வேடந்தாங்கல் மரக்கிளைகள்

அது ஓர்
இயற்கை உணர்வுகளின்
வசந்த காலம்

வேடந்தாங்கலில்
இரவை அவிழ்க்க
பகல் தன்
விரல்களை நீட்டும்
பவள மாலைப் பொழுது

வண்ண வண்ண
நினைவுகளோடும்
சின்னச் சின்னக்
கனவுகளோடும்
காற்றுக் கடலேறி
சிறகுத் துடுப்பசைத்து
அந்தப் பெருமரத் தீவில்
வந்து அமர்ந்தது ஓர்
போரழகுப் பறவை

அமர்ந்ததும்
மரத்தின் கிளைகளில்
வானவில்லின் வசீகரம்
வந்து
வனப்பாய்த்
தொற்றிக்கொண்டது

பச்சை உயிர் இலைகள்
பட்டமரக்
கிளைகளெங்கும்
படபடவெனத் துளிர்விட்டன

சிலிர்ப்புப் பூக்கள்
சிரித்துக்கொண்டே
பூத்துப் பூத்துக் குலுங்கின

அந்தப் பறவையும்
அத்தியாவசியங்களுக்காய் மட்டும்
அங்கும் இங்கும்
குட்டிக் குட்டியாய்ப் பறந்தாலும்
அந்த ஒற்றை மரக்கிளையையே
தன் உயிர்க் கூடாக்கிக்
கொண்டது

கூட்டோ டு கொஞ்சுவதும்
கொத்திக்கொத்தி
முத்தமிடுவதும்
பித்துப்பிடித்த எச்சிலின்
தித்திப்புப் பொழுதுகள்

வளர்வது தெரியாமல்
பொழுதுகள் வளர வளர
விரிவது தெரியாமல்
பொன்மஞ்சம் விரிய விரிய
அந்தத் தேனோடையில்
அறிவிப்பில்லாமல்
அவசரமாய் வந்து கலந்தது
அந்த நாள் என்னும்
கருநாக விசம்

பறவையின் சிறகுகள்
புயல் காற்றில் விழுந்து
புரட்டிப்போடும்
பொல்லாத காற்றோடு
அடித்துக்கொண்டன

உயரே உயரே எழுந்து
விடைசொல்லத் தெரியாமல்
விடைசொல்லிப் பறந்தது
அந்தப் பொன் வண்ணப் பறவை

வேடந்தாங்கலோ
வெறிச்சோடிப் போனது
பறிகொடுத்தக் கிளைகளெங்கும்
பறவையின் ஞாபகங்கள்
எச்சங்களாய்க் கிடந்தன

வேர்களில்
நீரைத் தேடாமல்
வானம் நோக்கிக் கைகள் ஏந்தி
அந்த மரம்
ஒரு வரம் கேட்டது

கிளைகள் வேண்டாம்
கிளைகள் வேண்டாம்
சிறகுகள்தாம் வேண்டும்
எனக்கும்
சிறகுகள்தாம் வேண்டும்

No comments: