எங்கிருந்து வந்தாய்

உன் வேர்களில்
எப்படி வந்தது என் வாசம்

உன் வாசத்தில்
எப்படி பூக்கிறது என் காலம்

இன்றோடு எனக்கொரு
புது ஜென்மமா

நீயா...
நீயேதானா
அதைத் தரவந்த தேவதை

உன்னை
அணைக்கத் துடிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னை
முத்தமிட ஏங்குகிறேன்
ஆனால் மாட்டேன்

உன்னுள்
மூழ்கிப்போக கொதிக்கிறேன்
ஆனால் மாட்டேன்

ஏன்

நீ சொல்
என்னைத் தெரிந்த
கர்வம் உனக்கிருந்தால்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
***

*பற்றுதான் வெறுப்பு*

ஆம்
ஒன்றின் மீதுள்ள
அதீத பற்றுதான்
மற்றதன் மீதான
அதீத வெறுப்பும்

என்றால்
பற்று
தவறானதா?

இல்லை
பற்று
தவறே இல்லை

பற்றுடை நெஞ்சு
சுருங்கியதாய் இருப்பின்
அதுவே தவறு

பற்றுடை நெஞ்சம்
ஒன்றையே
பற்றிக் கிடக்கட்டும்
தொற்றுநோய்
அப்பற்றிலில்லை

ஆனால்
இவ்வுலகும் தன்போல்
தனக்குப் பிடித்த
ஒவ்வொன்றையும் பற்றிக்கிடக்கும்
பற்றுக் கொடிகளால் ஆனதே
என்பதை
ஏற்கக்கூட வேண்டாம்
மறுக்காதிருந்தால் மட்டுமே
போதும்

வெறுப்புகள் வெளியேறும்
பூமிப்பூ புன்னகைக்கும்

சகிப்பின்மை
பூமிக்கான இருதய நோய்

அன்புடன் புகாரி
அறக் கண்ணாடியில்...

வஞ்சகர்களின்
தந்திரங்களில் ஏமாறும்போது
உங்களை நீங்களே
குறைவாக எண்ணிக்
குமையாதீர்கள்

அறக் கண்ணாடியில்
உங்கள்
அழகைப் பாருங்கள்
நீங்கள் நீங்களாக
நல்ல மனதோடு இருக்கிறீர்கள்

அதைப்
புலன்கள் ஐந்தும் குதூகலிக்கப்
பூதங்கள் ஐந்தோடும்
கூடிக் கொண்டாடுங்கள்

அப்போதுதான் உங்கள்
நல்ல மனம்
விரியத் தொடங்கும்
தந்திரக்காரர்களைத்
தடாலடியாய்த்
தோற்கடிப்பீர்கள்

இல்லையேல் உங்கள்
நல்ல மனம்
மெல்ல மெல்லச்
சுருங்கத் தொடங்கிவிடும்
நீங்களும் அந்த அற்ப அழுக்குப்
புழுக்களாகிவிடுவீர்கள்
உன்னையே உயிரென்று
நான்
ஏற்றிவைத்த பின்
உன்னை
எப்படி அழைப்பதாய்க்
கற்பனை செய்தாலும்
புல்லரிக்கவே செய்கிறது

...பைத்தியம்
...பிசாசு
...உசுரு
...லட்டு
...ராட்சசி
...டைனசர்
...செல்லக்குட்டி
...சாத்தான்

நீ பைத்தியம் என்றால்தான்
என் நோய் வைத்தியம் பெறும்

நீ பிசாசு என்றால்தான்
என் உயிர் உனதாகிப்போகும்

நீ உயிர் என்றால்தான்
தமிழ் எனக்குக் கவிதைகள் தரும்

நீ லட்டு என்றால்தான்
என் எறும்புகளெனைக் கொல்லாதுவிடும்

நீ ராட்சசி என்றால்தான்
என் காதல் சாந்தம் பெறும்

நீ டைனசர் என்றால்தான்
என்னைத் தேடித்தேடிக் கடிப்பாய்

நீ செல்லக்குட்டி என்றால்தான்
என் மடிவிட்டு இறங்கவே மாட்டாய்

நீ சாத்தான் என்றால்தான்
நான் உன் ஆப்பிள் உண்ணுவேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
* * *

எங்கே நீ என்று
என்னிடம் கேட்டால்
நான் எப்படிச் சொல்வேன்


நீ
கண்டுபிடித்தால்
ஒப்படைத்துவிட
ஓடோடி வந்துவிடாதே

ஏனெனில்
நீ
கண்டுபிடிக்கப்போவது 
என்னை அல்ல
உன்னை

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

விளையாடிச் செல்கிறது...

வசந்தங்கள் தேடும்
பார்வைகளோடும்

வாய்ப்புகளுக்கேங்கும்
தாகங்களோடும்

விழிகளில் நிறையும்
கனவுகளோடும்

விரல்களில் கனியும்
தவிப்புகளோடும்

உயிரூட்டித் தேற்றும்
தமிழோடும்

அத்தனைக்கும் மேலொரு
முத்தமாக
இந்நொடி நலம் கேட்கும்
மனம்பிடித்தக் கவிதையோடும்
விளையாடிச் செல்கிறது
வாழ்க்கை
இந்துக்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
இந்தியா என்றோ
அழிந்துபோயிருக்கும்

கிருத்தவர்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
யூதம் என்றோ
தீய்ந்துபோயிருக்கும்

முஸ்லிம்கள் எல்லோரும்
தீவிரவாதிகள் என்றால்
உலகம் என்றோ
முடிந்துபோயிருக்கும்

தீவிரவாதம்
லாபநோக்குடைய வியாபாரம்

வல்லரசுகள்
நல்ல வியாபாரிகள்

தீவிரவாதத்தை உருவாக்கிச்
சந்தைக்குக் கொண்டுவராவிட்டால்
வல்லரசுகளின் பிழைப்பு
நாறிப்போகும்

தீவிரவாதத்தை
வல்லரசுகள் விரும்புவதைப் போல
உலக மக்கள் யாவரும்
விரும்பிவிட்டால்
ஜீவராசிகளே மண்ணில் இல்லாதொழியும்

தீவிரவாதம் வெறுக்கும்
மக்களைப் போற்றுவோம்

தீவிரவாதம் உருவாக்கும்
நச்சு வல்லரசுகளைத் தூற்றுவோம்
நீ ஒரு வானம் கொண்டுவந்தாய்
நான் ஒரு வானம் கொண்டுவந்தேன்

உன் நட்சத்திரங்களை
நீ என் வானில் இறைத்தாய்
என் நட்சத்திரங்களை
நான் உன் வானில் நிறைத்தேன்

இரண்டு வானங்களிலும்
நீயே ஒற்றை நிலவானாய்
உன்முக ஒளியெழிற்காகவே
நான் கதிர்வீசும் சூரியனானேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்