Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 2) - இளையராஜா டொராண்டோ

துவக்கத்தில் வந்த கோபிநாத் விடைபெற்றதும், பார்த்திபன் களத்தில் இறங்கினார். அவரின் வழமை மாறாத குண்டக்க மண்டக்கக்களை விட்டு ஆட்டினார்.

எலிவேட்டரில் மேலேறிக்கொண்டிருக்கும்போது பாருங்க எல்லாம் குட்டிக்குட்டியா எவ்ளோ அழகா இருக்கு என்று உடனிருந்த பெண்சொல்ல பார்த்திபன் சொனனாராம் குட்டிகள் எல்லாம் அழகாத்தான் இருக்கும் என்று.

பார்த்திபன் சொன்னதை அப்படியே சரியாகச் சொல்லி இருக்கிறேனா என்று தெரியவில்லை. இவ்வளவுதான் எனக்கு ஞாபகம் இருக்கு. ஏன்னா அது என்னைச் சென்று சேரவே இல்லை ;-)

கடிக்கலாம், ஆனால் அடித்தொடையை விழுந்து கடிக்கப்படாது ;-)

இளையராஜாவின் வழமையான பாடல்கள் சென்றுகொண்டிருந்தன. அதில் நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி வந்ததும் அது என்னை என்னவோ செய்தது. எழுந்து உட்கார்ந்தேன். சாதனா சர்க்கம் சொர்க்கம் காட்டினார். ஹரிஹரன் வழக்கம்போல சொர்க்கத்திலேயே நின்றுகொண்டிருந்தார்.

நிகழ்ச்சிக்கு வரமுடியாமல்போன என் நண்பருக்கு நான் உடனே தொலைபேசி மூலம் அந்தப் பாடலில் வரிகளைக் கேட்க வைத்தேன்.

இளையராஜா தன் சொந்த இசைக்குழுவை அப்படியே அழைத்து வந்திருந்தார். தரத்தில் எந்த குறைபாடும் இருக்கக்கூடாது என்பதில் அவர் எடுத்துக்கொள்ளும் கவனம் எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். இந்த விழாவிலும் அப்படியேதான். பாராட்டுக்கள்.

பிசிறுகள் இல்லாமல் இசை சன்னமாக ஒலித்தது. அது இதயத்தின் ஆழத்தில் இதயாக இறங்கியது. சில நேரங்களில் நிகழும் சிறுபிழையும் ராஜா விடவில்லை.

மீண்டும் வாசிங்கடா என்று சொல்லிவிட்டார். இறங்கிச் சென்று நின்று ஒவ்வொருமுறையும் அவர் அக்கறையாய் நேசித்துக் கவனித்துச் செய்ததைக் காண மகிழ்ச்சியாய் இருந்தது.

ஏன்னா..... அண்ணன் ரொம்ப ஸ்டிரிக்டு..... ஸ்டிரிக்டு.... ஸ்டிரிக்டு.... என்று விவேக் அவ்வப்போது அதையும் சுட்டிக்காட்டிக்கொண்டேதான் இருந்தார்.

பார்த்திபனும் விவேக்கும் உண்மையிலேயே இளையராஜாவின் இசை வெறியர்கள்தாம். எங்குமே விட்டுக்கொடுக்காமல் எத்தனை உயரம் உயர்த்திப்பிடிக்கமுடியுமோ அத்தனை உயரம் உயர்த்திப் பிடித்தார்கள்.

எத்தனை நல்ல விசயமாக இருந்தாலும், அதை உயர்த்திப் பிடிக்க நிச்சயம் ஆட்கள் தேவை.

இதே மேடையில் 2000 அல்லது 2001ல் ஏஆர் ரகுமான் இசையைக் கேட்டிருக்கிறேன். அது உட்காரவும் இடமில்லாத கூட்டத்தைக் கொண்டிருந்தது.

அப்போது கிடைத்த ஒரு குதூகலம் எனக்கு இப்போது இல்லை என்பது உண்மை. அதற்குக் காரணம் நானாகவே இருக்கலாம். எனக்கு அது முதல் நேரடி நிகழ்ச்சி.

அதுமட்டுமல்லாமல் அதுபோல கனடாவில் பிரம்மாண்டமாக ஒரு தமிழ் இசையமைப்பாளரைக் கொண்டு நிகழும் நிகழ்ச்சி நிகழ்வது அதுதான் முதன்முறை.

கூடவே இந்திப்பாடல்களும் பாடப்பட்டதால், தமிழ் அல்லாத இந்தியர்களின் கூட்டமும் சொல்லிமாளாத அளவு வந்திருந்தது. அப்படி வந்த கூட்டம் தமிழ்ப்பாட்டையும் மிகவும் ரசித்துக் கேட்டது வரவேற்கக்கூடியதாய் இருந்தது,

அறிமுகமே இல்லாத ஒரு இந்திக்காரர் ”ஒருவன் ஒருவன் முதலாளி” என்ற பாட்டை எனக்கு எப்படியாவது பதிவு செய்து கொடுத்துவிடு என்று என்னிடம் அன்று கெஞ்சினார்.

ரகுமானின் இசை அரங்கையே அதிரடிக்கும் இசை. ராஜாவின் இசை பூ மலர்வதைப் போன்ற இசை. இரண்டையும் ரசிக்க முடிந்த நான் இசையின் ரசிகனே தவிர ஒருவரை ரசித்து ஒருவரை விட்டுவிடும் கண்மூடி ரசிகன் அல்ல.

”கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடல் அன்று என் கண்களில் நீரை வரவழைத்தது. நான் மிகவும் நெகிழ்ந்துபோயிருந்தேன்.

அப்படியான ஒரு இதயத் தாக்கம் எனக்கு நேற்று கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் என் சொந்தச் சூழல்களின் மாற்றமாகவும் இருக்கலாம்.

ஆனாலும் எம் எஸ் விஸ்வனாதன் தன் பாடல்களை இந்த மேடையில் ஏற்றியிருந்தால் நாம் மீண்டும் அழுதிருப்பேன் என்று எனக்குத் தோன்றியது.

நேற்றுபோல் இன்று இல்லை
இன்றுபோல் நாளை இல்லை

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில்....

என்னால் மறக்கவே முடியாத பாட்டு. அந்தப் பாடலைத் தேர்வு செய்து எஸ்பிபியைப் பாடவைத்து அரங்கில் எனக்கொரு தங்கத் தொட்டில் செய்துகொடுத்தார் ராஜா. நன்றி பண்ணைப்புரத்து பாட்டுக்காரா!

”தந்தன நந்தன தாளம் வரும்....” என்ற பாடலை எவரும் மறந்திருக்கமுடியாது. அது அவ்வகைப்பாடல்களில் முதலாவது. அதைத் தொடர்ந்து ஆயிரம் பாடல்கள் அதுபோல வந்துவிட்டாலும் அதை மட்டும் அசைக்கவே முடியவில்லை.

அந்தப் பாடலுக்கு எங்களுக்காகவே பிரத்தியேகமாய் இசையைக் கொஞ்சம் மாற்றியமைத்துப் பாடவைத்து இசையமைப்புப் பணியைச் செம்மையாய்ச் செய்துகாட்டினார் ராஜா.

இதுபோலெல்லாம் வேறு இசையமைப்பாளர்கள் செய்வதே இல்லை. இது ராஜாவுக்கே உரித்தான சிறப்பு. ராஜா இசையை எடுத்து எளிமையாய்ச் சொல்வதில் அதிகம் ஆர்வம் காட்டக்கூடியவர். இதுவரை நான் கண்ட இளையராஜா நிகழ்ச்சிகளிலெல்லாம் இதை அழகாகச் செய்து என்னை வெகுவாகக் கவர்ந்திருக்கிறார்.

நிகழ்ச்சி முழுவதுமே நான் இதுபோன்ற விசயங்களையே விரும்புவேன். அப்படியே அனைத்துப் பாடல்களையும் சோதனை முயற்சிகளாகவே செய்திருந்தால் நான் இன்னும் இரண்டு நாள்கூட அந்த அரங்கிலேயே உட்கார்ந்திருப்பேன்.

*

இளையராஜா ஒரு நல்ல கவிஞர். ஆனால் வைரமுத்துவுடன் வந்த லடாய்க்குப் பிறகு அவர் இசையா கவிதையா என்ற சண்டையிலிருந்து மீளவே இல்லை என்றுதான் எனக்குப் படுகிறது.

எல்லா மேடைகளிலும் பாடல் வரிகளை அவர் கேவலமாகவே பேசுகிறார். ஆனால் பாரதி பாடல்களைத் தேடிப்பிடித்து இசையமைத்து வெற்றிபெறுகிறார் ;-)

ஒரு முறை கண்ணதாசன் சொன்னார். இசை வார்தைகளுக்கு சிறகு கட்டிப் பறக்கவிடும் என்று. அது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஆனாலும் இறக்கை கட்டிக்கொள்ளத் தகுதியான அந்த வரிகளை எழுத ஒரு கண்ணதாசன் வேண்டும், ஒரு வைரமுத்து வேண்டும். ஒரு டி ஆர், நா.முத்துக்குமார், மதன் கார்க்கி என்று வார்த்தைகளின் சுவையறிந்தவர்கள் வேண்டும்.

அப்போதுதான் பாட்டு ஆயுள் கூடிய ஒன்றாய் இருக்கும். இல்லை என்றால் ஓரம்போ ஓரம்போ என்று ஓரம்போய்விடும்.

என்னிடம் கொடுத்தாலும் நானும் வார்த்தைகட்டி வையம் ஏற்றுவேன். இதை யாருக்கிட்டேயும் அவசரப்பட்டு சொல்லிடாதீங்க ;-)

ஓரம்போ ஓரம்போ என்ற புகழ்வாழ்ய்ந்த பாடலையும் இளையராஜா பாடினார். பாட்டுலகில் அது ஒரு புதிய முயற்சி என்று பேசப்பட்டது. ஆனால் இலங்கை வானொலி அந்நாளில் இது பாட்டே இல்லை என்று கூறி காற்றலையில் ஏற்ற மறுத்தது.

இன்றும் நாம் அதைக் கேட்கிறோம். ஆனால் ஒருவரும் விரும்பிப் பாடுவதில்லை. ஏனெனில் அதன் வார்த்தைகள் இதயத்தோடு பேசவில்லை.

ஆனால் காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் பாடலை மக்கள் தாங்களாகவே விரும்பிப் பாடுகிறார்கள். இளைய நிலா பொழிகிறது என்றால் இயல்பாகவே இதயத்திலிருந்து பாடுகிறார்கள். எல்லாம் ராஜாவின் பாட்டுத்தான் என்றாலும் ஏன் இந்த வித்தியாசம்?

அங்கேதான் வரிகள் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றன.

இந்த ஓரம்போ பாடலைவிட இளையராஜாவின் இன்னொரு அந்த சமயத்துப் பாட்டு எனக்குப் பிடிக்கும்.

வாடை வாட்டுது
ஒரு போர்வை கேக்குது
இது ராத்திரி நேரமடீ...

இந்தப் பாடலை எவருக்காவது நினைவிருக்கிறதா? முழுக்க முழுக்க ஸ்டீரியோவிலான பாட்டு. ஸ்டீரியோவை உச்சத்தில் உயர்த்தி தனித்தனியே பிரித்துப் பாடப்பட்ட பாட்டு என்று சொன்னார்கள் அன்று. ஆனால் இளையராஜா இந்தப் பாடலை எங்கும் பாடுவதே இல்லை ஓரம்போ ஓரம்போ என்றுதான் பாடுகிறார்.

ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. என் இசை ஞானம் என்பது என் காதுகளோடு சரி. மூளை.... சுத்தம் ;-)

இளையராஜாவின் மூத்த புதல்வர் கார்த்திக்ராஜா வந்தார். இளையராஜாவின் மேஜிக் என்ற தலைப்பில் சில விசயங்களைச் சொன்னார். அதில் முக்கியமானது என்னவென்றால் கவிதை என்பதெல்லாம் குப்பை. இசை என்பது மட்டுமே கோபுரம் கோபுரம் கோபுரம்.

அதை நிரூபிக்கும் வகையில் இளையராஜா சில வரிகளைச் சொன்னார்

தாமரை மலரில்
மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்

ஒரு தூதும் இல்லை
உன் தோற்றம் இல்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை

என்று இசை எதுவும் இன்றி மொட்டையாக வாசித்தார். தாமரை மனதில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன். இந்த வரிகளைக் கேட்கும் போது உங்களுக்கெல்லாம் என்ன தோன்றுகிறது என்று அரங்கத்தாரைக் கேட்டார். ஆனால் பதிலுக்குக் காத்திருக்காமல் ராஜாவே சொன்னார், இதில் ஒன்றுமே இல்லை. வெத்து வார்த்தைகள். இதில் எந்தப் பொருளும் இல்லை என்றார்.

ஆனால் இப்ப பாருங்க என்று அப்படியே இசையோடு பாடிக்காட்டினார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. தலை சுற்றியது!

”தாமரை மலரில் மனதினை எடுத்து தனியே வைத்திருந்தேன்”

அடடா எத்தனை அற்புதமான கண்ணதாசனின் வரிகள்? உனக்காக என் மனதை நான் எப்படி வைத்திருந்தேன் என்று காதலி சொல்கிறாள். எந்த எண்ணங்களும் இடைமறிக்காத வேறு எந்த நினைவுகளும் தீண்டாத தனிமையில் வைத்திருந்தேன் என்கிறாள்.

அத்தோடு நின்றாளா நிற்கவில்லை, மேலும் சொல்கிறாள் அந்த மனதை உனக்காகக் காத்திருக்க எங்கோ ஒரு நாற்காலியில் உட்கார வைக்கவில்லை. அல்லது படுக்கையில் கிடத்திருக்கவில்லை. ஏனெனில் என் மனம் காதல் மனம். மெல்லிய மனம். பூவினும் மெல்லியது அது. ஆகவே அதை தாமரை என்ற நீண்ட இதழ்களைக் கொண்ட பூவின் இதழ்களின் மேல் தனியே வைத்திருந்தேன் என்கிறாள். சிறிய இதழ்கள் என்றால் உன்னை நினைத்துக் கனத்துக்கிடக்கும் என் இதயம் கீழே விழுந்துவிடுமே என்ற அக்கறையில் தாமரை இதழ்களின் மேல் வைத்திருந்தேன் என்கிறாள்.

உன்னிடமிருந்து ஒரு தூதும் இல்லை. ஒரு தூதும் இல்லாமல் இந்த மனம் எப்படிச் சமாதானம் அடையும் என்று காதலி கேட்பது எத்தனை நியாயமானது?

சரி தூதுதான் இல்லை, என் நினைவினில் அல்லது கனவினில் உன் தோற்றமாவது வரவேண்டுமா இல்லையா? அதுவும் இல்லையே? ஒரு பொய்யான தோற்றத்தைக்கூட நீ தராமல் போய்விட்டாயே காதலா என்று எப்படி உருகுகிறாள் காதலி? பிறகு தூக்கம் எங்கிருந்து வரும்?

இந்த வரிகளை எல்லாம் இளையராஜா வெத்து வார்த்தைகள் என்கிறார்.

என்றால் இவர் கவிஞர்தானா என்ற கேள்வி எழுகிறது. நிச்சயமாக இளையராஜா நல்ல கவிஞர் அதில் சந்தேகமே இல்லை. ஆனால் ஏன் இப்படி சொல்கிறார் என்றால் அதற்கொரு காரணம் உண்டு. வைரமுத்துவோடு வந்த லடாயின் காரணமாக இவர் கவிஞர்களை எல்லாம் கீழாக்கினார். அதனால் கவிதைகளும் இவருக்குக் கீழாகத் தெரிகின்றன.

இது ஒரு மனப்பிறழ்வன்றி வேறென்ன?

(தொடரும்)

4 comments:

கவியாழி said...

ராஜாவுக்கு நிகர் ராஜாவேதான்

SandhyaSurya said...

VAARTHAIGAL VETHU ENDRAL VERUM ISAIYAI MEETTA VENDIYATHUTHANE,
VAIRAMUTHUVAI VIDUNGAL RAJA ISAITHATHU MATTRA KAVINGARKALUM PADALASIRIYARGALUM EZUTHIYATHANE ?!

SandhyaSurya said...

vaarthaigal vethu endral verum isaiyai meetta vendiyathuthane,
vairamuthuvai othukkum raja mattra kavingargal, padal asiriyargalin padalgalai medai ettruvatheno ?!

Indian said...

I firmly believe that he meant the lines, without music is tasteless and when it is with music it becomes sweet!. He would never say the lyric is meaningless. Many a times, his words are misunderstood.