56

என் நேற்றைய இரவு
ஒரு கேள்வியோடு விழித்திருந்தது

கேட்டால் மெய்யான பதில் வருமா
என்ற ஐயம் உறங்கச்செல்லும்போது
நான் விழித்துக்கொண்டேன்

எதுவும் கட்டாயமில்லை என்னிடம்
இதயத்தின் தனி விருப்பமே
முதன்மையானது என்பதை
நடுவராய் அமர்த்துகிறேன்

எந்தக் கணக்கு
கழித்தல் குறிகளையும்
வகுத்தல் குறிகளையும்
என்முன் உன்னை இடவைத்தது
என்ற கேள்வியைக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறேன்

தண்டனை தந்து விடுவித்துவிடலாமா
அல்லது ஈரமாய்ப் பழகிய உயிர் நெகிழ்வை
தீர்ப்பாய் அளித்து மீண்டும் உன்
இதயச் சிறையிலேயே அடைத்துவிடலாமா
என்று இன்றாவது சொல்

மரணம் ஒரு இருக்கையிலும்
வாழ்க்கை மறு இருக்கையிலும்
காத்திருக்கின்றன உன் தீர்ப்புக்காக

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

புன்னகையரசன் said…
அதெப்படி ஆசான் என் மன ஒட்டங்கள் உங்கள் கவிதைகளில் பிரதிபலிக்கின்றன.... நல்ல கவிதை... பெயர்க்க முடியாதவற்றை பெயர்க்கும் கவிதை....
ருத்ரா said…
ஆம்
முக்கிய தீர்ப்பு தான்.
தராசுமுள்
இன்னும் அப்படியே
நிற்கிறது.
கழுமரம் போல.
ஒவ்வோரு கணங்களும்
ரத்தம் சொட்டும்
"கணமொழி"க்கணிதத்தை
கற்பித்துக்கொண்டேயிருக்கிறது.
"வென் டையாகிராம்"
போட்டு போடு பார்த்து
காதலின் தீர்ப்பு கிடைப்பதற்குள்
வலியின் பேய்மழை
மௌனமாய் பெய்கிறது.
அந்த துயரங்களிலும்
இன்பம் பொழியும்
பூமாரி சொற்களை பெய்து தரும்
புகாரி அவர்களே!
படிப்பவர்கள் மாயமாகி விடுகின்றனர்
உண‌ர்ச்சியின் பெருங்காடு
அட‌ர்ந்த‌தொரு அனுப‌வ‌த்தை த‌ருகிற‌து.
அற்புதம் புகாரி அவ‌ர்க‌ளே!

இப்ப‌டிக்கு
அன்புட‌ன் ருத்ரா

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே