ஆவல்பொங்க எழுதிவைத்தேன்
சொல்லொன்றில் ஏழெழுத்து
சொத்தையதில் மூன்றெழுத்து
சொல்லிநின்ற சேதிகூட
சொந்தமல்ல கேள்விவழி
உள்ளத்தின் பரப்புகளை
உழுதுநின்ற உணர்வுகளைச்
சொல்லும்சுவை நானுணர்ந்தேன்
சொன்னமொழி என்மொழிதான்
வென்றுவிட்ட நினைவெழுந்து
வெள்ளலையாய் வந்துமோத
கன்றுமனத் துள்ளலோடு
கவிஞனெனக் கண்சிலிர்த்தேன்
பெற்றெடுத்த காதுகளில்
புகுந்ததிந்தச் செய்திவெடி
கற்றுபலப் பதவிவேண்டும்
கைநிறைய காசுவேண்டும்
வெற்றுக்கவி ஆகிவிட்டால்
வேதனையே வீடுசேரும்
முற்றுப்புள்ளி இட்டுவிடு
மூட்டைகட்டி கொளுத்திவிடு
தொட்டுஒரு வரிமீண்டும்
தொடர்ந்தெழுதிப் போனாலோ
பட்டையாய்த் தோலுரிப்பேன்
பட்டினியே இருட்டறையில்
கட்டைக்குரல் கடுகடுக்கக்
கண்டிப்பாய்க் கூறிவிட்டார்
முட்டியதுநீர் அன்றேஎன்
முதற்கவிதை பிறந்ததடா
0
பதின்வயதில் விளையாட்டு
பருவத்தின் குறுகுறுப்பு
புதுவனப்பில் தரையிறங்கி
பகல்நிலாக்கள் வலம்போக
மதுக்குடத்தில் மனம்விழுந்து
மதிமயங்கிக் கூத்தாட
உதித்தகவி கொஞ்சமல்ல
ஒவ்வொன்றும் முத்தழகு
காதலெனும் புயல்ஊற்றைக்
கவியேற்றாக் கவியுண்டோ
காதல்நதி குதிக்காமல்
கவிஞனென்று ஆனதுண்டோ
காதலுக்குள் விழும்போதும்
காதலாகி எழும்போதும்
காதலோடு அழும்போதும்
கவிதைகளோ பலகோடி
கவிதைகளால் சிறகசைத்த
காகிதங்கள் பார்வையிட்டு
கவிஞரேயென அன்போடு
கற்றுத்தரும் தமிழய்யா
உயிர்மலர எனையழைத்து
உற்சாகம் தந்திடுவார்
பயிர்வளர்க்கும் உழவன்போல்
பாசமுடன் அரவணைப்பார்
அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்
ஆயிரமாய் அள்ளிவந்து
படிக்கவேண்டும் என்றெனக்குப்
பரிவோடு தந்திடுவார்
விடுப்பில்தான் படிக்கவேண்டும்
வேண்டாமிது இப்போது
இடுப்பொடியும் பாடமுண்டு
எப்படியும் முடிக்கவேண்டும்
மருத்துவனாய் எனையாக்க
மனமெல்லாம் கனவுகளாய்
இருக்கின்றார் என்வீட்டில்
எனைவிடுவீர் இப்போது
வருத்தம்தான் எனக்குவேறு
வழியுண்டோ கூறுங்கள்
விருப்பத்தை ஒத்திவைத்து
விடைகூறிப் புறப்பட்டேன்
போதுமான மதிப்பெண்கள்
பெற்றேநான் தேர்ந்தபோதும்
மோதிமுட்டிப் பார்த்தேன்நான்
முடியவில்லை மருத்துவமும்
சாதிவழிச் சலுகையில்லை
சந்துவழி வசதியில்லை
வேதனையில் விளைந்ததடா
வைரமணிக் கவிவரிகள்
0
பட்டமொன்று பெற்றுவிட்டேன்
படையெடுத்தேன் வேலைகேட்டு
வெட்டவெளிப் பொட்டலிலே
வெறுமைகூட்டி நிற்கவைத்து
கெட்டகெட்ட கனவுகளைக்
கண்களுக்குள் கொட்டிவிட்டு
பட்டமரம் போலஎன்னைப்
பாதையோரம் நிறுத்தியது
எல்லோரும் மன்னரென்ற
என்நாட்டு நாற்காலி
அல்லாடும் மனத்தோடு
அரபுநிலம் புறப்பட்டேன்
சொல்லவொருச் சொல்லுமில்லை
சுகம்பெற்றேன் சத்தியமாய்
இல்லாமைப் பேய்விரட்டி
என்வீட்டைக் காத்திட்டேன்
பாலைவனச் சாலைகளில்
பார்த்ததெலாம் நெருப்பெனினும்
ஊளையிடும் வறுமைபோக்கி
உறவுகளைக் காத்துநின்று
மாலையிட்டு மக்களீன்று
மனம்முழுதும் பசுமைபூக்க
வேலைதந்தப் பாலைவனம்
வேதனையைத் தீர்த்ததெய்வம்
பெற்றமண்ணை உறவைநட்பை
பிரிந்துவந்த சோகவிதை
நெற்றிவரி இழுத்துச்சென்ற
நிலம்விழுந்து முட்டிமோத
பெற்றதுன்பம் கொஞ்சமல்ல
பிரிவென்பதும் வாழ்வுமல்ல
கற்றபெரும் அனுபவங்கள்
கவிதைகளாய் வெடித்ததடா
0
வருடங்கள் மூவாறு
வாழ்வளித்தப் பாலையிலே
உருண்டோடி விட்டபின்னர்
ஊர்தேடிப் புறப்பட்டேன்
அரும்புகளின் கல்வியெண்ணி
அப்படியே திசைமாற்றம்
அருமைநிலம் கனடாவில்
அவசரமாய்க் குடியேற்றம்
கனவுகண்ட புதியபூமி
கருணைமனத் தூயவானம்
இனங்களெலாம் இணைந்துபாடும்
இனியரதம் கனடியமண்
குணக்கேடு மதவெறியர்
குத்துவெட்டு பகையில்லா
மனிதநேயம் போற்றுமிந்த
மண்பெருமை விண்பாடும்
இணையத்தின் தமிழுக்கு
இங்குவந்தே என்வணக்கம்
முனைதீட்டிக் கவிபாட
முத்தமிழின் புதுச்சங்கம்
அணையுடைத்துக் கவிபாடும்
ஆற்றுவெள்ள உற்சவம்போல்
இணையமெங்கும் தமிழ்வாசம்
இதயமெங்கும் தேரோட்டம்
குளிர்தீண்டக் கவிகொஞ்சம்
கொட்டும்பனி கவிகொஞ்சம்
மலர்வண்ணம் இலைதாவும்
மரக்கிளையின் கவிகொஞ்சம்
வளர்தமிழை விண்ணேற்றி
உலகமெலாம் மழைபொழியும்
புலம்பெயர்ந்த ஈழத்தவர்
புகழ்பாடி கவிகொஞ்சம்
எழுதியெழுதி கவிதைகளை
இணையமெங்கும் தூவினேன்
எழுதிவைத்த தொகுப்பிரண்டை
இங்கிருந்தே வெளியிட்டேன்
அழகுதமிழும் கணினிமடியும்
அமுதூட்டித் தாலாட்ட
அழகழகாய்த் தேன்மழையாய்
அருங்கவிதை பொங்குதடா
0
பார்க்கவரும் விழிகளெல்லாம்
பார்ப்பதற்கே வருவதில்லை
கோர்க்கவரும் விரல்களுமே
கோர்ப்பதற்கே வருவதில்லை
ஊர்ப்பாட்டைக் கேட்டிருந்தால்
உன்பாட்டை மண்மூடும்
மார்தட்டித் திடங்கொண்டால்
மலைத்தொடரும் பொடியாகும்
யானைநடை போட்டாலும்
இடறிவிழும் காலமுண்டு
தேனமுதச் சொல்லெடுத்துத்
தித்திக்கப் பொய்யுரைத்து
பூனைபோலப் பாலருந்தப்
புறப்பட்டு வருவார்பின்
கானகத்து முட்புதரில்
கதியற்று நிறுத்திடுவார்
நிலவோடு விழிகளாட
நிலத்தோடு கால்களாட
விலகியோடும் பனிமேகம்
விருந்தாகும் சிலநேரம்
தழுவவரும் யோகங்களைத்
தடைபோடும் பாவங்கள்
நழுவிவிழும் அடிகளுக்கும்
நாடிவரும் ஒத்தடங்கள்
கோடுகளில் நதியோட்டம்
கரைகளிலோ நெஞ்சோட்டம்
ஏடுகளில் காணாத
எத்தனையோ கனவோட்டம்
கூடிவரும் வாய்ப்புகளில்
குறைவில்லாக் கொண்டாட்டம்
தேடுகின்ற அமைதிமட்டும்
தென்படாத திண்டாட்டம்
எத்தனையோ இவைபோல
என்வாழ்வில் காண்கின்றேன்
அத்தனைக்கும் மருந்தாக
ஆனதொரு மந்திரந்தான்
சொத்தைகளும் சரியாகும்
சுடர்வெற்றி வாழ்வாகும்
நத்தைபோல நகர்ந்தாலும்
நம்பிக்கை முன்னிறுத்து
நம்பிக்கை வளர்த்தெடுக்க
நாளெல்லாம் கவியெழுதி
தெம்புக்கோர் பாட்டென்று
திசையெங்கும் பாடவைத்து
அன்புமனம் அமுதளக்க
அன்னைத்தமிழ் எழுதுகிறேன்
அன்புக்கரம் வளைத்துலகை
அரவணைத்து நெகிழ்கின்றேன்
சில வருடங்களுக்கு முன் விபத்திலிருந்து உயிர்தப்பி வந்த நண்பருக்கு எழுதிய மடல்
மயிரிழையில் உயிர்தப்பியவருக்கு
எல்லோரும்
எல்லாவற்றையும்
சந்தித்துவிடுவதில்லை
நீங்கள் சந்தித்ததை
எவரும் நாள் குறித்துச்
சந்திக்கப் போவதும் இல்லை
சந்தித்த எல்லாவற்றையும்
வந்து சொல்வதற்கு
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
வாய்த்த உங்களுக்கு
வாழ்த்துச் சொல்ல
வார்த்தைகளில்லை
வாழ்க்கையில்
எல்லாமே விபத்துதான்
இந்தக் கவிதையெழுத
நேர்ந்ததும்
வானத்தைப்பார்
அஃறிணைதான்
உயர்திணை
வானத்தைப்பார்
மிகப்பெரியதென்று
வேறொன்றில்லை
வானத்தைப்பார்
ஐம்பூதங்களின்
மூலம்
வானத்தைப்பார்
தீர்க்கதரிசிகள்
சொல்லாதது இல்லை
வானம் தாண்டி மட்டும்
சொன்னதே இல்லை
சொர்க்கம் நரகம் கண்ட
ஆன்மீக தரிசனங்கள்
வானம் துளைத்துக்
கண்டதே இல்லை
வானத்தை உடைத்த
அறிவியலும் இல்லை
வான ஓட்டினைத்
துளைத்துச் சென்றதாய்
ஒரு நட்சத்திரமும் இல்லை
சகலத்துக்கும் தொடக்கம்
யாவும் அதில் அடக்கம்
வானத்தைப்பார்
போறியேடி போறியேடி பொண்டாட்டி
ஒருநாள் மாலைப்பொழுது. நண்பர் ஒருவரோடு உரையாடிக்கொண்டிருக்கிறேன். கவிதையெல்லாம் எழுதறீங்களே கானப்பாட்டு எழுத முடியுமா உங்களால் என்று கேட்டார். நான் கவிதையின் அனைத்து வகைகளையும் முயன்றுபார்க்கும் ஆர்வம் கொண்டவன். ஆனால் கானா என்று கூறிக்கொண்டு எதையும் எழுதியதில்லை. எனவே இதுவரை முயன்றதில்லை, இப்போது முயல்கிறேன் என்றேன். ஆனாலும் என் கானாவில் ஆங்கிலக் கலப்பை எதிர்பார்க்காதீர்கள் என்றேன். அது சென்னைத் தெருவுக்கு ஒத்துவராதே என்றார். சென்னைத் தெருவில் தமிழ் தெரிந்தவனே இருக்கக்கூடாதா என்றேன் சற்றே கோபமாக. சரி.. சரி... என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
இனி காட்சி வர்ணனை வேண்டுமே, அதை நீங்கள்தான் சொல்லவேண்டும் என்று கேட்டேன். கானாவுக்குப் பின்னணியாய் ஒரு சோகம் இருந்தால் நல்லது என்றார். சரி என்றேன். காட்சியைச் சொல்லத் தொடங்கிவிட்டார்.
ஒரு கணவன் வேதனையோடு அழுதபடி தண்ணியடித்துக்கொண்டே பாடுகிறான். மனைவி அவனை விட்டுப் பிரிந்து கோபமாகச் செல்கிறாள். ஆத்திரத்தில் கிளம்பியதால், பிள்ளைகளைக் கூட கூட்டிக்கொண்டு போகவில்லை. பெரிதாய்த் துணிமணிகளும் எடுத்துக்கொள்ளவில்லை. தன் வெறுப்பின் உச்சத்தில் அவனை உதறித் தள்ளிவிட்டு நடக்கவேண்டும் என்ற வெறி அவ்வளவுதான். இறுக்கமான முகத்தோடு போகிறாள்.
சில ஆண்டுகளாகவே அவர்களுக்குள் வேற்றுமை வந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. கணவன் எப்போதோ ஒரு தவறு செய்துவிடுகின்றான், அதை அறிந்த அவளால் இப்போதும் சீரணிக்க முடியவில்லை.
அவன் எத்தனையோ சமாதானம் சொல்லியும், எப்படி எப்படியோ அழுது கூறியும், தற்கொலைக்கு முயன்றும்கூட அவளால் அவனுடன் ஒட்டமுடியவில்லை. அவன்மீது மிகுந்த நம்பிக்கையும், பிரியமும் வைத்திருந்தவளுக்கு அவன் செய்தது மிகப்பெரும் துரோகமாகப்பட்டது.
சீ... என்று அவனை விட்டு மனதளவில் என்றோ பிரிந்துவிட்டாலும், ஊருலகிற்காகவும் வேறு வழியில்லை என்பதற்காகவும் ஒன்றாய்க் குப்பைக்கொண்டிக்கொண்டு இருந்தவள், திடுமென வந்த சண்டையால் வீட்டைவிட்டே வெளியேறுகிறாள். அப்படி அவள் வெளியேறி தெருமுனையைத் தாண்டும்வரை கணவன் பாடுகிறான் ஒரு கானா. கூட குறைச்சலை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள் என்று நண்பர் சொன்னார்.
இது வழக்கமா எல்லோர் வீட்டிலும் நடக்கும் ஒரு விசயம்தான் என்பதால் இது பரவலாகப் போய்ச்சேரும் என்று நானும் ஒப்புக்கொண்டு எழுதத் தொடங்கினேன். புதிதாக நான் எதையும் கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை. அவர் சொன்னவற்றை அப்படியே கானாவாக மாற்றினேன். அவ்வளவுதான் என் பணி.
இது கானாதானா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். என் நண்பர் என்ன சொன்னார் என்று நான் பிறகு சொல்கிறேன் :)
இப்போதெல்லாம் கற்பனை செய்யும்போது சினிமா நடிகர்களின் முகங்கள் வருவதைத் தடுக்கமுடிவதில்லை :) பாடுவது நம்ம தாடி மணிவண்ணன் என்று நீங்களும் கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு சுவாரசியத்திற்காகத்தான்!
போறியேடி போறியேடி பொண்டாட்டி - நீ
போனதென்ன போனதென்ன இன்னிக்காடி
பாரமோடி பாரமோடி பொண்டாட்டி - நீ
பெத்ததையும் விட்டுட்டியே பொண்டாட்டி
ஆடியோடிப் பாத்துப்புட்டேன் பொண்டாட்டி - வெறும்
அனாதையா நிக்கிறேன்டி பொண்டாட்டி
மாடிவீடு கெடச்சுதடி பொண்டாட்டி - உன்
மனசுமட்டும் கெடக்கலடி பொண்டாட்டி
ஆசைமேல ஆசைவெச்சேன் பொண்டாட்டி - உன்னை
அள்ளியள்ளி அணைச்சேன்டி பொண்டாட்டி
ஓசையில்லா ஊமையடி பொண்டாட்டி - நான்
ஒண்ணுமத்துப் போயிட்டேன்டி பொண்டாட்டி
செத்துச்செத்து வாழ்க்கையடி பொண்டாட்டி - நான்
செத்தப்புறம் குதிக்கலான்டி பொண்டாட்டி
வெத்துவேட்டுப் பயதான்டி பொண்டாட்டி - நான்
விசம் குடிச்சும் சாகலேடி பொண்டாட்டி
கத்திக்கத்திப் பாத்துப்புட்டேன் பொண்டாட்டி - நான்
கதறிக்கதறி அழுதுபுட்டேன் பொண்டாட்டி
சுத்திச்சுத்தி அடிக்கிறேடி பொண்டாட்டி - நான்
செத்தப்பொணம் ஆனவன்டி பொண்டாட்டி
ஊருவிட்டு ஊருவந்தேன் பொண்டாட்டி - உன்னை
உத்தமமா மணமுடிச்சேன் பொண்டாட்டி
தேடித்தேடித் தவிச்சேன்டி பொண்டாட்டி - நீ
தேவதையா வந்தியேன்னு நினைச்சேன்டி
ஓடியோடிப் போனியேடி பொண்டாட்டி - என்னை
ஓட்டஞ்சல்லி ஆக்கிட்டேடி பொண்டாட்டி
வாடிவாடி வெந்தேன்டி பொண்டாட்டி - வந்த
விசந்தொட்டுச் துடிச்சேன்டி பொண்டாட்டி
பட்டிக்காட்டில் பொறந்தேன்டி பொண்டாட்டி - தினம்
படிச்சுபடிச்சு வளந்தேன்டி பொண்டாட்டி
பட்டணமும் பாத்தேன்டி பொண்டாட்டி - நெசப்
பாசம்மட்டும் பாக்கலேடி பொண்டாட்டி
மடியக்கேட்டுப் படுப்பேன்டி பொண்டாட்டி - நீ
இடியக் குடுத்துப் போறியேடி பொண்டாட்டி
அடியடியா வாங்கிட்டேன்டி பொண்டாட்டி - இந்த
அனாதைக்கு யாரிருக்கா பொண்டாட்டி
பொறந்தநாளா துடிக்கிறேன்டி பொண்டாட்டி - நான்
பொறந்தமாதம் சித்திரையடி பொண்டாட்டி
பொறக்கும்போதே திட்டுப்பட்டேன் பொண்டாட்டி - என்னை
பெத்தவளே மொத்திவிட்டா பொண்டாட்டி
கூனிக்குறுகி வாழ்ந்தேன்டி பொண்டாட்டி - தினம்
குட்டுப்பட்டு நொந்தேன்டி பொண்டாட்டி
ஆணிமேல ஆணிதான்டி பொண்டாட்டி - நான்
அகப்பட்டது சிலுவைதான்டி பொண்டாட்டி
பாக்காததை பாக்கவெச்சே பொண்டாட்டி - இந்தப்
பாழும்மனம் மாட்டிக்கிச்சே பொண்டாட்டி
கேக்காதத கேக்கவெச்சே பொண்டாட்டி - நான்
கெட்டழிஞ்சு போனேன்டி பொண்டாட்டி
தூக்குப்போட்டும் தொங்கினேன்டி பொண்டாட்டி - அந்த
தூக்கும் கையவிட்டதடி பொண்டாட்டி
நோக்கிநோக்கி நிக்கிறேன்டி பொண்டாட்டி - ஒரு
நொடியில் சாவுவேணுமடி பொண்டாட்டி
பெத்தெடுத்தேன் ரத்தினங்கள் பொண்டாட்டி - அந்த
புண்ணியந்தான் கோடியடி பொண்டாட்டி
முத்துமுத்தா புள்ளைங்கடி பொண்டாட்டி - அந்த
மொகத்தப்பாத்து வாழுறேன்டி பொண்டாட்டி
சுடுகாட்டுப் பொணமானேன் பொண்டாட்டி - தெனம்
சுட்டக்கரு வாடானேன் பொண்டாட்டி
எடுபட்டப் பயலானேன் பொண்டாட்டி - நான்
எட்டணாக்குப் பத்தானேன் பொண்டாட்டி
எனக்கு ஒரு வழியச் சொல்லு பொண்டாட்டி - என்னை
எங்கயாச்சும் பொதச்சுப்போடு பொண்டாட்டி
உனக்குத்தீனி வேணுமடி பொண்டாட்டி - என்
உசுரைதின்னா செரிக்குதாடி பொண்டாட்டி
சுற்றுப்புற எக்ஸ்ரே
கதவுகள் சாத்தப்படும் சத்தம்
வேகவேகமாய்க் கேட்கிறது
வெளிச்சம் குறைந்து குறைந்து
கும்மிருட்டு சூழ்கிறது
காற்றில்லா மூச்சு
ஒளியில்லாப் பார்வை
உயிர் கிழியும் நாற்றம்
விசம் விழுங்கிய சுவை
நம்பிக்கை வற்றிய விக்கல்
அத்துமீறும் அவலத்தை
வெளியேற்றும்
வழிதேடி
தொடர்ப் பெருமூச்சுகள்
அவசரத்தின் நிறம்
சிவப்பு
அதன்முன் யாவும்
வெளுப்பு
உயிரின்
தொண்ணூற்றொன்பதாவது
பகுதியையும் விற்றாவது
கரிக்குள் நுழைந்தும்
சாக்கடை சுவாசித்தும்
துளிர்க்க வேண்டும்
ஆம்
துளிர்க்க வேண்டும்
உயிரின் ஓர்
உடைந்தபகுதி எஞ்சினாலும்
உயிர் உயிர்தான்
மூச்சு மீண்டதும்
சுற்றுப்புறம் தெரியவரலாம்
ஆனால் எத்தருணத்திலும்
மறுஜென்ம உயிர் தந்த
உயிர்தான் உயிர்
உயிர்மட்டுமல்ல
சுற்றுப்புறத்தின் எக்ஸ்ரேயை
அறியும் விழிகளும்
வரவு
செலவென்னவோ
வாழ்வின் ஒரேயொரு
அழுகல் பகுதிதானே
நிரந்தர மௌனம்
அன்பு
கருணை
மன்னிக்கும்
பண்பு என்று
மனிதன்
மனிதனிடம்
எதிர்பார்த்து
கிடைக்காததால்
இறைவனிடம்
கேட்கிறான்
இறைவனோ
நிரந்தர
மௌனத்தில்
வசீகரம் வாய்க்கரிசி
இந்தக் காலையே
தெளிந்ததாய் இருக்கட்டும்
கெட்ட கனவுகள்
தொலைந்ததாய் நொறுங்கட்டும்
எரியும் காயத்தைக்
காலமும் விழுங்கட்டும்
புத்திக் கவசங்கள்
நெஞ்சோடு நிலைக்கட்டும்
கிளைகளில் காற்றுக்கு
ஊஞ்சல் வேண்டும்
இலைகளில் மழைக்கு
முத்தம் வேண்டும்
யாருக்கு நீ வாழும்
வேர் வேண்டும்
வேர்காக்கும் சேற்றையே
மரம் வேண்டும்
மாயைகள் எப்போதும்
கண் சிமிட்டும்
மரணத்தின் கரமதில்
மறைந்திருக்கும்
வசீகரம் வேறென்ன
வாய்க்கரிசி
துணைக்கரம் ஒன்றுதான்
தாய்க்குருவி
வளைகாப்பு
பணமே பரமாத்மாவே
பணமே
பரமாத்மாவே
உன்னைப் படைத்த
எங்களையே
நீ படைக்கிறாயடா
பூங்கொடி
என்று உன் கைகளில்
இரும்புச் சங்கிலியைக்
கொடுத்து விட்டோம்
அவை
எங்களுக்கே
விலங்குகளாகிவிட்டன
உன்னில்
தஞ்சமடைந்த
அடிமை நாய்கள்
குரைக்காத
நிமிடங்களே இல்லை
நீயறிவாயா
உன்
அதர்மங்களால்
எங்கள் உடலும் உள்ளமும்
பிய்ந்துபோய்
இரத்த வடுக்களைச்
சுமக்கின்றன
உன்
கொடுங்கோலில்
கற்பரசிகள்
விற்பனைக்கு நிற்கின்றனர்
எங்கள் குரல்கள்
நேர்மை நாண்களை இழந்து
நாட்கள் நகர்ந்துவிட்டன
தன்மானத்தை உன்னிடம்
நிரந்தரமாய்
அடகுவைத்துவிட்டு
வயிறு நனைக்கும்
கூட்டங்கள்
பெருகிவிட்டன
அன்பும் பாசமும்
மூச்சுவிடமாட்டாமல்
புதைக்கப்பட்டுவிட்டன
உறவுகள்
உன்னையே
பாலமாக்கிக்கொண்டு
பவனி வருகின்றன
எங்களின்
ஆசை அடிக்கற்களில்
உன் வானம் தொடும்
கோபுரங்களை
எங்கள் முதுகிலேயே
எழுப்பிவிட்ட
பணமே
பரமாத்மாவே
உன்னைப் படைத்த
எங்களையே
நீ படைக்கிறாயடா
Subscribe to:
Posts (Atom)