***55 எது வாழ்க்கை?

பழக்கமில்லாதான்
பாதை அறியா ஊருக்குக்
கடிவாளமில்லாக் குதிரையில்
சவாரி செய்யும் கட்டாய விபத்தா

என்றோ செய்த
பாவ புண்ணியத்தின்
கூலி தினங்களா

இனிவரப்போவதாய் நம்பப்படும்
சொர்க்க நரகத்தின்
அனுமதிச் சீட்டுவாங்க
அலையும் அலைச்சலா

முழுமொத்த மௌனமாய்
முன்னிற்கும் கடவுள்முன்
சத்தமாய்க் கதறியழும்
பக்திப் பரவசமா

உள்மனச் சக்தி திரட்டி
சாட்டையைச் சொடுக்கினால்
சொன்னபடி கேட்கும் சாதுபூதமா

வருவதெல்லாம்
நலம்தான் என்றெண்ணும்
முற்றிய விழியிருப்பின்
பொழுதுக்கும் வசந்தம் பொழியும்
சொர்க்க நீரோட்டமா

கைகாட்டி இல்லாக்
காட்டுச் சாலையில் நின்று
இன்னும் இன்னும் இவைபோல
எத்தனை எத்தனைக் கேள்விகள்

இவற்றுள்
ஒன்றுக்குள்ளேனும்
ஒருவழியாய் ஒன்றிப்போகும்
அல்லல் உயிர்களே

எவரையும் விட்டுவைக்காமல்
ஒருநாள் விழுங்கியே தீரப்போகும்
மரணத்தை முந்திக்கொண்டு
தானே அதனுள்
வீழ்ந்துவிடலாம் என்று
பிறந்த உயிர் ஒவ்வொன்றும்
தன் வாழ்நாளில்
ஒரேயொரு முறையேனும்
இதயப்புயல் வீசிவிடுகிறதென்று
புள்ளிவிபரம் ஒன்று சொல்லியது

ஞான ஒளியடித்து
மூளை முடுக்குகளின்
முடிச்சுகளுக்குள்ளும்
ஊடுருவித் தேடிப் பார்த்ததில்

அன்பெனும் நூல் ஈகையெனும் வால்
கருணையெனும் காற்றில்லாம்
வாழ்வுப் பட்டமோ
இருட்டுப் பரணில்
திருட்டு எலிகளின் பற்களுக்கு
எட்டும் இடத்தில்தான் என்ற
உண்மை நெருப்பு சுட்டது

பிறந்த உயிர்
அத்தனைக்கும் இங்கே
தெளிந்த ஊற்றாய் வாழ்க்கை
கொப்பளிக்கவேண்டாமா

இந்த பூமியெங்கும்
அன்புச் சுடரேற்றி
விருப்புகளை விரும்புவோம்
கருணை மலர் தூவி
வெறுப்புகளை வெறுப்போம்
தவறுகளை மன்னித்து
ஆதரவாய் அணைப்போம்
யாசிக்காதார் கதவு தட்டியும்
குறைவற்றுக் கொடுப்போம்

நிம்மதிதான் வாழ்க்கை
அது நிச்சயம் கிடைக்கும்
என்ற நம்பிக்கை
அதில் முளைக்கட்டும்

No comments: