வன்னிமகள்

சித்தர்கள் மொழியாம் செந்தமிழே
அழகு முத்திரை பதிக்கும் முத்தமிழே
கணினிக்குள் கமழும் கணித்தமிழே
எங்கும் இணையத்தில் இனிக்கும்
இகத்தமிழே

உயர்தனிச் செம்மொழியே
எங்கள் உயிரின் திருமொழியே
உன்மடி வளர்ந்தே உயர்கின்றேன்
எங்கள் வாழ்வெனும் தமிழே
வாழ்க வாழ்க

]

அவை நிறைந்த தமிழர்க்கும்
அகிலம் நிறைந்த தமிழுக்கும்
வன்னிமகள் கவிபாட 
இங்கே வந்து வீற்றிருக்கும்
முத்தமிழ்ச் செண்டுகளுக்கும்
என் முத்தத்தமிழ் வணக்கம்

இது வன்னிமகள் வலிதுயர்
ஏந்திப் பாடும் கவியரங்கம்

கலைந்துபோன வேடங்கள்
சிதைந்துபோன கனவுகள்
உறைந்துபோன காட்சிகள்
உடைந்தழிந்தே போகட்டும்

எண்ணி முடியாக் கொடுந் துயரின்
இன்னல்களில் உயிர்
கன்னித் தவிக்கும் வன்னி மகள்
இனியாவது வாழட்டும்

ஆம்
பச்சை மரங்களை
அழித்துச் சாய்த்தார்கள்
இச்சை உயிர்களைக்
கிழித்து மேய்ந்தார்கள்

போர் போர் என்று
முழக்கமிட்டார்கள்
புகைநெருப்பில்
பிணம் சமைத்தார்கள்

புழுதிக் காட்டையும்
புரட்டிப் போட்டார்கள்
குருதிக் காடாய்
மாற்றிப் போனார்கள்

விழுதோடு வேர்களும்
எரிகின்ற மண்ணில்
வெடித்து அழுகிறாள்
விதவைப்பெண்

]

பெண்களையும் பிஞ்சுகளையும்
கொல்லமாட்டோம் என்றார்கள்

செத்தவன் போனானடி அத்தோடு
இன்று சிதையில் வேகிறாள்
பெண் கொத்தோடு

காடுகளையும் வீடுகளையும்
கல்லறையாக்காத
போர் எது? 

கலாச்சாரத்தையும் பண்பாட்டையும்
கசக்கியெறியாத
போர் எது?

தலைமுறைகளையும் கற்புநெறிகளையும்
தகர்த்தெறியாத
போர் எது?

பெண்களையும் பிஞ்சுகளையும்
பிழிந்தழிக்காதப்
போர்தான் எது?

செத்தவன் போனானடி அத்தோடு
இன்று சிதையில் வேகிறாள்
பெண் கொத்தோடு

சிதறிக் கிடக்கும் சதைக் காடுகளாய்
நொறுங்கிக் கிடக்கும் மண்டை ஓடுகளாய்
மாறிக் கிடக்கும் உடற் கூறுகளாய்
வானம் எட்டிய ரத்த மேடுகளாய்

சிதைந்து சிதையில் புதைந்து
குவிந்து குழிக்குள் எரிந்து
அவிந்து அடையாளம் அழிந்து
கிடக்கின்ற பிணங்களின் அடியில்
எப்பிணம் மகன் பிணமோ என்று
தேடிச் சாய்ந்த அன்னையர்தாம்
எத்தனை எத்தனை பேர்

ஓர் பகல் பொழுதின்
யுத்த இருட்டில்
செல்லடித்துத் தாலி அறுபட்ட
சுமங்கலிகள்தாம்
எத்தனை எத்தனை பேர்

வீடுநிலம் விட்டு பொட்டல் காடு வந்து
அனாதை முகாம்களாய் ஆகிப்போன 
அகதி முகாம்களில்

பிச்சைவரும் திசை நோக்கி
தண்ணீர்வரும் கிழமை நோக்கி
நோயில் வாடும் ஊன் சுமந்து
நொந்து தொங்கும் மனம் சுமந்து
பொல்லா வயிற்றோடு
போராடி நின்ற சீமாட்டிகள்தாம்
எத்தனை எத்தனை பேர்

பெண்ணின் வாழ்வே யுத்தம்தான்
இதில் யுத்தகாலப் பெண் நிலையை
எதனோடு ஒப்பிட?

போரென்றால்
பெண்களையும் பிஞ்சுகளையும்
கொல்லமாட்டோம் என்றார்கள்

செத்தவன் போனானடி அத்தோடு
இன்று சிதையில் வேகிறாள்
பெண் கொத்தோடு

மணக்கோலக் கனவொன்றும் வாராதோ
அன்று மையிட்ட கண்ணிமையும் வாடாதோ
பிணக்கோலங் கண்டவளும் புதைவாளோ 
இவளும் பருவத்தைப் புதைக்கின்ற பிணந்தானோ

கணக்கில்லா விதவைகளால் யுத்தநிலம்
இன்று கனந்தாங்க வழியில்லாக் கண்ணீரில்
தனக்கென்று வாழ்வதுவோ வாழ்க்கை
இவர்கள் துயர்காத்து அணைப்பதன்றோ
வாழ்க்கை

போரென்றால்
பெண்களையும் பிஞ்சுகளையும்
கொல்லமாட்டோம் என்றார்கள்

செத்தவன் போனானடி அத்தோடு
இன்று சிதையில் வேகிறாள்
பெண் கொத்தோடு

பாலுக்கும்
பழஞ் சோற்றுக் கூலுக்கும்
பசித்தழும் பச்சிளங்களோடு
அங்கே வன்னிமகள்

நூலுக்கும்
பயிலுங் கல்விச் சாலைக்கும்
நொந்து வாடும் பிஞ்சுகளோடு
அங்கே வன்னிமகள்

நாளுக்கும்
நினைவழியாப் பொழுதுக்கும்
கண்ணழிக்கும் பெருக்கோடு
அங்கே வன்னிமகள்

வாழ்வுக்கும் வாழ்விலாச் சாவுக்குமாய்
வயிற்றோடும் கயிற்றோடும்
அங்கே வன்னிமகள்

தலைக்குமேலே கூரை இல்லை
தலையுடன் கீழே சுகமும் இல்லை
உடுத்திக்கொள்ள உடைகள் இல்லை
உண்டுவாழ உணவும் இல்லை

அடக்குமுறையும் தணியவில்லை
அடிமைத்தனமோ குறையவில்லை
பாதுகாப்போ எவர்க்கும் இல்லை
பயந்து சாகும் பச்சைப் பிள்ளை

தமிழா தமிழா
நீ நாடு நாடாய்ச் சென்று
நினைவுச் சின்னம் எழுப்புவதோ
தினம் கோடி கோடியாய்க் கொட்டி
கட்டிடங்கள் கட்டுவதோ

பாவம்
வாடு வாடென்று வாடும்
விதவைத் துயர் மறப்பதோ

அடடா
தேடு தேடென்று தேடியதை
தெருமண்ணில் தொலைப்பதோ

]

போருக்காகச் செலவிட்டது
செலவு

வன்னிமகள் சோறுக்காகச்
செலவிடுவதே
வரவு

பட்டினிக் காட்டினில்
பச்சிளங்கன்றுகள் ஒட்டிய மார்களில்
இரத்தம் குடிக்கின்றன
அங்கே

ஓட்டல் அறைகளில்
ஐபேட் குழந்தைகள்
உணவை மறுதளித்து
குப்பையில் எறிகின்றன
இங்கே

இப்படியாய்ப் பலநூறு கூறிப்போகலாம்
அவை புரியாத உள்ளங்களில்
தீபம் ஆகலாம்

எப்படியோ வாழவேண்டும் வன்னிமகள்
அவள் எழுந்துவிட்டால் வானமேறும்
உங்கள் புகழ்  

சிதறிவிழும் சிறுதுளியும் கடலாகும் 
அந்தக் கடலுக்குள் துயரங்கள்
கரைந்துபோகும்

கதறியழும் பிஞ்சுகளும் கண்ணுறங்கும் 
அவர் கண்ணீரின் அடர்வுகளே
இக்கவியரங்கம்

இறுதியாய் ஒன்று

வால்மார்ட் செல்லும்போதும்
வேண்டியன வாங்கும்போதும்
வேண்டாப் பொருளொன்று
வண்ணமாய்க் கண்சிமிட்ட
வேண்டுமோ வேண்டாமோ
மனம் தாயக்கட்டை உருட்ட 
அட இருந்துவிட்டுப் போகட்டுமே
என்று வசதி சொல்ல
வங்கி அட்டையும் தேய்க்கப்பட

அப்போது மட்டுமேனும்
வந்தாலும் போதுமே
வன்னி மகளின்
கண்ணீரின் நினைவு

2013 வன்னிமகள் வாழ்விற்காக நிதிதிரட்டிய கவியரங்கம்  

No comments: