ஒரே ஊரில் ஒருநாள்தான் பெருநாள்

பிரிந்துகிடப்பது தலையெழுத்தல்ல சைத்தான் எழுதும் தப்பெழுத்து

ஒன்று சேர்வது உன் விருப்பம் அல்ல இறைவனின் திருவிருப்பம்

ஒருவரின் சரி அடுத்தவரின் பிழை. அது முடிவே இல்லாதது. எந்த விவாதத்தாலும் தீர்வு காணமுடியாதது.

பிரிவதைத் தடுக்க எனக்கு ஒரு பரிந்துரை தோன்றுகிறது. அது பிரிந்துபோவதைக் காலப்போக்கில் தடுத்து *ஓர் ஊரில் ஒரு நாள் பெருநாள்* என்று ஆக்கும் என்று நான் நம்புகின்றேன்.

எனக்குமுன் தெரிகின்ற தேவைகள் இவைதாம்:

1. தாய்க்கு ஒரு நாள் பெருநாள் குட்டிக்கு இன்னொரு நாள் பெருநாள். என்பது சரியல்ல அண்ணனுக்கு ஒருநாள் பெருநாள் தம்பிக்கு மற்றொருநாள் பெருநாள் என்று ஒரே ஊரிலேயே இருப்பது பிழை. இதில் ஒரே ஊரில் அண்ணன் நோன்பிருக்க தம்பி பிரியாணி தின்பதில் உறவுப் பிரச்சினையே இருக்கிறது.

2. இறைத்தூரர் வாழ்ந்த காலங்களில் இரு பெருநாள் ஒரே ஊரில் இருந்ததே இல்லை என்றுதான் நான் அறிகிறேன்

3. ஓர் ஊரில் ஒருநாள் பெருநாள் என்ற நிலையை இமாம்கள் சரியான காரணம் கூறித் தடுத்தாலும் சரி, பிழையான காரணம் கூறித் தடுத்தாலும் சரி, இந்த ஜனநாயகக் காலத்தில் மக்கள் ஒருங்கிணைந்தால் ஓர் ஊரில் ஒருநாள் பெருநாள் என்ற கனவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

எப்படி?

1. நான் பிறையைப் பார்த்துவிட்டேன் என்று எந்த இமாமும் பொய் சொல்வாரா? நிச்சயம் அதற்கு வாய்ப்பில்லை. அதை ஏற்பதில் நமக்கு என்ன சிரமம்?
2. ஆகவே முதல் நோன்பை யார் முதலில் தொடங்குகிறார்களோ, அதையே பின்பற்றி நோன்பு நோற்பது.
2. அதேபோல பெருநாள் தொழுகையை யார் முதலில் நடத்துகிறார்களோ, அதையே பின்பற்றி பெருநாள் தொழுகைக்குச் செல்வது, உறவுகளோடும் நண்பர்களோடும் மகிழ்வது
3. இருபத்தி ஒன்பது நோன்பு என்றாலும் நமக்கு உடன்பாடு. முப்பது நோன்பு என்றாலும் நமக்கு உடன்பாடுதான். அது இயற்கையின் விதி. மனிதனின் ஏமாற்றுவேலை அல்ல.

இதன் வாயிலாக பெருநாளை ஒரு நாள் தள்ளி வைப்பவர்கள் மெல்ல மெல்ல மாறுவார்கள்.

முதல் நாள் பெருநாள் என்பது சரியோ தவறோ, ஒரே ஊரில் வாழும் எல்லா உறவுகளும் ஒரே நாளில் பெருநாள் தொழுது உறவுகளோடு மகிழ்வாய் இருப்பர்.

இறைவனிடம் முதல் நாள் என்று அறிவித்த இமாமும், அடுத்தநாள் என்று அறிவித்த இமாமும் பதில் சொல்லிக்கொள்வார்கள்.

உறவுகளை பலப்படுத்திக்கொள்ள பல வழிகளிலும் பரிந்துரைக்கும் இஸ்லாத்தின் உயர்வான நோக்கத்தினை ஏற்றுச் செல்வதால், எளிய மக்களின் இந்த முடிவு, இறைவனுக்கு நாம் சொல்லக்கூடிய நல்ல பதிலாய் அமையும் என்று நான் நம்புகின்றேன்.

அன்புடன் புகாரி

No comments: