ஊடகத்தமிழ்

சந்திரனில் கையசைத்து
                செவ்வாயில் கால்பதித்து
மந்திரமாய் மின்வெளியில்
        மந்தகாசம் செய்கின்றாய்

எந்திரமாய்ச் சென்றவாழ்வை
        இழுத்துவரும் உந்தனுக்கு
வந்தனங்கள் தந்தவண்ணம்
        வருகின்றேன் தமிழ்த்தாயே

]

இயற்றமிழ் அறிவோம்
இசைத்தமிழ் அறிவோம்
நாடகத்தமிழும் அறிவோம்
அதென்ன ஊடகத்தமிழ்?

ஊடு என்றால்
இடை என்றொரு பொருள்
எனில்
ஊடகத்தமிழ் என்றால்
கன்னி இடைதனைக்
கண்ட காளையின்
தமிழ்க்காதல் விளையாட்டாய்
இருக்குமோ?

அல்ல அல்ல

ஊடன் என்றால்
ஒருவகைக் கடல்மீன்
எனில் ஊடகத்தமிழ் என்றால்
தமிழச்சி ஒருத்தி
பச்சரிசிச் சோற்றோடு கடல் மீன் குழம்பை
பக்குவமாய்ச் சமைத்து
தமிழ்க் கவிஞர்களுக்குப் பந்தி வைக்கும்
பண்பாட்டு விருந்தாய் இருக்குமோ?

அல்ல அல்ல

ஊடு ஊடாடு என்றால்
அடிக்கடி அடிக்கடி என்றொரு பொருள்
எனில் ஊடகத்தமிழ் என்றால்
தமிழர்கள் கூடி தமிழில் உரையாடும்போது
அடிக்கடி அடிக்கடி ஆங்கிலம் கலந்து
தமிங்கிலத்தில் ஊடாடுவதாய் இருக்குமோ?

அல்ல அல்ல

என்றால்
ஊடகத் தமிழ் என்றால்தான் என்ன?

இந்தப் பக்கம் கண்கள் காதுகள்
அந்தப் பக்கம் தகவல்கள் ஆக்கங்கள்
இவை இரண்டையும்
இணைக்கும் பாலம் எது?
அதுதான் ஊடகம்

ஊடகத் தமிழ் என்றால்
ஊடகத்தில் புழங்கப்படும் தமிழ்

தாயிடம் கற்க வேண்டிய
தமிழை இன்று
ஊடகம்தான் ஊட்டுகிறது

பட்டி தொட்டியெல்லாம்
தமிழ்ப் பாட்டு கேட்கிறது
யார் தந்தது? ஊடகம் தந்தது

செம்மொழி மாநாடும்
வீட்டுக்குள் வந்து
விருந்து படைக்கிறது
யார் தந்தது? ஊடகம் தந்தது

நா அசைகிறது சொல் பிறக்கிறது
பிறந்த சொல் பிரிதொரு செவிக்குள்
சிங்கார நடனம் போடுகிறது
யார் தந்தது? ஊடகம் தந்தது

கண்ணென்ற ஊடகம்
காதல் பேசும்

பெண்ணென்ற ஊடகம்
கருவை ஈனும்

மண்ணென்ற ஊடகம்
உணவு ஏந்தும்

விண்ணென்ற ஊடகம்
யாவுமாய் ஆகும்

நாம் யாவருமே ஊடகங்கள்தாம்
தாய் என்ற ஊடகம்
பெற்றெடுத்த ஊடகங்கள்
இன்னும் பல சந்ததிகளைப்
பெற்றெடுக்கும் ஊடகங்கள்

ஆக
எங்கும் ஊடகம்
எதிலும் ஊடகம்
யாவும் ஊடகம்தான்

நெடிது வளர்ந்து நிமிர்ந்து நிற்கும்
விருட்சத்தைப் பார்த்தேன்
அட இது விதை என்ற ஊடகம் தந்ததல்லவா
என்றே வியந்தேன்

கரும்பச்சைச் செழுமை விரித்த
மாமலைத்தொடர் பார்த்தேன்
அட இது மண்ணென்ற ஊடகம் தந்ததல்லவா
என்றே வியந்தேன்

அன்றைய ஆதிவாசி தொடங்கி
இன்றைய இணையவாசி வரை
முடிந்துபோகாத சிந்துபாத் கதையாக
அழகாய் அமுதாய் ஊர்ந்து ஊர்ந்து
ஒரு மகா தொலைக்காட்சித் தொடரையே
அமுது பொழிந்து வழிய
தொடர்ந்து காட்டும் நிலவைப் பார்த்தேன்
அட இது ஒளி என்ற ஊடகம் தந்ததல்லவா
என்றே வியந்தேன்

மொட்டு மொட்டாய்
மேனி தொட்டுக் கொட்டிக் கொட்டி
பூப் பூவாய் வெடித்து அவிழ்ந்து
நெஞ்சக் குடில் நுழைந்து ஈரமாய்ச் சிதறும்
மழைத்துளிகளைக் கண்டேன்
அட இது முகிலென்ற ஊடகம் தந்ததல்லவா
என்றே வியந்தேன்

வண்ணங்கள் நிறைந்து
இமைகள் மிளிர
கற்பனைக்கும் எட்டாத
கனவுகளைக் கண்டேன்
அட இது
விழி என்ற ஊடகம் தந்ததல்லவா
என்றே வியந்தேன்

என் வியப்புகளின் உச்சமாய்
என் முன் கடவுள் வந்தார்
என்னய்யா என்றேன் சற்றே ஐயத்தோடு
எனக்கென்றும் ஓர்
ஊடகம் வைத்திருக்கிறாயா?
எங்கே உன்
கற்பனையைக் கொட்டு என்றார்

இதழ்கள் பிரியாமல்
சிக்கனமாய்ச் சிரித்தேன்.
உச்சக் கற்பனையே கடவுள்தானே என்று
நாத்திகம் பேசலாமா என்று
சற்றே தயங்கினேன்
அச்சச்சோ
கடவுள் சினங்கொள்வார் என்று
ஒரு கவிதை வரி சொன்னேன்

பேரொளியாய்ப் பிரகாசிக்கும் கடவுள்
இதய ஊடகம் பெற்ற பேறல்லவா
என்றே வியக்கிறேன் என்றேன்

ஊடகங்களில்
தமிழ் ஓங்கி வளரட்டும்
என்றே கூறி மறைந்துபோனார் கடவுள்

உலகில் யாவுமே
ஊடங்கள்தாம் என்றாலும்
அச்சு ஒலி காட்சி இணையம்
இவற்றுக்குள் அடக்கிக்கொள்ளலாம்

ஓலைச்சுவடி தொட்டு
மின்வலை வரை அச்சில் ஏறி
விழிகளுக்குள் இச்சுக்கள் இடும் தமிழ்
அச்சு ஊடகத்தமிழ்

வானொலி ஒலிநாடா
ஒலிக்குறுந்தகடுகள் வழியே
ஒலியாய் வழியும் தமிழ்
ஒலி ஊடகத்தமிழ்

தொலைக்காட்சி திரைக்காட்சி
நாடக மேடைக்காட்சி என்று
காட்சிகளாய் விரியும் தமிழ்
காட்சி ஊடகத்தமிழ்

விட்டில் பூச்சியல்ல வெற்று விளக்குமல்ல
விலகிடாச் சூரியன் இணையம்
அந்த இணையம் நிறைந்து
இனிதாய் விரியும் பேரின்பத் தமிழ்
இணைய ஊடகத்தமிழ்

யாதுமாகி நிற்கும் ஊடகம்
உலகில் தமிழையும் ஏந்தி நிற்கிறது
தமிழ் அதனுள் வாழ்ந்து நிலைக்கிறது
நான் அதை நன்றியோடு
வியந்து பார்க்கிறேன்.

]

ஒரு சோழ அரசு
கம்பனுக்கு வெண்சாமரம் வீசியது
நமக்கோ காலத்தால் அழிதாத
காவியம் கிடைத்தது

ஒரு சேர இளவரசே
துறவுபூண்டு தமிழ் வளர்த்தது
நமக்கோ காலத்தால் அழியாத
சிலம்பு கிடைத்தது

ஒரு பாண்டிய அரசு
முத்தமிழ்ச் சங்கம் அமைத்துப் பாடியது
நமக்கோ தமிழின் அமுதம்
உயிர் நிறையக் கிடைத்தது

ஆம்
அந்தக் காலத்தில் அரச சபைகளால்
தமிழ் செழித்து வளர்ந்தது
ஆனால் இன்று
தமிழால் அரச சபைகள்தான்
செழித்து வளர்கின்றன

தமிழ்ப்புகழ் பாடுதலைவிட
ஒரே ஒரு தமிழனின் புகழ் பாடிவதிலேயே
செலவழிந்துபோனது
நம் செம்மொழி மாநாடு என்பதை
வேறு எங்ஙனம் சொல்வது?

]

யாதும் ஊரே
யாவரும் கேளீர் என்று
செம்மொழி மாநாட்டு ஊடகம் பாடுகிறது
சங்கத் தமிழோ சங்கடத்தால் வாடுகிறது

இங்கே
ஊடகம் தமிழின் உயிர்
மிதித்து ஓடுகிறதோ
தமிழைச் சிதைக்கவே
படாதபாடு படுகிறதோ

கேளிர் என்றால் உறவென்று பொருள்
கேளீர் என்றால் கேட்பீரோ என்று பொருள்

இது ஊடகப்பிழையா
ஊடகத்தைப் பயன்படுத்தும்
தமிழனின் பிழையா

இன்றைய உலகம் ஊடக உலகம்
எதையும் ஊதி ஊதியே
வானமேற்றவும் மண்ணில் சாய்க்கவும்
ஊக்கமும் ஊட்டமும் கொண்ட
ஊதல் உலகம்

]

தம்மாத்துண்டு
கலாசிடுவேன் கலாசி
பட்டையைக் கிளப்பு
உல்டாவா பேசாதே
ஜமாய்ச்சுடலாம்
களாய்க்கிறான்
லாலாக்கு டோல்டப்பி

இதுதான் இன்று
தொலைக்காட்சிகள் கற்றுத்தரும்
உயர்தமிழ்ச் சொற்கள்

தொலைக்காட்சிப் பெட்டிகளா
தமிழின் சவப்பெட்டிகளா?

தமிழ்ப்படம் என்றொரு திரைப்படம்
அதில் தமிழ்ப்பாடல் ஒன்று  
ஒரு சொல்லும் தமிழே இல்லாமல்

திரையிசைப் பாடல்களா
தமிழைத் தொங்கவிடும் தூக்குக்கயிறுகளா

]

தமிழன் இப்போதெல்லாம்
எப்போதாவதுதான் தமிழ் பேசுகிறான்
அட அப்போதும்
அலசியெடுத்த வெள்ளை வேட்டியில்
அழுக்குத் திட்டுக்களாய் ஆங்கிலச் சொற்கள்

ஊடகப் பெருந்திடல் நுழையும்
சல்லிக்கட்டுக் காளைகளே
உங்கள் கூர்கொம்பால் தமிங்கிலத்தைக்
குத்தித் தூரயெறிந்தும்
விளையாடினால் அது ஆட்டம்

அதைக் கண்டு
கணினிச் சிப்புகளும் கை தட்டும்
தொலைக்காட்சிப் பெட்டிகளும்
பூந்தொட்டிகளாய் மணக்கும்

]

விளம்பரப் படங்களெல்லாம்
நீக்கமறநிறைந்து பறத்திக்கிடக்க
எழுத்து எங்கோ மூலையில்
முக்காடிட்டு முடங்கிக்கிடக்க
பத்திரிகைகளே பத்திரிகைகளே
உங்களை வாசித்தால் வளருமா தமிழ்
அந்த அக்கினித்தாய்க்குத்
தின்னக் கொடுத்தால் வளருமா தமிழ்

உயிரிலாடும் தமிழோ இன்று
ஊடங்கங்களின் கைகளில்
அந்த ஊடங்களோ கைதேர்ந்த
வணிகர்களின் கைகளில்

அடடா பயிரில் வைத்த நெருப்பன்றோ
பற்றியெறியுது தமிழ்நெஞ்சு
தினம் படுந்துயரோ கொடுந்துயர்தான்
பார்த்திருப்பதோ தமிழா

]

தமிழின் வாழ்வும் வளர்ச்சியும்
புலவர்களிடம் இல்லை
பொதுமக்களிடமே உண்டு

பொதுமக்களோடு
பொழுதுக்கும் உலவும்
புயல்விசை வாகனமே
ஊடகம்

கிராமத்துக் கிழவிக்கும்
தமிழ்ங்கிலம் புகட்டி
நாசமாக்குவதும் ஊடகத்தமிழ்தான்

இயல் இசை நாடகம் 
முத்தமிழையும் முன்னெடுத்து
விண்ணுயர வளர்க்கும்
பெருஞ்சக்தியும் ஊடகத்தமிழ்தான்

]

வான எல்லையையும்
தாண்டித்தொடும் இணைய ஊடகத்தில்
ஆங்கிலத்திற்கு அடுத்ததாக
ஆளும் மொழி தமிழே என்றால்
ஊடகத்தமிழ்தான்
எத்தனை உயரம் எகிறிப் பாய்கிறது?
நம் நெஞ்சமெல்லாம் இனிக்கிறது


இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ்
கண்ட சங்கத்தமிழ் இன்று
ஊடகத் தமிழில் உற்சாக ஊர்வலம் வருவது
நெஞ்சுக்குள் பாலாடை கட்டி ஓடும்
தேனாறு அல்லவா?

ஊடகத்தமிழ் உயர உயர
அது தமிழையும் தமிழனையும்
வான உச்சிக்கே ஏற்றிப் பிடிக்கிறது

ஊடகத்தமிழை உயர்த்தும் தாகம்
ஒவ்வொரு தமிழனின்
உள்ளத்திலும் உணர்விலும் மட்டுமல்ல
உயிரிலும் வேர் விரிக்கவேண்டும்

வாழ்க ஊடகத்தமிழ்
வளர்க ஊடகத்தமிழ் வளர்க்கும் உயர் தமிழன்

2010 கலிபோர்னியா முத்தமிழ்மன்றத்தின் ஊடகத்தமிழ் கவியரங்கம்

No comments: