நான் எப்போது...

உன்னைச் சந்தித்துவிட்டு
சம்மதமற்ற
சமாதானத்தோடு
நான் சாலைவழியே
சலனமற்று
வந்துகொண்டிருக்கிறேன்

என்
சிந்தனையின்
சந்து பொந்துகளிலெல்லாம்
உன் சுகந்த வரம்
சுகமாய் அப்பிக்கிடக்கிறது

உதடுகள் அவ்வப்போது
ஓணம் பண்டிகை
கொண்டாடுகின்றன
ஒரு காரணமும் இன்றி

கீழே
நிலம் இருப்பதும்
நிலத்தின் மீது என்
பாதங்கள் பதிவதும்
எனக்குத் தெரியவில்லை

நான்
நடந்துகொண்டிருக்கிறேன்

என் விழிகள்
மூடிக்கிடக்கின்றனவா
அல்லது
திறந்திருக்கின்றனவா என்றும்
எனக்குத் தெரியவில்லை

நான்
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

எதிரே
நீண்டு விரிந்து படர்ந்து
நாணப் புன்னகை
பூணிக்கிடக்கும் உன் முகத்தை

நானறியாமல்
உன்னிடமிருந்து
தொற்றிக்கொண்டுவந்த
உன் அடையாளங்கள் எல்லாம்
ஒரு கூட்டமாய்க் கூடி
என்னை எழுதச் சொல்லி
வாஞ்சையாய் வருடிவிடுகின்றன

நான்
எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஒவ்வோர் அட்சரத்திலும்
உன் பருவ மூச்சு
பக்குவமாய்
ஒட்டிக்கிடக்கிறது

வழி நெடுகிலும்
நிற்கும் மரங்களெல்லாம்
வணக்கம் சொல்லி
என்னுடன் வாய்மொழிவது
இப்போதுதான்
எனக்குக் கேட்கிறது

நெடுஞ் சாலையின்
நிம்மதிக் கறுப்பு
என்னை
அணைத்துக்கொண்டே
என்னுடன்
பிரியமாய் நடக்கிறது

சுற்றுப்புறக் காற்றெல்லாம்
என் நுரையீரல் நிறைக்க
போட்டி போட்டுக்கொண்டு
சுற்று வரிசையில்
சூழ்ந்து நிற்கின்றன

வான வீதியில்
ஒரு மாபெரும் நட்சத்திரம்
தன் பிரகாசம் பொழியப் பொழிய
என்னையே பார்த்துக்கொண்டு
என்னோடு வருகிறது
தோழமையோடு

வீடு வந்துவிட்டது

வீட்டுக்குள்
என் கால்கள் நுழைந்து
நெடு நேரம் ஆகிவிட்டது

நான் எப்போது
வீட்டுக்கு வருவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

No comments: