நம்மவர்களால் உருவாகும் கவிதைகளில் பெரும்பாலும் எல்லாம் இருக்கிறது; கவிஞர்கள் இருப்பதில்லை. கவிதை என்கிற கூட்டுக்குள் கவிஞன் என்ற காலப் பறவை குறுகுறுத்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் அது கவிதை அல்ல; வெறும் உளறல். தனது பட்டறிவை தானும் தனது குமுகாயமும் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளுவதில் தனது பங்களிப்பைப் பற்றிக் கவலையே படாத பலரும் கவிஞர்கள், கவியரசர்கள் என்ற வெற்றி உலாப் போகிற பூமிப் பந்தில் கவிஞர் புகாரி சற்று வித்தியாசமாக வெளிச்சமிடுகிறவர்.
தங்களின் காலணாப் பெறாத கவிதைக் குப்பைகளை புத்தகமாகப் போட்டு மகிழ்ந்து போகிறவர்கள் மலிந்து போன உலகமிது! தன் ஒவ்வொரு எண்ண அதிர்வுகளையும் உன்னத உணர்வோடு,குமுகாயப் பொறுப்புணர்வோடு மக்கள் மதித்துப் படிக்கின்ற பத்திரிக்கைகளில் முத்திரைக் கவிதையாக வெளி வந்த ஒவ்வொரு கவிதை முத்தையும் சிந்தாமல் சிதறாமல் திரட்டி ஒரே புத்தகத்தில் நம்மைப் படிக்க வைத்த கவிஞர் புகாரிக்கு நன்றி சொல்ல வேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவும், தமிழில் பேசினால் தன் சுயமரியாதைக்கு இழுக்கு என்று எண்ணி வலம்வருகின்ற பலருக்கு மத்தியில்
"என் தாய் மொழி தமிழ் என்பதில்
எனக்கு அளவில்லா ஆனந்தம்!
தமிழகத்தில் பிறந்த நான்
இன்று கனடாவில் வாழ்கிறேன்.
இங்கே,
ஒரு தமிழனைச் சந்தித்து
**தமிழில்** உரையாடும்போது மட்டுமே
நான் பேரானந்தம் அடைகிறேன். "
என்ற கவிஞரின் முன்னுரை வரிகள் அவரை யார் என்று தீர்க்கமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. தமிழன் என்ற உணர்வில்லாமல் மரித்து, மக்கிக் கல்லறையில் கிடக்கும் பிணத்திற்குக்கூட எழுந்து விட வேண்டும் என்ற உணர்வை ஊட்டுகிற வரிகளிது.
கவிதையைப் பற்றிக் குறிப்பிடுகின்ற கவிஞர் புகாரி,
"அதிநுட்ப அறிவியல் விருத்தி
தூரங்களை எல்லாம்
சுருக்கிச் சூறையாடியபோது...
கூடவே சுருங்கிப் போன
நம் மனங்களையும்
வாழ்க்கைச் சுவைகளையும்
மலர்த்தித் தரும் சந்தனக் காற்று! ..."என்கிறார். நேர்த்தியான வார்த்தை வைரங்களை, மிக நுணுக்கமாகச் செதுக்கி இழைத்து இந்தக் குமுகாயத்துக்கு அளிக்கும் கவிதைக் கலைஞன்!
இதுதான் வணிக தர்மமா? என்று கொதித்துக் குமுறுகிற கவிஞர், அரிசியிலிருந்து அரசியல் வரை, சாமான்யன் முதல் கோமான் வரை இலவசங்களால் சீரழிகின்ற உண்மையை,
முன்னேறிய நாடுகளிலும்
முக்கால்வாசிப்பேர்
முழுபலகீனர்களே என்பது
முக்காடு போடும் வெட்கம்...
என்று சாடுகிறபோது அவரின் சமுதாய உறுத்தல் வெளிப்படுகிறது. மீன் குஞ்சுகளின் மின்னல் நீச்சல்களைத் தவிர வேறு ஒன்றினையும் கவிதைகளுக்குக் கருப்பொருளாக்கத் தெரியாதவர்களுக்கு ஒரு காலச் சொடுக்காக இங்கே புகாரி முகம் காட்டுகிறார்.
காலத்தின் அருமை பெரும்பாலும் நம்மவர்களுக்கு புரிபடுவதுமில்லை; அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதுமில்லை. ஆறுமணிக்கு விழா என்றால் எட்டு மணிக்கு சாவகாசமாய் வந்தே பழக்கப்பட்டவர்கள். அது இலக்கியவாதி என்றாலும், அரசியல்வாதி என்றாலும் அவர்களோடு உடன்பிறந்தது தாமதம்! அந்தத் தாமதம் என்ற தலைப்பில் கவிஞர் எழுதிய கவிதையை அச்சிட்டுவிழாவில் பேச வருகிறவர்களுக்கு முன்கூட்டியே கொடுத்து விட்டால் இந்தக் குற்றம் குறையும் என்றே தோன்றுகிறது. ஆகாயத்தை அகலமாக்கி விடுகிற கவிஞரின் காந்தப் பார்வையில் இதுவும் ஒரு சிறப்பான கவிதை.
"நேரம் தாண்டும்போது
உயிருக்குள் புயலொன்று வீசாதா?
தருணத்தில் வாரா
ஞாபகமும்
காலத்தே வாரா
அறிவும்
துயரக் கடலில்தானே
நம்மை மூழ்கடிக்கும்...என்று பொங்கியெழுகிறார்.
அழகாக எழுதுவது மாத்திரமா கவிதை? அந்தி வானத்தைவிட நாம் என்ன எழுதிவிடப் போகிறோம்? கைகால் முளைத்த கவிதையான குழந்தையின் கன்னத்தில் சுழி ஒன்று நிரந்தரமாகப் பள்ளம் தோண்டுகிறதே அதை விடவா அழகான கவிதை பண்ணிவிடப்போகிறோம். அதர்மத்தை எதிர்க்கின்ற துணிச்சல், அக்கிரமத்தின் ஆணிவேரைக் கிள்ளியெறிகின்ற பங்களிப்பு கவிஞரின் தனிச் சிறப்பாக மிளிருகிறது. இன்னும் விடியாமல் என்கிற தலைப்பில் அரசியல் சாக்கடைப் புழுக்களுக்கும் ஏமாளி மக்களாய் வாக்களிக்கும் வர்க்கத்துக்கும் அவர் தன் கவிதைச் சாட்டையைச் சொடுக்குகிறார்.
எத்தனையோ கற்பக விதைகள்
தங்களை
இதில் விதைத்துகொண்டு
கள்ளிகளாய் வளர்ந்துவிட்டன...!என்றும்,
சுதந்திர மரத்தின்
வேர்களுக்கு நீரூற்ற வந்த
ஒவ்வொருவருமா
அதன் கிளைகளைத் திருடுவது...?என்றும்
கைநாட்டுகள்தாம்
கைத்தட்டுகின்றன என்றால்
இந்தக் கற்றோர்களில் பலருங்கூட
இங்கே கண்மூடியல்லவா கிடக்கிறார்கள்?
என்று சாதாரணக் கவிதையாக முகம் காட்டினாலும், அதற்குள் முகமிழந்து கொண்டிருக்கிற இந்திய சாம்ராஜ்யத்தின் முகவரி அல்லவா தென்படுகிறது? வெட்கப்படு இந்தியனே நீ வெட்கப்படு..! என்று வேகப்படுகிறார். இறுதியாய் ஒரு கேள்வி என்ற தலைப்பில் இப்படி மாண்டு தீர்த்தால் இந்த மதங்கள் யாருக்கு? அந்த இறைவந்தான் யாருக்கு? என்று செவிட்டில் அறைந்தாற்போன்று ஒரு வினாக் கவிதை குசராத் கொடுமைக்கு கனன்று எரிகின்றன.
கவிஞர் ஒரு கவிதையில் தானும் அழுது, வாசிப்பவரையும் அழ வைக்கிறார். ஆம்! எங்கள் கலைக்கூடம் கலைந்தது என்று சொல்லி நடிகர் திலகம் மறைவுக் கவிதையை முத்தாய்ப்பாய்ப் படைத்துள்ளார்.
கரிசல்காட்டு கடுதாசியில் தொலைதூரத்துக் கிராமங்களை நம் கண் முன் விரிய வைக்கிறார்; தாயின் வாஞ்சையை, சகோதரனின் பிரிவை, இதயத்தை ஊடுருவி சில்லிட வைக்கும் நடுக்கும் குளிர்குறித்து, தன் நெஞ்சில் சுரந்ததை கவிதை யாத்திருக்கிறார். கவிதை நாலு வரிகளிலும் எழுதலாம்; நாற்பது வரிகளிலும் எழுதலாம். கவிஞர் புகாரிக்கோ கவிதை ஊற்றெடுத்தால் அதை, ஒரு புத்தகம்முழுக்க பிரசவித்துவிடுகிற பேராற்றல் வசப்பட்டிருக்கிறது.
கவிதை என்பது கற்பனை என்கிற பழைய உலகம் பாழ்பட்டுப் போகட்டும்; கவிதை என்பது கைவாள் என்கிற புதிய உலகம் முழுவதுமாகப் பூக்கட்டும். இந்தப் புதிய உலகத்தின் அழுத்தமான அடையாளங்களில் ஒன்றாக புகாரியின் "வெளிச்ச அழைப்புகள்" படைப்பு! இது முலாம் பூசப்படாத முழு உண்மை.
No comments:
Post a Comment