59

நம்மைவிட்டு
ஓடிக்கொண்டிருக்கும் நதியை
நாம் காதலிக்கிறோம்
காலடியில் கிடக்கும் குளம்
நம் முகத்தைப் பிரதிபளித்துக்கொண்டிக்கிறது

ஓடிவந்த வேகத்திலேயே
திரும்பிப்போய்விடும் அலைகளை
நாம் காதலிக்கிறோம்
காலடியில் கிடக்கும் மணல்வெளி
நம் சுவடுகள் ஏந்திக்கிடக்கிறது

கண்களுக்கு எட்டி
கைகளுக்கு என்றுமே எட்டாத
உச்சிவான வெண்ணிலவை
நாம் காதலிக்கிறோம்
சூழ்ந்திருக்கும் இரவு நம் நித்திரையைத்
தாலாட்டிக்கொண்டிருக்கிறது

நம்மைக் காதலிக்காத ஜீவனோடு
நாம் காலமெல்லாம்
கனவுகளில் வாழ்வதும்
நாம் காதலிக்கும் ஒரு ஜீவன்
நம்மைவிட்டுத் தொலைதூரம் கிடப்பதும்தான்
நாம் காணும் வாழ்க்கை என்றால்
அதில் துக்கம் தவிர
வேறென்ன இருக்க முடியும்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

சீனா said...

ஒருதலைக் காதல் என்பது இதுதானோ - எப்பொழுதும் அக்கரைப் பச்சைதான் நமக்குப் பிடிக்குமோ

நமக்குப் பிடித்தவரைக் காதலிப்பதை விட நம்மை நேசிப்பவரை காதலிப்பது புத்திசாலித் தனம் - அவரும் அப்படி எண்ணாதிருந்தால்

காதல்-தெளிவாகப் பொருள் கூற இயலாத ஒன்று

சிவா - வா வா - ஓடி வா வா - கருத்துக் கூற வா வா

பூங்குழலி said...

அருமையான உவமைகள் கொண்டு நம்மை காதலிப்பவர்களை நாம் பல நேரங்களில் உதாசீனம் செய்கிறோம் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள் புகாரி .ஆனால் சொல்லும் அளவு இது சுலபம் அல்லவே .நாம் விரும்புவதை தானே மனம் நாடும் .கையில் கிடைக்காத கனிக்கே சுவை அதிகமாயிருப்பதைப் போல .