நாங்கள்தான் குழம்பிவிட்டோம்

நிகழ்ச்சி ஒன்று:

நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.

ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.

அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,

Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.

அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.

கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.

சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!


நிகழ்ச்சி இரண்டு:

அதே சவுதி அரேபியா. அதே அலுவலகம். இப்போது ஒரு ஹைதராபாத் அப்துல் கதீர்.

அப்துல் கதீர் புதிதாக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்தான். அவன் இந்தியனா பாகிஸ்தானியா அல்லது பங்களாதேசியா என்று தெரிந்துகொள்ள நீ எந்த நாடு என்று கேட்டோம்.

”ஹைதராபாத்” என்றான்.

”ஓ இந்தியாவா” என்று கேட்டோம்.

”இல்லை. ஹைதராபாத்” என்றான்.

”ஹைதராபாத் இந்தியாவில்தானே இருக்கிறது? உன் நாடு எது என்று கேட்டால் இந்தியா என்றுதானே சொல்லவேண்டும். உன் ஊர் எது என்று கேட்டால்தானே ஹைதராபாத் என்று சொல்லவேண்டும்” என்று கேட்டோம்.

”இல்லை. என் நாடு ஹைதராபாத்” என்றான்.

அவன் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிப் போய்விட்டோம்.

(நிஜாம் ஹைதராபத்தை தனி நாடாகக் கேட்டார். ஹைதராபாத் இந்தையாவுடன் இணைந்ததை அப்துல் கதீர் இன்றுவரை ஏற்றுக்கொள்வதாய் இல்லை. இனியும் ஏற்க மாட்டான்)


நிகழ்ச்சி மூன்று:

அதே அப்துல் கதீர். அதே நிறுவனம். அதே சவுதி அரேபியா.

சவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.

சூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்பு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.

சவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.

அதன்படி நாங்கள் தொழுகை அழைப்புக்கு முன் உணவு உண்டு நோன்பு வைத்துவிட்டோம். மணி மூன்றரை ஆகிவிட்டது.

மணி நான்கு ஆகியும் அப்துல் கதீர் உணவு உண்டுகொண்டு இருந்தான்.

”கதீர், என்னாச்சு இன்று உடல் நலம் சரி இல்லையா?”

“இல்லையே, நன்றாக இருக்கிறேன்”

“நோன்பு வைக்க வில்லையா?”

”வைக்கிறேனே”

”இன்று நோன்பு மூன்று மணிக்கே வைக்க வேண்டும்? தொழுகை அழைப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டது”

“நான் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்பேன்”

”ஏன்?”

”ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு வைப்போம்”

“கதீர், அங்கே சூரிய உதயம் தாமதமாக வரும். அதனால் தொழுகை அழைப்பு தாமதமாக வரும். ஆகவே நோன்பை நாலரை மணிக்கு வைக்கலாம். ஆனால் இங்கே சூரிய உதயம் முன்பே வந்துவிடுகிறது எனவே மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டும். அப்படித்தானே குரானில் சொல்லி இருக்கிறது?”

”நான் சவுதிக்காரன் அல்ல. நான் ஹைதராபாத். ஹைதராபாத்தில் நாலரை மணிக்குத்தான் நோன்பு”

அப்துல் கதீர் தெளிவாகத்தான் இருந்தான். நாங்கள்தான் குழம்பிவிட்டோம்.

இதில் உபரி சிரிப்பு என்னவென்றால், நோன்பு திறப்பதை மட்டும் ஹைதராபாத் நேரத்தில் திறக்க மாட்டான். சவுதி படி முன்கூட்டியே பள்ளிவாசலில் தரும் இலவச உணவை உட்கொண்டு திறந்துவிடுவான்.
வாழ்த்து அட்டைகளையும்
வேண்டாப் பொருட்களையும்
வாங்கிக் குவிக்காதீர்...

காதலர் தினம்
வணிகர் தினம் ஆகிவிடும்

அணைப்புகளின் சூட்டில்
நனையலாம்
முத்தங்களின் ஈரத்தில்
காயலாம்

ஆனால்
இதயங்களை
நிரந்தரமாக்கிக்கொள்ளாமல்
நனைவதும் காய்வதுமாய்க்
கிடந்தால்...

காதலர் தினம்
காமுகர் தினம் ஆகிவிடும்
மனிதம் மாய்வதற்கு மதம்தான் காரணமா?

மனிதம் மாய்வதற்கு மதம் காரணமல்ல மனித வக்கிரமே காரணம். மனித வக்கிரம் மடிந்தால்தான் மனிதம் தழைக்கும்.

மனித வக்கிரம், சாதி மதம் இனம் மொழி நிறம் நிலம் அரசியல் காசு காமம் என்று எல்லாவற்றையும் பயன்படுத்தி தன் வக்கிரத்தைக் காட்டும்.

இனங்களுக்குள் யுத்தமும் அழிவும் நடக்கிறது என்பதற்காக, மனித வக்கிரத்தை அழிக்காமல் இனங்களை அழித்தால், உலகில் மனித இனம் மொத்தமாக அழிந்துபோகுமல்லவா?

அன்னை தெரிசா, பாரதி, காந்தி போன்ற எண்ணற்றோர் மதம் சார்ந்தவர்கள்தாம். அவர்களால் உலகிற்குக் கேடு விளைந்ததா?

ஒரு மதத்தில் நல்லவரும் இருப்பர். வக்கிர மனிதரும் இருப்பர்.

மதம் அற்றவர்களிலும் நல்லவரும் இருப்பர் வக்கிர மனிதரும் இருப்பர்.

மதத்தில் உள்ள வக்கிரபுத்திக்காரர்களை பார்த்து மதத்தை அழிக்க நினைப்பதும் மதமற்றோரில் உள்ள வக்கிரபுத்திக் காரர்களைப் பார்த்து மதமற்றோரையெல்லாம் அழிக்க நினைப்பதும் அறிவீனம்.

மதங்கள் எல்லாம் இணையவேண்டும். மதங்கள் இணைகின்றன என்றால் அது ஓர் ஆண் பெண் உறவைப்போல. ஆண் ஆணாகவே இருப்பான். பெண் பெண்ணாகவே இருப்பாள். ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் நேசிப்பர். ஏற்பர். அதனால் இணைவர்.

அப்படியான இணைவு மதங்களுக்கு இடையே வேண்டும். அதற்குத் தடையானவர்கள் வக்கிர மனம் கொண்டவர்கள்.

மனிதர்கள் எப்படிவேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எதை வேண்டுமானாலும் நம்பிச் செல்லட்டும். எதற்கு வேண்டுமானாலும் தாசர்களாய் இருந்துவிட்டுப்போகட்டும். எதன்மீது வேண்டுமானாலும் பக்தி கொள்ளட்டம். அது எதுவுமே மனிதத்தை சாகடிக்காது. ஆனால் மனிதன் வக்கிரம் கொண்டால் அங்கே மனிதம் சாகும்.

ஒருவர் தெலுங்கு பேசட்டும், ஒருவர் தமிழ் பேசட்டும், ஒருவர் இந்தி பேசட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் வானத்தின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் பூமியின்மீது பக்தியாய் இருக்கட்டும், ஒருவர் நெருப்பின்மீது பக்தியாய் இருக்கட்டும். அதனால் என்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

ஒருவர் இந்துவாய் இருக்கட்டும் ஒருவர் முஸ்லிமாய் இருக்கட்டும் ஒருவர் கிருத்துவராய் இருக்கட்டும். அதனாலென்ன? அவர்களுக்குள் வக்கிரம் இல்லாவிட்டால் மனிதம் வாழும் அல்லவா?

மதங்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளாய்த்தான் மண்ணில் இருக்கின்றன. அதற்குமுன் மனிதன் எப்படி வாழ்ந்தான். முழுக்க முழுக்க மனித நேயத்தோடா? இல்லையே, காடுமிராண்டிகளாகத்தானே வாழ்ந்தான்.

சிலர் மதங்களின்மீது அதீத வெறுப்பு கொண்டுள்ளனர். அதுவும் வெறிதான். மதவெறிக்கு எப்படி மனித வக்கிரம் காரணமாக இருக்கிறதோ அதே போல மத அழிப்பு என்ற வெறிக்கும் மனித வக்கிரமே காரணமாய் இருக்கின்றது.

எந்தக் காலத்திலும் வெறியற்ற வாழ்வுதான் அமைதியான வாழ்வு.

வக்கிரம் கொண்ட மனிதன் எதையோ ஒன்றை கையில் எடுத்துக்கொள்கிறான். மதம், இனம், நிறம், பெண், பணம், பொருள், குடும்பம் என்ற எல்லாமும் அவனுக்கு ஆயுதங்கள்தாம். புதுப்புது ஆயுதம் தேடுவதும் புதுப்புது ஆயுதம் எடுப்பதும் மனித வக்கிரம்தான். மனித வக்கிரம் ஒழிய வேண்டும். அது ஒழியாமல் மனிதம் விமோசனம் அடையாது

மதவெறியன் என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அரசியல் துரோகி என்பவன் யார்? மனிதர்களுள் ஒருவன் தானே? அந்த மத வெறியனிடமும் அரசியல் துரோகியிடமும் இருப்பது எது? வக்கிரம்தானே?

இன்று மதத்தைவிட அறிவியல்தான் உலக அழிவிற்குக் காரணமாய் இருக்கிறது. துப்பாக்கி தொடங்கி அணுகுண்டுவரை எத்தனை கண்டுபிடிப்புகள்? வேதியல் வெடி தொடங்கி கிருமிக் குண்டுவரை எத்தனை நாசங்கள். ஆகையால் அறிவியலை  அழித்துவிடுவோமா? அறிவியலைத் தவறாகப் பயன்படுத்தும் வக்கிரக்காரர்களைத்தான் அழிக்க வேண்டும் அல்லவா?

மதங்கள் மனித வாழ்வை நெறிப்படுத்த எடுத்துக்கொண்ட முயற்சிகள். ஆனால் மதங்களால் முழு வெற்றியைக் காணமுடியவில்லை. அதற்குக் காரனம் இன்னனும் அழிக்க முடியாத வக்கிரம்தான்.

 அதுமட்டுமல்லாமல் எதிர் வினைகளையும் அது உருவாக்கிவிட்டது. அந்த எதிர் வினைகளுக்கான காரணமும் மனித வக்கிரம்தான்.

இலங்கையில் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றார்களே அது ஏன்? மதம் காரணமா? கடவுள் காரணமா? இனம்தானே காரணம், பாகுபாடுதானே காரணம்? அந்த இனவெறியையும் பாகுபாடு வெறியையும் தந்தது மனித வக்கிரம்தானே?

மதங்களே தோன்றாத மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் கொத்துக்கொத்தாகப் போரில் செத்தார்களே ஏன்?

முதல் உலகப்போர் ஏன் வந்தது? இரண்டாம் உலகப்போர் ஏன் வந்தது? சேர சோழ பாண்டியர்கள் அடித்துக்கொண்டார்களே ஏன்? வெள்ளைக்காரன் இந்தியாவைப் பிடித்தானே ஏன்?

அமெரிக்கா முதன் முதலில் ஜப்பானில் அனுகுண்டை தூக்கி ஏன் போட்டது? அலெக்சாண்டர் ஏன் உலகெங்கும் படையெடுத்து மக்களைக் கொன்று குவித்தான்? ஹிட்லர் ஏன் மக்களையும் கொன்று தானும் மாண்டான்?

மதங்கள் ஏன் தோன்றின? அது மனித வக்கிரத்தை மட்டுப்படுத்தவே தோன்றின. ஆனால் மனித வக்கிரம் மதத்தையே சாய்த்துப் போட்டுவிட்டது. ஆனாலும் வலுவான மார்க்கம் எழுந்து நிற்கும். அறத்திற்கு என்றும் அழிவில்லை. அது அமுக்கப்பட்டாலும் காற்றுள்ள பந்தினைப்போல் நீரின் மேலே வந்தே தீரும்.

அடுத்து சட்டம் ஒழுங்கு மனித வக்கிரத்தை அடக்க முயல்கிறது. ஆனால் வெற்றி பெற்றதா? வெற்றிபெற்றிருந்தால் உலகம் அமைதியாகி இருக்குமே!

உலக அழிவிற்கு மதங்கள்தான் காரணம் என்றால் அமெரிக்கா, இந்தியா என்று எந்த நாட்டிலாவது எந்த மதமும் கூடாது என்று சட்டம் போட்டார்களா? உலகில் எந்த மதமும் கூடாது என்று நாடுகள் பலவும் ஒருங்கிணைந்து குரல் எழுப்பியதா?

புத்தர் ஏசு காந்தி போன்றோரின் வழிகள் வேறாக இருக்கலாம் ஆனால் அவர்களின் நோக்கம் ஒன்றுதான்.

மதங்கள் வேறாக இருக்கலாம் அவற்றின் நோக்கம் ஒன்றுதான். கடவுள் பயம்காட்டி மனிதனை நேர்வழிப்படுத்துவது. சொர்க்கம் நரகம் என்று கூறி மனித வக்கிரத்தைக் கொல்ல முயல்வது. ஆனால் மனித வக்கிரமோ அந்த மதத்தையே கையில் எடுத்துக்கொண்டு மனிதர்களைக் கொன்று குவிக்கிறது.

மனிதர்களின் வக்கிரத்தை அழிப்பதற்குப் பதிலாய் சிலர் மனிதர்களையே அழித்துவிடலாம் என்பதுபோல் பேசுகிறார்கள். குடும்பத்தில் உள்ள வக்கிர மனங்களை மாற்றுவதற்குப் பதில், குடும்பத்தையே அழித்துவிடலாம் என்று யோசனை கூறுகின்றனர். மதங்களில் உள்ள வக்கிர மனிதர்களைத் திருத்துவதற்குப் பதில் மதங்களையே அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் மனைவி பாடு திண்டாட்டம். பெண் வக்கிரபுத்தி கொண்டிருந்தால் கணவன்பாடு திண்டாட்டம். ஆகவே திருமணங்களையே அழித்துவிடுவதா? இப்படியே வேர் பார்த்து வேரறுக்க முயலாமல், மரம் பார்த்து கிளைகளையும் இலைகளையும் அழிப்பதா?

மத எதிர்ப்பு என்பது வெறியாகும்போது அது மதவெறியைவிட கொடுமையானதாய் ஆகலாம். ஒருவன் தனக்கு மதம் வேண்டாம் என்று விரும்பினால் அதில் தவறே இல்லை.

மதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் மதத்தைக் கட்டிக்கொண்டு அழத் தேவையில்லை. மதச்சம்பிரதாயங்களில் மூட நம்பிக்கையைக் காண்போர் அதைக் கட்டித் தழுவிக் கிடக்கத் தேவையில்லை.

ஆனால் மத எதிர்ப்பில் வெறி கொண்டால் ஒருவன் வக்கிரம் கொள்கிறான். பிறகு மதவெறியனுக்கும் அவனுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை!

மதப்பற்றுடையவர்கள் மதவெறியர்கள் ஆகமாட்டார்கள். உலகில் பெரும்பாலானவர்கள் மதப்பற்றாளர்கள். அதில் அதிகப்படியாய் ஒரு விழுக்காட்டிற்கும் மிகக் குறைவாகவே வெறியர்கள் இருப்பார்கள். அந்த வெறியர்களிடம் இருக்கும் வக்கிரம்தான் அழிக்கப்படவேண்டிய ஒன்று வேறு எதுவும் அல்ல.
எனக்கொன்றும் பிடிக்கவில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின்
இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம்
சொல்பவற்றுள் உப்புமில்லை

எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

நெஞ்சில் ஏக்கம் ஓங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ

படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும்
ஊற்றுகளும் எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மைதான்
மிளிர்கிறது

குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும்
கோணலாகிச் சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம்
ஐந்தெனக்குக் கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
முடக்கமின்றி
பொய்களற்று வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து
எனக்குள்ளே திணிக்கும்
இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில்
தொட்டதெலாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று
புண்ணாவது பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த
மூளைமரம் வளர்த்துவிட்ட
சிலிர்ப்புசெத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்
அகராதிகளைக் கடந்த சொல்

கடவுளுக்குப்
பொருள்கூறும் அகராதிகள்
மதங்கள்
அகராதிகளைக் கடந்த சொல்
கடவுள்

வாழ்வெனும் தமிழே வாழ்க வாழ்க

சித்தர்கள் மொழியாம்
செந்தமிழே 
அழகு
முத்திரை பதிக்கும்
முத்தமிழே

கணினிக்குள் கமழும்
கணித்தமிழே
எங்கும்
இணையத்தில் இனிக்கும்
இகத்தமிழே

உயர்தனிச்
செம்மொழியே
எங்கள்
உயிரின் திருமொழியே

உன்னில் கரைந்தே
உயர்கின்றேன்
எங்கள்
வாழ்வெனும் தமிழே
வாழ்க வாழ்க

தெய்வம் மனிதன் கண்டு நெகிழ்ந்திடணும்

எல்லைக் கோடுகள் அழிந்திடணும்
அதையென் சின்னக் காலால் அழித்திடணும்
உலகை ஒற்றைப் பூவாய்க் கண்டிடணும்

காற்றில் அலையும் பறவைகளாய்
மனிதன் காலடி உலவும் நிலைவேண்டும்
சிறுமைக் கட்டுகள் அறுந்து விழவேண்டும்

அழியும் அகிலம் தொடவேண்டும்
எங்கும் அன்புப் பயிர்கள் நடவேண்டும்
வஞ்சம் அற்றுத் தழைக்கும் நிலம்வேண்டும்

காலை எழுந்து பறந்திடணும்
பத்து கோள்கள் கண்டு திரும்பிடணும்
அந்தி கவிதை ஒன்று எழுதிடணும்

காணும் உயிரைத் தழுவிடணும்
அன்புக் கவியால் கைகள் குலுக்கிடணும்
உள்ளக் கனவைக் கேட்டு களித்திடணும்

மதங்கள் யாவும் இணைந்திடணும்
செல்லும் மார்க்கம் ஒன்றாய் மலர்ந்திடணும்
தெய்வம் மனிதம் கண்டு நெகிழ்ந்திடணும்

26 தமிழ் இணையம் 2002

அது ஒரு காலம். நான் தமிழ் உலகம் என்னும் யாகூ மின்னுரையாடல் குழுமத்தில் இருக்கிறேன். பெரும்பாலும் கவிதைகளேயே இட்டுக்கொண்டிருப்பேன். என்னைத் தன் ஆஸ்தான கவி என்று அறிவிக்கும் அளவிற்கு என் கவிதைகள் அங்கே ஊர்வலம் போய்க்கொண்டிருந்தன.

அப்போதுதன் தமிழிணையம் 2002ன் மாநாடு கலிபோர்னியாவில் நடக்க ஏற்பாடாகி இருந்தது. அதன் முக்கியத் தலைவராக மணி மு மணிவண்ணன் இருந்தார். அவருடைய அறிமுகமும் எனக்கு அப்போதே இருந்தது.

தமிழ் உலகத்தின் மட்டுறுத்துனர்களுள் ஒருவரான அமெரிக்கா ஆல்பர்ட் என்னைத் தொடர்பு கொண்டு, கவிஞரே தமிழிணையம் மாநாட்டின் நூல் ஒன்று வெளியிடுவார்கள். நீங்கள் ஒரு கவிதை எழுதினால் என்ன என்றார். என் தமிழ்ப் பற்றையும் கவிப்பற்றையும் அவர் நன்கறிவார்.

எனக்கு ஓரளவே தமிழிணையம் பற்றித் தெரியும் என்பதால் முதலில் தயங்கினேன் பின் ஒவ்வொரு பத்தியாக எழுதத் தொடங்கினேன். ஒரு நான்கு பத்திகளை எழுதிக் கொடுத்தேன்.  ஆனால் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவின் ஆசையோ அதைவிட அதிகமாக இருந்தது.

கவிஞரே மிக நன்றாக வந்திருக்கிறது இன்னும் சில பத்திகள் எழுதுங்களேன் என்று ஊக்கப்படுத்தினார். நான் பெரும்பாலும் அந்த வகையில் கவிதைகள் எழுதுவது கிடையாது. உள்ளத்தின் உள்ளே எதுவோ கிடந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கும் இறங்கித் தொலை என்று காகிதங்களில் அந்த குடைச்சலை இறக்கிவைத்துவிட்டு நிம்மதியாக உறங்கச் செல்வேன்.

ஆனால் இந்தக் கவிதையை எழுத வெளியிலிருந்து குடைச்சல் ;-) ஆனால் பாராட்டுக்குரிய குடைச்சல் அதற்காக என்றென்னும் அமெரிக்க ஆல்பர்ட் அண்ணாவுக்கு என் நன்றிப்பெருக்கு. அவர் இல்லாவிட்டால் இக்கவிதை இல்லை.

இப்படியும் என்னால் கவிதை செய்ய முடியும் என்பதற்கு இந்தக் கவிதையே முதல் சாட்சி. ஆகையால்தான் வாழ்த்துக்கவிதைகள் எழுதத் தயங்குவேன். அது இயற்கையாய் வெளிவராமல் மல்லுக்கட்டி கொண்டு வரவேண்டியது இருக்கும் என்பதால்.

ஆனால் இந்தக் கவிதையைச் செயற்கையே நிரம்பியது என்றும் சொல்ல முடியாது. எனக்கிருந்த தமிழ்மோகம் இயற்கையானது. அது தரும் உணர்வுகள் இயல்பானது. ஆகையால் தமிழிணையம் என்ற வெளித் தூண்டலை தமிழ் என்ற உள்தூண்டலோடு பிணைத்து இக்கவிதையை எழுதி முடித்தேன்.

அந்த மாநாட்டின் விழா மலரிலும் வந்தது பலரின் பாராட்டையும் பெற்றது.  விழாவிற்கும் சென்றிருக்கலாமே என்ற கவலையும் வந்தது.

அந்தக் கவிதையை அத்தோடு விட்டுவிடாமல் என் இரண்டாவது கவிதைத் தொகுப்பான அன்புடன் இதயம் என்ற நூலிலும் ஏற்றிக்கொண்டேன்.

இதோ அந்தக் கவிதை....

*

சிலிக்கான் பள்ளத்தாக்கும்
சிலிர்க்கும் சிகரம்தொட்டு
மொழித்தேன் கூடுகட்டி
தழைக்கும் தமிழே வாழ்க

பழித்தோன் பணிந்தே போனான்
பகைத்தோன் பதறிப் போனான்
இழித்தோன் கிழிந்தே போனான்
இறப்பிலாத் தமிழே வாழ்க

ஐந்தாம் கணித்தமிழ் இணையம்
அறிவுப் பிழம்பாய் உதயம்
பைந்தமிழ் மின்தமிழ் பாடுது
புதுப்புது நுட்கலை தேடுது

கந்தகத் தமிழினம் கூடுது
காரியச் செந்தழல் மூளுது
சிந்தனை செயற்திறன் ஆகுது
செந்தமிழ் கணிமுடி சூடுது

தொன்னூற்றேழிலே சிங்கை
துவக்கி வைத்தது இதனை
தொன்னூற்றொன்பதில் சென்னை
தொடர்ந்த ஆண்டிலும் சிங்கை

பின்னர் மலேசிய மண்ணில்
பிறந்தது நான்காம் கூட்டம்
இன்னும் இனியும் வளர்க
இணையம் தமிழாய் நிறைக

தொட்டுத் துவக்கியத் தலைவர்
தொடரும் உறுப்பினர்; நண்பர்
எட்டுத் திசைகள் எங்கிலும்
எழுதும் ஆய்வுக் கரங்கள்

கொட்டிப் பொருள்தரும் வள்ளல்
கூடம் நிறைத்திடும் ஆன்றோர்
ஒட்டு மொத்தமாய் வாழ்க
இணையத் தமிழினைப் போல

வலைக்குள் மொழிகளோ நூறு
வனப்பாய் தமிழினைப் பாரு
நிலைப்பதில் அதுவும் ஒன்று
நெஞ்சமும் பூக்குது கண்டு

அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்


உலகத் தமிழ்தான் உயருது
ஒன்றே தமிழென முழங்குது
வளங்கள் கொழிக்கும் வனமாய்
வளருது இணையத் தமிழும்

கலையும் தமிழரின் பண்பும்
கடல்கள் தாண்டியே மலருது
சுழலும் கோள்களும் நின்றே
செந்தமிழ் கேட்டே ஆடுது

ஏழரைக் கோடித் தமிழரை
ஈன்றவள் எத்தனைப் பெரியவள்
நாலரை நூறு ஆண்டுகள்
நூல்களில் அச்சாய் வாழ்பவள்

தோழுரம் கொண்ட மைந்தரால்
தொல்லைகள் நீக்கப் பெற்றவள்
சாளரம் திறந்தே சிரிக்கிறாள்
சொக்கிடும் இணையச் செழுமையில்

பழமைக் கலைகளும் கொண்டவள்
புதுமைக் கணியுகம் கண்டவள்
இளமை குன்றாத் தமிழ்த்தாய்
இணையப் பெருவெளி வென்றாள்

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

அன்புடன் புகாரி


’அன்புடன் இதயம்’ நூலிலிருந்து....
ஔவைத் தமிழன்

மாறிப்போன தமிழரின் பண்பினால் நொந்துபோன நண்பர் ஒருவர் என்னிடம் ”கவிஞரே, தமிழர் பண்புகள் என்பன யாவை? ஒன்று இரண்டு என்று அவற்றை வரிசைப்படுத்தி பாடுக.” என்றார். அவரின் அங்கதம் என்னையும் தொற்றிக்கொள்ள, உடனே இப்படி எழுதினேன்.


ஒன்றானவன்
எதிலும் ஒன்றானவன்

ஒன்றுமற்ற பேச்சினிலோ
இருண்டானவன்

முறையற்ற குறைவாயை
மூடானவன்

என்றும்
இனிய சொல்லேதும் சொல்ல
நான்காணான் அவன்

ஆயுளுக்கும் மனம் புழுங்கி
அவிந்தானவன்

அவிந்து
அடுத்தோரைத் தூற்றுவதில்
ஆறான் அவன்

எங்கெதிலும் நிறைகாண
ஏழான் அவன்

எட்டி
உயரத்துப் பண்பெதையும்
எட்டான் அவன்

நரகத்து அவலங்கள்
உண்பதானவன்

மறந்தும்
இதயத்தில் நியாய தர்மம்
பற்றான் அவன்


நண்பரே இப்படியெல்லாம் எழுதிவிடுவேன் என்றுதானே என்னை உசுப்பிவிட்டீர்கள். நான் இப்படியெல்லாம் எழுதமாட்டேனாக்கும், நான் எப்போதும் தமிழர்களைப் பாராட்டி வாழ்த்தவே செய்வேன் :)

அன்புடன் புகாரி