உருதுவும் அராபிக்கும்
------------------------------------

முகநூலில் உரையாடும்போது உருதுவில் சொல்லப்படும் பாங்கின் ஓசை என்று ஒருவர் குறிப்பிட்டார்.

அது பிழை.

பாங்கு என்பது தொழுகைக்காக இசைகூட்டி உரத்து விடுக்கப்படும் அழைப்பு.

அது சொல்லப்படுவது உருது மொழியில் அல்ல அரபி மொழியில்.

குர்-ஆன் அரபி மொழியில்தான் எழுதப்பட்டுள்ளது உருதுமொழியில் அல்ல.

இந்தியாவில் உள்ள சிலர் உருதுதான் முஸ்லிம்களின் மொழி என்று பிழையாக நினைத்திருக்கின்றனர்.

உருது என்பது சமஸ்கிருதம் பார்சி அரபி எல்லாம் கலந்தடித்து வந்த வணிகர்களின் தொடர்பு மொழி.

அதை இரண்டாகப் பிரித்தார்கள். ஒன்று ஹிந்தி ஆனது அடுத்தது உருது ஆனது.

ஹிந்தி இந்துக்களின் மொழியென்றும் உருது முஸ்லிம்களின் மொழியென்றும் மத ரீதியாக வேறுபாடு காட்டி பிரித்துக் கொண்டனர்.

மற்றபடி பேசும் போது இரண்டும் ஒன்றாகவே இருக்கும் பெரும்பாலும். ஒரே வகையான  அமைப்பு இலக்கணம் பேச்சுமுறை என்று மாற்றமில்லாமல் இருக்கும்.

ஹிந்தி இந்திய மொழி என்றும் உருது பாகிஸ்தானி மொழியென்றும் ஆக்கிக்கொண்டார்கள்.

ஓர் ஹிந்திக்காரனும் ஓர் உருதுக்காரனும் எந்த சிக்கலும் இல்லாமல் உரையாடிக்கொள்வார்கள். ஏனெனில் இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.

ஹிந்திக்கு தேவநகரி (சமஸ்கிருத) எழுத்துவடிவம்.

உருதுக்கு சில எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்ட அரபி எழுத்து வடிவம்.

அவ்வளவுதான் வேறுபாடு.

இந்த இரண்டு மொழிகளுமே சமீபத்திய மொழிகள்தாம்.

தமிழுக்கு முன் இவை நிற்கவே தகுதியற்றவை.

அன்புடன் புகாரி

ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை

குர்ஆனை ஓதினால் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என்பது ஆதாரப்பூர்வமான நபிமொழி என்கிறார்கள் சிலர்.

ஆதாரப்பூர்வம் என்பது விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனாலும் அதை இப்போதைக்கு ஒத்தி வைப்போம்.

அந்த நபி மொழிக்குச் சரியான பொருளை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதை இப்போது பார்ப்போம்.

பொருள் தெரியாமலேயே ஓதுதல் என்பதுதான் குர்ஆனை ஓதுதல் என்று இன்று சிலர் பிழையாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

அன்று நபிபெருமானார் காலத்தில் அவருடன் வாழ்ந்தவர்கள் அராபியர்கள். அராபியர்களுக்கு அரபு மொழி தெரியும்.

ஓதுதல் என்றாலே அன்று அது பொருளுடன் ஓதுதல் என்று மட்டும்தான் பொருள்.

இங்கே நாம் பொருள் தெரியாமல் வெறும் சப்தங்களை ஓதினால் ஆயிரம் நன்மை பத்தாயிரம் நன்மை என்று நினைத்துக்கொள்வது சிந்தித்துப் பாராமையினால் மட்டுமே.

நபிமொழியை அனுகும்போது அது சொல்லப்பட்ட காலம் எது? எவருக்குச் சொல்லப்பட்டது? எதன் காரணமாகச் சொல்லப்பட்டது? அதில் நம்பகத்தன்மை உள்ளதா? என்ற பலவிடயங்களையும் நாம் ஆய்ந்தறிந்து கருத்தில் கொள்ளவேண்டும்.

பாடப்புத்தகத்தை எடுத்துப் படி அதுதான் உனக்கு நன்மை பயக்கும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளிடம் சொல்கிறார்கள்.

பொருள் தெரியாமல் படி என்று அவர்கள் சொல்கிறார்கள் என்றதை எடுத்துக்கொள்வீர்களா?

நல்ல நூல்களை வாசித்தால் நன்மை பெருகும் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள் தெரியாமல் வாசியுங்கள் என்று அவர்கள் சொல்வதாக எடுத்துக்கொள்வீர்களா?

பொருள் விளங்காமல் எதை வாசித்தாலும் அதில் எந்த நன்மையும் இல்லை.

இதை நபிகளார் மீண்டும் உயிர்பெற்று வந்துதான் நமக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டுமா?

நம்மால் சிந்தித்துப் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமமா அது?


குரானைப் பொருளறிந்துதான் ஓதவேண்டும். பொருளறிந்து ஓதாவிட்டால் அதனால் ஏதும் பயன் இல்லை என்று முகநூலில் எழுதி இருந்தேன்.

குர்ஆனை ஓதினால் ஓர் எழுத்துக்குப் பத்து நன்மை உண்டு என்பது ஆதாரபூர்வமான நபிமொழி என்று நண்பர் ஒருவர் சொன்னார்.  

ஆதாரப் பூர்வம் என்பது விரிவாகப்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. ஆனாலும் அதை இப்போதைக்கு ஒத்தி வைப்போம்.

அந்த நபி மொழிக்குச் சரியான பொருளை நாம் உணர்ந்திருக்கிறோமா என்று இப்போது பார்ப்போம்.

பொருள் தெரியாமலேயே ஓதுதல் என்று இன்று சிலர் பிழையாக நினைத்துக்கொண்டுள்ளனர்.

அன்று நபிபெருமானார் காலத்தில் அவருடன் இருந்தவர்கள் அராபியர்கள்.

அராபியர்களுக்கு அரபு மொழி தெரியும்.

எழுதவும் படிக்கவும் தெரியாத அராபியர்கள் பலரும்கூட இஸ்லாத்தில் இணைந்திருந்தார்கள். அவர்களை ஓதவைப்பது பெரும்பாடு.

குரானை ஓதவைப்பதற்காக அதில் நன்மை உண்டு என்று சொல்வது இயல்பான ஒன்றுதான்.

ஓதுதல் என்றால் அன்று பொருளுடன் ஓதுதல் என்றுதான் ஆகிறது.

இங்கே நாம் பொருள் தெரியாமல் வெறும் சப்தங்களை ஓதினால் ஆயிரம் நன்மை பத்தாயிரம் நன்மை என்பது சரியானது என்று நினைக்கிறீர்களா?

நபிமொழியை அனுகும்போது அது சொல்லப்பட்ட காலம் எது? எவருக்குச் சொல்லப்பட்டது? எதன் காரணமாகச் சொல்லப்பட்டது? அதில் நம்பகத்தன்மை உள்ளதா? என்ற பலவிடயங்களையும் நாம் ஆய்ந்தறிந்து கருத்தில் கொள்ளவேண்டும்.

பாடப்புத்தகத்தை எடுத்துப் படி அதுதான் உனக்கு நன்மை பயக்கும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகளிடம் சொல்வார்கள்.

பொருள் தெரியாமல் படி என்று சொல்கிறார்கள் என்று எடுத்துக்கொள்வீர்களா?

நல்ல நூல்களை வாசித்தால் நன்மை உண்டாகும் என்று எல்லோரும்தான் சொல்கிறார்கள்.

பொருள் தெரியாமல் படியுங்கள் என்று சொல்வதாக எடுத்துக்கொள்வீர்களா?

பொருள் விளங்காமல் எதைப் படித்தாலும் அதில் எந்த நன்மையும் கிடையாது.

இதை நபிகளார் மீண்டும் உயிர்பெற்று வந்துதான் சொல்ல வேண்டுமா? நம்மால் புரிந்துகொள்ள முடியாத சூட்சுமமா அது?

நபிகளின் நாயகம் பொருளற்ற நம்பிக்கைகளை ஒதுக்கிவைத்தவர் ஒழித்துக் கட்டியவர்.

அன்புடன் புகாரி


உலக முஸ்லிம்களின் இணைப்பு மொழி எது?

தமிழில் சொல்லலாமே என்ற என் கட்டுரைக்குத் தொடர்ந்து விமரிசனங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த விமரிசனங்களுள் முக்கியமான விடயங்களுக்கு என் விளக்கத்தை நான் அளிக்கிறேன். அறிதலும் புரிதலும் வளர்வதாகுக!

*அரபு மொழி என்பது உலக முஸ்லிம்கள் என்ற நிலைப்பாட்டில் ஓர் இணைப்பு மொழியேதான்.*

ஐயமே இல்லை.

ஆனால் அது அல்லாஹு அக்பர் சொல்வதற்கும் அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வதற்கும், இன்சால்லாஹ் சொல்வதற்கும் மேலும் சில பொதுச் சொற்களைச் சொல்வதற்கும், சேர்ந்து நின்று தொழுவதற்கும்தான். மற்ற பரிவர்த்தனங்கள் அவரவர் மொழியில்தான் செல்லும். ஏனெனில் அதுதான் அவரவர்க்கு விளங்கும். 

விளங்கும் மொழியில் உரையாடும்போதே விளங்காமல் போகும் சிக்கல் நிறைந்த காலக்கோலத்தில் விளங்காத மொழியில் உரையாடி எதுவும் விளங்காமல் போவதில் எனக்குச் சுத்தமாக உடன்பாடில்லை.

தமிழுக்குள் சமஸ்கிருதம், பார்சி, அரபி, ஆங்கிலம் என்று பல சொற்களும் உள்நுழைந்துள்ளன. அவை ஏற்றுக்கொள்ளப்படலாம் என்ற இலக்கணத்தைத் தொல்காப்பியன் என்றோ வகுத்தும்விட்டான். ஆனால் அவை சொற்களேயன்றி சொற்றொடர்கள் அல்ல.

அரபு மொழியின் சொற்களைப் பயன்படுத்துவது என்பது வேறு முழு சொற்றொடரையும் வலிந்து பயன்படுத்துவது என்பது முற்றிலும் வேறு.

வெள்ளிக்கிழமையின் கூட்டுத் தொழுகையில் கனடாவில் குத்பா என்னும் சொற்பொழிவைப் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலத்தில் செய்வார்கள். பின் அந்தந்த மொழிப் பள்ளிகளில் அந்தந்த மொழியில் செய்வார்கள். எங்கள் எல்லோருக்கும் அது தெளிவாகப் புரியும்.

என் சிறுவயதில் ஒரத்தநாட்டில் வெள்ளிகிழமையின் கூட்டுத் தொழுகைக்குச் சென்றபோது, அரபு மொழியிலேயே எழுத்திவைத்திருந்த சொற்பொழிவை அப்படியே வாசித்தார் இமாம். ஆர்வமாகத் தொழ வந்த எனக்குக் குறட்டைக்கான வழியைத்தான் அது வகுத்துத் தந்தது. நான் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. ஒன்றே ஒன்றைத்தான் கற்றுக்கொண்டேன், இனி இந்த குத்பா என்னும் அரபிச் சொற்பொழிவு முடிந்தபின்தான் கூட்டுத் தொழுகைக்குச் செல்லவேண்டும் என்று முடிவுதான் அது.

இதில் சில மேதாவிகள் சொல்வார்கள், ரசூலுல்லாஹ் அரபியில்தான் குத்பா நிகழ்த்தினார். அரபியில் குத்பா கேட்பதுதான் சுன்னத்து என்பார்கள். நான் அவர்களைப் பற்றி இங்கே பேசி என், நம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

அதேபோலவே, கலிமாவைத் தமிழில் சொல்வதே தமிழ்முஸ்லிமிற்குப் பயன்தரும். கலிமா என்றால் என்னவென்றே தெரியாமல் கலிமாவை மனப்பாடமாக ஓதிக் காட்டும் பலரை நான் அறிவேன். அவர்களைவிட அதன் தமிழ்ப்பொருளை அறிந்துகொண்டு அரபியில் ஒப்பிப்பவர்களை நான் ஏற்கிறேன். ஆனால் அதையும் தமிழிலேயே சொன்னால் எத்தனை இனிமையாக அது இதயத்தில் தங்கி நிற்கும் ஒரு தமிழ்முஸ்லிமிற்கு என்று சொல்லிப் புரியவைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

திருமறையைக் கட்டாயம் தமிழில்தான் ஓதவேண்டும். இல்லாவிட்டால் அரபு மொழி தெரியாத நமக்கு இஸ்லாத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் போய்விடும். அரபு மொழி பேசுவோருக்குக்கூட குரானின் மொழி அந்நியமானதாக இருக்கும். ஏனெனில் குரான் அக்கால அரபு இலக்கிய நடையில் ஒருவகை ஓசை நயம்கொண்ட கவிதை நடையில் அமைந்தது.  திருக்குறளுக்கு எப்படி பல தமிழர்களுக்கு விளக்கம் தேவையோ அப்படித்தான் குரானும் பல அராபியர்களுக்கு.

*இனி தொழுகையில் அரபியா தமிழா என்ற மிக முக்கியமான கேள்விக்கு வருவோம்.*

தொழுகையின்போது ஒரு பொதுமொழி மிக அவசியம். அதன் வாயிலாகவும் சகோதரத்துவத்தை நாம் நிலைநாட்ட முடியும். குறிப்பாக இமாம் ஒருவரின் கீழ் பள்ளிகளில் தொழுகை நடக்கும்போது பொதுமொழியே அவசியம். அதுவே உலக முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றாய் இணைக்கும். அந்தத் தொடர்பு ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிக அவசியம். இயல்பாகவே அது குரானின் மொழியான அரபியில் அமைந்துவிட்டது. அதை ஏற்பதில் யாதொரு சிக்கலும் எவருக்கும் இல்லை.

அதே வேளை தனியே வீட்டில் தொழுகிறோம் என்றால் அது நம் விருப்பம். இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்பது உண்மையல்லவா? சில நேரம் அல்லாஹு அக்பர் என்பதை இறைவா நீ மிகப்பெரியவன் என்று தொழும்போது நான் சொல்லி இருக்கிறேன். ஆனால் அது இமாம் தொழுகை வைக்க நான் தொழும்போது அல்ல. தனியே நின்று தொழும்போது.

இவ்வேளையில் இன்னொரு விடயத்தையும் நான் சொல்லியாக வேண்டும். துவா என்னும் இறைவனிடம் இறைஞ்சுதலை, வேண்டுதலை, பிரார்த்தனையைச் சிலர் அரபியில் பொட்டை மடப்பாடம் செய்துவிட்டு வந்து செய்வார்கள். தான் என்ன துவா கேட்கிறோம் என்றே அவர்களுக்குத் தெரியாது.

இறைவனிடம் இறைஞ்சுவதற்கு நமக்கு ஆயிரம் இன்னல்கள் உண்டு. ஒவ்வொரு உயிருக்கும் அவ்வுயிரின் இன்னல் தனித்துவமானது. அதை எப்படி ஒரு பொது மொழியில் பொதுவில் செய்யமுடியும்?

அதேவேளை ஓர் இமாம் எல்லோருக்கும் பொதுவாக துவாச்செய்யும்போது ஆமீன் ஆமீன் என்று சொல்வதில் பொருள் உண்டு. ஆனால் அந்தப் பொது துவா முடிந்ததும் நம் தனி துவா இறைவனிடம் தொடங்க வேண்டும் அல்லவா? அது இயல்பாகவே நம் தாய்மொழியில்தானே இருக்கும்?

இறைவனுக்கு நன்றி சொல்வதும் தனித்துவமானது இறைவனிடம் இறைஞ்சுவதும் தனித்துவமானது அல்லவா?

அன்புடன் புகாரி


*சொர்க்கத்தில் அரபியில்தான் உரையாடுவார்கள்*

இன்று என் தமிழ்முஸ்லிம் நண்பர்களுள் ஒருவர்  என்னைச் சந்தித்தார். நான் இன்னாலில்லாஹி என்று தொடங்கும்  சொற்றொடரை முகநூலில் தமிழில் எழுதலாமே என்று சொன்னதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பது மட்டுமல்ல வருத்தமும் கூட ஏற்பட்டிருக்கிறது. அதை அரபியில் சொல்வதுதான் சரி என்று வாதிட்டார்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? இப்போது நாம் இருவரும் தமிழில்தானே உரையாடுகிறோம். நாம் தமிழர்கள் அல்லவா? நம் தாய்மொழி தமிழல்லவா? நமக்கு அரபியில் பேசவும் தெரியாதே என்றேன்.

அவ்வளவுதான், திடீர் என்று சற்றும் எதிர்பாராத வண்ணம் ஓர் அதிர்ச்சியான கருத்தை முன்வைத்தார்.

சொர்க்கத்தில் அரபியில்தான் உரையாடுவார்கள் என்பதுதான் அது.

நான் மூர்ச்சையாகி விழாத குறை. அவருடன் எப்படி தொடர்ந்து உரையாடுவது என்று தெரியாமல் மெல்ல விளக்கம் சொல்ல முயன்றேன்.

*அரபு மொழி உலகின் வேறு எந்த மொழிகளையும் விட மேன்மையானதென்றில்லை.*

*அரபுக் கலாச்சாரம் உலகின் வேறு எந்த கலாச்சாரத்தையும்விட மேன்மையானதென்றில்லை.*

*அராபியர்கள் மற்ற எந்த இனத்தையும்விட மேலானவர்கள் என்றில்லை.*

இது இஸ்லாத்தில் அழுத்தமாகக் கூறப்பட்ட செய்தி. அப்படிச் சொன்னால்தான் இஸ்லாம் சகோதரத்துவத்தைப் போற்றுகிறது என்றும் பொருள் என்றெல்லாம் சொன்னேன். அவரோ, அதையெல்லாம் ஏற்றுக்கொள்வதாய் இல்லை.

மரணத்திற்குப் பின் வரும் மறுமை நாளில் இறைவனின்முன் உங்கள் நா அசையும். எந்த மொழியில் அசையும் தெரியுமா? அரபி மொழியில்தான் அசையும் என்றார்.

அது எனக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்துத் தூக்கிவாரிப் போட்டது.

சொர்க்கத்திலும் இதே நாக்கோடும், இதே கைகால்களோடும் இதே உடலோடும்தான் செல்கிறோமா என்று கேட்டுவைத்தேன்.

குழம்பியதுபோல் முதலில் முகபாவம் காட்டினார், பின்னர் சுதாரித்துக்கொண்டு தன் பிடியை விடாமல், அடித்துக் கூறினார் ஆம் ஆம் என்று.

என்றால், விபத்தில் சுக்கு நூறாய்ச் சிதைந்தவனின் நிலை சொர்க்கத்தில் என்ன? அவன் நாக்குக்கு எங்கே போவான்? குண்டுவைத்துச் சிதறடிக்கப்பட்டவர்களின் நிலை என்ன?

ரூஹு என்று அழைக்கப்படும் ஆத்மா இறைவனிடம் செல்லவில்லையா? இந்த உடல்தான் செல்கிறதா? என்றெல்லாம் வெறுமனே கேட்டுவைத்தேன்.

பிறகுதான் தெரிந்தது, அவருக்கு நான் கொஞ்சம் அவகாசம் தரவேண்டும். அவர் தானே அமர்ந்து சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிறகு உரையாடினால் இன்னும் கொஞ்சம் தெளிவாக உரையாடிப் புரியவைக்க முடியும் என்று.  எனவே அவரிடமிருந்து விடைபெற்றேன் பிறகு உரையாடலாம் என்று.

இவர் சொல்வது சரியென்றால், நானெல்லாம் சொர்க்கத்திற்குப் போய் மொழி தெரியாமல் அல்லாடப் போகிறேனே என்ற கவலை சட்டெனப் பற்றிக்கொண்டது. நரகத்தில் இறைவன் இருப்பானா? அவனோடு நான் தமிழில் உரையாடமுடியுமா என்ற அடுத்த சிந்தனையும் எழ ஆரம்பித்துவிட்டது. ஹா ஹா ஹா….

இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள் கிடையாது. ஆனால் சில இஸ்லாமியர்களிடம் நிறையவே இருக்கிறது என்பதுதான் உண்மை.

குறிப்பாக இந்தியர்களான நமக்கு தேவ பாஷை என்று சொல்லப்பட்டும் கருத்தின் அதீத தாக்கம் இருக்கிறதோ என்றுதான் தோன்றியது.

ஆக, இஸ்லாமியனின் சொர்க்கத்தில் அரபுமொழி. கிருத்தவர்களின் சொர்க்கத்தில் ஹீப்ரூமொழி. இந்துக்களின் சொர்க்கத்தில் சமஸ்கிருதமொழி. நாமெல்லாம் தமிழ் மொழியை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றுமே செய்யமுடியாது போலும்!

சகோதரர்களே, இதை ஒரு நகைச்சுவைப் பதிவாக எடுத்துக்கொள்ளாமம் கொஞ்சம் சிரத்தையாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கான தூண்டுகோலாய் எடுத்துக்கொள்ளுங்கள்.

நன்றி

அன்புடன் புகாரி

தமிழ் முஸ்லிம் ஒருவர் மரணம் அடைந்துவிட்டால். துக்கத்தில் பங்குகொள்ள விரும்பம் முகநூல் முஸ்லிம்கள்

”இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'வூன்”

என்று எழுதுகிறார்கள். அத்தோடு நின்றும்விடுகிறார்கள். வேறு எதுவும் சொல்வதும் இல்லை.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜுவூன் என்றால் என்ன பொருள்?

இறைவனிடமிருந்து வந்தோம், அவனிடமே செல்கிறோம். இதுதான் பொருள்.

அதை ஏன் தமிழில் சொல்லாமல் அரபுவார்த்தைகளில் சொல்கிறார்கள்? நமக்கு அத்தனை அரபிக் தெரியுமா? நாம் அரபு மொழியிலா தினம் உரையாடிக்கொண்டிருக்கிறோம்?

இன்னாலில்லாஹி என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினால்தான் இறைவனுக்குத் தெரியுமா? அல்லது சுற்றம் உறவு நண்பர்களுக்குத் தெரியுமா? தமிழ்முஸ்லிம்களுக்குத் தமிழில் சொன்னால்தானே புரியும் தெரியும் விளங்கும் போய்ச் சேரும்.

அதுமட்டுமல்லாமல், கூடவே துவா செய்கிறேன் என்றும் கூறினால் நன்றாக இருக்குமே. துவா என்பதுமட்டும் தமிழா என்று கேட்கலாம். அது நல்ல கேள்விதான்.

இதுபோல் தமிழுக்குள் வந்து புழங்கும் அரபுச் சொற்கள், வடமொழிச் சொற்கள், பார்சி சொற்கள் நிறைய உண்டு. அவை ஏற்றுக்கொள்ளப்பட்டவை. துவா என்பது வலிந்து உட்புகுத்தியதல்ல.

பிரார்த்தனை என்பது வடமொழி, வேண்டிக்கொள்வது என்பது ஓரளவு எல்லோரும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக அமையலாம் என்றாலும் அதை ஒரு மதம் சார்ந்ததாய்க் காணும் கண்ணோட்டம் உண்டு. ஆகவே துவா என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம்.

இறைவனிடம் மன்றாடுகிறேன் என்று சொன்னால் இந்த துவா என்ற சொல்லும் அவசியமின்றிப் போய்விடும்.

இறைவனிடமிருந்து வந்தோம்
அவனிடமே செல்கிறோம்
இவர் சொர்க்கம்புக இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்/மன்றாடுகிறேன்/துவாச்செய்கிறேன்.

இப்படி இருந்தால் நன்றாக் இருக்கும் அல்லவா?

நாம் என்ன எழுதுகிறோம் என்று முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி தமிழ் உலகுக்கே தெரியும் அல்லவா?

அன்புடன் புகாரி



புன்னகைக் கொத்து

புன்னகை என்பது ஒரு மாயமொழி. மௌனத்தின்முன் மொழிகளெல்லாம் தங்களின் வீரியம் இழக்கின்றன. புன்னகையின் முன்னோ தம்மையே இழக்கின்றன. ஒரு புன்னகையை மட்டும் வைத்துக்கொண்டு இந்த உலகின் அத்தனை பொக்கிசங்களையும் அடைந்துவிடலாம், அனுபவித்துவிடலாம்.

உண்மையான புன்னகையாய் மட்டும் அது இருக்கவேண்டும். எல்லாவ்ற்றுக்கும் போலியைக் கண்டுபிடித்து வித்திருக்கிறானே மனிதன். ஆகையால் பொறுப்புத் துறப்பாக இதையும் எழுதிவிடத்தான் வேண்டும்.

உண்மையான புன்னகை என்பது ஆழ்மனக் கிடங்கில் அன்பின் எழுச்சியில் தானே பிறந்து இதழ்களில் விரியும் புதினப்பூ.

பத்துமாதம் இடைநோகச் சுமந்து பெற்ற பிள்ளையை முதலில் காணும் கண்களில் முதலில் புன்னகை சிறுதுளியாய் கண்களிலிருந்து மலர்கிறது பின் அது இதழ்களை நிறைக்கிறது. ஆம் புன்னகை என்பது இதழ்களிலிருந்து விரியும் பூ மட்டுமல்ல, முதலில் அது கண்களில் மலர்ந்தால்தான் அதன்பின்னால் உண்மையின் ஊற்றுகள் இருக்கின்றன.

ஒரு புன்னகை இதழ்களில் மலரும்போது, அந்த உயிருக்குள் எத்தனை புத்தெழுச்சி மாற்றங்கள் நிகழ்கின்றன என்பது ஆழ் உணர்வுகளின் அதிசயம். ஒவ்வொருவரும் புன்னகை மட்டுமே சிந்தும் பூக்களாகிப் போனால் இந்த பூமி சொர்க்கத்தைவிட பலமடங்கு சுகங்களை அள்ளி இறைக்கும் வரமாகிப் போகும்.

இப்படியே புன்னகையைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தக் கவிதை புன்னகையைப் பற்றி ஏதோ சொல்கிறது. மூடிக்கிடக்கும் இதழ்களில் ஒரு புன்னகை சட்டென விரியுமா இக்கவிதையை வாசித்தால் என்று சொல்லுங்கள்.

உன் புன்னகையைப் பிடித்துக்கொண்டு என் புன்னகை வரைந்த ஒரு புன்னகைக் கவிதைதான் அன்பே இது!

முக்கியமானவர் எவரையேனும்
சந்திக்கச் சென்றால்
வழமையாய்ப்
பூங்கொத்து கொடுப்பார்கள்
நீயுன் புன்னகையைக் கொடு
போதும்
பூக்களெல்லாம்
நிறமிழந்து
உதிர்ந்து போகும்

அன்புடன் புகாரி