நாளைய தமிழன்
கணினித் திரை நிறைத்து
கற்கண்டாய்க் குவிந்தாயே
இணைய வலை கிழித்து
பொற்பாதம் சுழன்றாயே
அழியும் மொழிகளுக்குள்
தமிழிருக்கும் என்றாரே
ஒளியாய் ஒளிப் பிழப்பாய்
உச்சத்தை வென்றாயே
துள்ளும் நடைபோட்டு
தொழில் நுட்பம் தாண்டுகின்றாய்
மெல்லச் சாவதினி
சொன்னவனின் மொழியென்றாய்
உள்ளம் உருகியோட
உனதுமடி தலைவைத்தேன்
வள்ளல் தமிழ்த்தாயே
வளரமுதம் ஊட்டுமம்மா
தமிழ்த் தாய்க்கு
என் அன்பு வணக்கம்
]
வளைந்த எழில்
வானப் பெண்ணின்
நீல முகத்தில்
வைர மூக்குத்தியாய்க்
கதிரோன் ஒளிர
அவள்
கழுத்து ஆரமாய்க்
கோள்கள் அத்தனையும்
கோத்துக்கிடக்க
ஓரமாய் அந்த நிலவும் வந்து
ஓர் மச்சமாய் மோவாயில்
மிளிர
செவ்வாய் மட்டும்
கொஞ்சம் மேலெழும்பி
பனிமேடு பிளந்த உதடுகளால்
கவிதைகள் சொல்ல
அந்தக் கவிதைகளெல்லாம்
தமிழ் தமிழ் என்று
தங்கத் தாம்பூலச் சொற்களேந்த
பேரண்ட வெளிகளெங்கும்
தமிழனின் ஆட்சி
பால்வீதி ஒளிச்சுழல்
பலவண்ணத் தலைப்பாகை
சூடிக் கிடக்க
அட
இதையெல்லாம்விட அதிசயமாய்
அண்டசராசரப் பேரதிசயமாய்
ஆரும் கண்டிராத தேவ அதிசயமாய்
தமிழன்
தமிழில் மட்டுமே உரையாடுவான்
]
தமிழறியாதவன்
காட்டுமிராண்டி என்று
இருட்டுச் சிறையில்
அடைக்கப்படுவான்
உயிருக்குத்
தமிழ் என்ற சொல்தான்
சரியென்று
அகராதிகள் கூடி முடிவெடுக்கும்
தமிழ் இணையம்
கணியுகம் ஆளும்
தமிழரசு நல்லரசு என்ற
வல்லரசாகும்
தமிழ்ச் சொல்லாடும்போது
தவறுதலாய் வந்துவிட்ட
ஒற்றைத் தமிங்கிலச் சொல்லுக்காக
உயிர்நீக்கும் கவரிகளால்
சூழ்ந்திருக்கும் உலகு
மொழியழித்தால் இனமழிக்கலாம்
என்ற நரிக்கனவில்
நாணமற்று நற்றமிழில்
நஞ்சாய்க் கலந்துவிட்ட வட சொற்கள்
துடைப்பக்கட்டைகளில் சிக்கி
கழிவுநீர்க் குழாய்கள் வழியே
சேரத் தகுந்த இடம்சென்று சேரும்
கள்ளம் புகா மொழி
எங்கள் மொழி - கோணக் கிரந்தமே
கள்ளம் புக உனக்கிங்கே
ஏது வழி
வெள்ளம் வந்து தின்றபின்னும்
வாழும் மொழி - நெடுங்காலம்
வடக்குமொழி வாய்விழுந்தும்
எழுந்த மொழி
இல்லை என்ற நிலை என்றும்
இல்லா மொழி - இமயத்தில்
ஏறி நின்று வானம் தொட்ட
எங்கள் மொழி
சொல்வழக்கு அற்றதுன்
செத்த மொழி - பேய்வாலைச்
சுருட்டிக்கொண்டு ஓடு
சுடுகாட்டு வழி
என்று
ஆங்கோர் தமிழன்
வேங்கைப்பண் முழங்குவான்
]
அணையப்போகும்
சூரியத் திரியில்
நெருப்பேற்றுவான்
தமிழன்
சீற்றமிகு சுனாமிகளின்
சக்தியில் உரமெடுத்து
பச்சைப்பயிர் வளர்க்கும்
அறிவியல் செய்வான்
தமிழன்
தடம்மாறும் நிலத்தட்டுகளின்
தலையில் கொட்டி
பூகம்பத்தை அரைக் கம்பத்தில்
பறக்கவிடுவான்
தமிழன்
இவைபோல்
அறிவியல் சாதனைகளில்
மாற்றங்களை வாழ்வின்
ஏற்றங்களாக்கிக் கொண்டாலும்
நாளைய வீடுகளிலும்
தன்
முலை எடுத்துப்
பாலூட்டும் தாய்
ஓர்
தமிழ்ப்பெண்ணாய்
மாத்திரமே இருப்பாள்
]
தமிழா
நம் கனவுகள் போதும் தமிழா
கற்பனைகள் போதும் தமிழா
இனியேனும் விழித்துக்கொள்வோம்
வீறுகொள்வோம் தமிழா
ஒரு தமிழச்சி
ஈன்றாள் என்பதாலேயே
எவனும் தமிழன் அல்லன்
தமிழனாய்
வாழ்வோன் எவனோ
அவனே தமிழன்
நாளைய தமிழனை
நாம் காணப்போவதில்லை
ஆனால் அவனோ
நாளை நம்மைக் காணுவான்
இன்றைய தமிழா
நீ விழித்தெழு
வெற்றி வெற்றி
என பால்வீதி தொட்டு
பல கோள்வீதி வென்றெடு
தமிழ்
அழிந்தால்
தமிழினம் என்று
ஏதுமில்லை
உயிரில்
உரமேற்றும்
தமிழோடு வாழ்
தமிழ்
உணர்வோடு வாழ்
சிந்தனை சொல் செயல் சுவாசம்
அனைத்தும்
அறம் என்பதே தமிழினம்
தமிழின மானம் காத்து
எட்டாத உச்சியையும்
எட்டிப்பிடித்து
ஏறி நில்
நாளைய தமிழன்
உன் தோளேறி நிற்பான்
தன் வெற்றிக் கரமெடுத்துத்
தமிழுக்கு
விண்ணைத் தொட்டுப்
பொட்டு வைப்பான்
கருங்குழி மையெடுத்து
நீல விழியோரம்
அழகு தீட்டுவான்
]
ஒரு தமிழச்சி
ஈன்றாள் என்பதாலேயே
எவனும் தமிழன் அல்லன்
தமிழனாய் வாழ்வோன் எவனோ
அவனே தமிழன்
2011 கனடா வாட்டர்லூ
தமிழ்ச்சங்கம் கவியரங்கம்
No comments:
Post a Comment