மழையல்ல பிழை
மழை வரும்
மருந்தாகச் சிலநேரம்
மாணிக்கப் பரல்களாகச் சிலநேரம்
மந்திரத் திறப்பாகச் சிலநேரம்
மயக்க மொழிப் பொழிவாகச் சிலநேரம்
ஒவ்வொரு முறையும்
ஒவ்வோர் அதிசயம்
விழும் துளிகளில்
இதம் தரும் கலைநயம்
ஏங்கும் நிலங்களில்
ஈரத்தழுவல் மடிச்சுகம்
பிடித்த குடையிலும்
தாளம்தட்டிப் பாடும் இசைநயம்
அள்ளித்தரும்
அழகு மழையின்
அமுத மழையின்
அன்னை மழையின்
மாண்பைச் சொல்லி
மாளாதுதான்
ஆனால்
வானவெளி மொத்தத்தின்
ஞானப் பெருநெருப்பையும்
அப்படியே நீராய் மாற்றி
நிலமிறங்கும் கனமழையே
பெருமழையே கொடுமழையே
நீ எவரின் மூளை நரம்புகளுக்குள்
எவ்வகை நெருப்பு நாற்றுகளை
சடசடவென்றும் தடதடவென்றும்
நடவந்தாய்?
உன் ஞானப் பயிர்களை
தீப்பொறிகளாய் நட்டாலும்
மாறித்தான் போவார்களா
சிறுமனப் பதர்கள்
சுயநலப் பொடியர்கள்
ஊழல் பெருச்சாளிகள்
]
மனிதா
நீ கிராமம் விட்டு
வாழத்தானே வந்தாய்
நகரத்தை ஏன்
நரகமாக்கச் சம்மதித்தாய்
ஏரிகளில் உன் புறநகர்கள்
குளங்களில் உன் அடுக்குமாடிகள்
நீர்வழிப் பாதைகளெல்லாம்
உன் கடைத்தெருக்கள்
நீர் வாழ்ந்த இடமெலாம்
நீ வாழப் போனால்
நீ வாழும் இடத்தில்
நீர்தானே வாழும்
]
சாலைகள் இல்லை சந்துகள் இல்லை
ரயில்கள் இல்லை பேருந்துகள் இல்லை
எட்டிப் பறக்கலாம் என்றால்
அட விமானம்கூட இல்லை
உப்பில்லை சக்கரையில்லை
உணவில்லை மருந்தில்லை
இல்லை இல்லை இல்லை
அடடா இன்று
உண்டு என்றால்
அது மழை மட்டும்தான்
இல்லை என்றால்
ஓ அது எல்லாமும்தான்
தமிழனுக்கு எப்படியும்
தண்ணியில்தான் கண்டம்போலும்
இதில் தப்பினாலும் தப்பவே முடியாது
அரசுக்கடைத் தண்ணியில்
சொட்டுத் தண்ணீரின்றி
பட்டினிச்சாவு - இல்லையேல்
கொட்டுமழை தாளாமல்
கொத்தோடு சாவு
இது என்ன கேலிக்கூத்து?
மழையே மழையே
மேகங்கள் மொட்டுகளாய்க் கூடி
தொட்டுத் தொட்டு மலர்ந்து
சொட்டுந் தேனாய்க் கொட்டுவதுதானே
வாடிக்கை உனக்கு
ஆனால்
இன்றென்ன அதிசயம்
ராட்சச முட்டைகளாய் உருண்டு
முட்டிமோதி உடைந்து
டைனசர் குட்டிகளாய்க்
கொட்டுகிறாயே
மழையே மழையே
நீ மழையல்ல பிழையேதான்
சிறுதுளிக் கண்ணீரோடு
நடைபாதைகளே வீடாய் கிடந்தோர்
பெருமழை வெள்ளக் காட்டில்
உயிர் கவிழ்ந்த காகித ஓடங்களாய்
வருடம்தோறும்தான் மழை வருகிறது
வரும்போதெல்லாம்
அது ஏன் சேரி மக்களையே
வீதியில் நிறுத்துகிறது
ஆனால் இம்முறை
நடுத்தரம் மேல்மட்டம் என்று
உயர்மட்டத்திலும் நீர்மட்டம்
மொத்த சென்னைக்குமே
ஊழ்வினைத் திண்டாட்டம்
வெள்ளத்தில் மிதக்கின்றன
பாவ மூட்டைகள்
ஏய்ப்பும் சாய்ப்பும்
கட்சிகளின் பாவ மூட்டைகள்
ஊழலும் சுரண்டலும்
அரசின் பாவ மூட்டைகள்
கலப்பும் கொள்ளையும்
வியாபாரிகளின் பாவ மூட்டைகள்
முட்டாள்தனமும் சுயநலமும்
மக்களின் பாவ மூட்டைகள்
]
சென்னை…
ஓர் அன்பு
ஓர் உயிரைக் காப்பதும்
இங்கே தான்
ஓர் ஆசை
ஓர் ஊரை அழித்ததும்
இங்கேதான்
ஒன்று கேட்கிறேன்
உண்மையைச் சொல்லுங்கள்
ஏரிக்குள்ளே வீடு வரலாம்
வீட்டுக்குள்ளே ஏரி வந்தால்
கூடாதோ?
பாவமெல்லாம் உங்களுடையது
பழியெல்லாம் மழை மீதா
நீரை ஏமாற்றி
நிலத்தைப் பிடுங்கினாய்
அட
உண்மையில்
நீ எதைப் பிடுங்கினாய்?
இது ஒருபுறம் இருக்க
சென்னையின் ஒவ்வொரு பகுதியிலும்
தீவிரவாதிகள் வெறித்தனத்தோடு
சுற்றிச் சூழ்ந்துவிட்டார்கள்
காவிநிறத் தீவிரவாதிகள்
பச்சைநிறத் தீவிரவாதிகள்
வெள்ளைநிறத் தீவிரவாதிகள்
அத்தனைத் தீவிரவாதிகளும்
ஒன்றுசேர்ந்து திசைகளை அடைத்து
சென்னையை
ஆக்கிரமித்துவிட்டார்கள்
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள்
என்று அனைவரையும்
கடத்திச் செல்கிறார்கள்
மக்கள் அவர்கள்முன்
மண்டியிட்டுக் கதறுகிறார்கள்
ஆனால்
அன்பர்களே அது பயத்தால் அல்ல
நன்றிப் பெருக்கால்
விம்மும் நெஞ்சத்தால்
கருணைக் கண்ணீரால்
பாதுகாப்பு
இடத்திற்கு
பச்சிளங் கன்றுகளையும்
கர்பிணிப் பெண்களையும்
கடத்திச் சென்ற தெய்வச்செயல்
மதங்களின் கிரீடங்களல்லவா
அவர்கள்
நல்லிணக்கத் தீவிரவாதிகளல்லவா
ஆனால்
ஆட்சியும் அரசியல் தலைகளும்
தீவிரவாதிகளை ஒழித்தே தீருவேன்
என்று சூளுரைத்து
தங்களின் குலதெய்வம்
பச்சையம்மா படத்தை அச்சடிக்க
ஒவ்வொரு அச்சு அலுவலகத்தையும் நோக்கி
படைதிரண்டு தலை தெறிக்க ஓடுகிறார்கள்
அம்மா படம் ஒட்டாமல்
ஆழாக்குச் சோறும் தரமாட்டோம்
’சாவுங்கடா தண்ணியிலேயே
ஓட்டுப் போட்ட வெத்து வேட்டுங்களா’
என்கிறார்களாம் கட்சிக் களப்பணியாளர்கள்
மதச் சகிப்பின்மை என்ற பெயரில்
உப்பிப் பெருத்த அரசியல் வயிறுகள்
வெடித்து நாறக் காத்திருந்த தருணத்தில்
ஓர் இந்து முஸ்லிம் பள்ளியிலும்
ஒரு முஸ்லிம் கிருத்துவ
ஆலயத்திலும்
ஒரு கிருத்து இந்துக் கோவிலிலும்
கட்டிப் பிடித்து சேவைசெய்து
உயிர் காக்கும் நல்லிணக்கத்தை
பெருமழையே
நீதான் நீதான் காட்டவந்தாயா?
]
அதோ ஓர் இளைஞன்
அவன் பெயர் யூனுஸ்
நிறைமாத கர்ப்பிணியை
உயிரைப் பணயம்வைத்துக் காக்கிறான்
அவளோ
அப்போதே வலியெடுத்து
தன் மகளையும் பெற்றெடுக்கிறாள்
மகளை மட்டுமா அவள்
பெற்றெடுக்கிறாள்
தன் கணவனோடு சேர்ந்து
கருணைக் கண்ணீரையும்
நன்றிப் பெருக்கையும் அல்லவா
பெற்றெடுக்கிறாள்
இந்துத் தம்பதியரான அவர்கள்
தன் அன்பு மகளுக்கு
யூனுஸ் என்று
உயிர்காத்த அந்த முஸ்லிம் இளைஞனின்
பெயரைச் சூட்டி மகிழ்கிறார்கள்
மழையே மழையே
ஞான மழையே
இங்கே நீ
எதைக் காட்ட பொழிய வந்தாய்
மெய் சிலிர்க்கிறது
உள்ளம் உருகி ஓடுகிறது
கருணைகண்டு கருணைபொங்கி
கண்கள் கழன்றுவிழுகின்றன
எங்கும் நிறைந்து தமிழன்
சாதி மதம் பாராமல்
தன் உறவுகளுக்கு உதவித்தள்ளுகிறான்
விடாப்பிடியாய்
மழை வெள்ளக் கேடுகளை
தூக்கிப்போட்டு மிதித்து வெல்கிறான்
மிகப் பெரிய
நம்பிக்கையையல்லவா
இந்த மழை நமக்குக் கொடுத்துவிட்டது
சென்னையில்
ஒட்டியும் ஒட்டாமல்
வாழ்ந்த ஒய்யார மக்களையும்
இப்படி ஒட்ட வைக்கும் பசையையா
பொழிந்தாய்
மழையே மழையே ஞான மழையே
நீ வாழி
]
இனி
அரசு என்றும் ஆட்சி என்றும்
ஏதும் அவசியமில்லை
அந்தச் சுரண்டல்களால்
பட்டதே போதும்
நாங்களே
எங்களைக் காப்போம்
என்ற பெருமுழக்கம்
சென்னையெங்கும்
ஓசையில்லாமல் கேட்பதைக்
கேளுங்கள்
மக்கள் தொகையில்
தொண்ணூற்றியொன்பது
புள்ளி தொண்ணூற்றியொன்பது
விழுக்காடாய் வாழும்
மதச்சகிப்பாளர்களே
மழைவிட்டதும்
ஓடிச்சென்றுவிடாதீர்கள்
ஒன்றுகூடிய கரங்களோடு
உங்களைப் பொய்யாய் நகர்த்தி
அசிங்கமாய் அருவருப்பு நாடகமாடும்
நாற்ற அரசுகளின் முட்டிகளை எல்லாம்
ஒற்றைத் தட்டில் தட்டி உடையுங்கள்
]
அரசும் அரசு இயந்திரங்களும்
செய்த சதிதான் இந்த வெள்ளக்காடு
செம்பரம்பாக்கம் ஏரி
நவம்பரிலேயே நிரம்பி நிற்கிறது
பொதுப்பணித்துறை பொறியாளர்கள்
கவலைப்படுகிறார்கள்
தன் தலைமைக்கு
வேண்டுகோளும் வைக்கிறார்கள்
சிறுகச் சிறக ஏரியைத் திறந்து
மெல்ல மெல்ல நீரை வெளியேற்றி
இனிப் பொழியும் மழையால்
எகிறப் போகும் வெள்ளத்தை
ஏரியிலேயே முடக்கி ஊரைக் காக்கலாம்
உயிர்களைக் காக்கலாம் என்று
பரிந்துரைக்கிறார்கள்
ஆனால்
அரசாங்க மேல்மட்டக்காரர்களால்
உரிய கட்டளைகள்
பிரப்பிக்கப்படவே இல்லை
ஏரி நிரம்பி வழியத் தொடங்கிய
இக்கட்டு நாளில்
தடாலடியாய் மொத்த ஏரியையும்
சட்டெனத் திறந்துவிட்டு
சென்னையை மூழ்கடிக்கிறார்கள்
பாவிகள்
உயிர்களைக் காக்க வேண்டிய
அரசு இயந்திரங்களே
உயிர்களைக் குடிக்கின்றன
ஆக
இந்த வெள்ளம்
இயற்கையல்ல
செயற்கை
]
அரசே சொல்
எப்படிச் சேர்ந்தன
மில்லியன் டன் குப்பைகள்
நாளும் பொழுதும்
கொள்ளையடித்தவைகளின்மேல்
வெள்ளையடித்து மறைப்பதில்தானே
உங்கள் கவனமெல்லாம்
ஊழலில் அடித்த அந்த
ஆயிரம் பல்லாயிரம் கோடிகளும்
அப்படியே திரும்பக் கிடைத்தால்
இந்த மழை அழித்த நீர்க்காட்டை
பூக்காடாக்கிப் பார்க்கலாமல்லவா
அப்படியே
அம்மாவும் ஐயாவும்
மாமனும் மச்சானும்
பேரனும் பேத்திகளும்
அடித்ததையெல்லாம்
திருப்பிக் கொடுத்துவிடுங்கள்
எப்படி உண்டியல் குலுக்கி
எத்தனை வசூலித்தாலும்
நீங்கள் அடித்ததில்
ஒரு விழுக்காடாவது
தேறுமா சொல்லுங்கள்
]
மாநில அரசு மத்திய அரசு
மாநகரச் சபை தேசிய ஊடகம்
எல்லோரும் முழுமூச்சாய்
முடுக்கிவிடப் பட்டிருக்கிறார்களாம்
ஆமாம்
அத்தனைச் செயல் வீரர்களும்
மழைத்தொல்லை தாளாமல்
எங்கோ ஓர் சொகுசுப் பிரதேசத்தில்
அவசர அவசரமாய்
பாவம் ஒதுங்கிக் கிடப்பார்கள்?
செத்ததுபோக
மீளும் மக்களைக் கொண்டு
நல்லாட்சி அமைக்க
ஓட்டுகேட்டு வருவார்கள்
அடித்த
கருப்பு நோட்டுகளோடு
நாளை
நிவாரண நிதியென்று
வசூலும் மகசூலும்
ஆகப்போவதைச் சொல்லவும் வேண்டுமா
]
மழை வந்தாலும்
நாம்தான் நமக்கு
சுனாமி வந்தாலும்
நாம்தான் நமக்கு
இந்த
இயற்கைக் கேட்டைவிட
அரசியல் கட்சிகளின்
ஊழல் கேட்டில் வரும் நாசமே
ஆகப் பெரியதல்லவா
பின்
ஏன் இந்த
பிணந்தின்னிக் கட்சிகள்
விரையமாகும் ஓட்டுகள்
சுரண்டிச்செல்லும் ஆட்சிகள்
]
சோற்றுக்கில்லை என்றாலும்
அன்பிற்கும் கருணைக்கும்
ஆதரவிற்கும் அரவணைப்பிற்கும்
கைகோத்துச் சொந்தங்களாய் நிற்கும்
சென்னைத் தங்கங்களே
கோபத்தை ஆட்சியிடமும்
குணத்தை மீட்புப் பணியிலும்
சிறப்பாகக் காட்டும் அற்புதச் சென்னையே
நீ வாழ்க வளர்க
]
மத்திய அரசு
ஆயிரம் கோடி ரூபாயை
வெள்ள நிவாரண நிதியாகக் கொடுக்கின்றது
இதில் எத்தனைக் கோடி
யாருக்கெல்லாம் போய்ச் சேரும் என்று
மத்திய அரசுக்கும் தெரியும்
மாநில அரசுக்கும் தெரியும்
மக்களுக்கும் தெரியும்
ரகசியமில்லா அரசியல்
உலகில் இந்திய அரசியல் மட்டும்தான்
பொறுத்துப் பொறுத்துப்
பார்த்துவிட்டு
இப்போது பொங்கி எழுந்திருக்கிறது
சென்னை உயர் நீதி மன்றம்
வெள்ளப் பாதிப்புகளுக்குக் காரணம்
கேட்டு
தானே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது
பாராட்டுக்கள்
ஆனால்
இதிலும் ஏதோ அரசியல் இருக்குமோ
என்றுதான் என் மனம்
இப்போதும் கலங்குகிறது
]
ம்ம்ம்
நாற்ற அரசியலை மட்டுமே
தூற்றித்தான் ஆவதொன்றுண்டா
நாம் அநியாயத்துக்கு நல்லவர்கள்
எதையும் எளிதில் மறக்கக்கூடியவர்கள்
நம் மறதிகளை இம்முறை
மறப்பதைப் பற்றிய
மறவா எண்ணங்களால்
நிறைப்போம்
]
அத்தோடு நில்லாமல்
அடுத்த கட்டமாய்
நீரின் கூடுகளுக்குள்
அத்துமீறிக் கட்டிக்கொண்ட
வீடுகளை இடிக்க வேண்டும்
நீரின் பாதைகளில்
சுயநலமாய்க் கட்டிக்கொண்ட
கடைகளை உடைக்க வேண்டும்
தொழிற்சாலைகளை அகற்ற வேண்டும்
இனியும்
புதிப்பிக்கப்படாத சென்னை
புதைகுழிதான்
மாற்றப்படாத சென்னை
மயானம்தான்
கட்டமைக்கப்படாத சென்னை
கருங்குழிதான்
உலகின்
ஒவ்வொருவரிடமும்
பிச்சை கேட்டாவது
பிரித்துக் கட்டத்தான் வேண்டும்
சென்னையை
கருணை என்பது காட்டுவதற்காக
அன்பு என்பது அளிப்பதற்காக
நேயம் என்பது வளர்ப்பதற்காக
நீங்கள் என்பது உங்கள் எண்ணங்கள்
உங்கள் எண்ணங்கள் என்பது
உங்கள் உயர்வுகள்
வாருங்கள் உயருவோம்
தாருங்கள் உயருவோம்
ஒரு நாள் ஒரு பொழுது
சென்னை மழைக்குக்
களப்பணி செய்யாத ஒருவன்
செத்தவன்
அந்தப் புண்ணியம்
எங்களுக்குக் கிடைக்க வில்லையே
என்று செத்துக்கிடக்கிறோம்
கனடாவில் நாங்கள்
ஆகவேதான்
இங்கே மேடையிட்டு
கூட்டம் கூடி
பொன்னும் பொருளும்
அள்ளித் தர வந்திருக்கிறோம்
வாழ்க கருணை
மனிதநேயம் ஒன்றுதான்
எதற்கும் எப்போதும்
ஒற்றை அருமருந்து
2015 டிசம்பர்
சென்னை வெள்ள நிவாரண நிதிக்காக கனடாவில் வாசித்த கவிதை
No comments:
Post a Comment