***
64 

அழவேண்டும் அழவேண்டும்
அழுகைக்குள்தான் இருக்கிறது படுக்கை
அதில் மலர்ந்தால்தான் பிடிக்கிறது உறக்கம்

அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் அழவேண்டும்
மன அமைதி அதில்தான் மீளவேண்டும்

அழுகைதான் குடை
அதன் அடியில்தான் இளைப்பாறும்
வாழ்க்கையின் நடை

கண்களில் நீர் வந்து முட்டினால்
நிம்மதி நெஞ்சின் கதவு தட்டும்
கன்னத்தில் ஒரு சொட்டு உதிர்கின்ற போது
உயிருக்குள் அமைதி விதை நட்டுப் போகும்

எது வந்து மடி சேர்ந்தபோதும்
அது நில்லாமல் ஒரு நாளில் போகும்
மாற்றந்தான் வாழ்க்கையின் மாறாத நியதி
அழுகைதான் அதற்கான பயணத்தின்
ஊர்தி

கோழையின் கூடாரமல்ல
அழுகை கருணையின் கோபுரம்
தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய் அழப்போவதே
இல்லை

ஒவ்வோர் அழுகையின் முடிவிலும்தான்
ஓர் உறுதியான மனவீரம்
வேர் விடுகிறது

4 comments:

Anonymous said...

//தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய்
அழப்போவதே இல்லை

ஒவ்வோர் அழுகையின்
முடிவிலும்தான்
ஓர் உறுதியான மனவீரம்
வேர் விடுகிறது//

அருமை. அழுகை என்பது கோழைத்தனம் என்று கர்ப்பிக்கப்பட்ட உலகில் உங்களுடைய கவிதை முரண் அழகில் முன் நிற்கிறது.

எதற்காக அழுவது சிறந்தது என்பதை சொல்லாமல் போனீர்களே ? ஏனெனில் இப்போதெல்லாம் இந்தியா கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால் கூட மக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் !

cheena (சீனா) said...

அருமை நண்பர் சேவியரின் கருத்தை அப்படியே மறு மொழிகிறேன். அவரது கவிதைகளும் சளைத்தவை அல்ல நண்பர் புகாரி. நேரமிருப்பின் செல்க அவரது வலைப்பூவிற்கும்.

துயரங்களை அழுது களைய வேண்டும். மன இறுக்கம் குறைய அழ வேண்டும். நட்பின் / துணையின் பிரிவை மறக்க அழ வேண்டும். பிறப்பின் போதும், இறப்பின் போதும் அழ வேண்டும். ஒரு வேறுபாடு. பிறப்பில் சிசு அழும். நாம் சிரிப்போம். இறப்பில் நிலை மாறும்.

பூக்குழலி said...

>>>>அழுகைக்குள் அழுகையாய்
அழுகைக்குள் அழுகையாய்
அடுக்கடுக்காய் அழவேண்டும்
மன அமைதி அதில்தான் மீளவேண்டும்<<<<

வலிமையான வரிகள் .

>>>தனக்கே அழாதவன்
ஊருக்காய் உறவுக்காய் அழப்போவதே
இல்லை<<<

உண்மைதான் .
ஆழ்மனத்தின் பிரதிபலிப்பாய் இந்த கவிதை புகாரி .அருமை


இது நான் எழுதிய கவிதை (அன்புடனில் முன்பே இட்டது தான்)உங்கள் கவிதையை படித்ததும் இது நினைவுக்கு வந்தது

கண்ணீர்

சில நேரங்களில்
எல்லையற்ற மகிழ்ச்சி என்னுள் பூக்கும் போது
கண்ணீர் என் கண்ணாடி

சில நேரங்களில்
விலா கொள்ளாமல் நான் சிரிக்கும் போது
கண்ணீர் என் கடிவாளம்

சில நேரங்களில்
சிறுதுகள்கள் உள்ளேறி உறுத்தும் போது
கண்ணீர் என் மருந்து

சில நேரங்களில்
இதயத்து சுமை ஏந்தி நான் துவழும் போது
கண்ணீர் என் சுமைதாங்கி

சில நேரங்களில்
துயரங்கள் எனை ஆழ்த்த முயலும் போது
கண்ணீர் என் வடிகால்

சில நேரங்களில்
எவருமில்லா தனிமையில் நான் தவிக்கும் போது
கண்ணீர் என் துணை


சில நேரங்களில்
என்னை மீட்க நான் எத்தனிக்கும்போது மட்டும்
கண்ணீரும் என் ஆயுதம்

சீனா said...

உண்மை உண்மை புகாரி

அழுகையினால் தான் வீரம் முளை விடும்

நன்று நன்று

நல்வாழ்த்துகள்